நடுத்தர வர்க்கம் | செலவு சேமிப்பு

6
Middle Class நடுத்தர வர்க்கம் | செலவு சேமிப்பு

ற்போதைய பொருளாதாரக் கொள்கைகளால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்து, நடுத்தர வர்க்கம் மக்களின் சேமிப்பைக் காலி செய்வதிலேயே குறியாக உள்ளன.

நம்மைச் செலவு செய்யத் தூண்டும் காரணிகள் அதிகமாகிக் கொண்டு செல்கின்றன. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம் தான். Image Credit 

எப்படி செலவைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது பற்றிப் பார்ப்போம்.

திட்டமிடுதல்

திட்டமிடுதல் ரொம்ப முக்கியம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் எதுவுமே சரியாக வராது.

எனவே, நமது மாத பட்ஜெட் என்ன? அதில் எப்படி  செலவுகளைப் பிரிக்கலாம் என்பதை திட்டமிட வேண்டும்.

இதற்காகத் திட்டமிடும் போதே, நமது அனைத்து செலவிற்கும் சேர்த்து திட்டமிட வேண்டும், அப்போது தான் இறுதியில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

சம்பளம் வந்த முதல் இரண்டு வாரம் மகிழ்ச்சியாகவும் கடைசி இரண்டு வாரம் நெருக்கடியாகவும் ஆவதற்கு திட்டமிடுதல் இல்லாமையே காரணம்.

புதுச் செலவை என்ன செய்வது?

திட்டமிட்டுத் தான் செய்கிறோம் ஆனால், சில நேரங்களில் திட்டமிடுதலில் இல்லாத செலவுகளும் திடீர் என்று வந்து விடுகின்றன, அப்போது என்ன செய்வது?

என்ன தான் திட்டமிட்டாலும், சில நேரங்களில் நம்மையும் மீறி புதிய அத்தியாவசிய செலவுகள் [நண்பர்கள் திருமணம், மருத்துவம், பரிசுப்பொருள்] வந்து விடும்.

இந்த நேரங்களில் நமது சேமிப்பில் இருந்து எடுக்கலாம் அல்லது நண்பர்களிடையே கடனாகப் பெற வேண்டியது இருக்கும்.

இது போல் என்ன செலவானாலும் அடுத்த மாதத்தில் குறைக்கக்கூடிய செலவுகளில் கையை வைத்துத் தான் ஆக வேண்டும், அப்போது தான் சமாளிக்க முடியும், இல்லை என்றால் கடன் என்பது தொடர் கதையாகி விடும்.

நம்மால் திரும்பக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே கடன் வாங்குவது  நல்லது.

ஆசைப்படலாமா?

என்றுமே வரவுக்கு மீறிச் செலவு செய்யவே கூடாது, இவ்வாறு செய்யப்படும் செலவுகளே நம்மைச் சிக்கலில் மாட்டி விடும்.

புத்தர் கூறியது போல “ஆசையே நமது துன்பத்திற்குக் காரணம்”. அப்ப என்ன ஆசையே படக்கூடாதா?

ஆசைப்படலாம்! ஆனால், அதற்குண்டான நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது சம்பாதிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

அதாவது நம்மில் பெரும்பாலனர்கள் வாங்கும் சம்பளமே போதும்! என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கவே மாட்டார்கள்.

காலம் முழுவதும் ஒரே நிலையிலிருந்து, அதே நிலையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வார்கள்.

எப்பப்பார்த்தாலும் பஞ்சப்பாட்டாகவே இருக்கும். இதை எப்படி கடந்து வருவது?

முதலில் நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதைக் கண்டறிய வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒரு பொறுப்பில் இருக்கிறீர்கள், அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால், ஒரு Certification / மேல் படிப்பை முடிக்க வேண்டியது இருக்கும்.

படிப்பை முடிக்க என்ன செய்யலாம்? என்பதை யோசித்து அதை நோக்கித் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இதற்கு முதல் எதிரி சோம்பேறித்தனம், முயற்சியின்மை. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால், கடுமையா உழைக்கணும்.

எனவே, எப்போதுமே ஒரு நிலையில் இருப்பதை தொடராமல், அடுத்த கட்டத்திற்கு செல்வது எப்படி? என்பதை யோசித்து அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபடலாம்.

சேமிப்பது சிரமமா?

சேமிப்பது கடினம் என்று நினைக்கிறார்கள், இல்லவே இல்லை.

சேமிக்க ஆரம்பித்தால் நமக்கே தெரியாமல் பணம் சேர்ந்து விடும். சேமிக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது.

இதில் நமக்கு எது சரிப் பட்டு வருதோ அதில் நாம் இணையலாம்.

முதலில் பணம் கட்ட சிரமமாக இருக்கும், பின்னர் அது அப்படியே நமக்கு ஒரு பழக்கமாகி, சிரமமில்லாத ஒன்றாகி விடும்.

ஒரு நாள் பார்த்தால், அட! இவ்வளவு சேமித்து விட்டோமா! என்ற வியப்பாக இருக்கும்.

பின்னர் ஏற்படும் பெரிய செலவிற்கு இந்தச் சேமிப்பு மிக உதவியாக இருக்கும்.

அனாவசிய செலவு தடுப்பது எப்படி?

நம்மில் பலர் செய்யும் செலவுகள் தேவையற்ற வீண் செலவுகளாக இருக்கும் ஆனால், அது அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

என்ன செலவு ஆகுதுன்னே தெரியல! பணம் தண்ணீர் மாதிரி போகிறது என்று கூறுவார்கள்.

இதை ஒரு முறையாவது உங்கள் வாழ்வில் யாரிடமாவது கேட்டு இருப்பீர்கள். இதற்குக் காரணம், எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் மனம் போன போக்கில் செலவு செய்வதாகும்.

இதைத் தடுக்க கூச்சம், சோம்பேறித்தனம் பார்க்காமல் தினமும் நாம் என்னென்ன செலவு செய்கிறோம் என்பதை ஒன்றுவிடாமல் எழுதி வைக்க வேண்டும்.

செலவைக் கட்டுக்குள் கொண்டு வர இதைப் பின்பற்றியே ஆக வேண்டும்.

ஒரு மாதம் எழுதினாலே நமக்குத் தெளிவாகப் புரிந்து விடும். என்னென்ன வெட்டிச் செலவுகள் செய்து கொண்டு இருக்கிறோம் என்று.

இதைப் பார்த்தாலே நாம் அதிர்ச்சி ஆகி விடுவோம். அட! எதுக்கு இவ்வளவு செலவு செய்கிறோம்? என்று.

செலவுகளை எழுதி வைத்தால், கண்டிப்பாகச் செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் எப்படித்தான் செலவு ஆகுதுன்னே புரியலையே! என்று கூறுவது நின்று விடும்.

எழுதி வைத்தால் மட்டும் போதாது, அதில் என்ன செலவு தேவையற்ற செலவு, அதிகம் செய்யும் செலவு என்று பார்த்து அதைத் தவிர்க்க / குறைக்க முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு, கேட்டதெல்லாம் வாங்கித் தந்து பழக்கப்படுத்தாதீர்கள்.

குழந்தைகளைக் கெடுப்பதோடு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும், இதே போலச் செலவு செய்து பழக்கப்பட்டு விடுவார்கள்.

குழந்தைகளுக்கு எப்போதுமே பணத்தின் அருமையை சொல்லிக்கொடுங்கள். உங்கள் குடும்பத்தின் சிரமங்களை அவர்களுக்கு அறியப்படுத்துங்கள்.

ஒதுக்கினால், குடும்பக் கஷ்டமே உணராமல் வளர்ந்து விடுவார்கள்.

செலவுகள் செய்யும் போது அவர்களையே செய்யச் சொல்லுங்கள், அப்போது தான் அவர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கும்.

சேமிப்பின் அவசியம்

ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது அவசியம்.

சேமிப்பு எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் பணமாக, தங்கமாக, நிலமாக என்று எது சரிப்பட்டு வருகிறதோ / லாபம் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் உங்கள் சேமிப்பை தொடரலாம்.

சில நேரங்களில் சேமிப்பிற்காகப் பணம் ஒதுக்குவது கடுப்பாகவே இருக்கும், அதுவும் பணப் பற்றாக்குறையான சமயங்களில்.

இதுக்கு வேற மாசாமாசம் கொடுக்க வேண்டியதாக இருக்குதே! என்று எரிச்சலாக இருக்கும்.

நமக்கு இந்தப்பணம் மொத்தமாகக் கிடைக்கும் போது தான், இதனுடைய அருமை புரியும். எனவே சேமியுங்க! சேமிக்கப் பழகுங்கள்.

அனாவசிய செலவைக் குறைக்க முயலுங்கள். நீங்கள் நடுத்தர வர்க்கம் என்றால் இது ரொம்ப அவசியம்.

தொடர்புடைய கட்டுரை

நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. சேமிப்பு, செலவு பற்றி சொன்னது அனைத்தும் உண்மை. ஆனால் நம்மாட்களுக்கு கையில் கொஞ்சம் பணம் இருந்தாலே எல்லாம் மறந்து விடுகிறது. அவற்றை தொலைத்து விட்டு சும்மா இருந்தாலே நிம்மதி.

  2. ஆகா .. நாடும் வீடும் இருக்குற நெலமையில ரொம்ப ரொம்ப அவசியமான பதிவு அண்ணா …

    நானும் ஒவொரு மாசமும் இந்த வாட்டி ஒரு அமௌன்ட் சேமிப்புக்கு னு எடுத்து வைக்கணும் னு நினைப்பேன் .. ஆனால் முடியாது ..

    அதற்க்கு காரணம் என்னுடைய முயலாமையும் சோம்பேறித்தனம்மும் தான்

  3. சேமிப்பு செய்ய வேண்டும் என்று தோன்றி கஷ்டப்பட்டு சேமித்தாலும் ஏதாவதொரு செலவு வந்து சேமிப்பை கரைய வைத்து விடுகிறது

    கையில் ஒரு கோடி நிகழ்ச்சி பற்றி சொல்லியிருந்தீர்கள் சில வீடுகளில் இப்படியும் அப்பாக்கள் உண்டு

  4. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @பாலா 🙂

    @ஆனந்த் கேட்கிறேன்

    @சரவணன் அந்த சேமிப்பே கஷ்டகாலத்தில் உதவத்தானே!

  5. இந்த நேரங்களில் நமது சேமிப்பில் இருந்து எடுக்கலாம் அல்லது நண்பர்களிடையே கடனாக பெற வேண்டியது இருக்கும்.
    ———————————————————————————————————————
    நெறைய தடவை யோசிப்பேன். கிரி நம்ம சென்னைல இருந்தா நல்ல இருந்திருக்குமே என்று. 🙂 😛

  6. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here