கிரெடிட் கார்டு பயன்கள் பற்றிய செய்தி என்றால் அது பெரும்பாலும் மோசடி, விரயம் என்று எதிர்மறை செய்திகளே கண்களுக்குத் தெரிகிறது, உண்மையும் கூட.
எளிதாகக் கிடைக்கிறது என்றால் அதில் வில்லங்கம் இல்லாமலா இருக்கும். சும்மா கொடுக்க வங்கிகள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்லவே! Image Credit
கிரெடிட் கார்டு தீமைகள் நிறைந்தது என்பது தவறான எண்ணம்.
கிரெடிட் கார்டு
இக்கட்டுரையில், கடனட்டையால் (கிரெடிட் கார்டு) என்ன பயன் என்பதைப் பார்ப்போம், அதோடு எப்படி இதை வைத்து லாபம் அடையலாம் என்று கூறுகிறேன்.
செலவுகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் / கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால், கடனட்டையால் நமக்கு லாபம் மட்டுமே என்று உறுதியாகக் கூறுவேன்.
எந்த வங்கியில் கடனட்டை வாங்குவது என்பதை, நம் நண்பர்களின் அனுபவத்தில் வைத்து அவர்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம்.
எந்த வங்கி பிரச்சனை இல்லாமல் இருக்கிறது, எது சிறப்பான வாடிக்கையாளர் சேவை தருகிறது என்பதை விசாரிக்க வேண்டும்.
ஒருவருக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும் வங்கி, இன்னொருவருக்கு மோசமான அனுபவத்தைத் தந்து இருக்கலாம்.
எனவே, தீர விசாரித்து, வங்கியைத் தேர்வு செய்யலாம்.
ஆண்டுக் கட்டணம்
ஆண்டுக் கட்டணமில்லை என்று கூறுவார்கள் ஆனால், ஒரு வருடத்துக்குப் பிறகு வசூலிக்க வாய்ப்புள்ளது.
நாம் அவர்களிடம் டிமாண்ட் செய்யலாம், “வாழ்நாள் முழுக்க கட்டணம் இல்லாமல் கொடுத்தால், பெற்றுக்கொள்கிறேன்” என்று கூறலாம்.
அதே போல அவர்கள் கொடுக்கும் போது ” * ” எங்கும் வைத்துள்ளார்களா / வேறு எதுவும் மறைமுகமாகக் கூறி உள்ளார்களா என்பதை சோதித்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு வருடங்கள் இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம்.
கடனட்டையை சிறப்பாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல், நன்கு பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால், இரண்டு வருடம் கழித்து அவர்கள் கட்டணம் விதித்தால்..
“ஆண்டுக் கட்டணத்தை எடுத்தால் தொடர்கிறேன், இல்லை என்றால் கடனட்டையை ரத்து செய்கிறேன்” என்றால், பெரும்பாலும் கட்டணம் ரத்து செய்வார்கள்.
50 நாட்களுக்கு வட்டி இல்லை
கடனட்டையின் மூலம் 50 நாட்களுக்கு வட்டி இல்லாமல் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, தற்போது உங்களுக்கு அவசரமாகத் தள்ளுபடியில் தொலைக்காட்சி வாங்க வேண்டும் ஆனால், பணம் அடுத்த மாதம் தான் வரும்.
மற்றவரிடத்தில் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல், கடனட்டையை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம். அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் செலுத்தி விடலாம்.
சில கடைகளில் கடனட்டை பயன்படுத்தி வாங்கினால், கூடுதல் கட்டணம் வசூலிப்பார்கள். எனவே, தீர விசாரிக்க வேண்டும்.
கட்டணத் தேதி
பில்லிங் சைக்கிள் எந்தத் தேதியிலிருந்து ஆரம்பித்து, எந்தத் தேதியில் முடிகிறது என்பதை சரியாக நினைவு வைத்து இருக்க வேண்டும்.
மாதத்தின் 5 ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 4 ம் தேதி வரை பில்லிங் சைக்கிள் என்றால், நீங்கள் கட்டணம் கட்ட வேண்டியது 25 ம் (Due date) தேதி போல வரும்.
இந்த மாதம் 6 ம் தேதி பொருள் வாங்கினால், அடுத்த மாதம் 25 ம் தேதி தான் பணம் கட்ட வேண்டியது வரும். இது தான் அந்த 50 நாள் 🙂 .
4 ம் தேதி வாங்கினால், இந்த மாத 25 ம் தேதியே கட்ட வேண்டி வரும், இதன் காரணமாக 20 நாட்கள் தான் உங்களுக்குக் கிடைக்கும்.
பெரிய செலவுகள்
விமானப் பயணச் சீட்டு மற்றும் பல்வேறு பொருட்கள், அவசரத்திற்கு கடன் இல்லாமல் வாங்க பெரும் துணை புரிந்து இருக்கிறது.
இதன் மூலம் பணம் இல்லாமலே, கடன் வாங்காமலே பொருட்கள் / பயணச் சீட்டு வாங்கி இருக்கிறேன்.
கடனட்டையில் உங்களால் முழுவதும் ஒரே சமயத்தில் கட்ட முடியவில்லை என்றால், குறைந்த பட்சக் கட்டணம் செலுத்தி மீதியை அடுத்த மாதம் கட்டலாம் ஆனால், இதற்குக் கட்டணம் அதிகம். இதில் தான் அனைவரும் மாட்டிக்கொள்கிறார்கள்.
வங்கிக்கும் பரிவர்த்தனையைவிட இவை தான் நல்ல லாபம். பெரும்பாலனவர்கள் வட்டி கட்டித்தான் கட்டுவார்கள். இது போல மட்டும் செய்யவே கூடாது.
சரியான Due date ல் கட்டி விட வேண்டும்.
திட்டமிட்டு செலவு செய்தால், கட்ட முடியாமல் போகும் சூழ்நிலையே வராது.
கடந்த 2004 ஆண்டிலிருந்து ஒரு முறை கூட வட்டி கட்டியதில்லை ஆனால், ஏகப்பட்ட பரிவர்த்தனைகள் இதன் மூலம் தான் செய்து இருக்கிறேன்.
இணையம் வந்த பிறகு, அனைவரும் இணையத்தில் தான், பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இதனால் கடனட்டை என்பது அவசியமான ஒன்றாகி விட்டது.
எது செய்தாலும் கடனட்டை கேட்கிறார்கள்.
உச்ச வரம்பு
அதிகபட்சம் இவ்வளவு தொகை தான் செலவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும்.
அதிகம் கடனட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுடைய உச்ச வரம்பை அதிகரிக்க, வங்கியில் கேட்பார்கள்.
இந்தச் சமயங்களில் கூடுமானவரை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். உச்சவரம்பில் 25% மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதிகபட்சம் 30%.
இது சிபில் ஸ்கொரை மேம்படுத்தும்.
கிரெடிட் கார்டு பயன்கள் / பாதுகாப்பு
கையில் அதிகம் பணம் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை அதோடு, இது போல வாங்குவதால் ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்கும், பின்னர் பயன்படுத்தலாம்.
நம்ம பணத்தை செலவு செய்ய நமக்குப் பரிசு கொடுக்கிறார்கள் / தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம் 🙂 . அவசரத் தேவைக்கு மிக மிகப் பயனுள்ளது.
கடனட்டையை வாங்குவது மட்டுமல்ல அதைப் பாதுகாப்பாகவும் வைத்து இருக்க வேண்டும். கடனட்டையின் பின்புறம் CVV (Card Verification Value) எண் இருக்கும்.
இதை யாரிடமும் கூறக் கூடாது அதோடு நண்பர்களுக்கும் கொடுக்கக் கூடாது.
இந்த எண்ணை, வேறு இடத்தில் சேமித்து விட்டு இதில் நீக்கி விடுவேன், யாரும் பார்க்க முடியாத படி. இதை வைத்து இணையத்தில் நாம் என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும். எனவே பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
தற்போது வங்கிகள் கூடுதல் பாதுகாப்பாக இணைய பரிவர்த்தனை செய்யும் போது (CVV இல்லாமல் கூடுதலாக) கடவுச்சொல் கேட்கிறது.
எனவே இது தெரியாமல் வேறு ஒருவரால் பரிவர்த்தனை செய்ய முடியாது.
யாராவது திருடி, இதில் தவறான கடவுச்சொல் பயன்படுத்தினால் லாக் ஆகி விடும். அதே போல வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு எச்சரிக்கை சென்று விடும்.
அவர்கள் தொலைபேசியில் அழைத்து, பரிவர்த்தனை செய்தது நாம் தானா இல்லை வேறு யாருமா என்று உறுதி செய்து கொள்வார்கள்.
குறுந்தகவல் (SMS) அறிவிப்பு
கடனட்டையை பயன்படுத்தினால், உடனே எவ்வளவுக்கு செலவு செய்தோம் என்ற குறுந்தகவல் (SMS), மின்னஞ்சல் நமக்கு உடனே வந்து விடும்.
கடனட்டை திருடப்பட்டால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, கணக்கை முடக்கி விடலாம்.
இலவசமாகத் தருகிறார்கள் என்று, ஏகப்பட்ட கடனட்டை வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது. இது சிக்கலில் விட்டு விடும்.
அதோடு நமக்கு ட்ராக் செய்யவும் சிரமமாக இருக்கும். ஒன்றே போதும், அதிக பட்சமாக இரண்டு வைத்துக்கொள்ளலாம் (for Backup).
கடனட்டை என்பதால், நமக்குச் செலவு வைக்கும் என்பது உண்மை தான். இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், சில நேரங்களில் செலவு செய்ததை மறந்து விடுவேன்.
இந்த நேரத்தில் சிக்கலாக இருக்கும். இது எப்போதாவது தான் நடக்கும் என்பதால் விட்டு விடலாம், மற்றபடி ரொம்பப் பயனுள்ளது.
மின்சாரம், தொலைபேசி மற்றும் பல்வேறு கட்டணங்களை இதன் மூலம் எளிதாகச் செலுத்தலாம். இதற்குக் கட்டணம் எதுவும் வங்கி வசூலிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பெரும்பாலும் யாரும் வசூலிக்கமாட்டார்கள்.
வசூலிப்பார்கள் என்றால் டாடா பை பை தான் 🙂 .
கட்டணங்களைப் பரிசோதிக்க வேண்டும்
நமக்குத் தெரியாத பரிவர்த்தனை நடந்துள்ளதா என்று, மாதாமாதம் கண்கொத்தி பாம்பாகக் கட்டணத்தைக் கவனிக்க வேண்டும்.
வருடாந்திரக் கட்டணம் இல்லை என்று கூறி, சத்தம் இல்லாமல் சேர்த்து விடுவார்கள்.
நாமும் பல செலவுகளில் இதைக் கவனிக்காமல் விட்டு விடுவோம்.
கவனித்துக் கேட்டால், “சாரி சார்! தெரியாமல் வந்து விட்டது, பணத்தை திருப்பி விடுகிறோம்” என்று எஸ்கேப் ஆகி விடுவார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு பயன்கள் அற்றது என்பது தவறு. பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் எதுவும் வீண் தான்.
தொடர்புடைய கட்டுரைகள்
HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?
கிரெடிட் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நன்றி கிரி…
தற்போது தான் நானும் HDFC கடன் அட்டை வாங்க போகிறேன் …
இந்த செய்தி மிகவும் உபயோகமா இருந்க்கும் 🙂
நல்ல தகவல் நன்றி ..
என் நண்பனும் HDFC கடனட்டைகள் தான் பயன்படுத்துகிறான். இதுவரை எந்த தொந்தரவும் வந்ததில்லை.
சுவிஸ் வங்கியில் கடனட்டை வாங்க முடியுமா கிரி? 😉
என் சாய்ஸ் : SBI or HDFC
சின்னதாக ஒரு தகவல் : இது எல்லாருக்கும் தெரிந்தது தான்… தெரியாதவர்களுக்கு :
நீங்க பணம் எடுக்க ஏ.டி.எம் போறீங்க… அப்ப (ஒரு வேளை) திடீர்னு உள்ள நுழைஞ்ச ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி, பணம் எடுக்கச்சொல்லி மிரட்டறான்னு வச்சிகிங்க…. என்ன செய்யலாம் ? உங்க பின் (Pin) நம்பரை தலை கீழா மாத்தி அடிங்க… (அதாவது உங்க நம்பர் 1234 என்றால் 4321 ன்னு மாத்தி அடிங்க…)
பணம் வெளியில் வரும் போது சிக்கிக்கும்… அதே சமயம் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் செல்லும்… போலீஸ்கார் வந்தால், உங்கள் அதிர்ஷ்டம்…
எல்லா ATM-ல்லும் இந்த வசதி உண்டு என்கிறார்கள்…
அப்புறம் நீங்க ஒரு ATM தான் (Azhakiya Tamil Magan)…..!
தகவல் உதவி : முகநூல்
நன்றி.
உண்மைதான், உரிய விதத்தில் பயன்படுத்தினால் கடன் அட்டை ஒரு வரம்தான். நாஙக்ளும் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறோம். ஒருமுறைகூட அதிகத் தொகை கட்டியதில்லை.
அதெல்லாம் சரி நண்பரே. இந்த பிரண்ட்சுங்க தொல்லை தாங்க முடியல என்னோட கடன் அட்டையை (SABB – HDFC Partners) உயபோகப்படுத்தி விட்டு மாசா மாசம் அவனுக டியு கட்டுவானுகலாம் எனக்கு அவங்ககிட்ட போய் மாசாமாசம் தண்டல்காரன் போல் நின்னுகிட்டு வசூல் பண்றது எனக்கு வெட்கமா இருக்கு.
நீங்க டியு கட்டுறது சம்பந்தமா சொன்னீங்க. என்கிட்டே ரெண்டு வங்கியின் கார்டு உள்ளது ஒரு கார்டை வைத்து அடுத்த கார்டுக்கு பணம் செலுத்திவிட்டு இன்னும் ஒருமாதம் கழித்து அந்த கார்டுக்கு பணம் செலுத்தலாம் – இதைத்தான் எனக்கு ஒருவர் மீன் எண்ணையை வைத்து மீன் வறுவல் செய்வது எப்படின்னு உதாரணம் சொல்லி தந்தார்.
நீங்க சொல்றது போல சூப்பர் மார்கெட் போனால் அதிக தொகை செலுத்த தேவை இல்லை.
அது போல குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்கள் பெயரிலேயே sublimentary கார்டு கொடுத்து அதற்கும் ஒரு தொகை பிக்ஸ் செய்யும் வசதியும் உள்ளது. ஏனென்றால் தற்போதைய காலத்தில் ஆன்லைனில் பிளைட் டிக்கட் புக் செய்தால் கார்டுக்குரிய நபர் பயணம் செய்யனுமின்னு ஒரே தொந்தரவுதான் போங்க. (அதுக்காக எல்லாருக்கும் கார்டு தரணும்ன்னு சொல்லலை).
ரொம்பச் சரி>
பில்லிங் தேதியை மறக்காமல் மனசுலே வச்சுக்கிட்டால் நீங்க சொன்னதுபோல 5௦ நாள் கழிச்சு பணத்தைக் கட்டலாம்.
இப்படித்தான் நாங்க செய்யறோம். வேற வேற அட்டைகள் இருப்பதால் ஒன்னு இல்லேன்னா இன்னொன்னுண்ணு பயன்படுத்தமுடியுது. மறுபாதிக்கும் இதே கடனட்டைகளை வாங்கிக்கொடுத்துட்டதால் செலவு தங்க்ஸ்ம் பில்லு ரங்ஸுமா நடக்குது இங்கே:-)))))
அப்புறம் கடனட்டைகள் பில் வந்தவுடன் பாக்கி வைக்காம அந்தந்த மாசம் கட்டுவது ரொம்ப முக்கியம். மினிமம் கட்டுனோமுன்னா வட்டியால் தாளிச்சுருவாங்க,
எங்க பக்கங்களில் கடனட்டை பயன்படுத்திச் செலவு செஞ்சால் ஹாட் பாய்ண்ட்ஸ் என்று 100 டாலருக்கு 10 என்று பாய்ண்ட்ஸ் கிடைக்கும். அந்தப் பாய்ண்ட்ஸ்களை வச்சு நாம் பொருட்கள் வாங்கிக்கலாம். நான் வேணும் என்ற கடைக்கு கூப்பான்களா வாங்கி வச்சுக்கிட்டு அதை செலவு செஞ்சுக்குவேன்.
அதை கிஃப்ட் கொடுக்கவும் பயன்படுத்திக்கலாம்:-))))
// மாதாமாதம் கண்கொத்தி பாம்பாக பில்லை கவனிக்க வேண்டும்.//
என்னோட பிரச்சினையே இங்கேதான் ஆரம்பிக்குது கிரி:)
திண்டுக்கல் தனபாலன்!களவாணித்தனங்களில் இந்தியா சமர்த்தாக்கும்:)
இப்பதான் உங்க சைட்டுக்கு வரேன் சார்..பயனுள்ள தகவல்..மிக்க நன்றி.
நான் கடந்த 7 வருடங்களாக Citibank கடனட்டை உபயோகித்து வருகிறேன், இது வரைக்கும் என்ன பிரச்சனையும் வந்ததில்லை. பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் எப்போதும் மாதத்தின் 5 ஆம் தேதியிருக்கும். அதற்கு முன்பே முழு நிலுவையும் கட்டிவிடுவேன். சில சமயங்களில் பணம் கட்ட மறந்துவிட்டேன் என்றால் வட்டி போட்டுவிடுவார்கள். பிறகு வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்ப்புக்கொண்டு வட்டியை மட்டும் விலக்க சொல்வேன். நீண்ட நாள் வாடிக்கையாளர் என்பதால் வட்டியை மட்டும் ரத்து செய்வார்கள்.
திண்டுகல் தனபால் சொன்ன தகவலில் ஒரு சந்தேகம். ஒரு வேலை என் ATM pin 3553 என்று வைத்து கொள்ளுங்கள். இந்த எண்களை தலைகீழாக அடித்தால் மீண்டும் 3553 தான் வரும். இப்போ பணம் ATMயில் சிக்கிக்கொள்ளுமா? காவல் துறைக்கும் தகவல் செல்லும்மா?
ஹி ஹி … டீ வாங்கவே காசில்ல கிரி …. இதுல நம்மள நம்பி எந்த பேங்க்கு க்ரெடிட் கார்ட் கொடுக்கும்?
சிங்கப்பூரில் வட்டியில்லாமல் இன்ஸ்டால்மென்டில் பொருள் வாங்கலாமே…? நான் எது வாங்கினாலும் ( டிவி, பிரிட்ஜ், கம்ப்யூட்டர், வாசிங் மெசின், கேமரா, ஏசி, பிளைட் டிக்கெட்) இன்ஸ்டால்மென்டிலே வாங்குவேன். மாத மாதம் சரியாக தவணை கட்டினால் போதும்.
நானும் ஒரு பிரபலமான, இதில் முன்னோடியான ஒரு வங்கியின் கடனட்டையை 15 வருடங்களாக வைத்து இருக்கிறேன். கிரி சொன்னபடி, அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் நமக்கு அதில் லாபம் தான். உதாரணத்திற்கு, redeem points. வட்டி செலுத்தும் காலத்திற்கு முன் பணம் செலுத்திவிட்டால் நமக்கு ரெடீம் பாயிண்ட்ஸ் லாபம் தான். முக்கியமாக கடனட்டையை அவசர செலவிற்கு தான் பயன் படுத்த வேண்டும்.
நான் இதை எப்படி பயன் படுத்துவேன் என்றால், என்னிடம் ரொக்கமாக பணம் இருந்தாலும், கடனட்டையை பயன் படுத்தி பணம் செலுத்திவிட்டு, பின் உடனே இந்த வங்கிக்கு ஆண் லைன் மூலம் பணம் செலுத்துவேன். இதனால் எனக்கு ரெடீம் பாயிண்ட்ஸ் சேரும். அதில் வேறு பொருள் வாங்கலாம். மேலும், அடுத்த மாதம் எனக்கு கண்டிப்பாக பணம் வரும் என்ற உறுதி இருந்தால் தான் இந்த மாதம் கடனட்டை பயன் படுத்துவேன். அதற்க்கு வட்டி போடுவதற்கு முன்பே பணம் செலுத்தி விட்டால் நமக்கு லாபம் தான்.
உபயோகமான தகவல் . நன்றி
100 % சரி. நல்ல பகிர்வு
கடன் அட்டை பற்றி நிறைய விஷயங்கள் தெரியாததல் அதன் பக்கமே போவதில்லை. இது தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்ததற்கு நன்றி.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@வெயிலான் அதில் கடனட்டை எல்லாம் கிடையாது 😉
@தனபாலன் நீங்கள் கூறியது, யாரோ சும்மா கிளப்பி விட்டது என்று நினைக்கிறேன்.
@ராஜ்குமார் நீங்கள் கொடுக்கக் கூடாது.
ஒரு கடனுக்கு இன்னொரு கடனை வைத்து கட்டுவது என்றுமே ஆபத்தானது.
நீங்க விமானத்தில் செல்லும் போது, கடனட்டையின் ஜெராக்சை கொடுத்து விடலாம்.
@துளசி கோபால். நீங்க கூறிய மாதிரி மாதாமாதம் சரியா கட்டுனா எந்த பிரச்சனையும் இல்லை. ரிவார்ட்ஸ் பாய்ன்ட் வைத்து, நான் பரிசுப் பொருட்கள் வாங்கலாம். ஒரு சில நண்பர்கள் பார்த்தீர்கள் என்றால், யாராவது ஏதாவது செலவு செய்யும் போது, அவர்களிடம் கடனட்டை இல்லை என்றால், இவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, கடனட்டையின் மூலம் கட்டுவார்கள். ரிவார்ட்ஸ் பாய்ண்ட்ஸ் க்காக.
@ராஜநடராஜன் ஒரு அட்டை வைத்து இருந்தால், பராமரிப்பது சிரமமே இல்லை.
@Barney நீங்க கூறியபடி நாம் கேட்டுக்கொண்டால் சில நேரங்களில் வட்டியை திருப்பித் தருவார்கள். இதில் இருந்து தப்ப, நீங்கள் Auto Pay தேர்வு செய்து இருந்தால், அதுவே தானியங்கியாக due date ம் போது பணம் எடுத்துக்கொள்ளும். நான் இப்படி தான் செய்து வருகிறேன்.
அப்புறம் நீங்கள் கேட்ட சந்தேகம் சரி. அது சும்மா, யாரோ கிளப்பி விட்டது.
@ஹாலிவுட் ரசிகன் நீங்க குட்டி பையன் போல 🙂
@ராவணன் நான் நம்ம ஊர் கடனட்டையைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்.
@பாமரன் 15 வருடங்களாக பயன்படுத்துகிறீர்களா.. எனக்கு ரொம்ப சீனியரா இருப்பீங்க போல.:-)
நானும் ஒரு HDFC கார்டு வாங்கி உள்ளேன்.எனக்கு நல்ல சமயத்தில் நல்லதொரு ஆலோசனை கூறி உள்ளளீர்கள்.மனதார நன்றி.அப்படியே எங்கள் ஊர்க்காரர் திண்டுக்கல் தனபாலுக்கும் ஒரு நன்றி சொல்லி விடுங்கள்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
வணக்கம் கிாி என்னிடம் கடன் அட்டை இல்லை என்னுடைய டெபிட் காா்டுக்கு வருடம் வருடம் கட்டணம் என்கிறாா்கள் கட்டணம் இல்லாமல் ஏடிஎம் காா்டு பயன்படுத்த முடியாதா அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா எச் டி எப் சி பேங்க் உதவுங்கள்
கட்டணம் இல்லாமல் ATM அட்டை பயன்படுத்த முடியாது. ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ICICI வங்கியில் இது போல கேட்டதுக்கு கட்டணமில்லாமல் கொடுப்போம் ஆனால், Online Account பயன்படுத்த முடியாது என்று கூறியதால், வேறு வழியில்லாமல் போனது.
கனரா வங்கியில் இது போல கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று நண்பர் ஒருவர் கூறினார். விசாரித்து அதில் கணக்குத் துவங்கிப் பாருங்கள்.
நான் கடந்த 2 .1/2 ஆண்டு காலமாக கடன் அட்டை நல்ல முறையில் பயன்படுத்திக் வருகிறேன்.
Life time free card என்று தான், இது வரை ஏதும் வருட கட்டணம் வசூலிக்க வில்லை.