2024 தேர்தலில் தமிழக பாஜக | தேர்தல் முடிவுக்கு முன்

2
2024 தேர்தலில் தமிழக பாஜக

பாராளுமன்றத்தேர்தல் 2024 தமிழகத்தில் முடிந்து விட்டது, மற்ற மாநிலங்களில் தொடர்ந்து கொண்டுள்ளது. ஜூன் 4 வரை ஊகங்களும் தொடரும். Image Credit

குறிப்பு

இங்கே பகிரப்படும் தகவல்கள் அனைத்தும், பல தனிப்பட்ட நபர்களிடம் பேசிய போது திரட்டிய தகவல்கள், நேர்முகம், விவாதம், பல்வேறு கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் கூறுவதாகும்.

பலவற்றைக் கேட்கிறோம் அதை வைத்து இப்படி நடக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வருவோம், எதிர்பார்ப்போம். அது போன்ற நிலையே இக்கட்டுரை.

எனக்குப்பிடித்த பாஜக பற்றிய அலசலே இது.

தமிழக பாஜக

கட்சி வளர வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாத தமிழக பாஜக, மாநிலத்தலைவராக முருகன் பொறுப்பேற்ற பிறகு கவனிக்கத் தக்க அளவில் மாறி, அண்ணாமலைக்கு பிறகு உச்சம் பெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து நின்றது, பாராளுமன்றத் தேர்தலுக்குப் பாஜகவுடன் கூட்டணியில்லை என்று எடப்பாடி அறிவித்தார்.

கூட்டணியிலிருந்து ஒரு கட்சியைப் பாஜக விலக்குவதில்லை, அவர்களாகவே மட்டும் விலகுகிறார்கள். எடப்பாடி அறிவித்தது அண்ணாமலைக்கு சாதகமானது.

எடப்பாடி

ஐந்து மாநிலச் சட்டசபைக்கு முன்னரே கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. பலரும் பாஜக இம்மாநிலங்களில் வெற்றி பெறாது என்று கூறி வந்த நிலையில் முடிவுகள் பாஜக சாதகமாகி விட்டது.

எடப்பாடி முன்னரே அறிவித்தது ஏன் என்று புரியவில்லை. இவ்வளவு விரைவாகக் கூட்டணியை முறித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை.

பலரும் இது பற்றி விமர்சனம் செய்து இருந்தார்கள்.

ஆனால், ஒரு பாஜக ஆதரவாளனாக எடப்பாடியின் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. காரணம், என்னவென்பதை முன்னரே கூறியுள்ளேன்.

சுருக்கமாக, அதிமுக கூட்டணியில் இருந்தால், பாஜகவால் எக்காலத்திலும் வளர முடியாது. எத்தனை இடங்கள் வெற்றி பெற்றாலும் அதிமுக ஆதரவில் வெற்றி பெற்றதாகவே கூறுவார்கள்.

எனவே, பாஜகவின் பலம் என்னவென்பதை அதிமுகவை விட்டுப் பிரிந்தாலே தெரியும், அதோடு வளர்ச்சியும் இருக்கும்.

முதல் தேர்தல்

இதுவரை பாஜக பல தேர்தல்களைச் சந்தித்து இருந்தாலும், தனித்துப் போட்டியிட்டு இருந்தாலும், இத்தேர்தலே பாஜகவுக்கு உண்மையான முதல் தேர்தலாக இருந்தது.

அதாவது, மற்ற கட்சிகளுக்குச் சவாலாகவும், கடும் போட்டியைக் கொடுப்பதாகவும், அதிக இடங்களில் போட்டியிட்டும் இருந்தது.

திமுக, அதிமுக இரு கட்சிகளும், ‘எங்களுக்குப் போட்டி திமுக, அதிமுக தான், பாஜக எங்களுக்குப் பொருட்டே இல்லை‘ என்று கூறினாலும் முழுத்தேர்தலிலும் இருவரும் பாஜக பற்றிப் பேசியே பரப்புரை செய்தார்கள்.

பாஜக வளர்ந்து விட்டதை இரு கட்சிகளுமே தெளிவாக உணர்ந்துள்ளார்கள். அதைத் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு வெளிப்படையாக உணர்த்தும்.

பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பலர் அனைவருக்கும் அறிந்த முகங்களாக இருந்தது கூடுதல் பலம். வேட்பாளர் தேர்வு சிறப்பானதாக இருந்தது.

வாக்குப் பதிவு

எத்தேர்தலிலும் இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்து விட்டது. வாக்கு சதவீதத்தை அறிவிப்பதில் பல தவறுகள்.

வழக்கமாக வாக்கு சதவீதம் அறிவித்த பிறகு அடுத்த நாள் 1% / 2% கூடும் ஆனால், மாறாகப் பெருமளவில் வாக்கு சதவீதம் குறைந்து விட்டது.

இது பல்வேறு சந்தேகங்களை அனைவருக்கும் கிளப்பியுள்ளது.

இவற்றோடு பலரின் பெயர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், எல்லோரும் தேர்தல் ஆணையத்தின் தளத்துக்குச் சென்று இதைச் செய்வதில்லை. கடந்த முறை வாக்களித்தோம் எனவே, இந்த முறையும் இருக்கும் என்று அசட்டையாக இருந்து விடுகிறார்கள்.

பாஜக பூத் ஏஜென்ட்

பெயர்களைப் பூத் ஏஜென்ட் சரிபார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.

பூத் ஏஜென்ட் மூலம் வாக்காளர்களின் பெயரைப் பாஜக சரிபார்க்கவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், பாஜக தற்போது தான் வளர்ந்து வரும் கட்சி. பூத் ஏஜென்ட் பற்றியெல்லாம் பேசப்படுவது, விவாதிக்கப்படுவதே தற்போது தான்.

சில வருடங்களுக்கும் முன் பூத் ஏஜென்ட் கூட இல்லாத கட்சி என்றார்கள் ஆனால், தற்போது பெரும்பாலான பூத்களில் பாஜக பூத் ஏஜென்ட் இருந்தார்கள்.

ஆனால், பலர் தன்னார்வலர்கள். அப்பகுதி நபர்கள் அல்ல அல்லது அப்பகுதியை, மக்களை நன்கு அறிந்தவர்கள் அல்ல. இந்த அளவுக்கு வந்தவர்கள், வாக்காளர் சேர்ப்பு தவறுகளைச் சரி செய்து 2026 தேர்தலுக்கு நிச்சயம் தயார் ஆவார்கள்.

தற்போது பூத் ஏஜென்ட் சரியாக வேலை செய்யவில்லை என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளார்கள் என்ற உண்மையை பலரும் உணரவில்லை.

விமர்சனம் தவறல்ல ஆனால்..

வாக்களிக்க வேண்டிய குறைந்தபட்ச வேலையைக் கூடப் பாஜக ஆதரவாளர்கள் பலர் செய்யாமல், இது போன்று குறை கூறவும், அறிவுரை கூறவும் வரிசை கட்டுகிறார்கள்.

விமர்சனம் வைப்பது, தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறில்லை ஆரோக்கியமான ஒன்றே ஆனால், அதே சமயம் இதுவரை கடந்து வந்த பாதை, செய்த உழைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாஜக உள்ளே வர முடியாது என்றார்கள், வந்த பிறகு வெற்றி பெற முடியாது என்றார்கள், வெற்றிக்குப் பிறகு அது அதிமுகவால் கிடைத்த வெற்றி என்றார்கள்.

தனித்துச் சென்றால் மக்கள் வரவேற்பு இருக்காது என்றார்கள். என் மண் என் மக்கள் கூட்டம் வந்ததும், வரும் கூட்டம் வாக்களிக்காது என்கிறார்கள்.

இதன் பிறகு என்ன சொல்வார்கள் என்று பார்ப்போம்.

களப்பணி

இந்தமுறை பாஜக ஆதரவாளர்கள் களத்தில் ஆற்றிய பணி அளப்பரியது. ஒவ்வொரு இடத்துக்கும் சென்று பரப்புரை செய்தது, ஆதரவு திரட்டியது என்று கலக்கினார்கள்.

திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தார்கள்.

இத்தேர்தல் மிகப்பெரிய அனுபவமாக, தங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக பாஜக கட்சியினருக்கு அமைந்துள்ளது.

பூத் ஏஜென்ட் மூலம் வாக்காளர் பெயர் சரி பார்ப்பு பணியின் முக்கியத்துவத்தை இத்தேர்தல் பாஜகவினருக்கு உணர்த்தியுள்ளது.

இது தவிர வழக்கமாக அனைத்துக் கட்சிகளும் செய்யும் தவறுகளைத் தவிரத் தமிழக பாஜக இத்தேர்தலைச் சிறப்பாகக் கையாண்டது.

வேட்பாளர் அறிவிப்பு மிகத்தாமதமாகி விட்டது. கூட்டணி இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமா அல்லது தேசியக் கட்சி வழிமுறைகளா என்பது தெரியவில்லை.

எத்தனை இடங்கள் வெற்றி பெறும்?

படித்த, பார்த்த, கேட்ட பல தகவல்களை வைத்து இப்படி நடக்கலாம் என்று கூறுவதே இது. தனிப்பட்ட முறையில் எந்தத் தரவுகளும் எனக்குக் கிடையாது.

பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள்

கோவை
நெல்லை
வேலூர்
தேனி
ராமநாதபுரம்
தருமபுரி

போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கும் தொகுதிகள்

பொள்ளாச்சி
கரூர்
நீலகிரி
திருப்பூர்
கன்னியாகுமரி
சிவகங்கை
தென் சென்னை
பெரம்பலூர்

வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் தொகுதி

மத்திய சென்னை (வாய்ப்பு குறைவு, நடந்தால் மகிழ்ச்சி)

வாக்களிக்காத மக்கள்

குறைவான வாக்கு சதவீதம் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் வாக்களித்தது இந்தி கூட்டணி ஆதரவாளர்களா பாஜக கூட்டணி ஆதரவாளர்களா என்று.

வாக்களிக்காதவர்களை நினைத்தாலே எரிச்சலாக வருகிறது. அதிலும் சுற்றுலா சென்றவர்களை நினைத்தால், கொலை வெறி ஆகிறது.

வாக்களிக்க விடுமுறை கொடுத்தால் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வசனம் பேச வேண்டியது ஆனால், வாக்களிக்கும் நேரத்தில் கவுந்தடிச்சு தூங்க வேண்டியது.

நியாயமான காரணம் இல்லாமல், சொத்தைக் காரணங்களைக் கூறுவதை கேட்டாலே ஆத்திரமாக உள்ளது.

படத்துக்கு, IPL டிக்கெட், iPhone வாங்குவதற்கு இருக்கும் பொறுமை, ஐந்து வருடங்களில் ஒரு நாள் சென்று தேர்தல் வரிசையில் நிற்க இல்லை.

பாஜக வாக்கு சதவீதம்

முன்னரே பல முறை குறிப்பிட்ட படி ஒட்டுமொத்தமாக பாஜக குறைந்தபட்சம் 15% பெறும். தொகுதியைப் பொறுத்து 25% வரை பெற வாய்ப்புள்ளது.

மும்முனைப் போட்டியென்பதால், ஒரு தொகுதியில் குறைந்த பட்சம் 25%+ வாக்குகளைப் பெற்றாலே வெற்றி பெற முடியும்.

பெறவில்லையென்றால், வெற்றியும் சாத்தியமில்லை.

பாஜக 19 தொகுதிகளிலும், பாஜக சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எனவே, பாஜக வாக்கு சதவீதமாக 23 தொகுதிகளே கணக்கிடப்படும்.

வாக்குப்பதிவு எப்படி?

இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு கூடவில்லை ஆனால், நடுத்தர மக்களும், இதுவரை வாக்களிக்க ஆர்வம் காட்டாத அடுக்க மக்களும் ஒப்பீட்டளவில் அதிகம் வாக்களித்துள்ளனர்.

வழக்கம் போலப் பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளார்கள்.

இந்தமுறை திராவிடக் கட்சிகள் பணப்பட்டுவாடா சரியாகச் செய்யவில்லை, கட்சியினரே அடித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2026 தேர்தலை மனதில் வைத்துப் பணம் அதிகளவில் கொடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்கள். தேர்தல் முடிவுகளில் இவை தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தேர்தல் முடிவு

எந்தத் தேர்தலையும் விட இத்தேர்தலின் முடிவுக்காக ஆர்வமாக உள்ளேன். காரணம், இத்தேர்தல் பல கேள்விகளுக்கு விடையளிக்கப்போகிறது.

குறிப்பாக பாஜகவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுவதில் முடிவுகள் முக்கியப்பங்கை அளிக்கும்.

அதிமுக வாக்கு பாஜகக்கு வந்துள்ளதா? பொதுமக்கள் நம்பிக்கையைப் பாஜக பெற்றுள்ளதா? பணம் வாங்கியவர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினார்கள்? என்பது போன்ற சுவாரசியமான தகவல்களைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

பாஜகக்கு இழக்க எதுவுமில்லை, குறைந்த பட்சம் ஒரு தொகுதி, 15% வாக்கு சதவீதம் பெற்றாலே பாஜகக்கு மிகப்பெரிய வெற்றி தான். 

ஆனால், பாஜகவின் வளர்ச்சி தற்போது ஒரு வெற்றி என்பதைச் சாதாரணமாக்கி விட்டது. இதனால், எதிர்பார்ப்பும், சுமையும் அதிகமாகி விட்டது.

பார்ப்போம் தேர்தல் முடிவுகள் எப்படியுள்ளது என்று.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. எங்கள் குடும்பத்தில் 4ஓட்டுக்கள் மத்தியில் ஆள ஒரே தேசியக் கட்சி பாரதிய ஜனதா தான் என் அறிந்து போடப்பட்டது. நாங்கள் ஆண்ட கட்சியின் அனுதாபிகள். பா.ஜ.க வேட்பாளர் யாரெனக்கூட அறியவில்லை. மத்தியில் பலமான அரசை தேர்ந்தெடுக்க இந்த முறை கிடைத்த வாய்ப்பு.(சிவகங்கை) என்போன்ற பலர் திருவாளர் மோடி அவர்களுக்காக தாமரையில் விழுந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!