Bye Bye சிங்கப்பூர்

43
Singapore Bye Bye சிங்கப்பூர்

ப்போது என்று எதிர்பார்த்து ஒருவழியாக இந்தியா திரும்புகிறேன். Bye Bye சிங்கப்பூர் 🙂 .

சிங்கப்பூர் 2007 ல் வந்த போதே நிரந்தரமாகத் தங்கும் திட்டமில்லை. வெளிநாடு செல்லனும்,  பணி புரியணும் என்ற இயல்பான விருப்பம் இருந்தாலும், சிங்கப்பூர் வந்தது குடும்பத்துக்கு இருந்த கடனைக் கட்டவேண்டும் என்ற நெருக்கடி காரணமாகவே!

இங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் துவக்கத்தில் இருந்தே இல்லை. எனவே PR (Permanent Resident) கூட விண்ணபிக்கவில்லை. Image Credit

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் / தேவைகள் / கடமைகள் என்றுள்ளது. எனவே, ஒருவர் வெளிநாட்டிலேயே இருப்பதும் திரும்ப ஊருக்கே வருவதும் ஒவ்வொருவருடைய  தனிப்பட்ட விருப்பம் / நிலையைச் சார்ந்தது.

Bye Bye சிங்கப்பூர்

எனவே, ஒருவரின் விருப்பத்தில் தலையிட கருத்துக்கூற மற்றவர்களுக்கு உரிமையில்லை. நான் இந்த எட்டு வருடங்களில் கண்டது கீழ் கண்ட வகையினரை.

  • வெளிநாட்டிலேயே தான் வாழ வேண்டும், திரும்ப இந்தியாக்கு வரவேண்டும் என்ற எண்ணமே இல்லை என்று தெளிவாக இருப்பவர்கள்.
  • இந்தியாக்கும் திரும்பனும் ஆனால், வெளிநாட்டு சொகுசும் வேண்டும். எனவே, இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் இருந்தாலும் சொகுசை விட முடியாமல் புலம்பிக் கொண்டே தொடர்ந்து இருப்பவர்கள்.
  • தேவை காரணமாக வெளிநாட்டில் இருந்து, அவை முடிந்ததும் திரும்ப இந்தியாக்குத் திரும்புவதில் உறுதியாக இருப்பவர்கள் (என்னைப் போல) .
  • இந்தியாக்கு திரும்பனும் ஆனால், குடும்பத்தினரின் நெருக்கடி, பணத்தேவை, கடமைகள் காரணமாகப் பிடிக்கவில்லை என்றாலும் இருக்க வேண்டிய கட்டாயச் சூழல்.
  • ஊருக்கு வரவேண்டும் என்ற ஆசையுண்டு ஆனால், தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்வதால், இன்னும் கொஞ்சம் சம்பாதித்துப் பிறகு வரலாம்!! என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பவர்கள்.
  • ஊருக்கு வந்தால் என்ன செய்வது? என்ன வேலை பார்ப்பது? என்ற பிரச்சனையிலே இன்னும் தொடர்ந்து இருப்பவர்கள்.

Readநம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

வெளிநாட்டில் இருப்பவர்கள் மேற்கண்ட வகையில் ஏதாவது ஒரு நிலையில் இருப்பார்கள்.

நான் செய்த தவறு

2014 டிசம்பர் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற உறுதியான முடிவை 2012 லேயே எடுத்து விட்டேன்.

இரண்டாவது குழந்தை பிறந்த போது மனைவி குழந்தைகளை ஊரிலேயே இருக்கக் கூறி விட்டேன். இதனால் கேட்பவர்கள் அனைவரிடமும் 2014 இறுதியில் இந்தியா செல்கிறேன் என்று கூறி வந்தேன்.

அனைவரும் இந்தியா செல்கிறேன் என்று கூறியதை மட்டும் நினைவில் வைத்து இருந்தார்கள் ஆனால், 2014 இறுதி என்பதை மறந்து விட்டார்கள்.

எனவே, இரண்டு வருடமும் (2013 – 2014) “கிரி! இந்தியாக்கு போறேன்னு சொன்னே எப்போ போறே?!” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே, இந்தியாக்கு கிளம்பனும் என்று இருப்பவர்கள் எதுவும் கூறாமல் அனைத்தும் உறுதியானதும் கூறப் பரிந்துரைக்கிறேன்.

நான் முன்பே கூறியது தவறு என்று கூற முடியாது. ஏனென்றால் என் மனைவி குழந்தைகள் ஊரில் இருந்தார்கள். எனவே, “ஏன் அவர்கள் இங்கே இல்லை?” என்று நண்பர்கள் கேட்கும் போது திட்டத்தைக் கூற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

மாறிய திட்டம்

கோவையில் ஒரு இடம் வாங்கியிருந்தேன், அந்த இடத்தை விற்றுத் தான் என் (2013 ல் கட்டிய) வீட்டு வங்கிக் கடனை அடைக்கத் திட்டமிட்டு இருந்தேன். எனவே எப்படியும் விற்று விடும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

ஆனால், ஜெ ஆட்சிக்கு வந்து சில மாதங்களில் கிரயக் கட்டணங்களை உயர்த்தி விட்டார்.

இதன் காரணமாக ரியல் எஸ்டேட் படுத்து விட்டது. இதனால் எவ்வளவு முயன்றும் கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களாக என்னால் இடத்தை விற்க முடியவில்லை. எனவே, 2014 இறுதியில் கிளம்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

EMI என்ற பெயரில் வட்டி கட்டியே ஏகப்பட்ட பணம் நட்டமானது. ஏற்கனவே, வட்டி கட்டி வெறுத்துப் போய் இருந்ததால், கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தது.

உறுதியான முடிவு

2014 இறுதி வரை இடம் விற்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனவே எனக்குப் பொறுமையிழந்து, எப்பத் தான் ஊருக்குப் போவோம் என்ற வெறுப்பே வந்து விட்டது.

வங்கிக் கடனை கட்டாமல் ஊருக்குப் போனால் சம்பளத்தில் பாதி இதற்கே சென்று விடும்.

எனவே, ஊருக்கும் போக முடியாமல் இங்கேயும் தொடர்ந்து இருக்கப் பிடிக்காமல் ஒரு நெருக்கடியான நிலையாக இருந்தது.

2014 இறுதியில், இடம் விற்றாலும் விற்கவில்லையென்றாலும் 2015 ஜூனில் கிளம்பிட வேண்டும் என்று வெறுத்துப் போய் உறுதியாக முடிவு செய்தேன். My threshold reached 🙂 .

ஊருக்குச்  செல்ல வேண்டும் என்று நினைத்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உள்ளது. அது பற்றி பின்னர் கூறுகிறேன்.

பிற்சேர்க்கை : காரணம் இது தான். ஐடி துறை : 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!

சனிப் பெயர்ச்சி

டிசம்பர் 2014 சனிப்பெயர்ச்சியில் எனக்குக் கட்டம்! சரியில்லை என்று வர, யோசித்தாலும் முடிவில் பின்வாங்கவில்லை.

எனக்காகக் குடும்பத்தினர் பயப்பட்டார்கள். “இவ்வளோ வருடங்கள் சிரமப்பட்டுட்டே ஒருவழியா முடித்துட்டே வந்துடு” என்றார்கள்.

இருப்பினும் சரியோ தவறோ யோசித்து ஒரு முடிவு எடுத்து விட்டால் நியாயமான காரணங்கள் இல்லாமல் பின்வாங்க மாட்டேன்.

எனவே, என்ன ஆனாலும் பார்த்துக்கலாம் என்ற முடிவில் நான் 2015 ஜூன் ஊருக்கு வருவது உறுதி என்று கூறி விட்டேன்.

இதன் பிறகு இரண்டு நாட்களில் இரண்டரை வருடங்களாக விற்காமல் போக்குக் காட்டி வந்த இடம் எந்த இழுபறியும் இல்லாமல் ஒரே நாளில் முடிந்தது வியப்பாக இருந்தது.

Readசனிப் பெயர்ச்சி

Readகர்ம வினையும் இந்து மதமும்

வேலை மாற்றல்

இங்கே இருந்து செல்ல வேண்டும் என்றால் இதே நிறுவனத்திற்குப் போவதா அல்லது வேறு நிறுவனத்திற்கா என்ற கேள்வி வந்தது.

இரண்டு வருடத்துக்கு முன்பு மாற்றல் சாத்தியமில்லை என்ற நிலையிருந்தது. எனவே, இது குறித்து மேலதிகாரிகளுடன் பேசினேன்.

அவசரப்படக் கூடாது என்ற முடிவை எடுத்து விட்டேன். காலம் எடுத்தாலும் மாற்றலுக்கு ஒப்புக் கொண்டார்கள். இது நடந்தது 2015 ஜூன்.

ஆனால், இதன் பிறகு எங்கள் சிங்கப்பூர் அலுவலகத்தில் சில பணிகள் காரணமாக அக்டோபர் இறுதி கிளம்புவது என்று முடிவானது.

அப்படி இப்படி என்று இதோ இன்னும் சில நாட்களில் கிளம்பப் போகிறேன் 🙂 .

Readசிங்கப்பூர் போதுங்க!

நம் ஊரைப் போல உள்ள நாடு சிங்கப்பூர் 

எனக்கு நம்ம ஊர் / நாட்டின் மீது பாசம் அதிகம். யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுத்தது கிடையாது. என் எழுத்துக்களில் அவ்வப்போது கண்டு இருக்கலாம்.

சிங்கப்பூர் மிகச் சிறந்த நாடு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு நம்ம ஊரைப் போலவே உள்ள இந்த நாட்டைப் போல ஒரு நாடு கிடைத்து விடாது.

ஒழுங்கு, உயர்தர வசதிகளுடன் திட்டமிடல்களுடன் சென்னை இருந்தால், எப்படி இருக்குமோ அது தான் சிங்கப்பூர்.

நம்ம ஊருக்கும் இங்கேயும் பெரிய வித்யாசமில்லை. எனவே, எனக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை.

எங்குப் பார்த்தாலும் தமிழர்கள், எளிதாக நம் திரைப்படங்கள் பார்க்கும் வசதி, நம்ம ஊர் உணவகங்கள், கோவில் வேறு என்ன வேண்டும்?!

ஆனால், அனைத்தையும் தாண்டி சில சம்பவங்களால் நாம் இந்த ஊருக்கு சொந்தமில்லை நாம் வேற்று நாட்டவர் என்ற எண்ணம் அழுத்திக் கொண்டே இருக்கும்.

என்ன தான் அனைத்தும் இருந்தாலும் நம்ம ஊர் இல்லையென்ற உணர்வு இருக்கும்.

ஒவ்வொருவரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும் இருக்கிறது. சிலருக்கு இது பெரிய விசயமாகமில்லாமல் இருக்கலாம் ஆனால், எனக்கு அப்படியில்லை.

இந்தியா வரவில்லை என்றால் துரோகியா?

வெளிநாட்டிலேயே இருக்க விருப்பப்படுகிறவர்களுக்கு இந்தியா திரும்பக் கூடாது என்ற ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் அதை நாம் மதிக்க வேண்டும். வர விரும்பாதவர்களைத் துரோகிகள் என்பது போலச் சித்தரிப்பது தவறு.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றளவில் யோசித்தால், புரியும்.

வெளிநாட்டிலேயே பல வருடங்கள் இருந்து பழகியவர்கள் இந்தியாவில் இருப்பது என்பது சிரமமான ஒன்றே!

காரணம், அந்தச் சூழ்நிலைக்குப் பழகியவர்கள், அவர்களின் குழந்தைகள் புதிய சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது அவர்களால் ஒத்துப் போக முடிவதில்லை.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், “நம் நாட்டில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் பிழைப்புத் தேடி நகரத்துக்கு இடம் பெயர்ந்த பிறகு ஏன் திரும்ப கிராமம் செல்ல விரும்புவதில்லை?” இந்தக் கேள்விக்கான பதில் புரிந்தால் மேற்கூறியதும் புரியும்.

நீண்ட விடுமுறையில் சென்னையில் இருந்து கிராமத்துக்கு / சிறு நகரத்துக்கு வரும் அனைத்துக் குழந்தைகளும் கூறும் ஒரு வசனம்  “ஒரே போர் அடிக்குது” என்பது தான். உங்கள் குடும்பத்திலேயே கூட இந்த வசனத்தைக் கேட்டு இருக்கலாம்.

எனவே, இந்தியா வரவில்லை என்பவர்களை திட்டுவதில் நியாயமில்லை.

இந்தியா வராததற்கு  கூறும் “காரணங்கள்” நியாயமானவையா?

வெளிநாட்டிலேயே தொடர்ந்து இருப்பவர்கள் இந்தியா வராமல் இருப்பதற்காக இந்தியாவின் ஊழல், லஞ்சம், ஏமாற்றல், பாதுகாப்பில்லை என்று அனைவருக்கும் தெரிந்த ஏராளமான காரணங்களைக் கூறுகிறார்கள்.

வெளிநாட்டிலேயே இருக்க நினைப்பவர்களை இந்தியாவில் உள்ளவர்கள் எப்படித் தவறாகக் விமர்சிக்கக் கூடாது என்று நினைக்கிறார்களோ அதே போல வேண்டாம் என்று ஒதுக்கி விட்ட இந்தியாவை வரவேண்டாம் என்பதற்கான காரணமாக விமர்சிக்கத் தார்மீக உரிமையில்லை.

இதே அழுக்கான, லஞ்சம் ஊழல் அதிகமுள்ள, ஒழுங்கற்ற, இன்னும் கணக்கிலடங்கா குறைகளைக் கொண்ட இந்தியா தான் நீங்கள் வெளிநாட்டில் சொகுசாக இருக்கக் காரணம் என்பதை மறக்க வேண்டாம்.

எத்தனை தலைமுறைகள் அங்கே இருந்தாலும் உங்கள் பூர்வீகம் இந்தியா தான்.

உங்கள் இந்திய முகத்தை எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாற்ற முடியாது. அந்த நாட்டின் குடிமகனாகவே மாறினாலும் மற்றவர்கள் பார்வைக்கு நீங்கள் இந்தியன் தான், வேற்று நாட்டவர் தான், தற்காலிகமாக வந்தவர் தான்.

எத்தனை வருடங்கள் / தலைமுறைகள் இருந்தாலும் நீங்கள் இருக்கும் வேறு நாடு உங்கள் சொந்த நாடாகாது. தரவுகளின் அடிப்படையில் அந்நாட்டின் குடிமகனாகலாம் ஆனால், பூர்வீகம் இந்தியா என்றே தலைமுறைகள் மாறினாலும் கூறப்படும்.

எனவே, வெளிநாட்டிலேயே வசிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் தாராளமாக இருங்கள் ஆனால், நீங்கள் வராமல் இருப்பதற்கு இந்தியாவில் உள்ள குறைகளைக் காரணமாகக் கூறி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் வராமல் இருப்பதற்கு நீங்கள் தற்போது வசிக்கும் நாட்டில் உள்ள வசதிகள், பாதுகாப்புகள், கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், சம்பளம், கல்வி என்று பல காரணங்களைக் கூறுங்கள் ஆனால், உங்கள் செயலை நியாயப்படுத்த இந்தியாவைக் குறை கூற வேண்டாம், அது நியாயமல்ல.

நீங்கள் குறை கூறும் நாட்டில் தான் உங்களைச் சார்ந்த ஏராளமானோர் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் உங்கள் குடும்பத்தினரே கூட இருக்கலாம்.

இது எப்படி என்றால் நாம் படிக்க, வளர, நமக்கு அனைத்தையும் கொடுத்த அம்மாக்கு வயதாகி விட்டது, நோய் வாய்ப்பட்டு விட்டார்கள் என்று கழட்டி விடுவது போலத்தான்.

சிங்கப்பூர் செய்த உதவி

முதன் முதலாகப் பயந்து கொண்டே சிங்கப்பூர் வந்து சந்தேகம் கேட்க ஒருவரைத் தேடி தெருவில் ஒரு தமிழர் இருப்பதைப் பார்த்து, கடவுளைப் பார்த்தது போல நினைத்த முதல் நாள் இன்னும் மறக்கவில்லை, எட்டு வருடங்கள் முடிந்து விட்டது.

வாழ்க்கையில் சில உதவிகளை மறக்க முடியாது. அதில் ஒன்று சிங்கப்பூர். நான் மட்டுமல்ல எங்கள் குடும்பமே சிங்கப்பூருக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோம்.

நான் இங்கு வந்த போது பல்வேறு கடன் பிரச்சனைகளில் எங்கள் குடும்பம் இருந்தது.

ஒருவேளை எனக்கு வெளிநாடு வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து இருந்தால், என்னால் எங்கள் நிலையைக் கற்பனையும் செய்ய முடியவில்லை.

இப்பிரச்சனைகள் தீர சிங்கப்பூர் தான் உதவியது என்பதால், ஆயுசுக்கும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

எப்படி எனக்குப் பிடித்த இடங்களை விட்டுக் கொடுக்க மாட்டேனோ அந்த இடத்தில் சிங்கப்பூருக்கு மனப்பூர்வமான இடமுண்டு.

சிங்கப்பூர் இன்னும் பலரை வாழ வைக்க வேண்டும், பலருக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மாற்றம் / குறை

நான் 2007 ல் பார்த்த சிங்கப்பூருக்கும் தற்போதைய (2015) நிலைக்கும் பெரும் வித்தியாசம். கூட்டம் அதிகரித்து விட்டது, சுத்தம் குறைந்து விட்டது.

நடைபாதை போக்குவரத்து விதிகள் சரிவர மதிக்கப்படுவதில்லை.

குறிப்பாக அலுவலகங்கள் நிறைந்த முக்கியப்பகுதியான Robinson Rd / Cecil Street பகுதிகளில். லிட்டில் இந்தியா பகுதி தண்ணீர் தெளித்து விட்டாச்சு.

அடிக்கடி ஹாரன் சத்தம் கேட்கிறது, முன்பெல்லாம் இது போலக் கேட்டதே இல்லை. ஆங்காங்கே குப்பைகள் இருப்பதைக் காண முடிகிறது.

பொதுமக்களுக்குப் பொறுமை குறைந்து அவசரம் அதிகம் ஆனது போலத் தோன்றுகிறது.

சிங்கப்பூர் ஆங்கில நாளிதழ்களுக்கு இந்தியா மீது என்ன கோபமோ..! ஏதாவது சிக்கி விட்டால் அதைக் கட்டுரை கட்டுரையாக எழுதி நாறடித்து விடுகிறார்கள்.

ஏன் இது போல இந்தியாவை மட்டும் தொடர்ந்து குறிப்பிட்டு தாக்கி எழுதுகிறார்கள் என்று புரியவில்லை. பல சமயங்களில் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ச்சியாக இதைக் கவனித்தவர்கள் உணர்ந்து இருக்கலாம்.

Blog

2006 முதல் Blog எழுதி வந்தாலும் 2007 ல் சிங்கப்பூர் வந்து 2008 ல் இருந்து தான் அதிகம் எழுதி வருகிறேன். சிங்கப்பூர் பற்றி அதிகம் எழுதி இருக்கிறேன்.

சிங்கப்பூர் இல்லாமல் வேறு நாட்டில் இருந்தாலும் அந்த நாடு பற்றி எழுதி இருப்பேன்.

சிங்கப்பூர் வந்த பிறகே என்னால் நிறைய எழுத முடிந்தது. 2008 ல் எப்படி எழுதிக்கொண்டு இருந்தேனோ அதே ஆர்வத்தோடு தான் இன்று வரை எழுதுகிறேன்.

எப்போதாவது சலிப்புத் தட்டும் ஆனால், அவை சில நாட்கள் தான்.

சிங்கப்பூர் குறித்த பல செய்திகளை, பயனுள்ள தகவல்களை எழுதி இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையுண்டு.

எனவே, எழுத்தைப் பொருத்தவரை எனக்கு நிறைவான ஒன்றே.

சிங்கப்பூர் பற்றி எழுதியதில் எனக்குப் பிடித்த சில கட்டுரைகள் பின்வருமாறு.

த்தா.. பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!

சிங்கப்பூர் உணவகங்கள்

நவீன சிங்கப்பூரின் தந்தை திரு “லீ குவான் யூ” (என்னை கண்ணீர் விட வைத்த கட்டுரை)

சிங்கப்பூரும் கோயமுத்தூரும்

இந்த கேலாங் ரோடு எப்படி போகணும்?

சிங்கப்பூர் கலவரம் – தமிழக ஊடகங்களும் அரசியலும்

சிங்கப்பூர் மெக் டொனால்டும் என் தலைவலியும்!

சுவாரசியமான சிங்கப்பூர் Formula 1 Grand Prix 2010

சிங்கப்பூர் விவசாயம்!

சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

என் முதல் வெளிநாட்டு (சிங்கப்பூர்) விமான பயண அனுபவம் !!!

சென்னை

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னையில் பணியில் சேர வேண்டும்.

சிங்கப்பூரில் நான் ஒரே ஆள் தான் இருப்பினும் அழுத்தம் குறைவு ஆனால், சென்னையில் உதவிக்குப் பலர் ஆனால், பணி அழுத்தம் அதிகம்.

எனவே பெரிய மாற்றம் தான். எப்படிப் போகிறது என்று பார்ப்போம்.

இனி தற்போது எழுதுவது போல என்னால் எழுத முடியாது, நேரமிருக்காது. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எழுத முயற்சிக்கிறேன். Image Credit

இந்த முறை சென்னையில் தலைவர் FDFS 🙂 . சென்னையில் FDFS க்கு இருந்து எட்டு வருடங்களாகி விட்டது. கடைசியாகப் பார்த்தது சிவாஜி FDFS. லிங்கா செம்ம பல்பாகி விட்டது. எனவே, தலைவர் கபாலியில் கலக்கி இருப்பார் என்று நம்புவோமாக.

இவ்வளவு வருடங்களாகச் சிங்கப்பூர் செய்திகள் / தகவல்கள் கூறிக் கொண்டு இருந்தேன், இனி தமிழக / சென்னை செய்திகள் போட்டுத் தாக்குவோம்!

Lets Begin! Get ready folks 😉 .

தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்களுக்கு நன்றி! குறிப்பாகச் சிங்கப்பூர் மக்களுக்குச் சிறப்பு நன்றி!

Bye Bye சிங்ப்பூர் 🙂 .

பிற்சேர்க்கை

வணக்கம் சென்னை!

Foreign Return வாழ்க்கை எப்படி இருக்கு?!

Foreign Return ஆக நினைப்பவர்களின் கவனத்துக்கு!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

43 COMMENTS

  1. இந்தியா அன்புடன் வரவேற்கிறது. உங்களுக்காக மழைகூட ஊரையே கழுவிவிட்டுள்ளது.

  2. பதிவை படிக்கும் போது மனம் நெருடலாக இருக்கிறது கிரி. சம காலத்தில் வெவ்வேறு தேசத்தை நோக்கி நீங்களும், நானும் புறப்பட்டு வந்து இருந்தாலும் உங்கள் இலக்கை அடைந்து மீண்டும் தாய்நாட்டை நோக்கி புறப்பட இருப்பது மகிழ்வான ஒன்று. வாழ்த்துக்கள் கிரி.

    உங்களின் இந்த பதிவு என்னை இன்னும் அதிகஅளவில் சிந்திக்க வைக்கிறது. உங்களை நேரில் பார்க்காமல், பேசாமல் இருந்தாலும் மிகவும் நெருக்கமான ஒரு நண்பனாக தான் எண்ணுகிறேன். விடுமுறையின் போது இந்தியாவில் நண்பன் சக்தியுடன் உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன்.. பகிர்தமைக்கு நன்றி கிரி.

  3. அருமையான பதிவு. சிந்திக்க தூண்டும் கருத்துக்கள். பயணத்திற்கும் மாற்றங்களுக்கும் வாழ்த்துகள், கிரி

  4. வாழ்த்துக்கள்.

    //எனக்குப் பொதுவாகவே நம்ம ஊர் / நாட்டின் மீது பாசம் அதிகம். யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுத்தது கிடையாது. இதை என்னுடைய எழுத்துக்களில் நீங்கள் அவ்வப்போது கண்டு இருக்கலாம்.//

    தராளமா கண்டிருக்கிறேன்.

  5. கிரி
    We and Singapore are going to miss you around here.
    Anyway as you said, it is all for GOOD, and am sure you will excel in all your new assignments.
    And i salute your firm decision on going back to India. Many of us are not able to take such firm decision.
    Let us try to catch-up at least in Gobi during my visit later in this year.

    Wishing you GOOD LUCK and ALL THE BEST for all your endeavours.

    Regards
    K Siva

  6. வாழ்த்துக்கள் நண்பரே!
    எங்கிருந்தாலும் உங்கள் எழுத்துப்பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.

  7. எழுத்திலும், வாழ்க்கையிலும், சிந்தனையிலும் பாசாங்கு இல்லாமல் வாழப் பழகி விட்ட உங்கள் எண்ணம் அனைத்தும் ஈடேற வாழ்த்துகள்.

  8. நீங்கள் குறிப்பிட்ட எந்த லிஸ்ட்ல நான் இருக்கேன்!!!எல்லாத்துலேயும் என் முகம் தெரிகிறதே:)

    ஓடிகிட்டே இருந்துட்டு சும்மா உட்கார முடியல.இந்தியா போயிட்டு திரும்ப ஒடியாந்துட்டேன்.

    • —“நீங்கள் குறிப்பிட்ட எந்த லிஸ்ட்ல நான் இருக்கேன்!!!எல்லாத்துலேயும் என் முகம் தெரிகிறதே:)”—

      எளிமையான எதார்த்த வார்த்தைகள்.

  9. All the best Giri..Wish you all good luck. I will miss you personally for various reasons.

    I have collected so many memorable moments with you and I will cherish them forever. Anyway, we need to move on and so is our lives.

    Btw, two humble suggestions for you…please read as much as you write and please write as much as you read…
    Ok ji… 🙂 🙂 🙂

  10. வாழ்த்துக்கள் .நடப்பதெல்லாம் நன்மைக்கே .கடந்த வந்த பாதை என்றும் இனிய நினைவுகள்

  11. நீங்கள் யார் என்று தெரியாது. உங்கள் எழுத்துக்கள் மட்டுமே அறிமுகம. bye bye சிங்கப்பூர் கட்டுரையை வாசித்தபோது மனம் கணத்தது. வாழ்த்துக்கள் அன்பரே.

  12. Vazthukkal Giri ! I started following your blog initially owing to the Singapore related news, since I was passionate to go there for a long time but couldn’t achieve it owing to various reasons. Hence I may miss the interesting news about Singapore from your blog, but truly appreciate your will to come back to India. All the best for your future endeavors and hope to see lot of Chennai/India related news henceforth : )

  13. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு திரும்பாத காரணங்களில் நீங்கள் சொன்னவற்றில் நிச்சயம் ஒரு விஷயமாவது ஒத்துபோகும்.. எனக்கும் சரியாக பொருந்துகிறது.

    பேசாம வந்துடலாமின்னு இருக்கேன் அப்படின்னா.. வந்துடுப்பான்னு அம்மா சொன்னாலும் ரெண்டு நாள் கழிச்சி இன்னும் கொஞ்சநாள் அங்க இரு.. அப்புறம் இன்னும் எத்தனை வருஷம் வேணுமோ அங்க இரு.. என்று நீள்கிறது குடும்பத்தினரின் கட்டளை.

    திரும்ப வந்து என்ன செய்யப்போகிறோம் என்றும் ஒரு பயம். சரி சென்னை பெங்களூரு பக்கம் வேலை தேடி போய்டலாம் என்று சிலர் அட்வைஸ் பண்ணும்போது அதுக்கு இங்கயே இருக்கலாமே என்பது என்னுடைய பதில். ஒரு சாதாரண தொழிலாளியா வந்திருந்தா (அப்படித்தான் கணக்கு பிள்ளையாக வந்தேன்) ஒருவேளை திரும்ப வந்திருப்பேன்.. நல்ல பிள்ளை என்று பேர் எடுத்தா – கடவுள் நெறையா கொடுப்பான்.. ஆனா நமக்கு தான் அதை கைவிட மனசு வராது.

    அது மட்டுமல்லாமல் பீதியை மேலும் கிளப்புற மாதிரி.. கூட வேலை பார்ப்பவர்கள் இரண்டு வருடத்தில் முடித்துக்கொண்டு அல்லது பிரச்சினை காரணமாக செல்லும்போது எதுக்கு இப்ப போறே நாலு வருஷம் கழிச்சி போ அப்படின்னு சொல்வேன். கேட்காமல் செல்வார்கள். சென்ற இரண்டு மாதத்திலேயே ஏதாவது வகையில் தொடர்பு கொண்டு.. சார் விசா இருந்தா சொல்லுங்க. மேனேஜர் நம்பர் கொடுங்க… அப்படின்னு கேட்கும்போது எனக்கே ஒருவித பயம் வருகிறது. இப்படி சொல்லி சொல்லியே பத்து வருஷம் ஆய்டுச்சி.. இப்போ 10 லட்சம் மதிப்புள்ள பெர்சனல் லோன் போடலாமென்று இருக்கிறேன் (வட்டி இந்தியாவிவை பாதி). அதை அடைக்க மூன்று வருஷம் ஆகும். அப்போ எப்போ திரும்புறது.. ?? தெரியல.

    சொந்த ஊரு தொழில் நுட்பத்தில் அவ்வளவு முன்னேறிய நகரமாக இல்லை. அப்படியிருக்க 10000க்கும் குறைந்த சம்பளத்திற்கு தான் வேலை பார்க்கணும். சென்னைக்கு செல்லவேண்டுமானால் எட்டு மணிநேர பஸ் பயணம். வயது 35 ஐ தாண்டிவிட்டதால் அரசாங்க வேலை கனவும் காலி. என்னதான் வங்கியில் முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்து சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் எப்படி இருந்த இவன் இப்படி ஆயிட்டான் என்ற பேச்சும் கேட்கவேண்டி இருக்கும். (ஏன்னா நாம நமக்காக வாழாம அடுத்தவங்களுக்காக வாழ்றோம் பாருங்க.!!!). ஆசையின் ஒரு பக்கமாக பெற்றோர், குழந்தை, மனைவி என்று அனைவரையும் விமானத்தில் பறக்க வைத்தாயிற்று. நல்ல ஸ்மார்ட் போனையும் வாங்கியாச்சு (இருந்தாலும் திரும்ப திரும்ப புதுசு வர்றது கடுப்பை கிளப்புது) இருந்தாலும் திரும்புற தைரியம் இன்னும் வரல.

    எப்படி இருந்தாலும் தைரியமான முடிவுதான். என்னைக்கு இருந்தாலும் திரும்ப ஊர் போய் தானே ஆகணும் கிரி.

    எனக்கு கிடைத்த முகம் தெரியா நண்பர்களில் நீங்கள் மிகவும் சிறந்தவர் கிரி. மற்ற இணையதளங்களில் வெட்டுகுத்து கமென்ட் அப்படி போட்டாலும் உங்கள் தளத்துக்கு வரும்போது கொஞ்சம் கண்ணியத்துடன் தான் கருத்து போட்டிருக்கிறேன். ஏன்னா அது தான் உங்கள் எழுத்து நடை, நடு நிலை. முதல் முறை உங்கள் புகைப்படம் பார்த்தபோது இளமையானவர் என்பதை தெரிந்து கொண்டேன்.. நான் தினமும் தளத்துக்கு வந்தாலும் கமென்ட் போட்டது கொஞ்சம் கம்மி தான். உங்களை நான் ஹாஸ்டல் பட விமர்சனத்தில் தான் சந்தித்தேன். இனிமே அதிகம் எழுத மாட்டேன் என்று சொல்வது இந்திய வாழ்க்கை / இணையம் / வேலை பளு / பொழுதுபோக்கு பொறுத்த வரை நியாயம் தான்.. இருந்தாலும் ரொம்பவே மிஸ் பண்ணுவோம் கிரி. அடிக்கடி வாங்க.. பதிவு போடலைன்னா அட்லீஸ்ட் கமென்ட் பகுதியிலாவது வாங்க. இல்லைனா நீங்க சொல்றது மாதிரி பிளாக் அழிஞ்சிடும். உங்க பேஸ்புக் பகுதியை இதுவைரையில் நான் பார்க்கலை.. இனிமே அங்கே நண்பர் வட்டத்தில் நுழைகிறேன்.

  14. கிரி இதற்க்கு முன்னர் ஒரு கருத்து பதிந்தேன் அது வந்து சேர்ந்ததா ? ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். வெளி நாட்டுக்கு வந்து ஏனைய நாட்டு மக்கள் பழக்க வழக்கம் தொழில் நுட்பத்தை பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம் – இந்தியாவில் இருந்திருந்தால் இது கொஞ்சம் கடினம் தான். எதற்கு சொல்கிறேன் என்றால் – வெற்றி கொடி கட்டு பட வடிவேல் போல சிலர் இருந்தார்கள்.. // அப்படியே வண்டிய ஒட்டிகின்னு போய்கிட்டு இருப்போம் திடீர்ன்னு பெட்ரோல் காலியாயிடுச்சின்னு வச்சிக்க ஓரமா வண்டிய நிப்பாட்டிட்டு பாட்டிலை எடுத்துகிட்டு போய் கையாள மண்ணை தோண்டி பாட்டிலில் பெட்ரோல் புடிச்சி வண்டியில ஊத்தி போய்கிட்டு இருப்போம்.//

    அதிலேயும் ஒரு டிரைவர் ஒருத்தர் என் ஆரம்ப கால கட்டங்களில் // அண்ணே பிளைட் இந்தியா மேல பறக்கும்போது தடதடன்னு ஆடுதுன்னே என்றேன் அதுக்கு அவர் எல்லாரும் தூங்குனபிறகு ஒரு என்ஜினை ஆப் பண்ணிடுவாணுக.. அதனாலாதான் ஆடுதுன்னு சொன்னார்.. //

    அப்படின்னு சொன்னதையும் நம்பிகிட்டு இருந்தோம். இதெல்லாம் இப்போ நடக்காது பாருங்க.

  15. சகோதர சென்னையில் என்ன வேலை ஊங்களுக்கு கிடைச்சிருக்கு?

  16. ”–“நம் நாட்டில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் பிழைப்புத் தேடி நகரத்துக்கு இடம் பெயர்ந்த பிறகு ஏன் திரும்ப கிராமம் செல்ல விரும்புவதில்லை?” இந்தக் கேள்விக்கான பதில் புரிந்தால் நான் மேற்கூறியதும் புரியும்.–“”

    இந்த அயல்நாட்டு வாழ்வில் இருந்து விடுபடுவதில் உள்ள சிக்கலை இதற்கு மேல் எளிதாக கூறமுடியாது ..

    நண்பர் கிரி,

    நமக்கு சில படைப்புகளை பிடிக்கிறது என்றால்,
    ஒன்று நாம் இதுவரை பயணிக்காத, பார்த்திராத ஆனால் நம்மை ஆச்சர்யப்படுத்தும் மற்றும் சந்தோசம் தரும் விஷயம் இருக்க வேண்டும்.
    — அல்லது —
    நமது அனுபவங்களுக்கு பரிச்சயமான மற்றும் நமது எண்ண ஓட்டத்திற்கு இசைவான நமது மனதின் கனிவான பக்கங்களை தொடும் விசயமாக இருக்க வேண்டும்.

    உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் இரண்டாவது வகையில் சேர்வது, என்னை பொறுத்தவரை. எனவே உங்கள் இணையதளமும் உங்கள் எழுத்தும் என்னை அதிகமாக ஈர்ப்பதில் வியப்பில்லை.

    தவிர நானும் ஏறக்குறைய அயல் நாட்டு வாழ்வு எனும் இந்த புலி வாலை எப்போது எப்படி விடுவது என்ற தடுமாற்றத்தில் இருக்கும் உங்கள் சக நகர (சிங்கப்பூர்) வாசித்தான். நீங்கள் கூறிய அணைத்து காரணங்களும் எனக்கும் உண்டு.

    இன்னும் சொல்ல போனால் இந்த ஒரு பதிவு நூறு சதவிதம் எனக்கு நானே எழுதியது போன்று இருக்கிறது. …
    (பயப்பட வேண்டாம் உங்கள் பதிவின் உரிமையில் நான் பங்கு போட வரவில்லை.)

    மற்றப்படி,

    உங்கள் புதிய இடம் பெயர்தல், பழக்கமான இடம் என்றாலும் கால ஓட்ட மாற்றங்களின் அந்நிய படிமங்களை கொண்டு சற்று நெருடலை கொடுக்க வாய்ப்பு உண்டு என்பதை மீறி உங்களுக்கு எல்லா நல்ல வளங்களையும் சந்தோசங்களையும் கொடுக்க வாழ்த்துகிறேன்.

    தொடர்ந்து எழுதுவீர்கள்.
    நாங்களும் தொடர்வோம் வாசகர்களை உங்களை.
    வாழ்க வளமுடன்.

  17. முதலில் உங்களுக்கு ” உந்தன் தேசத்தின் குரல் ” என்ற வாலி எழுதி ரஹ்மான் இசையமைத்த பாட்டை சமர்ப்பிக்கிறேன்… ஏன் என்றால் இதில் வரும் அர்த்தங்கள் வெளிநாடுகளில் வாழும் அனைவருக்கும் பெருத்தமாக இருக்கும் என்பதால்…. உங்களது இந்த பதிவை போலவே பாட்டும் இருக்கும்….. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது…. இனி குடும்பத்தினரை பிரிய வேண்டியதில்லை அவர்களுடன் சந்தோஷமாக இருக்கலாம்…. வாழ்த்துக்கள்…..

  18. 1. உங்கள் கட்டுரை வழியாக சிங்கப்பூர் குறித்து நிறைய செய்திகள் அறிய முடிந்தது. அதனால் நான் பார்த்த முதல் வெளிநாடு, சிங்கப்பூர். 🙂
    நன்றி.

    2. கணினி பொறியாளரராக பணிபுரியும் என்போன்றவர்க்கு உங்கள் தொழில்நுட்பக் கட்டுரைகள் பல முறை பயன்பட்டுள்ளது.
    மீண்டும் நன்றி.

    3. சிங்கப்பூர் நிறை, குறை பற்றி எழுதியதை போல், இங்கே வந்ததும் இந்தியா பற்றி எழுதவும்.

    புதிய பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  19. என்ன சொல்றதுன்னே தெரியல கிரி, ஆனா உங்க எழுத்த ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
    2009 யில் இருந்து வாரம் ஒருமுறை பார்க்கும் நண்பர் போல இருந்தது. நேராம் இருப்பின் எழுதுங்கள்.

    புதிய பணியில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!

  20. கிரி ,

    சிலரை போல உங்கள் எழுத்துக்கள் மட்டுமே எனக்கு அறிமுகம் . மிகவும் பயனுள்ள தகவல்களை பல முறை பகிர்ந்துள்ளீர்கள். ரசனையான பல கட்டுரைகள், தொடர்ந்து எழுதுக. மண்ணின் மீதான உங்கள் பற்றும் , நாடு திரும்பும் முடிவும் பாராட்டுக்குரியது.தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது. 🙂

  21. வெல்கம் டு சென்னை
    நிச்சயம் சென்னை கூட இந்த எட்டு வருடத்தில் நிறைய மாறி தான் விட்டது
    சொர்கமே என்றாலும் அது நம்ம ஊற போல வருமா

  22. உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேற இருப்பதற்கு வாழ்த்துக்கள் கிரி,

    உங்கள் தளத்தின் மூலமாகச் சிங்கப்பூர் பற்றிய பல தகவல்களை அறிய முடிந்தது ஆனால் அது இனி கிடைக்காது என்பது சற்று வருத்தம் தான், தங்கள் தளத்திற்கு வரும்போது ஒரு நல்ல நண்பருடன் உரையாடிய எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை , நீங்கள் இந்திய திரும்பினாலும் எங்களுக்காகச் சற்று நேரம் ஒதுக்கித் தொடர்ந்து பதிவு எழுத வேண்டும்.
    நாம் எவ்வளவு சுகம் தரும் பஞ்சணையில் படுத்து உறங்கினாலும், தாயின் மடியில் உறங்கும் நிறைவை வேறு எங்கும் தர முடியாது, அது போலத்தான் பிறந்த ஊரும், நாடும் .நாம் பிறந்து வளர்ந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு இடமும், பொருளும் நம் சிறு வயது நினைவைத் தரும், அந்தச் சுகம் வேறு எந்த வசதியான இடத்திலும் கிடைக்காது.
    அது போன்ற சுகமான நினைவுகளும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் உங்களுக்கு நம் இந்தியாவில் அமைய வாழ்த்துக்கள் கிரி.

  23. வணக்கம் நண்பரே
    தங்கள் கட்டுரை அருமை ,நாம் உங்களை போல்தான் 2003இல் சிங்கப்பூர்லவேளைக்கு போனேன் ,ஆனா உறுதியா இருந்தேன் பி ஆர் வாங்குவதில்லை என்று கடைசிவரை வொர்க் பர்மிட் இல் தான் இருந்தேன் ,என்னதான் வசதிகள் இருந்தாலும் இயந்தரமானவாழ்க்கை ,என் பாஸ் எவ்வளவு சொல்லியும் 2013அக்டோபர் வந்துட்டேன் நலமா மகிழ்ச்சியுடன் இருக்கேன் .

  24. கிரி,
    நல்வரவு! இந்தியா வந்த பின் உள்ள திட்டங்களில் ஒரு சிறு தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலை குடுக்கணும் அப்படின்னு ஒரு குறிக்கோளையும் சேர்த்துக்கங்களேன். உங்களால் முடியும் என்று தோன்றியதால்.

  25. இத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்

  26. வாழ்த்துக்கள் கிரி….
    உங்களை போல் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பி சாதித்து கொண்டு இருக்கும் நண்பன் ஒருவன் உள்ளான்.
    நீங்களும் சாதிக்க வாழ்த்துகிறேன்….
    உங்களின் கட்டுரை அருமை.

  27. ரொம்ப நாள் கழிச்சு உங்க blogsa readd பண்றத திருப்பி continuee பண்ணிருக்கேன்!

    1.ஆனால், அனைத்தையும் தாண்டி சில சம்பவங்களால் நாம் இந்த ஊருக்கு சொந்தமில்லை நாம் வேற்று நாட்டவர் என்ற எண்ணம் அழுத்திக் கொண்டே இருக்கும்.. ( ப்ரோ இதுல சில சம்பவம்னு mention பன்னிருகீங்க.. அது என்ன சம்பவம் ப்ரோ ?? )

    2. நம்ம லிங்கா பல்ப் ஆகிருச்சுன்னு சொல்றீங்க… நீங்களே இப்டி சொல்லலாமா ப்ரோ??

    சரி சென்னை வந்துடிங்க போல!! welcome bro !! நானும் சென்னைலதான் இருக்கேன்!

    எனக்கு உங்கள மீட் பண்ணனும்னு தோணுது..சோ நாம மீட் பண்ணுவோம்!! 😀

  28. அருமை .. உங்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!