நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

11
நடுத்தர வகுப்பு மக்கள்

டுத்தர வகுப்பு மக்கள் வாழ்க்கை பற்றிச் சிறு விமர்சனம் Image Credit

அறிவுரை

தலைவர் திரைத்துறைக்கு வரும் முன் அவருடைய அப்பாவிடம் அறிவுரை கேட்ட போது, பின்வருமாறு கூறி இருக்கிறார்.

சாப்பாட்டுக்கோ தூங்குறதுக்கோ சிரமப்படக் கூடாது. அதற்காக நீ மறுபடியும் எந்த வேலையும் செய்யக் கூடாது. அதுக்கு முதல்ல ஒரு வழி பண்ணிக்கோ.

அப்போது தான் உனக்குப் பயம் போகும், தைரியம் வரும்.

சாப்பாட்டுக்கு, பிழைப்பதற்கே சிரமம் என்று வரும் போது எதிர்காலத்தை நினைத்துப் பயப்பட்டு நாம் கோழைகள் ஆகிடுவோம்.

அநியாயத்துக்கு இடம் கொடுத்துடுவோம்.

என்று கூறியிருக்கிறார்.

இதை என்னோடு தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்ததால், அப்படியே தலைவரின் அப்பா கூறியதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

நடுத்த வகுப்பு மக்களிடம் உள்ள பிரச்சனையே இது தான்! குறிப்பாக 70 / 80 / 90 வருடங்களில் பிறந்தவர்களுக்கு மிகப் பொருந்தும்.

தற்போதும் இது தொடர்கிறது ஆனால், பொருளாதார அளவில் பலர் தற்போது உயர்ந்து இருப்பதால், இப்பிரச்சனை குறைந்து இருக்கிறது.

சிறுவயதிலேயே மனதளவில் ஏற்படும் நெருக்கடி

மகனிடமோ மகளிடமோ “நீ தான் எல்லாமே! குடும்பத்தையே நீ தான் காப்பாத்தணும், உன்னை நம்பித் தான் அனைவரும் இருக்கிறோம், கடனையெல்லாம் நீ தான் சரி செய்யணும்” என்று சிறு வயதிலேயே பெரிய பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார்கள்.

நாம் பொறுப்பானவர்களாக மாற அல்லது இன்னொரு வகையில் கூற வேண்டும் என்றால் தறுதலையாக மாறிவிடாமல் இருக்கவும் இப்பொறுப்பு உதவுகிறது.

ஒரு பணிக்குச் சேர்ந்தால் நம்மால் தைரியமாக எந்த முயற்சியும் எடுக்க முடியாதபடிக்கு நம்முடைய கடமைகள் பயமுறுத்தும்.

வேலை பறிபோனால் குடும்பம் என்ன ஆவது, கடனை எப்படிக் கட்டுவது! என்ற எண்ணங்களே நம்மைக் கோழைகளாக்கி விடும்.

புதிய முயற்சிகளை எடுக்க வாய்ப்பிருந்தும் எடுக்க முடியாது. நல்ல சம்பளம் வாங்குவோம் ஆனால், கடன் இருப்பதால், தைரியமாக முடிவை எடுக்க முடியாது.

இந்த வேலை இல்லைனா.. இன்னொரு வேலை!” என்று தைரியமாக இருக்க முடியாது. ஏனென்றால், சேமிப்பு இருக்காது, முழுவதும் கடனுக்கே சரியாக இருக்கும்.

விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால், அவர்கள் பெரும்பான்மை கிடையாது.

இந்த மன அழுத்தம் நம்மைக் கோழைகளாக்கி விடும். இதுவே நம்மை நேர்மையாகவும், கடுமையான உழைப்பானவர்களாகவும் மாற்றும் என்பது ஆறுதல்.

பேராசை பெரு நட்டம் மட்டுமல்ல நெருக்கடியையும் ஏற்படுத்தும்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த போது நண்பர்கள் என்னைச் சென்னையில் வீடு வாங்கக் கூறினார்கள்.

என் மீது உள்ள அக்கறையில் தான் கூறுகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், என் நிலைமை எனக்குத் தான் தெரியும்.

ஏற்கனவே கடனைக் கட்டி வெறுத்துப் போய்த் தான் திரும்பி உள்ளேன். எனவே, மற்றவர்களை விட கடனால் ஏற்படும் மன அழுத்தம் நன்கு புரியும்.

20 வருடங்கள்

தற்போது வீடு வாங்க நான் 50 லட்சம் என்று வங்கியில் கடனை வாங்கினால், இதை முடிக்கத் தோராயமாக அடுத்த 20 வருடங்கள் ஆகும்.

அதாவது கடந்த வருடங்களில் அனுபவித்தது போதாது என்று இன்னும் 20 வருடங்கள் என் வாழ்க்கையில் பயந்து கொண்டே வாழ வேண்டும்.

ஆட்குறைப்பு என்றால் திக்குனு இருக்கும், வேறு பெரிய செலவு வந்தால், தூக்கம் போய்டும். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றாலும் பயமாக இருக்கும்.

நம் பொருளாதாரம் இதே போலத் தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது.

இவையெல்லாம் கற்பனையல்ல நிதர்சனப் பிரச்சனைகள்.

இழந்தவை திரும்பக் கிடைக்குமா?!

20 / 30 வருடங்கள் கழித்து எனக்கு வீடு என்ற சொத்து இருக்கும்.

ஆனால், இடைப்பட்ட வருடங்களில் அடைந்த நெருக்கடி, தொலைத்த இளமைக் காலங்கள், மன அழுத்தம் போன்றவற்றை இந்தச் சொத்து ஈடு செய்யுமா?!

இனியும் 20 வருடங்கள் பயந்து வாழ்க்கையை நடத்த முடியாது.

இதற்கு ஒரே வழி ஆசைகளைக் குறைத்துக் கொள்வது, அதற்கு என் குடும்பத்தினரை பழக்கப்படுத்துவது அல்லது சம்பாதிக்கும் வழியை அதிகப்படுத்துவது.

கடனால் கிடைக்கும் மகிழ்ச்சி நிலையற்றது

கடன் வாங்கி மகிழ்ச்சியாக இருக்க நினைக்காதீர்கள்! அவை நிலையற்றது. இறுதியில் உங்கள் நிம்மதியை, குடும்பத்தின் மகிழ்ச்சியை முற்றிலும் துடைத்து எடுத்து விடும்.

வரவுக்கு மீறிய செலவு என்றுமே ஆபத்து!

சிங்கப்பூரில் கடனோடு இருந்தேன் அதனால், பயத்தோடு இருந்தேன். இந்தியா வந்த பிறகும் கடன் இருந்தது ஆனால், முடித்து விட்டேன்.

இது என் மன பாரத்தைக் குறைத்து விட்டது. இன்னும் சில மாதங்கள் சென்றால், மொத்தமாக இதில் இருந்து வெளியே வந்து விடுவேன்.

Read: “Foreign Return” வாழ்க்கை எப்படி இருக்கு?!

எப்போது அடுத்த நாள் குறித்த பயம் நமக்கு வருகிறதோ அப்போதே நாம் மனதளவில் கோழைகளாகி விடுவோம், தைரியமாக முடிவுகளை எடுக்க முடியாது, மகிழ்ச்சி இருக்காது, தூக்கம் வராது, எப்போதும் யோசனைகளில் இருப்போம்.

இதைத் தான் தலைவரின் அப்பா கூறியிருக்கிறார்.

உங்களில் சிலருக்கு ரஜினியைப் பிடிக்காமல் இருக்கலாம் ஆனால், நல்லதை / அனுபவங்களை யார் கூறினாலும் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.

ஆசைப்படுவது தவறில்லை ஆனால்…

நடுத்தர வகுப்பு மக்கள் பெரும்பாலும் அடுத்தவரைப் பார்த்து ஆசைப்பட்டே சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள். அவன் அது வாங்கிட்டான் இது வாங்கிட்டான் என்று அதையே செய்து செம்ம அடி வாங்குவதே வழக்கம்.

ஆசைப்படுவது தவறில்லை, அனைவரும் ஆசைப்படலாம் ஆனால், அதற்கு முன் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்.

அடைய நினைப்பதற்கான முயற்சிகளை எடு, அதற்கான பொருளாதாரத்தை அடைந்த பிறகு நீ நினைப்பதை செய்.

Read: நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

எதிர்காலப் பாதுகாப்பு என்ற பெயரில் வாழ்க்கை முழுவதும் சிரமப்பட்டு சேமித்து தங்களது இறுதிக் காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் / மகன் மகள் பிரச்சனைகளால் அவற்றை அனுபவிக்க முடியாத பரிதாபச் சூழ்நிலையில் இருப்பார்கள்.

எதிர்காலத்தை நினைத்து நிகழ் காலத்தைத் தொலைப்பவர்களே நடுத்தர வகுப்பு மக்கள்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

11 COMMENTS

  1. கிரி,
    நான் சென்னையில் இருந்த ஏழு வருடமும் வீடு வாங்காதாது நீங்கள் கூறியதையே நானும் நினைத்தாலே.

    Keep writing 🙂

    அன்புடன்,
    சங்கர் வெங்கட்

  2. நன்றாக சொன்னியர்கள்.சொத்து வாங்கி இறுதியில் எஞ்சுவது சொத்து மட்டுமே.நாளை ,நாளை என்று இன்றைய சந்தோஷத்தை இழக்கிறோம். .
    கலாகார்த்திக்
    கார்த்திக் அம்மா

  3. நடுத்தர வர்க்கத்தை பற்றி நீங்கள் குறிப்பிட்டவை முழுக்க முழுக்க உண்மையே… சிறுவயதிலே ஒருவித பக்குவத்தை, உழைப்பை இவர்களால் எளிதில் கற்று கொள்ள முடிகிறது. என் தந்தையின் காலத்தை காட்டிலும், என் காலத்தில் வசதி ஓரளவு அதிகம் இருந்தாலும், என் மகனை என் தாத்தா / பாட்டி என்னை வளர்த்ததை போல் தான் வளர்க்க ஆசைப்படுகிறேன்..

    எதிர்கால பாதுகாப்பு பற்றி நீங்கள் குறிப்பிட்டவை தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது. என்னுடைய 9 வருட அயல்நாட்டு வாசத்தில் பல நண்பர்களை பார்த்துளேன்.. வரவுக்கு மேல் செலவு, அடுத்தவர்களுடன் போட்டி, கடனட்டை பிரச்சனைகள் என பல சுமைகளை தேவையில்லாமல் தலையில் ஏற்றி கொள்கின்றனர். ஆனால் வெளியில் தாங்கள் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொள்கின்றனர்..ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.
    =========================
    நீங்கள் பதினொன்றாவது ஆண்டு இடுகையில் கூறியது : –
    =========================
    எனக்குத் தெரிந்த விசயங்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும், பல நல்ல செய்திகளைக் கூற வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது… நல்ல விஷயங்களை யார் கூறினாலும் கேட்பதில் தவறில்லை..

    நீங்கள் உங்களுக்கு தெரிந்த செய்திகளை எப்போதும் பகிர வேண்டும் என்பது எனது விருப்பமே…தொடர்ந்து படியுங்கள்…. தொடர்ந்து எழுதுங்கள்……உங்கள் எழுத்து கடைக்கோடியில் உள்ள ஒருவனுக்கு மாற்றத்தை ஏற்படுத்துமெனின் அது உங்களின் வெற்றியே!!!! (கர்மாவை நினைவு கொள்ளவும்.) பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி கிரி..
    =========================

  4. மிகவும் எளிமையான வார்த்தைகள், ஒவ்வொருவருக்கும் தேவையான அனுபவங்கள், இது கிடைப்பது மிக கடினம், தொடர்ந்து எழுதவும்.

    நன்றி

  5. சரியா சொன்னிங்க கில்லாடி. ஏன்டா வீடு வாங்குனோம் அப்படின்னு இருக்கு சில நேரம்.

    ரொம்ப கட்டுக்கோப்பா உங்களால மட்டும் தான் இருக்க முடியும்ன்னு நினைக்கிறேன் 🙂

    கையில காசு இருந்தா அதுக்கு ஒரு செலவு வருது. எப்படின்னு தான் தெரியலை. நமக்கு தெரியாம ஒரு சைத்தான் நமக்குள்ள இருக்குன்னு நினைக்கிறேன் 🙁

  6. எளிமையான ஆனால் அருமையான அறிவுரை கிரி. உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்கள் நற்பணி தொடரட்டும் 🙂

  7. @யாசின்

    “வரவுக்கு மேல் செலவு, அடுத்தவர்களுடன் போட்டி, கடனட்டை பிரச்சனைகள் என பல சுமைகளை தேவையில்லாமல் தலையில் ஏற்றி கொள்கின்றனர். ஆனால் வெளியில் தாங்கள் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொள்கின்றனர்..ஆனால் உண்மை அவ்வாறு இல்லை”

    சரியா சொன்னீங்க.. இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

    நன்றி யாசின் 🙂

    @Satush கண்ணன் கலா கார்த்திக் சங்கர் விஜய் ஸ்ரீநிவாசன் நன்றி 🙂

  8. நடுத்தர மக்கள் என்றாலே எதற்கும் நடுங்கும் மக்கள் என்று தான் நான் அர்த்தம் செய்து கொள்வேன். ஏனெனில் பணக்காரனாகவும் இருக்க முடியாது ஏழையாகவும் வாழ முடியாது.
    வாடகை/வீட்டு கடன்,
    மற்ற கடன்கள்,
    பள்ளி செலவு,
    வீட்டு செலவு,
    பண்டிகை செலவு,
    மருத்துவ செலவு,
    வார இறுதி செலவு,
    இப்படி பல செலவுகளுக்கு நடுவில் சிறு குறு சேமப்பு, ஆனால் சம்பளமோ குறைவு ஆகையால் நடுத்தர வாழ்க்கையே நடுக்கமான வாழ்க்கை தான். அதீத தேவைகளை குறைத்து கொள்வதே வாழ்க்கையிலாவது லாபத்தை தரும்.

  9. “அதீத தேவைகளை குறைத்து கொள்வதே வாழ்க்கையிலாவது லாபத்தை தரும்.”

    வாழ்க்கையிலாவது அல்லது வாழ்க்கையில் தான் 🙂 . அதிக தேவையே பிரச்சனைகளுக்கு காரணம்.

  10. நன்றாக சொன்னிங்க கிரி, உங்கள் பதிவு மிகவும் தேவையான பதிவு…

    நீங்கள் எழுதுவதை என்றுமே நிறுத்த கூடாது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!