எனது இந்திய பயணம்

3
Kathipara junction எனது இந்திய பயணம்

 

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் காலை 4 மணிக்குப் போக்குவரத்து நெரிசல். Image Credit

புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே சாலை அமைக்கும் பணி நடந்ததால் மற்றும் பாதை மிகக் குறுகலாக இருந்ததாலும், குண்டும் குழியுமாக இருந்ததாலும் இந்த நெரிசல்.

நம்மை விடுங்கள் பழகி விட்டது, ஒரு வெளிநாட்டினர் வருகிறார் என்றால் அவருக்கு முதல் அனுபவமே இப்படி விமான நிலையத்திலேயே தொடங்கினால் அவர் நம்ம ஊரைப் பற்றி என்ன நினைப்பார்.

மனதுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது.

எனக்கு ஒன்று புரியலை எத்தனை அமைச்சர், முதல்வர் இந்தப் பாதை வழியாக தானே வருகிறார்கள், அவர்கள் ஒருத்தருக்கு கூடவா இதைச் சீர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.

மற்ற நாடுகளைச் சுற்றி பார்க்கிறார்கள் அங்கே உள்ள சாலைகளைப் பார்த்து இங்கே வந்து மற்றவர்களிடம் சாலை அப்படி இருந்தது இப்படி இருந்தது என்று கூறும் இவர்கள் நம்சாலையை அதுவும் முக்கியமான இந்தச் சாலையை எப்படி கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் புரியாத புதிர்

விளம்பர பலகைகள்

சென்னையில் நான் அடுத்தது ஆச்சர்யப்பட்டது விளம்பர பலகைகள், உயர்நீதி மன்ற தீர்ப்பை அடுத்து அனைத்து விளம்பர பலகைகளையும் நீக்கி இருந்தார்கள்.

பார்ப்பதற்கே மிக மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணா சாலையில் விளம்பர பலகைகள் இல்லாத சாலையைப் பார்ப்பதற்கு வித்யாசமாக இருந்தது.

குறிப்பாக சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளி, நான் சென்னையில் 13 வருடம் இருந்து உள்ளேன். இப்போது தான் விளம்பர பலகை மறைக்காத பள்ளியைப் பார்த்தேன்.

இங்கு தான் திரைப்படங்களுக்கு பெரிய விளம்பரங்கள் வைக்கப்படும். இனி அவர்களுக்கு சிரமம் தான். இன்னும் கொஞ்ச நாளில் திரும்பவும் இந்தப் பலகைகள் வந்தாலும் வரலாம்.

சத்யம் திரை அரங்கம்

இப்பொழுது சத்யம் திரை அரங்கம் தரும் சிறப்பான வசதியால் அதற்கு மக்கள் தரும் ஆதரவை பார்த்து, பல திரை அரங்குகள் நவீனமாக மாறி வருகின்றன.

நாற்றம் பிடித்த கழிப்பறைகள், உடைந்து போன நாற்காழிகள், காஞ்சு போன கேக் மற்றும் தின் பண்டங்கள் மாறி வருகின்றன.

இது ஒரு புறம் இருந்தாலும் நாங்க எப்போதும் மாற மாட்டோம்னு அடம் பிடிக்கும் திரை அரங்குகளும் உண்டு.

கால மாற்றத்தில் இவையும் மாறித்தான் ஆக வேண்டும் இல்லை என்றால் ஆப்பரேட்டர் மட்டுமே படம் காண இருப்பார்.

சத்யம் பூந்த மல்லி அருகே இன்னொரு திரை அரங்கு வளாகத்தைத் திறக்க போவதாக கூறப்பட்டு வருகிறது.

சத்யம் திரை அரங்கில் மட்டுமே படம் பார்க்கிறவர்கள் கூட உண்டு. திரை அரங்குகள் லாபம் கொழிக்கும் இடங்களாக மாறி வருகிறது.

குளிர் சாதன மாநகர பேருந்து

சென்னையில் குளிர் சாதன வசதி கொண்ட மாநகர பேருந்து விட்டுள்ளார்கள். FM உடன் பாட்டு கேட்டுக் கொண்டே செல்லலாம்.

உள்ளே ஏறியவுடன் நடத்துனரை காணவில்லை, பேருந்தும் அட்டகாசமாக இருந்ததால் என்னடா இது டிக்கெட் முறையை எதாவது மாற்றி விட்டார்களா என்று குழம்பி விட்டேன்.

பிறகு உள்ளே அமர்ந்து இருந்தவரை எங்க டிக்கெட் எடுக்கணும் என்று கேட்டதும் ஓட்டுனர் பக்கம் கை காட்டினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை எதாவது கார்டு முறை கொண்டு வந்து விட்டார்களா, நாம் தான் தவறுதலாக ஏறி விட்டோமா என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

பிறகு தான் நடத்துனர் வந்தார். நடத்துனரின் சீருடை சபாரி சூட்டில் க்ரீம் நிறத்தில் மாறி இருந்தது (ஓட்டுனருக்கும் இதே உடை தொப்பியுடன்).

நான் அவரை முதலில் பார்க்கையில் பயணி என்று நினைத்து விட்டேன்.

அப்புறம் டிக்கெட் வழக்கமான முறையில் இல்லாமல் இன்ஸ்டன்ட் டிக்கெட் ஆக பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார்.

அடையார் சிக்னலிலிருந்து அண்ணாசாலை செல்ல 20 ருபாய் வசூலித்தார். கூட்டம் மிகுந்த நேரங்களில் இந்தப் பேருந்திலும் செம கூட்டமாம்.

அப்புறம் பெரும்பாலான் பேருந்துகள் விரைவு வண்டிகளாகவும், சொகுசு வண்டிகளாகவும் மாறி இருந்தன.

இதனால் மறைமுகமாக கட்டணம் ஏற்றப் பட்டு விட்டதாக பலர் கூறினார்.

ஆனால் சாதாரண பேருந்தைப் போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்றே செல்கின்றன, அதுவும் பலரின் எரிச்சலுக்கு காரணம்.

கத்திபாரா மேம்பாலம்

பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கத்திபாரா மேம்பாலம் ஒரு பகுதி (GST சாலையிலிருந்து கலைஞர் நகர் செல்லும் சாலை) திறக்கப்பட்டு இருந்தது.

சும்மா சொல்லக் கூடாதுங்க நல்ல பெரிய சாலையாக, சாலையின் ஓரங்களில் சிகப்பு விளக்குகள் பளிச்சிட அட்டகாசமாக இருந்தது.

அதில் போக ரொம்ப பெருமையாகவும் இருந்தது. இன்னும் சில ஒட்டு வேலைகள் பாக்கி உள்ளது. மற்ற பகுதி கூடிய விரைவில் திறக்கப்படும் போல் உள்ளது.

ஆனால், இந்தப் பணி முடியும் வரை இந்தப் பகுதி மக்கள் அலுவலகம் செல்லப் பட்ட கஷ்டம் பற்றிக் கூறினால் ஒரு நாள் போதாது.

கலைஞர் போன ஆட்சியிலேயே செய்த தாமதத்தால் அனைத்து வேலைகளும் செய்து விட்டுக் கொஞ்சம் மீதி விட்டதால் ஜெ அதை முடித்துக் கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், சென்ட்ரல் பொது மருத்துவமனையையும் திறந்து வைத்துப் பேரைப் பொறித்து விட்டார்.

அதனால் இந்த முறை கண்டிப்பாக அனைத்து பணிகளையும் முடித்து விடுவார்கள்.

ரெசிடன்சி

சென்னையில் உள்ள நண்பர்களைச் சந்தித்து அவர்களுடன் ரெசிடன்சி உணவகம் சென்றால் இடம் இல்லை என்று கூறி விட்டார்கள்.

சரி இன்னொரு ரெசிடன்சி (Globus அருகே) சென்றால் ரூப் கார்டன் செல்லுங்கள் அங்கே தான் இடம் இருக்கும் இங்கே கீழே இடம் இல்லை என்றார்கள்.

அங்கே சென்று அமர்ந்த பிறகு அந்த இடமும் நிரம்பி விட்டது. பிறகு நண்பர்களிடம் கேட்ட போது வார நாட்களில் அனைவரும் இது மாதிரி உணவகம் வந்து தான் சாப்பிடுகிறார்கள் வீட்டில் செய்வதே இல்லை என்றார்கள்.

சென்னை ரொம்ப மாறி விட்டது, வந்து இருந்ததில் பாதி பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான்.

ஏப்ரல் 14 ம் தேதியிலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளி வருவதால் ஹிந்து நாளிதழின் விளம்பரம் அதிகமாக கண்ணில் பட்டது.

ஹிந்து நாளிதழ் விலை கூட குறைந்து விட்டதாக கூறினார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா வைப்பார்த்து ஹிந்து பயப்படுகிறது.

என்ன இருந்தாலும் யார் வந்தாலும் சென்னை மக்களிடையே ஹிந்து நாளிதழ் ஒன்றாகி விட்டது. இதற்க்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

என்ன தான் சொல்லுங்க எந்த நாட்டுக்கு வேண்டும் என்றாலும் போங்க ஆனால், சென்னையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அங்கே இருக்கிற சுகமே தனி தான்.

எனக்கு வாழ்க்கை கொடுத்ததே இந்தச் சென்னை தான்.

சோற்றுக்கே கஷ்டப்பட்ட நாட்கள் இருந்தாலும் அங்கே நண்பர்களோடு இருந்த போது கிடைத்த ஒரு மகிழ்ச்சி எங்கு சென்றும் கிடைக்கவில்லை.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. வித்யா வருகைக்கு நன்றி.

    எப்படியோ என்னோட வலைத்தளத்துக்கு வந்தாச்சு! கோதவுல இறங்கியாச்சு! அப்பப்ப என்னோட வலைத்தளத்துக்கு எட்டி பார்க்கும் படி கேட்டுக்கிறேன். மறக்காம அப்படியே கருத்து கண்ணாயிரி :)) ஆகி கருத்தையும் சொல்லிட்டு போகவும் 😀

  2. ஆஹா ஏற்கனவே சென்னையை மறக்க முடியாமல் இருக்கேன். இப்ப இவ்வளவு விஷயங்கள் சொல்லிடீங்க. அங்க என்னதான் விஷயங்கள் பிடிக்காமல் இருந்தாலும் “சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”. சென்னைக்கு நான் செல்லும் அந்த நாளை எண்ணி ஏங்க வச்சிடீங்களே.

  3. ரொம்ப சரி ,எந்த நாட்டுக்கு போனாலும் சென்னைல இருந்த வாழ்க்கைய மறக்க முடியல !!! .எப்போடா சென்னைல செட்டில் ஆகுவோமுனு இருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!