அப்பா கடந்த செப்டம்பர் 10 ம் தேதி மதியம் 2.45 மணிக்கு தனது 85 வது வயதில் காலமானார். ‘சென்று வாருங்கள் அப்பா!’ கட்டுரை அப்பா குறித்த நினைவுகள்.
சில நினைவுகளை, சம்பவங்களைப் பகிர விரும்புகிறேன்.
எதிர்காலத்தில் என்ன நடந்தது என்று குடும்பத்தினர் தெரிந்து கொள்ளவும், மறு நினைவூட்டலுக்குத் தேவைப்படும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.
இது என் டயரி குறிப்புகள் போலத்தான், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தொடருங்கள்.
Parkinson
ஐந்து வருடங்களுக்கு முன்பு, அப்பா தனக்கு Parkinson நோய்க்கான அறிகுறியுடன் இருப்பதாகக் கூறிய போது, எங்களுக்குக் குறிப்பாக எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது, வேறு எவரையும் பார்த்தது இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.
ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பாக்குக் கை நடுக்கம் அதிகமானதும் அவரை வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று கூறியதில் அப்பாக்கு வருத்தம்.
82 வயது வரை இரு சக்கர வாகனத்தில் சுற்றிக்கொண்டு இருந்தார். எனவே, வெளியே செல்வது குறைந்தது அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து இருக்கலாம்.
Parkinson அறிகுறிகள்
கை நடுக்கம், நிற்கும் போது நிலைத்தன்மை இல்லாதது, மறதி, டம்ளர் போன்றவற்றை உறுதியாகப் பிடிக்க முடியாதது போன்றவை.
சுருக்கமாக நரம்பு சம்பந்தப்பட்ட நோய்.
இது நாளுக்கு நாள் அதிகம் தான் ஆகும் குறையாது, குணப்படுத்த முடியாது.
யாருக்கு வரும்?
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கு வரும், குறிப்பாக ஆண்களுக்கு.
ஏன்?
காரணம் தெரியவில்லை. அதிகம் யோசிப்பதும், மன அழுத்தங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஜனவரி 2018
ஜனவரி மாதத்தில் ஒருநாள் அப்பாக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டது, இது வயதானவர்களுக்கு ஏற்படும் வழக்கமான பிரச்சனைகளில் ஒன்று.
இதற்கு மருத்துவர் ஊசி போட்ட போது “Overdose” மருந்தாகப் போட்டு விட்டார். இதன் பிறகு அதன் வீச்சுத் தாங்காமல் படுத்த படுக்கையாகி விட்டார்.
இதன் பிறகு பழைய நிலைக்கு இறக்கும் வரை வரவில்லை.
இதன் பிறகு தான் Parkinson என்றால் என்ன? என்று Wiki யில் படித்து அதன் விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.
எந்த ஒரு செயலுக்கும் அடுத்தவர் உதவி தேவைப்படும். சாப்பிட, குளிக்க, கழிவறை செல்ல, நடக்க என்று எந்தச் செயலுக்கும்.
84 வயது வரை எவருடைய உதவியும் இல்லாமல், தன்னைப் பார்த்துக்கொண்டவருக்கு இது போன்ற நிலை நிச்சயம் மன அழுத்தத்தைக் கொடுத்து இருக்கும்.
மறதி அதிகம் ஆகிக்கொண்டே சென்றது, கடந்த மாதம் ஊருக்குச் சென்ற போது என்னையே அப்பாக்கு அடையாளம் தெரியவில்லை.
வருத்தமாக இருந்தாலும், நடைமுறை எதார்த்தம் புரிந்ததால், ஏற்றுக்கொண்டேன்.
யாரும் பரிதாபமாகப் பார்ப்பதை விரும்பவில்லை என்பதால், அதிகம் யாரையும் சந்திக்கவும் விரும்பவில்லை. அவரின் எண்ணத்துக்கு மதிப்புக் கொடுத்தோம்.
இறப்பு
கடந்த செப்டம்பர் 6 வியாழன் இரவு 12.30 க்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் இருந்து அன்று அதிகாலையிலேயே கிளம்பி வந்து விட்டோம்.
இரண்டு நாட்கள் பார்த்துட்டுப் போகலாம் என்று கோபியிலேயே இருந்தேன். காரணம், மருத்துவமனையில் பகலில் ஒருவர், இரவில் ஒருவர் இருக்க வேண்டும்.
உறவினர்கள் விசாரிக்க வரும் போது அவர்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.
செப்டம்பர் 10 திங்கள் காலை சளி அதிகம் இருந்ததால், மூச்சு விட சிரமப்பட்டார். மதியம் 2 மணிக்கு, அப்பா தொடர்வது சிரமம் என்று மருத்துவர் கூறினார்.
அப்பாவின் இறப்பை எதிர்பார்த்து இருந்தாலும், இவ்வளவு விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
வீட்டுக்கு வந்ததும், இவ்வளவு நாள் யாரையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் முன்னின்று செய்த அம்மா, முதல் முறையாக “தம்பி! இப்ப என்ன பண்ணுறது?” என்று கேட்ட போது அப்பா இறந்ததை விட அம்மா இப்படிக் கேட்டது ரொம்ப வலித்தது.
“நீங்க எதுவும் பண்ண வேண்டாங்கம்மா, அக்கா எல்லோரும் இருக்காங்க. அதோட சொந்தக்காரங்களும் வந்து விடுவார்கள், அவர்கள் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள்” என்று திரும்ப மற்ற பணிகளை முடிக்க மருத்துவமனைக்குச் சென்று விட்டேன்.
கண் தானம்
எங்கள் குடும்பத்தில் யார் இறந்தாலும் அவர்களுடைய கண்ணைத் தானம் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.
ஆனால், இறப்பதற்கு முதல் ஒரு மணி நேரம், இறந்த பிறகு ஒரு மணி நேரம் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
அப்பா திடீர் என்று இறந்ததால், குழப்பத்தில் எனக்கு எந்த யோசனையும் வரவில்லை.
ஒரு மணி கழித்து நிதானத்துக்கு வந்த பிறகே கண் தானம் நினைவு வந்து, அக்காவிடம் கூறி ஒருவரிடம் கேட்டால், ஈரோட்டில் இருந்து வர வேண்டும், ஏற்கனவே, ஒரு மணி நேரம் முடிந்து விட்டது, எனவே, இனி சிரமம் என்று கூறி விட்டார்.
எனக்கும் அக்காவுக்கும் பெரிய ஏமாற்றமாகி விட்டது. அருமையான வாய்ப்பை இப்படித் தொலைத்து விட்டோமே என்று எனக்கே என் மீது எரிச்சலாக வந்தது.
எப்படி மறந்தோம்?! என்று என்னை நானே நொந்து கொண்டேன்.
சிறிது நேரத்தில் உறவினர் வந்து, “அம்மா கிட்ட பேசிட்டேன், சரின்னு சொல்லிட்டாங்க, அப்பா கண்ணை எடுத்துக்கலாமா?” என்று கேட்டதும், அந்த வருத்தமான வேளையிலும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“எப்படிங்க! இரண்டு மணி நேரம் தான் இருக்க முடியும் என்றார்களே!” என்று கூறிய போது, “ஆறு மணி நேரம் வரை எடுக்கலாம், மின் விசிறி காற்று மட்டும் கண்ணில் படாமல் பார்த்துக்கொண்டால் போதும்” என்றார்.
அவர்களே வீட்டுக்கு வந்து கண்ணை எடுத்துக்கொள்வார்கள் என்று கூறினார்.
நாங்களும் உடனே சரியென்று கூறி விட்டோம். பின்னர் இரு செவிலியர்கள் வீட்டுக்கு வந்து கண்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்கள்.
வீட்டிலேயே உறவினர்கள் அனைவர் முன்னிலையே எடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன், மற்றவர்களும் இதை பின்பற்றுவார்கள் என்ற எண்ணத்தில்.
மூன்று லட்சம் பேர் கண்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியது அதிர்ச்சியாக இருந்தது.
அப்பா இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தால், எங்கள் செயலுக்காக நிச்சயம் மகிழ்ந்து இருப்பார். கண் தானம் அவருடைய விருப்பமும் கூட.
சடங்குகள்
கணவர் இறந்தால், பெண்களுக்கு என்று எங்கள் சமூகத்தில் சில சடங்குகள் உள்ளது. காலம் மாறினாலும், இன்னும் சிலர் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இவற்றை அம்மாக்குப் பண்ணக்கூடாது என்று உறுதியாகக் கூறி விட்டேன்.
அம்மா, “தம்பி! இதெல்லாம் செய்யாமல் இருந்தால், உங்களை (நான் அக்கா மற்றும் குடும்பத்தினர்) பாதித்து விட்டால் என்ன ஆவது?” என்று கவலைப்பட்டார்கள்.
“நீங்கள் எல்லாம் இருக்கும் போது எங்களுக்கு ஒன்றும் ஆகாது, நாம் யாரையும் ஏமாற்றவில்லை, யாருக்கும் தீங்கு இழைக்கவில்லை, எனவே, அப்படியெல்லாம் நடந்து விடாது, கவலைப்பட வேண்டாம்” என்றேன்.
சிறு வயதிலேயே கணவனை இழந்த பொண்ணுகளுக்கு இச்சடங்குகள் செய்வது நியாயமா? எனவே, நீங்கள் புறக்கணித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருங்கள், எங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று சமாதானப்படுத்தினேன்.
பின்னர் ஒரே ஒரு சடங்கை மட்டும் நாவிதர் பண்ணாமல் தானே செய்து கொள்வதாகக் கூறி மற்ற அனைத்தையும் புறக்கணித்து விட்டார்.
நானும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது என்று அவரின் விருப்பத்துக்கு ஒத்துக்கொண்டேன்.
உறவினர்கள் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனால், என் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்தார்கள்.
என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, அவர்களுக்கு என் நன்றி.
உடல் தகனப் பூங்கா
அப்பா பட்ட உடல்நிலை சிரமம் அறிவேன், அதோடு அவரின் நிலை முழுக்க அறிவேன். எனவே, அப்பா இறந்த போது எனக்கு அழுகை கூட வரவில்லை, கண்கலங்க மட்டுமே செய்தேன், அதுவும் அம்மாவை பார்த்த போது மட்டுமே.
அவர் இனி நிம்மதியாக இருப்பார் என்ற அளவிலேயே என் எண்ணங்கள் இருந்தன.
சில நேரங்களில், கஷ்டப்பட்டு இருப்பதை விட இறந்து விடுவது சிலருக்கு நிம்மதியைக் கொடுக்கும்.
காரியங்கள் செய்த போது வாய்க்கரிசி என்ற சடங்கில் நெஞ்சின் மீது மூன்று முறை நெல்லை வைக்கக் கூறுவார்கள்.
எங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வைப்பார்கள்.
உடன் எங்கள் குடும்பத்துக்கு வேண்டிய முஸ்லீம் பெண்மணியும் வந்து இருந்தார், அப்பாவின் மீது பெருமதிப்பு கொண்டவர், அப்பாக்காக மந்திரித்துக் கொடுப்பார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அப்பா பயப்படுகிறார் என்று மந்திரித்துக் கொடுத்தார், அதன் பிறகு அப்பா பழைய நிலைக்கு உடனடியாக வந்து விட்டார்.
சிலது எப்படிச் சாத்தியம் என்பது புரிவதில்லை ஆனால், நம்பித்தான் ஆகணும்.
அங்கே நின்று கொண்டு இருந்த என்னிடம் வந்து அழுத போது, “நீங்களும் வைத்துட்டு வாங்க” என்றேன். “நான் வைக்கலாமா?” (வேற்று மதம் காரணமாக) என்று அழுது கொண்டே கேட்டார்.
“போங்க, யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று கூறினேன். இறுதி மரியாதை செய்த திருப்தியை அடைந்து இருப்பார் என்று நம்புகிறேன்.
கோபி உடல் தகனப் பூங்காவில், எங்களுடைய சடங்குகளை முடித்த பிறகு உள்ளே படுக்க வைப்பார்கள். கற்பூரத்தை நெஞ்சின் மீது வைத்து பற்ற வைக்கக்கூறுவார்கள்.
அந்த நொடியில் “கிளேடியேட்டர்” படத்தில் வரும் காட்சி போல எனக்கு, எங்கள் குடும்பத்துக்காக அப்பா செய்த உதவிகள், கடமைகள், எதிர்கொண்ட சிரமங்கள், அவமானங்கள் எல்லாம் மனதில் மின்னல் வேகத்தில் வந்து சென்றது.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
இந்த இடத்தில் தான் உடைந்து அழுதேன். அதே போல வெளியே வந்ததும், மண்டபத்தில் வைரமுத்து எழுதிய “ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” பாடலை ஒலிபரப்புவார்கள், அந்தச் சமயத்திலும் அழுதேன்.
கோபி “உடல் தகனப் பூங்கா” கட்டுரை எழுதிய போது சம்பந்தப்பட்டவர்கள் இருந்தால், அழுதுவிடுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
அதற்கு நானே “சம்பந்தப்பட்டவனாக” இவ்வளவு விரைவில் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
Read: கோபி “உடல் தகனப் பூங்கா”
நெருக்கடி
அப்பாவின் மிக நெருங்கிய நண்பர் “KSP” சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அவரின் மனைவி அப்பாவை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
வெள்ளைப் புடவை கட்டி இருந்ததால், வந்தால் அப்பா தெரிந்து கொண்டால், அப்பா உடல் நிலை பாதிக்கும் என்று தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தோம்.
அப்பா இறந்ததுக்கு முந்தைய நாள் கூட முதல் அக்கா “தம்பி! அத்தை கிட்ட சொல்லிடலாம்” என்று கூறி இருந்தார்.
நான் தான் அப்போது அவரை எப்படி அழைத்து வருவது என்ற குழப்பத்தில் அப்படியே மறந்து விட்டேன்.
அதோடு அப்பா அடுத்த நாளே இறந்து விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
வீட்டுக்கு வந்ததும் “தம்பி! இப்படி எல்லோரும் சேர்ந்து என்னை அப்பாவை பார்க்கறதுக்கு இல்லாமல் பண்ணிட்டீங்களே!” என்று கூறி அழுத போது மிகவும் நொந்து போய் விட்டேன்.
இவரை எப்படி அடுத்த முறை எதிர்கொள்வது என்று பயமாக உள்ளது.
அம்மா
அப்பா என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே பின்பற்றி 50+ வருடங்களைக் கடந்து விட்டார்கள். குடும்பத்துக்காக அம்மா இழந்தது கொஞ்ச நஞ்சமில்லை.
அம்மாவை எல்லாம் பார்த்தாலே யாருக்கும் ஏமாற்றனும் என்று கூடத் தோன்றாது.
காலையில் எழுந்ததும் காலை கடன்களை முடித்து, திருநீர், குங்குமம் வைத்து பளிச்சென்று இருப்பார்கள்.
பார்க்கும் நமக்கே நாமும் இதே போல இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும்.
மங்களகரமாக எப்போதும் இருப்பவரிடம் பொட்டு இல்லாமல் வெறுமையாக இருக்கும் நெற்றியைப் பார்க்கும் போது தான் மனதை என்னவோ செய்கிறது.
முன்பே அப்பாவின் நிலையைக் கூறி அம்மாவை சமாதானப்படுத்தி இருந்தோம். எனவே, அம்மாவும் எதிர்பார்த்தே இருந்தார்கள்.
என்னதான் எதிர்பார்த்து இருந்தாலும், அந்த மன வருத்தத்தில் இருந்து மீண்டு வர சில காலங்கள் எடுக்கும். மீண்டு வருவார்கள், சந்தேகமில்லை.
கருட புராணம்
அப்பா இறந்த பிறகு, தினமும் மாலை உறவினர்கள் “கருட புராணம்” படிப்பார்கள்.
ஒரு நாள் மாலை வழக்கம் போலச் சாமி கும்பிட எங்கள் உறவினர் ஒருவரை அழைத்த போது, “நான் வரவில்லை, நான் செய்த பாவம் பற்றியெல்லாம் வரும்” என்று கூறி விட்டார்.
எனக்குப் புரியாததால், விளையாட்டுக்குக் கூறுகிறார் என்று நானும் சாமி கும்பிட்டு வந்து விட்டேன்.
மூன்றாவது அக்கா என்னிடம் “கருட புராணம்” பற்றி விளக்கினார். அதாவது நாம் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப கருட புராணத்தில் தண்டனையுள்ளது.
எடுத்துக்காட்டுக்கு, ஒருவரை ஏமாற்றுவது, பழி கூறுவது, புறம் பேசுவது என்று ஒன்று விடாமல் அனைத்துக்கும் இறந்த பிறகு மேலே செல்லும் போது தண்டனைகள் இருக்கிறது. அந்தத் தண்டனைகளை இதில் விவரிக்கப்பட்டு இருக்கும்.
இதைப்படிக்கும் போது நாம் செய்த தவறு ஏதாவது ஒன்றாவது இதில் வந்து விடும்.
இதைத்தான் “அந்நியன்” படத்தில் விவரித்து இருப்பார்கள். நான் கூடப் படத்துக்காகக் கூறப்பட்டது என்று நினைத்தேன்.
இதைப்படிக்கும் மற்றவர்கள் தவறுகள் செய்யாமல் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவை படிக்கப்படுகிறது என்று கூறினார்.
உண்மையில் இதில் கூறப்பட்டுள்ள தண்டனைகள் கொடூரமானவை.
பிற்சேர்க்கை – கருட புராணம் | தண்டனைகளின் பட்டியல்
அக்காக்கள் பங்கு
எனக்கு மூன்று அக்காக்கள், இருவர் கோபி அருகேயும் இன்னொருவர் சென்னையிலும் இருக்கிறார்கள்.
சென்னையில் பணியில் இருப்பதால், அங்கே இருந்து அப்பாவை கவனித்துக்கொள்ள முடியவில்லை, அம்மாவுக்கும் வயதாகிறது. நெருக்கடியான சூழ்நிலை.
இரண்டாவது அக்கா அரசுப் பணியில் சத்தியில் உள்ளார்.
வேலையையும் பார்த்துக்கொண்டு, அவரது வீட்டையும் கவனித்துக்கொண்டு, அப்பாவையும் பார்த்துக்கொண்டார்.
மூத்த அக்கா பகல் நேரத்தில் வந்து அம்மாக்கு உதவியாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் இல்லையென்றால், கற்பனையும் செய்ய முடியவில்லை.
மூன்றாவது அக்காவும் சென்னையில் இருப்பதால், எதுவும் செய்ய முடியாத நிலை.
மறக்க முடியாத கவனிப்பு
பகலில் அலுவலக வேலை, இரவிலும் அப்பாவை கவனித்துக்கொண்டதால் சரியாகத் தூக்கமில்லாமல் மிகச் சிரமப்பட்டார். மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
அனைத்துப் பொறுப்பையும் ஏற்று கொண்டார்கள்.
முழுக்க இரு அக்காக்களுமே தான் செய்தார்கள், என் பங்கு இல்லை.
இரு வாரங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து அம்மாவை விடுபட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் அழைத்துச் சென்றதைத் தவிர.
நான் இருந்தாலும், அக்கா அளவுக்கு அப்பாவை கவனித்து இருப்பேனா! என்பது சந்தேகமே. அக்கா அப்பாவை கவனித்தது அளவீடே செய்ய முடியாதது.
அக்காவை அப்பா அடிக்கடி பாராட்டிக்கொண்டே இருப்பார், தன்னை நல்லபடியாகக் கவனித்துக்கொண்டு இருப்பதற்கு.
அக்காவது, அப்பாக்கு பொண்ணு, செய்வது கடமை. எனவே, இது பெரிய விஷயமில்லை.
ஆனால், எங்கள் சூழ்நிலை புரிந்து அக்கா கணவர் அக்காவை எங்கள் வீட்டில் இருக்க அனுமதித்தார்.
கிட்டத்தட்ட 10 மாதங்களாகப் பெரும்பாலான நாட்கள் இங்கேயே இருந்து அப்பாவை கவனித்துக்கொண்டார்.
இதற்கான நன்றிக்கடனை எப்படிச் செலுத்துவது என்பதே எனக்குப் புரியவில்லை. இது பணத்தைக் கொடுத்து சரிக்கட்டும் வேலையல்ல.
“உங்க அப்பாக்கு பிரச்சனைனா உன் தம்பிய வந்து பார்க்கச் சொல்லு, நீ எதுக்கு அங்கேயே இருக்கே?!” என்று கூறி விட எவ்வளவு நேரம் ஆகும், கேள்வியில் உள்ள நியாயத்தை நான் மறுக்கத்தான் முடியுமா?!
முன்னரே கூறியபடி எங்கள் குடும்பத்தில் பணத்துக்காகச் சிரமப்பட்டு இருக்கிறோம் ஆனால், கடவுள் அதைவிட முக்கியமான குடும்ப ஒற்றுமையை, அனைவருக்கும் கொடுத்து விட்டார். இதெல்லாம் எவ்வளவு பணம் இருந்தாலும் ஈடாகாது.
Read: அக்காவின் அன்பு தெரியுமா?
உறவினர்கள்
சிங்கப்பூரில் (2015) இருந்து வந்த பிறகு எடுத்த முடிவுகளில் ஒன்று உறவினர்களை அவசியமற்றுப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பது.
இதைச் செயல்படுத்த வேண்டும் என்றால், எதிர்பார்ப்பை குறைக்க வேண்டும்.
அதீத எதிர்பார்ப்புகளே பல பிரச்சனைகளுக்கு மூல காரணம். எனவே, எவர் மீதும் எதிர்பார்ப்பு வைப்பதில்லை.
எதிர்பார்ப்பு இல்லையென்பதால், நம்ம கடமையை செய்வோம் அவர்கள் செய்வதைப் பற்றிக் கவலையில்லை என்று நிலையில் இருந்ததால், எதுவுமே பிரச்சனையாகத் தோன்றவில்லை. இது ஒரு வகையில் நிம்மதியைக் கொடுத்தது.
மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால், எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.
அனைவரையும் திருப்தி செய்ய நினைப்பதும் நம் வேலையல்ல, அது முடியவும் முடியாது. எனவே, எதுவுமே பிரச்சனையாக இல்லை.
சமீபத்தில் முதல் அக்கா மகன் திருமணம் நடைபெற்றது.
அதில் எங்கள் பங்காளிகள் செய்த உதவிகளை, வேலைகளைப் பார்த்து, உறவினர்கள் ஏன் தேவையென்று தெளிவாகப் புரிந்தது. மிகச்சிறந்த அனுபவப் பாடம்.
சொந்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த நாள்.
அப்பா இறந்த போதும் சொந்தங்களே முன்னின்று அனைத்தையும் செய்தார்கள், செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அப்பா செய்த உதவிகள்
மற்றவர்களுக்கு அப்பா செய்த உதவிகள் எண்ணற்றது. பெருமைக்காகக் கூறவில்லை, நாங்களே கடுப்பாகும் அளவுக்குச் செய்து இருக்கிறார்.
திமுக அரசு திரும்ப உள்ளாட்சி தேர்தலை நடத்திய போது சுயேச்சையாக நின்று 50% வாக்குகள் பெற்று பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்றார்.
ஊருக்காக இவர் செய்த உதவிகள் ஏராளம் குறிப்பாக லஞ்சம் வாங்காமல் செய்தார். சொல்லப்போனால், இப்பதவியால் எங்களுக்குத் தான் அதிக நட்டமானது.
அப்பா இறந்த போது இரு ஊர் மக்கள் பலர் வந்து இருந்தார்கள், அதோடு மவுன ஊர்வலமும் நடத்தினார்கள்.
1990, 2000 தலைமுறையினருக்கு யார் இவர் என்று தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்து இருக்கும்.
உறவினர்கள் கூட்டம்
ஆனால், பொதுமக்களை விட எங்கள் உறவினர்கள் கூட்டமே அதிகம் இருந்தது. எனக்கே, இவ்வளவு பேர் இருக்கிறார்களா?! என்று வியப்பாக இருந்தது.
நடிகர் விஜயகுமார் ஒரு படத்தில் கூறுவாரே.. “எங்க போனாலும் சொந்தம் தான்டா கூட வரும்” என்று.
அது போல எங்களுக்கும் இவர்களே உடன் வருகிறார்கள், அனைத்திலும் பங்கு கொள்கிறார்கள்.
இதைப்படிக்கும் பலருக்குத் தங்கள் உறவினர்கள் மீது உள்ள மனக்கசப்பு நினைவுக்கு வரும். எனவே, இது பொதுவான ஒன்றல்ல. என் அனுபவம் மட்டுமே!
ஒரு வாரம் கழித்துச் சென்னை வந்த பிறகு நண்பர்கள் பலரும் அம்மா தனியாக இருப்பதாக நினைத்து “எப்படித் தனியாகச் சமாளிக்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
உண்மையில் அக்காக்கள், சித்தப்பாக்கள், சித்தி, மாமா, அத்தை, எங்கள் உறவினர்கள் என்று பெரிய படையே உள்ளது.
அப்பா இறந்தது 10 ம் தேதி, நான் சென்னை கிளம்பிய 16 ம் தேதி வரை தினமும் 75 – 100 பேர் வந்து செல்கிறார்கள்.
நின்று நின்று என் காலே வீங்கி விட்டது, காலை 6.45 ஆரம்பித்தால், மாலை வரை வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இதில் இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை, தினமும் வருகிறவர்களும் அடக்கம்.
தற்போது கூட, வரும் உறவினர்களுக்கு என் சார்பாகத் தகவல் கூற, சித்தப்பா, மாமா, மச்சான் என்று முழு நேரமும் வீட்டில் இருக்கிறார்கள்.
சென்னை கிளம்பும் போது உறவினர் அக்காவிடம், “அக்கா! அம்மாவை அடிக்கடி வந்து பார்த்துக்குங்க!” என்று கேட்டுக்கொண்ட போது, “எங்களுக்கு வேற என்ன வேலை, நீ கவலைப்படாம போ” என்று கூறிய போது மன நிறைவாக இருந்தது.
எனவே, சொந்தம் அவசியம் என்று புரிந்து கொண்டேன்.
அதோட எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளாமல் இருந்தால், நல்லது என்பதையும் புரிந்து கொண்டேன்.
Read: திருமணமும் பங்காளிகளும்
ஆசான்
ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய ஆசான் யார் என்றால், அவரவர் அப்பாவாகத்தான் இருக்கும். சிலருக்கு விதிவிலக்கு இருக்கலாம், தவிர்க்க முடியாது.
எனக்கும் என் அப்பாவே மிகச் சிறந்த ஆசிரியர். சிறு வயது முதலே எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.
என் கூச்ச சுபாவம் காரணமாகச் சிலதுக்கு நான் ஒத்துவரவில்லை என்றாலும், என்னை விடவில்லை.
அப்பாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன், அதில் படித்துக்கொள்ளுங்கள்.
Read: உலகின் சிறந்த ஆசான்!
பிடிவாதம் / கர்மா
அப்பாவிடம் எனக்குப் பிடிக்காதது, பிடிவாதம். இது அப்பாவிடம் இருந்து எனக்கும் வந்து விட்டது ஆனால், தற்போது ஓரளவு மாறி இருக்கிறேன்.
சில விசயங்கள் தான் செய்தது தவறு என்றாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்.
அதிகம் அனுபவம் இருப்பதால் (அது உண்மையும் கூட), தான் செய்வது அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என்று முழுமையாக நம்பினார்.
ஒருவருடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தமில்லை.
தன் தவறால் சிரமங்கள் ஏற்பட்டால், அதைக் கர்மா காரணமாக நினைத்துச் சமாதானப்படுத்திக் கொள்வார்.
கர்மா மீது எனக்கும் நம்பிக்கையுள்ளது ஆனால், நம் வேலையைச் சரியாகச் செய்யாமல், ஏற்படும் பாதிப்புகளுக்கு கர்மாவை கை காட்டுவது ஏற்புடையதல்ல.
இதைப் பலவாறு கூறியும் அப்பா இறுதி வரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதே போலப் பல விஷயங்களைக் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள மாட்டார். இதனால், அப்பாக்கு, எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகம்.
இது எனக்குப் புரியும் போது அப்பா 78 வயதை தாண்டி விட்டார்.
கேட்டால், உங்களுக்கு எல்லாம் இது தெரியாது, புரியாது என்று அடக்கி விடுவார்.
இதையெல்லாம் எதற்குக் கூறுகிறேன் என்றால், ஒருவர் இறந்து விட்டால், அது யாராக இருந்தாலும் அனைத்தையும் கூறும் போது, படிக்கும் மற்றவர்கள் தங்கள் நிலை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும் என்பதால்.
என்ன தான் அப்பா என்றாலும், தவறு செய்யாதவர் என்று உலகில் எவருமில்லை.
எனவே, யாராக இருந்தாலும் குடும்பத்தினரிடம் வெளிப்படையாக இருங்கள், ரகசியம் காக்காதீர்கள் (சில விதி விலக்குகள் இருக்கலாம்).
நல்லது என்று நினைப்பது கூட நாளை உங்கள் குடும்பத்தினருக்குப் பிரச்சனையாக முடியலாம்.
சில விஷயங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசும் போது தான் பிரச்சனைக்கான சரியான தீர்வு கிடைக்கும், குறைந்த பட்சம் வாழ்க்கைத் துணையுடனாவது.
Read: கர்ம வினையும் இந்து மதமும்
Read: அர்த்தமுள்ள இந்து மதம்
வயது ஒரு காரணமல்ல
அப்பா இறந்ததுக்கு வயது காரணமல்ல, Parkinson மட்டுமே காரணம்.
இல்லையென்றால், இன்னும் 10 வருடங்கள் கூட நல்ல நிலையில் இருந்து இருப்பார். சாப்பாடு விஷயம் உட்பட அனைத்திலும் ஒழுங்கை கடைப்பிடித்து வந்தவர்.
தனது 82 வயது வரை, சலிக்காமல், வெயிலாக இருந்தாலும் வாகனத்தில் சுற்றிக்கொண்டு இருப்பார்.
எனக்குச் சில நேரங்களில் “என்னடா இது! அப்பா அளவுக்கு நம்மால் சுற்ற முடியவில்லையே!” என்று கூச்சமாகக் கூட இருக்கும்.
வந்த உறவினர்கள் பலர் கூறியது,
“அப்பா! சுற்றிட்டே இருப்பாங்க, அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்கள். எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தார்கள்” என்பது தான்.
நண்பர்களிடையே அப்பா மிகப் பிரபலம். குறிப்பாக நண்பர்களின் மனைவிகள்.
அப்பாவின் வெளிப்படைத்தன்மை, கலகலப்பு, பெண்களுக்குக் கூறும் தைரியம் காரணங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டுப் பேசுவார்கள்.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் இருந்து நான் கிளம்ப முக்கியக் காரணங்கள், நம்ம ஊர் அதிகம் பிடித்ததும், குடும்பம், நண்பர்கள், பணி போன்றவை.
அதோடு அம்மா அப்பாக்கு வயதாகி விட்டது. எனவே, இறுதிக்காலத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பது முக்கியக் காரணம்.
அப்பா இறந்த போது அவருடன் மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன் என்பது எனக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது.
ஊருக்கு வந்த காரணத்தை இதைவிட எதிலும் நியாயப்படுத்தி விட முடியாது. எவ்வளவு பெரிய கொடுப்பினை!
அதுவும் சென்னையில் கூட இல்லாமல், கோபி மருத்துவமனையில் தான் இருந்தேன்.
Read: Bye Bye சிங்கப்பூர்
அப்பா இருந்த போதும், இறந்த பிறகும் அக்காக்கள் பசங்க அத்தனை வேலை செய்தார்கள். யாரும் கூறும் முன்பே தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டார்கள்.
நான் உறவினர்களை, மற்றவர்களை எதிர்கொண்டு இருந்ததால், இவர்கள் எனக்கு மிக உதவிகரமாக இருந்தார்கள்.
என்ன வேலை சொன்னாலும், முகம் சுழிக்காமல் செய்தார்கள். கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது.
அப்பாவின் மரபணு இவர்களிடையேயும் தொடர்வது மகிழ்ச்சி.
திறமையிருந்தால் பணத்தை எப்போது வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும் ஆனால், குடும்பத்தின் அனைவரின் ஒற்றுமையைப் பெறுவது எளிதல்ல.
மன நிம்மதியுடன் ஓய்வெடுங்கள்
அப்பா! எங்கள் அனைவருக்கும் அறிவுரையை வழங்கினீர்கள், சிறந்த வழிகாட்டியாக இருந்தீர்கள், முன்னேற்றத்துக்கு முக்கியக்காரணமாக இருந்தீர்கள்.
அனைவருக்கும் திருமணம் செய்து, பேர பிள்ளைகளுக்கும் சிறப்பான அறிவுரைகளை வழங்கி, பாசம் என்றால் என்ன என்று அவர்களுக்கும் காட்டி விட்டீர்கள் .
பலருக்கு உதவி செய்து இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் என்று பெருமையோடு நாங்கள் கூறும் அளவுக்கு வாழ்ந்து மறைந்து இருக்கிறீர்கள்.
சிரமங்களைச் சந்தித்து இருந்தாலும் ஒரு முழுமையான, நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறீர்கள்.
உங்களின் வழிகாட்டுதலில், நேர்மையாகவும், குடும்பத்தினருடன் அனுசரித்தும் இதே போல ஒற்றுமையுடன் நடந்து கொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
பலருக்கு செய்த எண்ணற்ற உதவிகளுக்கான பலன்களை முழுமையாக நீங்கள் அனுபவிக்கவில்லையென்றாலும், அவை உங்கள் பிள்ளைகளான எங்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்குமே வரும்.
எனவே, கவலையின்றிச் செல்லுங்கள்.
நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்பது போல, எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை, நல்லவர்கள் பலர் உடனிருக்கிறார்கள்.
எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளிக்கக் கூடிய அளவுக்கு நீங்கள் எங்களுக்குத் தந்த தைரியமும், அனுபவமும் உள்ளது. எனவே, எந்தக் கவலையும் வேண்டாம்.
இருந்தவரை ஓய்வில்லாமல் குடும்பத்தினருக்காகவும், மற்றவர்களுக்காகவும் உழைத்து விட்டீர்கள், இனியாவது மன நிம்மதியுடன் ஓய்வெடுங்கள்.
சென்று வாருங்கள் அப்பா!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ஆழ்ந்த அஞ்சலிகள். அன்பான குடும்பத்தினருடன் நிறைவான வாழ்வு வாழ்ந்திருக்கிறார்.
அவரது ஆன்ம சாந்திக்கும், தங்கள் அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்!
மனம் திறந்த, நெகிழ்வான பகிர்வு.
எனது ஆழ்ந்த அஞ்சலிகள் கிரி சார்.
உங்கள் தந்தை பெருவாழ்வு வாழ்ந்து, எந்தக் குறையும் இன்றி இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
இத்துயரிலிருந்து தாங்கள் மீள வேண்டிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அருளுவார்.
உங்கள் தந்தை
நினைவுகள் எப்போதும் உங்கள் இதயங்களில் வாழட்டும்
ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மூலமாக அவர் பேசுவதாகவே எனக்கு உள்ளது…
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்…
ஆழ்ந்த அஞ்சலிகள் 🙁
ஆழ்ந்த அஞ்சலிகள் 🙁
ஆழ்ந்த அஞ்சலிகள்!!!
அடியெனது ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா
வருத்தமாக உள்ளது கிரி. எங்கள் குடும்பத்தின் சார்பாக அப்பாவுக்கு அஞ்சலிகள்.
ஏதோ புத்தகத்தில் படித்த வரிகள் ” ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை தூரம் பயணித்தான், எத்தனை வெற்றிகள் பெற்றான், இதுமட்டுமல்ல அவன் நல்ல மனிதன் என்பதற்கான அடையாளம்.. மாறாக அவன் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்ந்தான் என்பதற்கான சாட்சி, அவனது இறுதி மரண ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கைதான்!!! ” அந்த வகையில் உங்கள் தந்தை எப்படிப்பட்டவர் என்பதை அவரது இறுதி ஊர்வலமே உலகிற்கு உணர்த்தி இருக்கும்..
என்னுடைய தந்தை மரணிக்கும் போது ஏழாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.. 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும் மனதின் ஓரத்தில் அந்த வலி என்றும் உண்டு!!! நீங்கள் உங்கள் தந்தையின் அருகில் இருந்து வளர்ந்ததால் அனைத்து நிகழ்வுகளையும் அருகில் இருந்து பார்த்து வளர்ந்ததும், இறுதி நாட்களிலும் அவருடன் இருந்ததும் இதுவும் ஒருவித பாக்கியமே!!! அனைவருக்கும் இது கிட்டாது..
நீங்கள் அதிக அளவில் பக்குவப்பட்டவர் என்பதால் இந்த இழப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .. இறப்பிற்கு முன்பு உங்கள் தந்தையை காணும் வாய்ப்பு எனக்கும், நண்பன் சக்திக்கும் கிடைத்ததற்கு உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் கடவுளுக்கும் நன்றி.. உங்கள் தந்தைக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன்..
அருமையான குடும்பம், முழுமையன வாழ்வு. அப்பாவின் ஆன்மா சாந்தி அடையட்டும். அம்மாவிற்கு மன அமைதி, உடல் நலம் கிடைக்கட்டும்.
கிரி அண்ணா. உங்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
அப்பாவின் நினைவுகள் என்றும் உங்கள் அனைவரையும் வழிநடத்தும்.
ஐயாவின் ஆன்மா அமைதியுற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
கிரி ,
ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையவும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மனவலிமை கொடுக்கவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .
இந்த பதிவு ஒரு உணர்வு மிகுந்த பதிவு மட்டும் அல்ல . இந்த சூழ்நிலையை தாண்டி வந்தவர்கள் இதை படிப்பவர்கள் தங்கள் அனுபவங்கள் சில ஒத்து இருப்பதை உணர்வார்கள். நானும் உணர்தேன்.
ஒரு தந்தையின் பங்கு என்னவென்று உணர்த்திய உன்னத தந்தை அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
சென்று வாருங்கள் அப்பா!
அப்பாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
அப்பாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள் கிரி…
உலக கடமையை செவ்வனே ஆற்றிவிட்டு, வெளியோடு மட்டுமல்ல இந்த இணையத்தோடும், வாசகர் உள்ளத்தோடும் கலந்துவிட்ட தந்தையை நினைத்தால் மனம் நிறைவாக உள்ளது.
🙏