அக்காவின் அன்பு தெரியுமா?

5
I may fight with my siblings அக்காவின் அன்பு தெரியுமா

வ்வொரு நாளும் ஏதாவது “தினம்”. 365 நாட்கள் போதவில்லை 🙂 . சில நாட்கள் முன்பு “அக்கா தம்பி தினம்” என்று கொண்டாடினார்கள். அட! இது நம்ம வாழ்க்கையாச்சே என்று அக்காவின் அன்பு நினைவுகள். Image Credit

அக்காவின் அன்பு தெரியுமா?

சிறு வயதில் அடித்துக்கொண்டாலும் பிரியாமல் இருக்கும் அண்ணன் சகோதர சகோதரி உறவுகள் வளர்ந்தாவுடன் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

இப்பெல்லாம் எந்த வீட்டுலங்க ஒற்றுமையா இருக்காங்க… ஒருத்தருக்கு ஒருத்தர் எங்க  விட்டுத் தராங்க…! சொத்து என்று வந்தாலே அடித்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போடுகிறார்கள்” என்ற பேச்சு வழக்கமாகி விட்டது.

இது உண்மை தான் என்றாலும் அனைவரும் அவ்வாறு தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. எங்களைப் போலச் சிலரும் இருக்கிறார்கள்.

மூன்று அக்காக்கள்

பையன் வேண்டும் என்ற அப்பாவின் விருப்பத்துக்காக மூன்று அக்காக்களுக்குப் பிறகு நான் பிறந்தேன். அப்போது மூன்று, நான்கு குழந்தைகள் என்பது இயல்பானது.

சிறு வயதில் அதிகம் சண்டை போட்டதாக எனக்கு நினைவு இல்லை.

பெரும்பாலும் சண்டை போட்டது என்றால், பேனா, இலந்தை வடை, தீபாவளி பட்டாசு போன்ற அல்ப காரணங்களுக்காகத் தான் இருக்கும்.

Readஇலந்த வடை சாப்பிட்டு இருக்கீங்களா? 🙂

அக்காக்கள் மூவருமே மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்தார்கள். எனவே, அவர்களுடன் இருப்பதற்கான வாய்ப்பு எனக்குக் குறைவாகவே இருந்தது.

7 ம் வகுப்பில் இருந்து மாணவர் விடுதியில் இருந்ததால், அவர்களுடனான தொடர்பு என்பது விடுமுறை காலங்களில் என்பதாகவே மாறிப்போனது.

பள்ளி படிப்பு முடிந்தவுடன் சென்னை வந்து விட்டேன்.

சுருக்கமாக அவர்களுடன் நான் இருந்த நாட்கள் குறைவாகவே இருக்கும். எனக்கே இதை எழுதும் போது தான் உரைத்தது 🙂 .

இருப்பினும், நாங்கள் சந்திக்கும் நாட்களில் மிக ஒற்றுமையாகவே இருந்து இருக்கிறோம். தம்பி என்ற ஒரே காரணத்துக்காக எனக்காகப் பலதை விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள்.

சென்னையில் ஏற்பட்ட சிரமங்கள்

சென்னை வந்து பணத்துக்காகச் சிரமப்பட ஆரம்பித்த பிறகு தான் ஒவ்வொருவரின் மனநிலை எப்படி இருக்கும், ஒவ்வொருவரின் சிரமம் என்ன என்று புரிய ஆரம்பித்தது.

இதன் பிறகு தான் அக்கா அனைவரும் எவ்வளவு விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள், எவ்வளவு விசயங்களைக் குடும்பத்துக்காக அனுசரித்து நடந்து இருக்கிறார்கள் என்று உணரும் போது அவர்கள்மீது பெருமதிப்பு உருவானது.

பணம் இல்லாமல் சிரமப்பட்ட போது அக்கா தான் குடும்பத்துக்குத் தனது சம்பளத்தின் மூலம் உதவினார். அப்போது வீட்டில் இருந்த பல பொருட்கள் அக்கா வாங்கிக்கொடுத்தது தான்.

வாழ்க்கையை மாற்றிய 5000

சென்னை வந்து தங்கி இருந்த போது அப்பா கொடுத்த பணம் (₹1500) போதவில்லை, அதற்கு மேல் கொடுக்க அப்பாவிடமும் பணமுமில்லை.

இந்த நேரத்தில் எவ்வளவோ சமாளித்தும், அறை நண்பர்கள் எனக்கு உதவியும் நெருக்கடியானது.

இச்சமயத்தில் இரண்டாவது அக்கா மாதம் ₹500 (1996) கொடுத்து உதவினார். தற்போது இப்பணம் பெரிய விசயம் இல்லையென்றாலும் அப்போது பெரிய உதவி.

இப்பணம் இல்லையென்றால் நான் சென்னையில் இருந்து ஊருக்கே திரும்பி வந்து இருப்பேன். என் வாழ்க்கையும் வேறு மாதிரி மாறியிருக்கும்.

ஒருவேளை, giriblog தளம் கூட இக்கட்டுரையைப் படிக்க இருந்து இருக்காது 🙂 .

மாதம் ₹500 பத்து மாதங்கள் கொடுத்தார். மொத்தம் ₹5000.

இவர் கொடுத்த ₹5000 பல வருடங்களில் குடும்பத்துக்கு எத்தனை லட்சங்களைத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது என்பது வியப்பளிக்கிறது!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ₹5000 முதலீடு (ன்னு சொல்லக் கூடாது உதவி) செய்து குடும்பத்துக்குப் பல லட்சங்களைத் திரும்ப வரும்படி செய்து இருக்கிறார், அவர் அறியாமலே.

இன்று வரை இப்படியொரு விசயம் நடந்துள்ளது கூட அக்காக்குத் தெரியாது 🙂 .

எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையையே மாற்றியது வெறும் ₹5000 தான் என்றால், உங்களால் அல்ல என்னாலையே நம்ப முடியவில்லை.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாலப் பெரிது.

பொழிப்பு: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அக்காலத்தைக் கருத உலகத்தைவிட மிகப் பெரிதாகும்.

திருவள்ளுவர் சாதாரண ஆள் இல்லைங்க.. ஒவ்வொரு குறளும் நம்ம வாழ்க்கைக்குப் பொருந்துகிற மாதிரி நச்சுனு கூறி இருக்காரு.

ஒற்றுமையே பலம்

இதன் பிறகு இன்று வரை நாங்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, உதவி ஒற்றுமையாகவே உள்ளோம்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து தற்காலிகமாக மூன்றாவது அக்கா வீட்டில் இருந்த போது என்னை அப்படி கவனித்துக்கொண்டார்.

சொத்துக்காக அண்ணன் தம்பி அக்கா தங்கை சண்டை என்று கேள்விப்படும் போதெல்லாம், ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றும்.

ஏனென்றால், இப்படியொரு சண்டை குடும்பத்தில் எப்படி இருக்கும் என்று நாங்கள் அனுபவித்ததே இல்லை, ஏனென்றால் அப்படி நடந்ததே இல்லை, இனியும் நடக்காது.

எப்படி ஒற்றுமையாக இருக்கிறோம் என்று யோசித்தால், பெற்றோர் வழி நடத்தியது, ஒவ்வொருவரையும் சமமாக நடத்தியது தான் காரணமாக இருக்க வேண்டும்.

இதை எல்லாவற்றையும் விட எங்கள் அனைவருக்கும் பொறுப்பை, பாசத்தை, அன்பை சொல்லிக்கொடுத்ததால் தான் நிச்சயம் இருக்க வேண்டும்.

நாம் இது போல வளர்க்க முடியுமா?

எனக்கு அவ்வப்போது தோன்றும், எங்களைப் போல என் பசங்க இருவரையும் வளர்க்க முடியுமா? வளர்ந்த பிறகு ஒற்றுமையாக இருப்பார்களா? என் பெற்றோர் போல எங்களால் வளர்க்க முடியுமா? என்ற கவலை எட்டிப்பார்க்கும்.

எங்களைப் போல எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்றே எங்களுக்கு இரண்டு குழந்தைகள் வேண்டும் என்று திட்டமிட்டோம்.

ஏனென்றால், பெரும்பாலானவர்கள் வீட்டில் தற்போது ஒரு குழந்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். பொருளாதாரமும் ஒரு காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

எல்லையில்லா உதவிகள்

சமீபத்தில் எங்கள் குடும்ப விழாவுக்கு நான் பணம் கொடுக்க வேண்டியது ஆனால், என்னிடம் அவ்வளவு பணமில்லை. எனவே, என் அம்மா மற்றும் அக்காக்களே செலவைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இதெல்லாம் சும்மா.. இது மாதிரி இவர்கள் செய்த உதவிகளை, அனுசரணைகளைப் பட்டியலிட்டால், இன்னும் ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் 🙂 .

தற்போதும் “தம்பி தம்பி” என்று எனக்காக எவ்வளவோ செய்கிறார்கள். எனக்கு, என் குடும்பத்துக்கு ஒன்று என்றால், பதறி விடுகிறார்கள்.

அப்படிச் செய் இப்படிச் செய் என்று அறிவுரை கூறுகிறார்கள், அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஈகோ பார்க்காமல் கலந்து பேசிக்கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்வோம்.

இப்பவும் தம்பி தானே என்று இல்லாமல் பெரிய அக்கா பல்வேறு விசயங்களுக்கு என்னிடம் கலந்து ஆலோசிப்பார்.

வாழ்க்கையில் பணம் இல்லாமல் சிரமப்பட்டு இருக்கிறேன் ஆனால், குடும்பத்தின் அன்பு, அக்காவின் அன்பு எனக்கு எப்போதுமே நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைத்து வருகிறது. இதற்கு மேல் ஒருவருக்கு என்ன வேண்டும்?

ReadBye Bye சிங்கப்பூர்

கலாய்த்தல் பக்கம்

மேலே கூறியதெல்லாம் ஒரு மாதிரி என்றால், எங்களுக்கு இன்னொரு பக்கம் (முகம்) இருக்கிறது. அது தான் கலாய்த்தல் பக்கம்.

இதற்குச் சிறு உதாரணம் கொடுக்க வேண்டும் என்றால், என் நண்பன் ஒருவன் “டேய்! ஊருக்கு வந்தால் உங்க அக்கா எல்லோரும் செமையா கலாயிக்குறாங்க.. கொஞ்சம் சொல்லி வைடா..” என்று பீதியான கதை உண்டு 🙂 .

அந்த அளவுக்கு நாங்கள் நால்வரும் சேர்ந்தால் எதிரே இருப்பவர் “யப்பா சாமி! ஆளை விடுங்க..” என்று கிளம்பி விடுவார்கள், வீடே ரணகளமாகி விடும்.

அப்பா எட்டிப் பார்த்து.. “டேய்! சத்தம் போடாதீங்க” என்று எச்சரித்து விட்டுச் செல்வார்.

தம்பி தங்கை இல்லையே!

எனக்கு அண்ணனைப் போல நிறையப் பேர் இருக்கிறார்கள் ஆனால், தம்பி, தங்கை இல்லையென்ற வருத்தம் எனக்கும் எப்போதும் உண்டு.

என்னோட பசங்க இரண்டு பேரும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறார்கள் ஆனால், LKG க்கு வேற வாகனம் மற்ற வகுப்புகளுக்கு வேறு வாகனம்.

பெரிய பையன் வினய், தம்பியிடம் “டேய்! அடுத்த வருசம் என் கூடத்தான் வரணும்.. நான் தான் உன்னைக் கூட்டிட்டு போவேன்” என்று கூறிய போது மகிழ்வாக இருந்தது.

அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருங்கள். உண்மையாகவே வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்

அம்மா அப்பா அத்தை மாமா

சென்று வாருங்கள் அப்பா!

அம்மா என்றால் அன்பு பாசம்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. பதிவை படிக்கும் பொது நிறைவாக உணர்ந்தேன் கிரி அவர்களே. ஏனோ தெரியவில்லை உங்கள் பதிவை படிக்கும் போது அதர்வாமுரளி அவர்களை பார்ப்பது போலவும் அவரது குரலில் நீங்கள் சொல்வது போலவும் கற்பனை வருகிறது.
    விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் பேசியது மிக பிடித்திருந்தது “நான் என்னோட குழந்தைகள்கிட்ட மனிதர்களை படிங்க என்றுதான் சொல்கிறேன், ஏனென்றால் படிப்பு முடிந்த பிறகு நீங்கள் வாழப்போவது மனிதர்களுடன்தான்” அருமையான சிந்தனை இல்லையா?

  2. கிரி, ஒவ்வொருவர் வாழ்விலும் இருப்பவைகளை விட தவறவிட்டவைகள் பற்றிய எண்ணமே அதிகம் இருக்கும். வீட்டில் ஒரே பையனாக இருந்ததால் அண்னன் / தம்பி / அக்கா / தங்கச்சி இவர்களது பாசத்தின் வாசனையை நுகர வாய்ப்பு இல்லாமல் போகிவிட்டது. இந்த குறை இன்றும் / என்றும் உண்டு.

    பெரியப்பா / சித்தப்பா அவர்களின் வீட்டில் உள்ளவர்களோடு உறவு பாராட்டலாம் என்று நினைத்தபோது குடும்ப சொத்து பஞ்சாயத்து உறவை வளரவிடவில்லை. உங்களை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. (சத்தியமாக கண் வைக்கவில்லை)…

    ஒன்றைவிட்டு தான் இன்னொன்று என்பது வாழ்வின் சூத்திரமாக இருக்கிறது. உறவுகளின் மீது வேற்றுமை அதிகம் இருப்பதால் தான் என்னவோ நட்புகள் மீது இறுக்கம் எனக்கு அதிகமாக உள்ளது. சில நேரங்களில் வாழ்க்கை செல்லும் பாதை புரியவில்லை.

    உறவுகளின் அதிக எதிர்பார்ப்பு பணத்தை நோக்கிய ஒன்றாகவே இருக்கிறது. சூழ்நிலையின் காரணமாக அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறும் போது உறவுகளில் உடனே விரிசல். கடந்த காலத்தை எண்ணி பார்ப்பது கிடையாது. சில நேரங்களில் மனது கணத்து விடும். பள்ளி/கல்லூரி பருவங்களில் நண்பர்களின் உதவி இல்லை எனில் நான் இல்லை.

    எனக்கு திருமணமான புதிதில் நெருங்கிய கல்லூரி நண்பனுக்கு 15000 உதவி தேவைப்பட்ட போது உதவினேன். என்மனைவி இதை பற்றி வினவ.. நான் மனைவியிடம் படிக்கும் போது பணம் இல்லாமல் இருந்த தருணங்களில் பல நேரங்களில் சாப்பாடு/ டீ வாங்கி கொடுத்து இருக்கிறான். எனக்கு மிகவும் பிடித்த நண்பன் என என் நண்பனை பற்றி கூறினேன்.

    2 / 3 ஆண்டுகள் சென்ற பிறகு, மனைவி இங்கு வந்த பின் ஒரு நாள் விளையாட்டாக என் மனைவி ” இந்த உணவகம் செல்லலாமா??? இல்லை அந்த உணவகம் செல்லலாமா??? என்று பெரிய பெரிய உணவகத்தை குறிப்பிட்ட போது.. “யம்மா, நான் தர லோக்கல்.. அதனால பெரிய ஹோட்டலாம் செட்டாகாது.. விலையும் அதிகமாக இருக்கும் என்று சொன்ன போது…

    அப்போது அடிச்சாங்களே ஒரு பஞ்ச் ..ஜென்மத்துக்கும் மறக்காது…….என்னங்க நீங்க !!!! டீ யே 15000 குடிச்சியிருக்கிங்க!!!! (கொடுத்த நானும் மறந்துட்டேன்… வாங்கிய நண்பனும் மறந்து இருப்பான்) இப்ப விலை அதிகமு சொல்றிங்க !!!! என்று நக்கல் வேறு!!!! என்ன சொல்லி புரியவைக்க முடியும் அன்று குடித்த டீக்கு விலையே கிடையாது “அது உண்மையான நன்றி கலந்த நட்பு என்று”….

    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாலப் பெரிது. சிறப்பான உதாரணம். பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. கிரி, என்னுடைய பின்னுட்டம் இதில் காணவில்லை…

  4. @சோமேஸ்வரன் எனக்கும் அதர்வாக்கும் எப்படி தொடர்பாச்சு 🙂 வியப்பாக உள்ளது.

    @லோகன் 🙂

    @யாசின் உடன் பிறந்தவர்கள் இல்லையென்றால், நிச்சயம் ஒரு வெற்றிடம் இருக்கும். விளையாட, பகிர ஆள் இருக்காது.

    “சத்தியமாக கண் வைக்கவில்லை”

    🙂 யாசின் ரொம்ம்ம்ப நல்லவர்னு தெரியும்

    உறவுகளின் மீதான வருத்தம் எனக்கும் இருக்கிறது. இந்த விஷயத்தில் தலைவர் கூறிய அறிவுரை எனக்கு மிக பயனளிக்கிறது.

    எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை, எதையோ சொல்லிட்டு போறாங்க என்ற உணர்வு என்னை குழப்பமில்லாமல் வைத்து இருக்க உதவுகிறது.

    அதோடு எதையும் அவர்கள் தவறுக்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் எனவே, நாம் ஏன் அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்ற எண்ணம், நம்மை தெளிவாக வைத்து இருக்க உதவுகிறது.

    “அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறும் போது உறவுகளில் உடனே விரிசல். ”

    இதற்கும் ஒரு எளிய வழி உள்ளது. அனைவருக்கும் நல்லவனாக இருக்க முயற்சிக்காமல் இருந்து பாருங்கள்.. இதைப் பற்றியே நினைக்கத் தோன்றாது.

    என் இனம் நீங்க 🙂

    “அப்போது அடிச்சாங்களே ஒரு பஞ்ச் ..ஜென்மத்துக்கும் மறக்காது…….”

    மனைவிகளுக்கு யானை மாதிரி நினைவு சக்தி.. சரியான நேரத்துல தாக்கிடுவாங்க 🙂 🙂

    உங்க இந்த கருத்து SPAM க்கு சென்று விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!