லீசுக்கு வீடு கடை வாடகைக்கு விடுவதில் நடந்து வரும் ஏமாற்று வேலைகள் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Image Credit
லீசுக்கு வீடு கடை
வீடு மற்றும் கடையை வாடகைக்கு விடுவது, பெறுவதில் இலாப நட்டங்கள் இருந்தாலும், லீசுக்கு விடுவது பெரியளவில் சர்ச்சையானது இல்லை.
ஆனால், சமீபத்தில் நடந்த சம்பவங்கள் லீசுக்கு விடுவதையே கேள்விக்குறியாக்கியுள்ளன.
லீஸ் என்றால் என்ன?
Lease = குத்தகை
மாத வாடகைக்குப் பதிலாக ஒரு பெரிய தொகையை உரிமையாளர் கூறும் வருடங்களுக்கு இருப்பாகக் கொடுத்து விட வேண்டும்.
அக்காலம் முடிந்த பிறகு அத்தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் இரு பலன்கள்.
- வாடகைக்கு இருப்பவருக்கு வாடகைக்கு செலவழிக்க வேண்டிய பணம் மிச்சமாகிச் சேமிப்பாகிறது.
- வாடகைக்கு விடுபவருக்குப் பெரிய தொகை உடனடியாகக் கைக்குக் கிடைத்து ஏதாவது முதலீட்டுக்குப் பயன்படுகிறது.
எனவே, இரு பக்கமும் அவரவர் தேவைக்கு லீஸை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
Property Management
சிலர் முதலீட்டுக்காக வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் NRI யாக இருப்பார்கள்.
இவர்களால் வெளிநாட்டிலிருந்து வீடுகளைப் பராமரிக்க முடியாது.
எனவே, Property Management நிறுவனங்களிடம் வாடகை வசூலிப்பது உட்பட மற்ற பொறுப்புகளைக் கொடுத்து விடுவார்கள்.
பராமரிப்புத் தொகையை அந்நிறுவனம் வாங்கிக்கொண்டு, உரிமையாளர்களுக்குப் பதிலாக வாடகைக்கு இருப்பவர்களிடம் இவர்களே பேசிக்கொள்வார்கள்.
வாடகைக்கு இருப்பவர்களும் வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால், உரிமையாளரைத் தொடர்பு கொள்ளாமல் இந்நிறுவனத்தைத் தொடர்பு கொள்வார்கள்.
உரிமையாளர்கள் அனைவருமே பிளம்பர், மின்சாரம் உட்பட அனைத்துக்கும் சரியான நபரைத் தெரிந்து வைத்து இருக்க வாய்ப்பு குறைவு ஆனால், Property Management நிறுவனங்கள் இதற்காகவே இருப்பவர்கள்.
பல அடுக்ககங்களை இது போலப் பராமரிப்பதால் இதற்கென்று நபர்களை வைத்து இருப்பார்கள். எனவே, எளிதாக முடித்து விடுவார்கள்.
வாடகைக்கு வீட்டைப் பராமரிக்கத் தனித்திறமை வேண்டும். காரணம், அடாவடி ஆட்களும் இருப்பார்கள். எனவே, இவர்களைக் கையாள்வது எளிதல்ல.
இதற்கு சரிப்பட்டு வராதவர்களுக்கு Property Management பொருத்தமான சேவை.
என்ன சிக்கல்கள்?
மேற்கூறிய முறையில் பெரிய பிரச்சனையில்லை காரணம், நிறுவனம் சரியாகச் செயல்படவில்லை, பணத்தைக் கொடுக்கவில்லையென்றால், ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம்.
ஏமாற்றினாலும் சிறியளவில் நட்டத்துடன் விலகி விடலாம்.
ஆனால், லீசுக்கு என்றால், எடுத்துக்காட்டுக்கு ஒரு வருடத்துக்கு வாடகை தொகைக்கேற்ப ₹10,00,000 கொடுப்பார்கள். ஒரு வருடம் முடிந்த பிறகு தொடர்ந்தால் அதே தொகையோ அல்லது சிறு அதிகரிப்போ இருக்கும்.
தொடரவில்லையென்றால், ₹10,00,000 வாங்கிக்கொண்டு வேறு வீட்டுக்குச் சென்று விடலாம்.
இங்கே எப்படி பிரச்சனை வந்தது?
மேற்கூறிய Property Management நிறுவனங்கள் லீஸையும் செய்கின்றன.
அதாவது, வாடகைக்கு வருபவர் இவர்களிடம் ₹10,00,000 கொடுத்து விட வேண்டும். இந்நிறுவனம் உரிமையாளருக்கு ஒப்பந்தப்படி ஒப்புக்கொண்ட வாடகையை ஒவ்வொரு மாதமும் கொடுத்து விடும்.
லீஸ் முடிந்ததும் ₹10,00,00 தொகையை வாடகைக்கு இருந்தவரிடம் கொடுத்து விடுவார்கள்.
இதில் என்ன ஆனது?
உரிமையாளருக்குச் சில மாதங்கள் ஒழுங்காக வாடகையைக் கொடுத்து விட்டு, பின்னர் வாடகை வரவில்லையென்று விசாரித்தால், நிறுவனமே இருக்காது!
கொடுக்கப்பட்ட தொலைபேசி எண், முகவரி அனைத்துமே தொடர்பில் இருக்காது.
தற்போது வாடகைக்கு இருப்பவர் ₹10,00,000 திரும்பக் கொடுத்தால் தான் வீட்டைக் காலி செய்வேன் என்பார், உரிமையாளர் நான் ₹10,00,000 வாங்கவில்லை என்பார்.
இருவருக்குமே கடுமையான மன உளைச்சல் ஆகி வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்துக்கு நடந்து கொண்டு இருப்பார்கள்.
தற்போது இது போன்ற சம்பவங்கள் நடந்து பலரும் பணத்தை இழந்துள்ளார்கள். ஒரு முதியவர் அழுதுகொண்டே பணத்தை இழந்ததைக் கூறியது பாவமாக இருந்தது.
இவர்களுக்கு இத்தொகை தான் இறுதி நாட்களைக் கழிக்க உதவியிருக்கும். தற்போது இப்பணமும் போய் விட்டது என்றால், எப்படிச் சமாளிப்பார்கள்?!
இவர்களைப் போன்றவர்களை ஏமாற்ற எப்படித்தான் மனது வருகிறதோ! கொடுமை.
தெரிந்தவர் ஒருவரின் நண்பர் மாட்டிக்கொண்டு வழக்கில் அலைந்து கொண்டுள்ளார். சிவில் வழக்கெல்லாம் எப்போது முடிவது? தீர்வு கிடைப்பது?
பரிந்துரை என்ன?
மிகவும் தெரிந்தவர் என்றால் மட்டும் லீசுக்கு செல்லுங்கள்.
என்ன தான் ஒப்பந்தத்தையும் போட்டு, பணத்தையும் வங்கிப்பரிமாற்றம் செய்து இருந்தாலும், இதுபோல ஓடிப்போய் விட்டால் என்ன செய்வது?
இன்னும் சிலர் ஒப்பந்தம் முடிந்தும் பணத்தைக்கொடுக்காமல், காலம் தாழ்த்துவார்கள். கேட்டால், ‘வீட்டிலிருந்து கொள்ளுங்கள்‘ என்பார்கள். காரணம், அவர்களிடமும் உடனடியாக கொடுக்கப் பணமிருக்காது.
வீட்டை மாற்ற வேண்டும் என்றால், என்ன செய்வது?
₹1,00,000 ஏமாந்து விட்டோம் என்றால் சமாளிக்க முடியும் ஆனால், அதே ₹10,00,000 என்றால் எப்படி முடியும்?! மீள்வது எளிதானதல்ல.
ஒப்பந்தம் இருப்பதால் மட்டுமே பாதுகாப்பாக உள்ளதாக அர்த்தமில்லை. சீட்டுப் பணம் போல மொத்தமா சுருட்டிக்கொண்டு சென்று விட்டால், அதோ கதி தான்.
சிலருக்கு வாழ்நாள் சேமிப்பாக இருக்கலாம். எனவே, எச்சரிக்கை!
நான் ரொம்ப நாட்களாக லீசுக்கு செல்லலாம் என நினைத்து இருந்தேன். ஆனால் அதில் இப்படி எல்லாம் ஏமாற்றினால் என்ன செய்வது என நினைத்து இருக்கிறேன். நான் எதை நினைத்து பயந்தேனோ அதை அப்படியே நீங்கள் கட்டுரையாக எழுதி இருக்கிறீர்கள். லீசுக்கு மாத வாடகை பெட்டர்.
இந்த பதிவை சிறந்த எச்சரிக்கை பதிவாக பார்க்கிறேன் கிரி.
===============================
இவர்களுக்கு இத்தொகை தான் இறுதி நாட்களைக் கழிக்க உதவியிருக்கும். தற்போது இப்பணமும் போய் விட்டது என்றால், எப்படிச் சமாளிப்பார்கள்?!
இவர்களைப் போன்றவர்களை ஏமாற்ற எப்படித்தான் மனது வருகிறதோ! கொடுமை.
===============================
முற்றிலும் உண்மை கிரி. ஆனால் ஏமாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு இதெல்லாம் பற்றி துளி கூட கவலை படமாட்டர்கள். அது போல தனியார் மோசடி சீட்டு கம்பெனி, தனி நபர்கள் சீட்டு பிடித்தல் என்று எந்த உத்திரவாதமும் இல்லாமல் எப்படி பணத்தை கொடுத்து, மக்கள் பல வகையில் ஏமாற்றப்பட்டாலும் மீண்டும், மீண்டும் ஏமாறுவதை செய்திகளில் காண முடிகிறது.
இது எப்படி என்றே புரியவில்லை. குறிப்பாக நடுத்தர மக்கள், இல்லத்தரசிகள் என ஏமாற்றுப்படுகின்றனர்.. சில சமயம் இந்த சேமிப்பு திருமணம், கல்வி, என முக்கிய நிகழ்வுகளுக்காக சேமிக்கப்படும் பணம் இறுதியில் ஏமாற்றப்பட்டு, அடுத்து என்ன என்று புரியாமல் அல்லல் படும் சூழலுக்கு உள்ளாகி விடுகின்றர். மீண்டும், மீண்டும் இது போன்ற செய்திகளை பார்க்கும் போது யாரை குறை சொல்வதே என்று தெரியவில்லை கிரி.
@ஹரிஷ்
“நான் ரொம்ப நாட்களாக லீசுக்கு செல்லலாம் என நினைத்து இருந்தேன்.”
நானும் நினைத்துகொண்டு இருந்தேன் ஆனால், இப்படியொரு வில்லங்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
@யாசின்
“ஏமாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு இதெல்லாம் பற்றி துளி கூட கவலை படமாட்டர்கள்.”
கசப்பான உண்மை.
“தனியார் மோசடி சீட்டு கம்பெனி, தனி நபர்கள் சீட்டு பிடித்தல் என்று எந்த உத்திரவாதமும் இல்லாமல் எப்படி பணத்தை கொடுத்து, மக்கள் பல வகையில் ஏமாற்றப்பட்டாலும் மீண்டும், மீண்டும் ஏமாறுவதை செய்திகளில் காண முடிகிறது.”
எனக்கு இது புரியாத புதிர். எத்தனை அடிபட்டாலும் திருந்தவே மாட்டார்கள் போல.
எல்லோருக்கும் அதிக வட்டி என்ற ஆசை கண்களை மறைத்து விடுகிறது.
“சில சமயம் இந்த சேமிப்பு திருமணம், கல்வி, என முக்கிய நிகழ்வுகளுக்காக சேமிக்கப்படும் பணம் இறுதியில் ஏமாற்றப்பட்டு, அடுத்து என்ன என்று புரியாமல் அல்லல் படும் சூழலுக்கு உள்ளாகி விடுகின்றர்.”
ஆமாம். கொடுமையான ஒன்றே.
“மீண்டும், மீண்டும் இது போன்ற செய்திகளை பார்க்கும் போது யாரை குறை சொல்வதே என்று தெரியவில்லை கிரி.”
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுகிறவர்களும் இருப்பார்கள்.
Giri, pls update here if you know any better property management companies.
For rental collections and house maintenance
@Murali I don’t have any idea but also I’m scared to suggest the company because couldn’t believe anyone.
Thanks for your reply Giri