சேமிப்புப் பழக்கம் குறைந்து விட்டதா?

2
சேமிப்புப் பழக்கம் குறைந்து விட்டதா?

ந்தியாவில் சேமிப்புப் பழக்கம் குறைந்து விட்டதா? இல்லையா? என்பதைப் பார்ப்போம். Image Credit

சேமிப்புப் பழக்கம் குறைந்து விட்டதா?

இந்தியாவில் சேமிப்பு சதவீதம் குறைந்து விட்டது / வருகிறது என்ற செய்தியைக் 2023 – 2024 பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.

காரணம், இந்தியா மற்ற நாடுகளைப் போல அல்ல. சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு என்பது பண்டைய காலம் தொட்டு உள்ளது.

குறிப்பாக நடுத்தர மக்களிடம் சேமிப்பு பழக்கம் அதிகம் உள்ளது. இந்தியாவின் ஆணி வேர் நடுத்தர வர்க்கம் என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால், சேமிப்பு குறைந்து வருகிறது என்ற செய்தியைப் படித்ததும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.

காரணங்கள் என்ன?

இதற்கு நினைத்த காரணங்கள், மக்கள் மேற்கத்திய நாடுகளைப்போலச் செலவழிக்கத் தயாராகி விட்டார்கள், கடன் வாங்கியாவது செலவழிக்கிறார்கள். எனவே, சேமிப்பு குறைகிறது என்று நினைத்தேன்.

பணத்தைச் செலவு செய்தால், தனிப்பட்ட நபருக்கு இழப்பு ஆனால், நாட்டுப் பொருளாதாரம் வளரும் என்பதால், ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது என்று நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஆனால், செலவைக் கண்டபடி செய்கிறார்களே என்ற கவலையும் இருந்தது.

எடுத்துக்காட்டுக்கு, நான் செலவு செய்யத் தயங்கும் ஒரு விஷயத்துக்குத் தற்காலத் தலைமுறை அசால்ட்டாக செலவு செய்கிறார்கள்.

இதற்கு இவர்களது பொருளாதார நிலை மேம்பட்டதாகவும், 1970 / 1980 தலைமுறை போலக் குடும்பக்கடன் சுமை அதிகம் இல்லையென்பதும் ஒரு காரணம்.

எனவே, இந்தச் செய்தியைப் பார்த்ததிலிருந்து எப்படி இந்திய மக்கள் மாறினார்கள் என்ற வியப்பு, கவலை இரண்டும் கலந்து இருந்தது.

நிர்மலா சீதாராமன்

சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘வங்கி, அஞ்சலகச் சேமிப்பிலிருந்து Mutual Fund போன்ற அதிக இலாபம் தரும் சேமிப்புக்கு மக்கள் நகர்கிறார்கள்‘ என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதைக்கேட்ட பிறகே எனக்குப் புரிந்தது.

சமீப வருடங்களில் கோடிக்கணக்கில் பலரும் Demat கணக்கைத் துவங்கி, share, Mutual Fund ல் முதலீடு செய்து வருகிறார்கள் என்று கூறினார்.

அதோடு இவ்வாறு செய்பவர்களின் எண்ணிக்கை பெரு நகரங்களில் மட்டுமல்ல, இரண்டாம் கட்ட நகரங்களில், சிறு நகரங்களிலும் அதிகளவில் கணக்கைத் துவங்கி வருகின்றனர் என்று அவருடைய தகவலைக் கூறினார்.

இது உண்மையே!

Mutual Fund

துவக்கத்தில் வங்கி, அஞ்சலக சேமிப்பில் இருந்தேன் ஆனால், அதில் கிடைக்கும் வட்டி குறைவு என்பதால், Mutual Fund லிலும் முதலீடு செய்தேன்.

என் சேமிப்பில் 50% Mututal Fund லிலும், மீதி NPS (இதுவும் Mutual Fund தான் ஆனால், மத்திய அரசு கட்டுப்பாட்டில்), PF, PPF, Gold Bond போன்றவற்றிலும் உள்ளது.

2016 லிருந்து Mutual Fund SIP பயன்படுத்துகிறேன், பணத்தை எடுக்காமல் மூன்று வருடங்களைத் தாண்டி விட்டால், நட்டம் வருவதற்கான வாய்ப்புக் குறைவு.

கோவிட் காலத்தில் பங்குச்சந்தை சரிவு மிகப்பெரிய அளவிலிருந்தும், எனக்கு அசலுக்கு நட்டமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 18% இலாபத்திலிருந்து 2% க்கு சரிந்து, தற்போது மீண்டும் 20% வந்து விட்டது.

அதோடு இதில் கிடைத்த லாபத்தை வைத்து முக்கிய செலவுகளையும் செய்துள்ளேன். எனவே, எனக்கு Mutual Fund இலாபகரமாக அமைந்ததில் மகிழ்ச்சியே.

ஒரே இடத்தில் முடக்குவது தவறு

ஆனால், பல கட்டுரைகளில் கூறியது போல, இலாபம் அதிகம் கிடைக்கிறது என்று ஒரே இடத்தில் பணத்தை முடக்குவது தவறு.

ஏனென்றால், எதிர்காலத்தில் எப்படியும் நடக்கலாம். எனவே, ஒரே இடம் என்பது பாதுகாப்பானதல்ல. எனவே, முடிந்த வரை பிரித்துச் சேமிப்பது நல்லது.

வயது குறைவு, ரிஸ்க் எடுக்க முடியும் என்றால், தோராயமாக உங்கள் பணி, தொழிலை வைத்து 50 வயது வரை ரிஸ்க் எடுக்கலாம்.

எனவே, தற்காலத் தலைமுறையினர் அதிகளவிலும், முந்தைய தலைமுறையினர் சீராக ஆர்வம் காட்டி வருவதாலும், Demat கணக்கு துவங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Mutual Fund க்கு Demat கணக்கு அவசியமில்லை ஆனால், இருந்தால் Share / Gold Bond போன்றவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால், துவங்குவது நல்லது.

Demat கணக்குக்கு வருடம் குறைந்தபட்சம் ₹300 பராமரிப்புக் கட்டணம் வரும்.

புதிய சேமிப்பு முறைக்கு மாற்றம்

இம்மாற்றம், வழக்கமான சேமிப்பு முறையிலிருந்து புதிய முறைக்குச் சேமிப்பு இந்தியாவில் மாறி வருவதை உணர்த்துகிறது.

இந்தச் செய்தி இந்தியா சேமிப்பில் பின்தங்கவில்லை மாறாக, புதிய முறைக்குத் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது என்பதை அறிவது மகிழ்ச்சி.

சேமிப்பது மட்டுமே முக்கியமானதல்ல, எதில் சேமித்தால் இலாபம், ஏன் ஒரே இடத்தில் முடக்கக் கூடாது? என்பதையும் உணர்ந்து சேமிப்பது புத்திசாலித்தனமானது.

இல்லையென்றால், பல வருடங்களாகச் சேமித்தும் மிகக்குறைவான இலாபமே கிடைத்து இருக்கும். எனவே, சேமிப்பில் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்றுச் செயல்படுவது நல்லது, அதிக இலாபத்தை ஈட்டலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

நடுத்தர வர்க்கம் | செலவு சேமிப்பு

சேமிப்பது கடினமா?

சேமிப்பின் அவசியம் உணர்த்தும் கொரோனா

PPF கணக்கு துவங்குவதால் என்ன நன்மைகள்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

Sovereign Gold Bonds வாங்கலாமா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. கடன் கொடுக்கலாம், வாங்கலாம்.. கடனுடன் யாரும் மரணிக்க கூடாது. மரணித்தவர் மீது ஏதேனும் கடன் இருப்பின் அதை அவர் சம்பந்தபட்ட குடும்ப நபர்கள் யாரது ஏற்க வேண்டும்.. அதுபோல வட்டி வாங்குவதும் தவறு. வட்டி கொடுப்பதும் தவறு என சிறு வயதிலே புரிதல் இருந்ததால் (குரானில் இருப்பதால்) வட்டி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்விலும் நான் ஈடுபடுவதில்லை. பல நன்மைகளை இதன் மூலம் நான் தவற விட்டிருக்கலாம்.. அதை பற்றி என்றுமே கவலை பட்டதில்லை.

  நான் கடனட்டை மற்றும் சிலவற்றை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. என் நிலைப்பாடு சரியா? தவறா? என்று ஆழமாக யோசித்தது கிடையாது.. எல்லாவற்றிலும் 100% முழுமையாக இருக்கிறனா? என்றால் நிச்சயம் இல்லை.. அவ்வாறு இருக்கவும் முடியாது.. ஆனால் என்னால் முடிந்த வரை சரியாக இருக்க முயற்சிக்கிறேன்..

 2. @யாசின்

  “கடன் கொடுக்கலாம், வாங்கலாம்.. கடனுடன் யாரும் மரணிக்க கூடாது.”

  முடிந்த வரை கடன் வாங்குவதை தவிர்ப்பேன் காரணம், ஏராளமான மோசமான அனுபவங்கள் உண்டு, உங்களுக்கும் தெரியும்.

  கடன் வாங்கினால் என் நண்பனிடம் மட்டுமே வாங்குவேன், சொன்ன தேதியில் கொடுத்து விடுவேன்.

  இன்று வரை அப்படித்தான் செல்கிறது. கடவுள் இதன் மேலும் சோதிக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

  “மரணித்தவர் மீது ஏதேனும் கடன் இருப்பின் அதை அவர் சம்பந்தபட்ட குடும்ப நபர்கள் யாரது ஏற்க வேண்டும்.”

  என் அப்பா கடன் முழுக்க நான் தான் காட்டினேன்.

  “அதுபோல வட்டி வாங்குவதும் தவறு. வட்டி கொடுப்பதும் தவறு”

  வட்டி கொடுப்பது தவறு என்று கூற முடியாது. காரணம், வேறு வழியில்லை.

  ஆனால், வட்டியில் அநியாய வட்டி வாங்குவது தான் தவறு. அது அவர்களது தலைமுறையையே பாதிக்கும்.

  நான் இதுவரை வட்டிக்கு யாருக்கும் கொடுத்ததில்லை. நட்பின் அடிப்படையில் கொடுத்துள்ளேன்.

  “நான் கடனட்டை மற்றும் சிலவற்றை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.. என் நிலைப்பாடு சரியா? தவறா? என்று ஆழமாக யோசித்தது கிடையாது.”

  முன்பே கூறியது போல, பயன்படுத்தத் தெரிந்தால் கடனட்டை மிக இலாபகரமானது.

  அதை சரியாக பயன்படுத்த முடியாது அல்லது அதில் தெளிவான புரிதல் இல்லை என்றால், ஒதுங்கி இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here