Term Insurance அவசியம் என்ன?

3
Term Insurance

Health Insurance எவ்வளவு முக்கியமோ அதே போலத் தற்காலத்தில் Term Insurance ரொம்ப முக்கியம். Image Credit

Term Insurance என்றால் என்ன?

நம் வருமானத்தை மட்டுமே நம்பி நம் குடும்பம் உள்ளது என்றால், அவர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக எடுக்க வேண்டியதே Term Insurance.

அதாவது, நாம் இறந்து விட்டால், திடீரென்று வருமானம் நின்று விடுவதால், நம்மை நம்பியுள்ள குடும்பம், எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்ற சிக்கலில் நிற்கும்.

பணம் இல்லையென்றால், எதுவுமே செய்ய முடியாது.

எனவே, நாம் இல்லையென்றால், நம்மை நம்பி இருந்த குடும்பத்துக்கு ஒரு தொகை கொடுக்க எடுப்பதே Term Insurance.

எப்படி கிடைக்கும்?

40 வயதுள்ள நபர் 20 வருடங்களுக்கு Term Insurance எடுப்பதாகக்கொண்டால், அவர் உடல்நிலை, விபத்து காரணமாக இறக்க நேரிட்டால், எவ்வளவு தொகைக்குக் காப்பீடு செய்துள்ளாரோ அத்தொகை குடும்பத்துக்கு (Nominee) கிடைக்கும்.

கிடைக்கும் தொகையை வைத்து அவர்களது எதிர்காலத்தைச் சமாளிக்கலாம்.

என்னென்ன வகையான Term Insurance உள்ளது?

Term Insurance என்றாலே, கிணற்றில் போடும் கல்லைப்போன்றது தான், திரும்பக் கிடைக்காது. அதாவது, காப்பீடு எடுத்த காலம் முடிந்தால், நமக்கும் எதுவும் நடக்கவில்லை என்றால், செலுத்திய தொகை அவ்வளவு தான்.

ஆனால், தற்போது செலுத்திய Premium தொகையும் கிடைக்கும்படியான Term Insurance உள்ளன.

ஆனால், வழக்கமான Premium தொகையை விட அதிகம்.

எனவே, நமது தேவையைப் பொறுத்துத் தேர்வு செய்து கொள்ளலாம்.

டெர்ம் இன்சூரன்ஸ் நட்டமா?

காப்பீட்டைப் பொறுத்தவரை அதை இலாபமாகக் கருதக் கூடாது அல்லது அதை வருமானம் தரும் முதலீடாகக் கருதக் கூடாது.

அது Risk factor தான். அதாவது, இது போன்ற நிலை ஏற்பட்டால், எப்படிச் சமாளிப்பது என்கிற வகையிலே சிந்திக்க வேண்டும்.

பணமும் வர வேண்டும் என்றால், மேற்கூறிய கூறிய திட்டங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு Premium அதிகம் என்பதை நினைவில் கொள்க.

எவ்வளவு செலுத்த வேண்டும்?

எத்தனை ஆண்டுகளுக்கு? எவ்வளவு தொகைக்கு? எந்த வயதில் காப்பீடு எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துச் செலுத்த வேண்டிய Premium தொகை இருக்கும்.

எப்படிச் செலுத்தலாம்?

மாதம், வருடம் என்று நமது வசதிக்கு ஏற்பச் செலுத்தலாம். என் பரிந்துரை ஆண்டுக்கு ஒரு முறை.

சில காப்பீடு திட்டத்தில் 10 வருடங்களில் கட்ட வேண்டியதை இரு வருடங்களிலேயே செலுத்தும் வசதியும் உண்டு ஆனால், இதைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

எடுத்துக்காட்டுக்கு, இரண்டாவது வருடத்தில் முழுத்தொகையையும் செலுத்தி விடுகிறீர்கள் ஆனால், மூன்றாவது வருடத்தில் ஏதாவது ஆகி விடுகிறது என்றால் வீண்.

ஆனால், வருடாவருடம் செலுத்தும் போது குறைந்த தொகை செலுத்தி இருப்போம் ஆனால், எதுவும் நடந்தால் முழுத்தொகையும் Nominee க்கு கிடைக்கும்.

இறுதிக்காலத்தில் வருடாவருடம் கட்ட (சம்பளம் / வருமானம் இல்லாததால்) பணம் இருக்காது. எனவே, தற்போதே முடித்து விட சிலர் நினைக்கலாம்.

எனவே, இதுவொரு தனிப்பட்ட நபரின் சூழ்நிலையைப் பொறுத்து.

40 வயதில், 30 வருடங்களுக்கு, ₹1 கோடி காப்பீடு எடுக்கிறீர்கள் என்றால், தோராயமாக ஆண்டுக்கு ₹25,000 செலுத்த வேண்டியதிருக்கும்.

30 ம் ஆண்டு முடிவில் ₹7,50,000 செலுத்தி இருப்பீர்கள். இப்பணம் திரும்பக் கிடைக்காது ஆனால், இடையில் உங்களுக்கு ஏதாவது நடந்து காலமாகி விட்டால் Nominee க்கு 1 கோடி கிடைக்கும்.

டெர்ம் இன்சூரன்ஸில் என்னென்ன வகை உள்ளது?

  • உடல்நிலை காரணமாக (Heart attack போன்ற) இறந்தால் காப்பீடு.
  • விபத்தில் இறந்தால் காப்பீடு.

தனித்தனியாகவும் பெறலாம் அல்லது இரண்டுக்குமே வாய்ப்புள்ளது என்று கருதினால், இரண்டையுமே எடுத்துக்கொள்ளலாம்.

உடல்நிலை சம்பந்தப்பட்ட காப்பீட்டில், காப்பீடு நிறுவனம் குறிப்பிட்டுள்ள நோய் வகையால் இறந்தால் மட்டுமே காப்பீடு கிடைக்கும்.

Premium தொகையில் மாற்றமிருக்கும்.

எப்போது அவசியம் எடுக்க வேண்டும்?

வீட்டுக்கடன் உட்படப் பெரிய கடன் எடுத்துள்ளீர்கள் என்றால், அவசியம் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.

காரணம், பெரிய கடனைக் கட்ட வேண்டிய நிலையில் இறந்து விட்டால், மிகப்பெரிய பொறுப்பு நம்மை நம்பியிருக்கும் குடும்பத்துக்கு வந்து விடும்.

அவர்களால் மிகப்பெரிய கடன் தொகையைச் சமாளிக்க முடியாமல், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, நெருக்கடியான சூழ்நிலைக்குச் சென்று விடுவார்கள்.

தற்போது வீட்டுக்கடன் எடுக்கும் போது Term Insurance வங்கியே வழங்குகிறது. ஏதாவது நேர்ந்தால், கடனைக் குடும்பம் கட்ட வேண்டியதில்லை.

எவ்வளவு தொகைக்குக் காப்பீடு எடுக்க வேண்டும்?

பணவீக்கம் (Inflation) எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்கிட்டு காப்பீடு தொகையை முடிவு செய்ய வேண்டும்.

தற்போது ₹50,00, 000 பெரிய தொகையாக இருக்கலாம் ஆனால், 20 வருடங்களுக்குப் பிறகு பணவீக்கம் காரணமாக இத்தொகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

எனவே, 1 கோடி காப்பீடு எடுப்பது சிறந்தது. முன்னரே கூறியபடி சூழ்நிலை, தேவையைப் பொறுத்து தொகையைத் தீர்மானிக்க வேண்டும்.

முக்கியமாகச் செய்ய வேண்டியது என்ன?

யாருக்காக டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கிறீர்களோ அவரிடம் காப்பீடு எடுத்ததைக் கூற வேண்டியது கட்டாயம். இல்லையென்றால், எடுத்ததே வீணாகி விடும்.

Nominee காலமானாலோ, விவாகரத்தானாலோ Nominee யை மாற்றி விடுங்கள்.

எனவே, இதுவரை Term Insurance எடுக்கவில்லையென்றால், எடுக்கப் பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய கட்டுரை

மருத்துவக் காப்பீடு எதைத் தேர்ந்தெடுப்பது?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. சூப்பர். டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி தான் நான் நீண்ட நாட்களாக பேசி கொண்டு இருக்கிறேன் ஒரு கோடி டெர்ம் காப்பீடு அனைவருக்கும் தர மறுக்கிறார்கள்.

    நாம் அந்த பீரிமியம் தொகை கட்ட ரெடியாக இருந்தாலும் eligibility பார்த்து தான் தருகிறார்கள்.நம் income tax பார்த்து நமக்கு ஒரு கோடி காப்பீடு எடுக்க தகுதி இருக்கா இல்லையா என முடிவு செய்கறார்கள்.

    இன்னொன்று எந்த நிறுவனத்திடம் எடுக்க வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும். Claim settlement ratio 99% மேல் உள்ள நிறுவனத்திடம் எடுப்பதே சிறந்தது.

    கூகுள் சென்று கடந்த claim settlement ratio சில வருடங்களாக எந்த நிறுவனம் சிறந்ததாக இருந்தது என பார்க்க வேண்டும். இதுல் நிறைய உள்குத்து உள்ளது.

    நான் பலபேருடம் பேசி நிறைய youtube வீடியோ பாரத்து தெரிந்து கொண்ட விஷயங்கள் இவை. இன்னும் நிறைய இருக்கிறது. அவசரப்பட்டு போட வேண்டாம். ஆனால் கட்டாயம் போட வேண்டிய காப்பீடு தான். நான் கண்டிப்பாக எடுக்க போகிறேன்

  2. கிரி, காப்பீடை குறித்து ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவினை எழுதி இருக்கீங்க!!! மிகவும் பயனுள்ள தகவல்களை சிறப்பாக தொகுத்து எழுதியமைக்கு மிக்க நன்றி.. நான் இதுவரை எந்த காப்பீடும் எடுத்தது கிடையாது.. அவ்வவ்போது சக்தியிடம் (ஏஜென்ட்டா இருப்பதால்) காப்பீட்டை பற்றி விசாரிப்பது உண்டு.. ஆனால் என்னவோ எனக்கு அவர்களின் சில சட்ட திட்டங்கள் முரணாக இருப்பதாக ஒரு எண்ணம்..

    கடந்த ஆண்டு கூட என் பசங்களின் எதிர்காலத்திற்காக காப்பீடு செய்யலாம் என்று விசாரிக்கும் போது எனக்கு காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகள் சுத்தமாக பிடிக்கவில்லை.. ஒரு சில விதிகள் முரணாக இருந்தது போல ஒரு எண்ணம். அதனால் அதை தவிர்த்து விட்டேன்.,. தற்போது கூட எதிர்காலத்தை பற்றி யோசிக்கும் போது காப்பீட்டின் அவசியம் புரிகிறது.. இது போல பதிவுகளை படிக்கும் போது பல கேள்விகள் என்னுள் எழுவதை நிச்சயம் உணர முடிகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. @ஹரிஷ் தகவல்களுக்கு நன்றி

    @யாசின் கடந்த முறை மருத்துவ காப்பீடு பற்றி எழுதிய போதும் இதைக்கூறினீர்கள் என்று நினைக்கிறன். தயவு செய்து தாமதிக்காமல் காப்பீடு செய்யவும்.

    சமீபத்தில் காலமான மாரிமுத்து Term Insurance செய்து இருந்தால் (அவர் செய்யவில்லை), அவரது குடும்பத்துக்கு 1 கோடியோ அல்லது அவர் எடுத்த தொகையோ கிடைத்து இருக்கும்.

    மருத்துவ காப்பீடு, Term insurance இரண்டுமே முக்கியம். தாமதம் செய்ய வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here