தந்தையே உலகின் சிறந்த ஆசான்

30
தந்தையே உலகின் சிறந்த ஆசான்

மது வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு வகையான அனுபவங்களைப் பெற்று வருகிறோம், பள்ளி பருவம் முதல் மூப்புப் பருவம் வரை ஏதாவது ஒன்றில் அனுபவம் பெற்றுக் கொண்டே இருக்கிறோம்.

இதற்கு முடிவு என்பதே கிடையாது, நாம் பெறும் அனுபவங்களை எந்த வைகையில் எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம்.

கஷ்டப்படும் நிலை வந்தால் அதை நம்மை மேம்படுத்திக்கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பாகவும் நினைக்கலாம் அல்லது ஐயையோ! இவ்வளோ கஷ்டம் வருகிறதே என்று துவண்டு புலம்புபவராகவும் இருக்கலாம்.

இதில் ஒருவர் எந்த நிலையில் வருகிறார் என்பதற்கு அடித்தளம் அமைக்கும் முக்கியக் காரணி யார் என்று கூறினால் அது நமது அப்பாவாகத் தான் இருக்கும்.

இதில் நான் கூறிய நிலைகளில் முதல் வகையான நபராக என்னை வளர்த்த என் அப்பாவைப் பற்றிய கட்டுரையே இந்தப் பதிவு.

தந்தையே உலகின் சிறந்த ஆசான்

என் சிறு வயதில் என்னை (தேவையான) கண்டிப்புடன் வளர்த்தவர் என் அப்பா.

அப்போது அவர் செய்த செயல்கள் / நடவடிக்கைகள் எரிச்சலை தந்தாலும் இன்று நினைக்கும் போது, அன்று கண்டிப்புடன் அப்பா இல்லை என்றால் இன்று நாம் எவ்வளவு மோசமாக, பொறுப்பு இல்லாமல் போய் இருப்போம் என்று தோன்றுகிறது.

அப்பா ரொம்பப் பிராக்டிகலான நபர், நடைமுறை பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு அதற்க்கேற்ப தன் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்பவர்.

தன்னுடைய சிறு வயதிலேயே தன் தந்தை (என் தாத்தா) இறந்ததால் இளமை கொண்டாட்டங்கள் எதுவுமின்றிக் குடும்பப் பொறுப்புகளில் மூழ்கியவர்.

40 வருடங்கள்

40 வருடங்களுக்கு மேலாகக் கஷ்டத்தை மட்டுமே சந்தித்தவர், ஆனால் தனது எந்தக் கடமையிலும் தவறு ஏற்படாமல் நேர்மையாக நடந்து கொண்டவர்.

நாங்கள் பெரியவர்களானால் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று முன்பே எண்ணி, அப்போது பணம் இருந்தாலும் எங்களை அனாவசியமாகச் சொகுசாக இருக்க அனுமதித்ததில்லை.

அப்போது அது கடுப்பாக இருந்தாலும் இப்போது அதை நினைத்தால், அப்பாவை நினைத்துப் பெருமையாய் இருக்கிறது.

கடந்த 20 வருடங்களாக அப்பாவிற்கு இருந்த பல்வேறு கடமைகளால் பணத்திற்குப் பெரும் சிரமப்பட்டோம் தற்போது பரவாயில்லை ஆனாலும் பிரச்சனை உண்டு. சென்னையில் தங்கி இருந்த போது செலவுக்கு 1500 Rs கொடுக்கவே சிரமப்பட்டார்.

ஆனால், பணம் கொடுக்கத் தான் சிரமப்பட்டாரே தவிர அந்தச் சிரமத்தை எப்படி எதிர்கொள்வது அதை ஒரு படிக்கட்டாக எப்படி மாற்றிக் கொள்வது என்ற தன்னம்பிக்கையை கொடுக்கத் தவறவில்லை.

தன்னம்பிக்கை

கையில் பணம் இல்லாமல் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன். என் சிறு வயது சந்தோசங்கள் பலவற்றை இழந்து இருக்கிறேன்.

ஆனால், என்றுமே அதற்காகத் துவண்டதில்லை, அழுததில்லை.

நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருந்த போது எங்கள் பஞ்சு மில் தீ பிடித்துப் பல லட்சம் நஷ்டப்பட்ட போது கூட என் அப்பா கலங்கியதில்லை.

அந்த நேரத்தில் பதட்டப்பட்டு இருந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்று தான் யோசித்துக்கொண்டு இருந்தார்

நான் என்ன தான் மன உறுதியுடன் இருந்தாலும் இந்த நிகழ்விற்குப் பிறகு என் ஊருக்குச் சென்று இருந்த போதும் நான் அழவில்லை.

ஆனால், அப்பா டேய்! அதெல்லாம் ஒன்றுமில்லைடா..சரி ஆகி விடும் என்று கூறிய போது, அமைதியாக இருந்த நான் அல்லது கட்டுப்பாடுடன் இருந்த நான், அப்பா கூறியதை கேட்டுத் தாங்க முடியாமல் அழுதது என்னால் மறக்க முடியாது.

அப்போது கூட என் அப்பாவிற்கு ஏன் தொடர்ந்து இத்தனை கஷ்டம் என்று தான் அழுதேனே தவிர எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நினைத்தல்ல.

இதைப் போலப் பல நிகழ்வுகள், என் அப்பா எனக்குக் கொடுத்த தன்னம்பிக்கைகள் மட்டுமே என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது.

மன தைரியம்

கிஷ்கிந்தாவில் கம்ப்யூட்டர் கேம்ஸ் சொல்லிக்கொடுத்த நான் இன்று SWISS வங்கியில் பணி புரிகிற அளவுக்கு உயர்ந்ததற்கு அப்பாவின் அணுகுமுறையும் மனசோர்வு அடையும்போதெல்லாம், மனதை படித்து எனக்கு மன தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தியது, நல்ல எண்ணங்களை என்னுள் விதைத்தது மட்டுமே காரணம்.

வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை, அது இன்று வரும் நாளை போகும், நல்ல மனிதர்களை நண்பர்களைச் சம்பாதிப்பது தான் முக்கியம்.

எனவே, பணத்திற்கு முக்கியத்துவம் தராதே என்று சொல்லிச் சொல்லி வளர்த்தவர்.

தலையீடு இல்லை

பள்ளிப்படிப்பு வரை ஓரளவு கண்டிப்புடன் இருந்தவர், பிறகு என்னிடம் தோழனைப் போலவே பழகினார்.

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் என் சுய முடிவே, எந்த விசயத்திலும் அப்பா தலையிட்டதில்லை.

தன்னுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் மட்டுமே கூறினாரே தவிர நான் சொல்வதைத் தான் செய்ய வேண்டும் என்று என்னை வற்புறுத்தியதில்லை.

கால மாற்றத்தில் நானே அப்பாவிற்குப் பல யோசனைகளையும் என் கருத்துக்களையும் கூறிய போது ஈகோ பார்க்காமல் இவன் என்ன சொல்வது நாம என்ன கேட்பது என்று இல்லாமல் என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்தவர்.

தன் கஷ்டம் தன்னுடன் போகட்டும் தங்கள் பிள்ளைகள் இனியும் கஷ்டப்படக் கூடாது என்று அனைத்து சிரமங்களையும் தன் தோளில் சுமந்தவர்.

முற்போக்கு சிந்தனை

எங்கள் சமூகத்தில் பெண்களைத் தனியே அனுப்ப மாட்டார்கள், கடும் கட்டுப்பாடுகள் உண்டு.

அந்தச் சமயத்தில் முதன் முதலாகப் பள்ளியில் என் சகோதரிகளை ஹாஸ்டலில் தங்க வைத்தார் அப்போது தான் பொறுப்புகள் கூடும் என்று.

முதன் முதலாகச் சென்னை வந்து அறை எடுத்துத் தங்கி படித்து வேலை தேடியது, பசங்களில் நான் முதல்.

ஹாஸ்டலில் பெண்களைத் தங்க அனுமதிக்க யோசிக்கும் நேரத்தில் அக்காவை மேலே படிக்க வைத்து லேப் டெக்னீசியனாக அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்த போது அப்பாவிற்குப் பல உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எங்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்குப் பேருந்தில் போவதையே இழுக்காக நினைப்பவர்கள் மத்தியில் (காரில் மட்டுமே செல்வார்கள்) இதைப் போல நடந்தால் ஜீரணிக்கச் சிரமமாகவே இருந்து இருக்கும்.

அக்காவிற்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இன்றும் அவர்கள் நிலை சிறப்பாக இருப்பதற்கு ஒரு காரணம் மற்றும் ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டு இருப்பதற்குக் காரணம் இந்த வேலையே.

மற்றவர்கள் கூறுகிறார்கள், அடுத்தவர்கள் பரிகாசம் செய்வார்கள் என்று இல்லாமல் அனைத்து விசயத்திலும் முன்னோடியாகவே அப்பா சிந்திப்பவர்.

அன்று அவர் எடுத்த பல துணிச்சலான முடிவுகளே என்று எங்களின் நல்ல நிலைக்குக் காரணம், அன்று கேள்வி கேட்டவர்கள் இன்று அமைதியாக இருக்கிறார்கள்.

அப்பாவின் அன்பு

பொதுவாக அப்பாவின் அன்பு பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை அல்லது பிள்ளைகளுக்குப் புரியும் படி தன் அன்பை வெளிப்படுத்தத் தெரிவதில்லை.

கண்டிப்பு என்ற வார்த்தையிலே அனைவரும் அப்பாவை அடக்கி விடுவதால் அவரின் பாசம் அன்பு அக்கறை பலருக்கு கடைசி வரை தெரியாமலே போய் விடுகிறது.

அப்படிப்பட்ட அப்பாவின் மனதை புரிந்து கொள்ளுங்கள், அவரும் நம் அன்னையைப் போல அன்பு கொண்டவர் தான் என்பதை உணருங்கள்.

அனைவருக்கும் தந்தை என்பவர் சரியாக அமைந்து விடுவதில்லை, எதிலும் விதி விலக்குகள் உண்டு என்பதைப் போல இதிலும் உண்டு.

தந்தையே உலகின் சிறந்த ஆசான்.

பிள்ளைகளுக்கு நல்ல அறிவுரை கூறி வாழ்க்கையின் அர்த்தங்களை விளக்கி வளர்த்த அனைத்து அன்பு தந்தைகளுக்கும் இப்பதிவு தந்தையர் தின பதிவாகச் சமர்ப்பணம்.

தொடர்புடைய கட்டுரை

சென்று வாருங்கள் அப்பா!

படையப்பாவும் என் அப்பாவும்!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

30 COMMENTS

  1. கிரி… காலைல வந்ததுமே கண் கலங்க வெச்சுட்டீங்க கிரி..!தோழுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன் என்று என்னை தனக்கு சரிசமமாக நினைத்து இன்று வரை செயல்பட்டு வரும் என் அப்பாவையும், அவர் என்னை கண்டிப்புடன் வளர்த்ததையும், இன்று கணிவுடன் பேசுவதையும் நினைத்து பெருமைப்பட வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி! அப்பா பாசத்தை அருமையாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்…!சிற்பிகள் அழகான சிலையை செதுக்குவதுபோல தாய் – தந்தை ஆகிய அந்த தெய்வங்கள்தான் நம்மை செதுக்கி இந்த அளவுக்கு மிளிரச் செய்திருக்கிறது என்பதை என்றைன்றும் நினைத்திருந்தால்தான் நாம் பெறும் பெயரும், புகழும் நம்மிடம் நிலைத்திருக்கும்…!

  2. தலைப்பும் சரி, பதிவும் சரி உணர்த்துகின்ற விஷயங்கள் உன்னதமாக உள்ளன. வாழ்த்துக்கள் கிரி!

  3. Giri

    A fantastic write-up, i read in the recent times…….

    Do come with more such write-ups…

    I wish you all the very best….

  4. // பொதுவாக அப்பாவின் அன்பு பெரும்பாலானவர்களுக்கு புரிவதில்லை அல்லது பிள்ளைகளுக்கு புரியும் படி தன் அன்பை அப்பாக்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை //

    இது உண்மை தான். நல்லமுறையில் வளர்த்துகிறேன் என்று எப்போதும் கண்டிப்புடன் இருப்பது தான் அதற்க்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

  5. நெகிழ்வான பதிவு.அருமையாக சொல்லியிருக்கீங்க.

  6. அப்பாவைப்
    பற்றி
    ஆழமாக
    எழுதியுள்ளிர்கள்!!!

    தமிழ்த்துளி தேவா..

  7. உங்கள் தந்தையாருக்கு எனது பணிவான வணக்கங்களும்,பாராட்டுக்களும்,கிரி.

    நீங்களும் நல்ல தந்தையாக இருக்க உங்கள் தந்தையார் முன்னோடியாக இருப்பார் எனபது கூடுதல பயன்!

  8. மிகவும் நல்ல பதிவு.
    பொதுவாக எல்லோருக்கும் அப்பா கண்டிப்பாக தான் இருப்பார்கள்.
    ஆனால் நீங்கள் சொன்னது போல தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் ஆகி விடுவார்கள்.

    எமது வீட்டிலும் நாம் சிறுவர்களாக இருந்த போது அப்பா மிகவும் கண்டிப்பாக தான் இருப்பார்.
    அதுவும் அவர் ஒரு கணித ஆசிரியர். இருக்கிற முழுக்கணக்கையும் கொண்டு வந்து
    செய்யும் படி சொல்லும் போது எனக்கு எரிச்சலாக இருக்கும்.
    நானும் தம்பியும் அப்பாவின் கணக்கிலிருந்து தப்புவதற்கு நிறைய plan எல்லாம் போடுவோம்.
    படிப்பு விடயத்தில் மட்டும் இரக்கம் காட்டவே மாட்டார்.
    அதுவும் கணித பாடத்தில் 95 புள்ளி எடுத்தால் கூட அவர் திருப்தி அடையமாட்டார்.
    மிச்சம் 5 புள்ளி எங்கே என்று தான் கேட்பார்.
    இன்று நாம் படித்து நல்ல நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்கு அப்பா தான் காரணம்.

    ஆனாலும் எமது சுதந்திரத்தில் அவர் ஒருபோதும் குறுக்கிட்டது இல்லை.
    நான் கேட்கும் கதைப்புத்தகம், படம் என்று எல்லாமே வாங்கித்தருவார்.
    தேவையெனில் அறிவுரை மட்டும் சொல்லுவார்.

  9. அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு …உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சுஅப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

  10. மிக நெகிழ்வான பதிவு கிரி. அனைவருக்கும் தந்தையர்தின வாழ்த்துக்கள்.

  11. கிரி….

    வயதுகள் ஏற ஏற
    வாழ்க்கை மாற மாற
    வயோதிகத் தந்தையின் அருமை புரியும்..
    உங்களுக்கு
    வாலிபத்திலேயே தெரிவதால்…
    உங்கள் தந்தைக்கு –
    உங்களை பெத்ததே சந்தோசம்
    அது போல உங்களுக்கும்
    அத் தந்தையைப் பெற்றதே சந்தோசம்.

    நெகிழச் செய்யும் பதிவு……

    அன்புடன்.

    ஈ ரா

  12. மிகவும் கஷ்ட்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்த எனது தந்தை – அவருடைய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி எனும் செல்வத்தை கொடுத்தார்.

    ஏழ்மையிலும் நேர்மையாக வாழ்ந்து எங்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்

    எனது முதல் ஹீரோ அவர் தான்.

    நல்ல பதிவு கிரி

    தங்களுக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்

  13. தந்தையர் தின நல் வாழ்த்துகள் கிரி

    'தாயிற்சிறந்த கோயிலும் இல்லை
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை
    தன்னலம் அற்றது தாயின் நெஞ்சம்
    தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
    மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
    பூமியை மிஞ்சும் தாய்மனம் உண்டு
    கோயிலில் ஒன்று !.குடும்பத்தில் ஒன்று
    கடவுளும் தாயும் கருணையும் ஒன்று!….

  14. நண்பரே…
    உங்களுக்கு ஞாபகம் இருக்குமோ என்னமோ தெரியல..
    உங்களுடைய ரஜினி பதிவ படிச்சிட்டு நான் பதிலிட்டப்போ சொல்லி இருந்தேன்
    அவரவருடய அப்பா தான் சூப்பர் ஸ்டார்னு….
    நல்ல பதிவு….

  15. கிரி….. மிக உன்னதமான பதிவு வாழ்த்துக்கள்…..

  16. கிரி…. மிகவும் உன்னதமான பதிவு. வாழ்த்துக்கள்.

  17. தந்தையினர் தின வாழ்த்துக்கள்!

    (நாளைக்கு தானே)

  18. நல்ல பதிவு, நான் கூட என் அப்பாவைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்ற எண்ணம் உள்ளது.

  19. என் அப்பாதான் என் ஹீரோ ….நீங்கள் என்னமாய் கருத்தை தெரிவித்து இருக்கீங்க. வாழ்த்துகள் …!

  20. நல்ல பதிவு ……இந்தகாலத்து மகளுக்கு புயனுமே!!!!!!!!!!!!!!!!

  21. அப்பாவை நான் பார்க்கும் போது இருந்த மதிப்பை விட இப்போது மிக உயரத்தில்….

    இன்னுமொரு முன்மாதிரிப் பதிவு கிரி!!!

  22. அப்பாவை பற்றிய நல்லதொரு பகிர்வு,..

    உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்

  23. டியர்

    ரொம்ப சூப்பர் அம்மா பிள்ளையை பெற்று இய்ந்தம் வகுப்பு வரை பொறுப்புடன்
    பாசத்துடன் இருப்பர்கள் அப்பா அந்த பிள்ளை பெற்றதில் இருந்து படிப்பு வருங்களm கல்யாணம் என்று அவர் படும் பாடு ஆண்டவனுக்குத்தான் தெரியும்

  24. உங்க ரெண்டுபேர் கிட்டயும் நெருங்கி பழகற வாய்ப்பு கெடைச்சது ரொம்ப சந்தோசம் …சூப்பர் கிரி… (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!