கருட புராணம், இந்து மதத்தின் கோட்பாடுகளில், வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது. மற்றவர்கள் விருப்பப்பட்டால் படிக்கலாம்.
இக்காலத் தலைமுறை அதிகம் கேள்விப்படாத ஒரு விசயம், ‘தப்பு செய்தால் நரகத்துக்குப் போய்டுவே!‘ என்பதாகும். முன்பெல்லாம் இதெல்லாம் வழக்கமான வசனமாக இருந்தது ஆனால், தற்போது இவை புழக்கத்தில் அதிகம் இல்லை.
‘தவறு செய்தால் தண்டனை கிடைக்கும், கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டுடுவாங்க, தீயில் வாட்டுவாங்க‘ என்பது போன்ற மிரட்டல்களை முன்பு பரவலாகக் கூறுவார்கள்.
தவறு செய்யக் கூடாது என்பதற்காக, உளவியல் ரீதியான பயமுறுத்தலாக இருந்தது.
இத்தண்டனைகளை மையமாக வைத்து ‘அந்நியன்’ படம் வந்த போது கூட அதனுடைய வீரியம் எனக்குப் புரியவில்லை.
திரைப்படம் என்ற அளவிலேயே ஆர்வம் இருந்தது.
அப்பா இறந்த போது, தினமும் மாலை கருடபுராணம் படித்தார்கள். யாரும் இறந்தால், இவ்வாறு படிப்பது வழக்கம்.
அதில் வரும் தண்டனைகளைக் கேட்கப் பிடிக்காமல் அல்லது குற்ற உணர்வால் சிலர் அதைக் கேட்கக் கூட மாட்டார்கள்.
என் அக்கா இதுபற்றிக் கூறிய போது தான், இதன் முக்கியத்துவமே எனக்குப் புரிந்தது.
கருட புராணம்
அமேசானில் ஒரு நாள் புத்தகம் தேடிக்கொண்டு இருந்த போது ‘கருட புராணம்’ என்ற புத்தகம் கண்ணில் பட, அப்படி என்ன தான் இருக்கிறது! என்ற ஆர்வத்தில் படித்தேன்.
ஸ்ரீமன் நாராயணன், குற்றம் செய்தவர்களுக்கான தண்டனைகளை, சொர்க்கம் நரகம் என்றால் என்ன? இறந்த பிறகு என்ன ஆகிறார்கள்?
மறுபிறவி, ஆன்மா போன்றவற்றைக் கருட பகவானுக்கு விளக்குவதே ‘கருட புராணம்’ என்றழைக்கப்படுகிறது.
இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணத்தின் முக்கியத்துவம் மற்றும் பல தகவல்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைப்படித்த பிறகு என் அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகளின் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது.
புத்தகம் முழுக்க என்னென்ன தவறுகள் செய்தால், என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை விரிவாகக் கூறியுள்ளனர்.
அந்நியன் படத்தில் வரும் தண்டனைகளும் (அந்தகூபம், கிருமிபோஜனம், கும்பிபாகம்) இதில் உள்ளவை தான்.
28 தண்டனைகள்
மொத்தம் 28 தண்டனைகள் உள்ளன. அனைத்துமே ரணகளமான தண்டனைகள்.
எமன், சித்திரகுப்தன் எழுதும் துல்லியமான கணக்குகள் பற்றியும் அவருக்கு உதவியாக உள்ளவர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரும் தவறு செய்து தப்பிக்க முடியாது என்பதை விளக்கியுள்ளார்கள்.
நாம் எல்லோருமே 100% நகரத்துக்குத் தான் செல்வோம் 😀 . ஏனென்றால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு தவறையாவது செய்து இருப்போம் அல்லது பல முறை தொடர்ந்து கொண்டு இருப்போம். எனவே, எண்ணெய் கொப்பரை தான் 🙂 .
கருடபுராணம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள இப்புத்தகம் படிக்கலாம். அனைத்தையும் விரிவாக எளிமையாகக் கூறியுள்ளார் ஆசிரியர் ஸ்ரீ கோவிந்தராஜன். தண்டனைகள் தான் புத்தகம் முழுக்க நிறைந்துள்ளன.
எனவே, படிக்கச் சலிப்பாகலாம் ஆனால், தண்டனைகள் தான் புத்தகத்தின் மையக்கருத்து என்பதால் தவிர்க்க முடியாதது.
அமேசானில் வாங்க –> கருட புராணம் Link
தொடர்புடைய கட்டுரைகள்
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?