உடல் தகனப் பூங்கா | கோபி

3
kaviarasu kannadasan quote உடல் தகனப் பூங்கா

ங்கள் நெருங்கிய உறவினர் காலமாகி விட்டார். எனவே, மயானத்துக்குச் செல்ல அழைத்த போது மற்றவர்களுடன் இணைந்து உடல் தகனப் பூங்கா சென்றேன்.

கோபியில் பல வருடங்களுக்கு முன் மயானத்துக்குச் சென்று இருக்கிறேன். அங்கே, விறகுகளை அடுக்கி இருப்பார்கள். இது மின் மயானம்.

சிறப்பான வசதிகள்

காரை வெளியவே நிறுத்திக்கலாம் என்று நான் கூறிய போது, உள்ளே நிறைய இடம் இருக்கு என்றார்கள். சரி என்று உள்ளே நுழைந்தால், மயானத்துக்குப் பதிலாக எதோ திருமண மண்டபத்துக்கு வந்தது போல இருந்தது.

அழகாகப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, 30 – 40 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடமிட்டு அமைக்கப்பட்டு இருந்தது. என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

மயானத்தைத் தனியார் அறக்கட்டளை நடத்துகிறார்கள், ₹3000 கட்டணம் .

புதிதாக யாராவது இதன் உள்ளே நுழைந்து எதையும் படிக்காமல் பார்த்தால், நிச்சயம் திருமண மண்டபம் / வேறு ஏதாவது மண்டபம் என்றே எண்ணுவார்கள். அவ்வளவு அசத்தலாக இருந்தது.

இறப்புக்கு பின் உடலுக்கு மதிப்பில்லை

சென்னையில் நண்பனின் அப்பா இறந்த போது திருவல்லிக்கேணி அருகே உள்ள மயானம் சென்று இருக்கிறேன்.

அங்கே நமக்கு எந்த உணர்வும் தோன்றாது. கூட்டம் காரணமாகவோ என்னவோ ஒரு கடமையாகச் செய்வார்கள், அதில் அக்கறை இருக்காது.

செத்தாச்சு.. இப்ப என்ன?!” அப்படிங்கற நிலையில் தான் இருக்கும், இடமும் மோசமான பராமரிப்பில் இருக்கும்.

உடலுக்குச் செய்யப்படும் மரியாதை

ஆனால், இங்கே முன்பதிவு செய்த நேரத்தில் இருக்க வேண்டும்.

உடலைக் கொடுத்தால், அங்குள்ளவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் வழிமுறைப்படி காரியங்கள் செய்கிறார்கள். பின்னர் உடலை முன் மண்டபம் தாண்டி இன்னொரு மண்டபத்துக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அங்கே கோவில் போல மண்டபம் உள்ளது. கோவிலில் இரு பக்கமும் நிற்பது போல நிற்கிறோம். நடுவில் உடலைத் தள்ளுவண்டி போல ஒன்றில் வைக்கிறார்கள்.

இறந்தவரின் சொந்தம் உடலுக்குப் பூசை செய்து, கற்பூரத்தை உடலின் மீது போடுகிறார்கள்.

பின்னர் அனைவரும் வணங்கிய பிறகு உடலை வண்டியில் தள்ளி உள் அறையில் கொண்டு சென்று விடுகிறார்கள். அங்கே எரிவாயு மூலமாக உடல் எரிக்கப்படுகிறது.

உடல் உள்ளே தள்ளிவிடப்பட்டதும் அனைவரும் அந்த மண்டபத்தை விட்டு வெளியேறி முதன்மை மண்டபம் வந்து நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும், உள் மண்டபம் பூட்டப்படுகிறது.

எப்படிக் கோவில் மண்டபத்துல நுழைந்து இரு பக்கமும் நின்று சாமி குடும்பிட்ட பிறகு வெளியே வருகிறோமோ அது போல.

“ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க”

மண்டபத்தில் வைரமுத்து எழுதிய சுதா ரகுநாதன் பாடிய பாடலை அங்கே உள்ளே ஒலிபெருக்கியில் ஒலிபரப்புகிறார்கள்.

அங்கே உள்ளவர்கள் அனைவரும் அதை அமைதியாகக் கேட்டு முடிந்தவுடன் கலைந்து சென்று விடலாம்.

சம்பந்தப்பட்டவர் பாடலைக் கேட்டால் நிச்சயம் பாடல் வரிகள், குரல் மற்றும் இசையில் கண்கலங்கி விடுவார்கள். மென்மையானவர்கள் என்றால் அழுது விடுவார்கள்.

அற்புதமான உணர்வு.

உடல் தகனப் பூங்கா மண்டபத்தில் வாழ்க்கை குறித்த சிறப்பான வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

இறப்பு சான்றிதழும் இங்கேயே பெற்றுக் கொள்ளலாம்.

இங்கே 4000 Watts என்று நினைக்கிறேன். இதற்கு அனுமதி இன்னும் கிடைக்காததால், எரிவாயு பயன்படுத்தி எரிக்கிறார்கள்.

இறந்தால், மனிதனின் மதிப்புப் பெயரில் இருந்து “பாடி எப்ப எடுக்கறாங்க” என்று ஆகி விடுகிறது.

அது மயானம் வரும் போது இன்னும் மோசமடைந்து “எவனா இருந்தாலும்.. இது தான்டா” என்று தூக்கி வீசப்படுகிறது.

இது போல இல்லாமல், இறந்தாலும் அவர்களுக்குண்டான மரியாதையைச் செய்து, பாடலைப் பாடி அனுப்பி வைக்கும் இந்த முறை என்னை மிகக் கவர்ந்தது.

தன்னுடைய பாசத்துக்கு உரியவரை மரியாதையுடன் அனுப்பி வைக்கிறோம் என்ற மன நிறைவை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுப்பது பாராட்டப்பட வேண்டியது.

கோவை

உடன் வந்த உறவினர், “இதெல்லாம் ஒன்றுமில்லை.. கோவையில் உடல் தகனப் பூங்கா இதை விட நன்றாகப் பராமரிக்கப்பட்டு இருக்கும்” என்றார்.

இது போல ஏன் மற்ற நகராட்சிகளும், மாநகராட்சிகளும் பின் பற்றக் கூடாது?

தொடர்புடைய கட்டுரை

சென்று வாருங்கள் அப்பா!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. ஆமாங்க. சரவணம்பட்டியில இருக்கு . Moksha Griha Electric Crematorium. நீங்க மேல சொன்ன மாதிரியே தான் இங்கயும் . எங்க கரூர்லயும் TNPL பராமரிக்குற மயானம் இருக்கு . இந்த அளவுக்கு இல்லாட்டியும் நல்லாவே பராமரிக்குறாங்க.

  2. கிரி, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் முட்களை ஒரு நிமிடம் நிறுத்தி, யோசிக்க வைப்பது மயானமும், மரணமும் தான்.. சுப காரியங்களை விட, துக்க காரியங்களில் எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.

    காரியங்கள் முடிந்த பின்னும் கூட குறைந்தது அரை / ஒரு மணி நேரம் தனிமையில் மயானத்தில் அதிகம் யோசிப்பேன்.. அந்த சமயம் மனதில் தோண்டும் எண்ணங்களை பட்டியல் இட முடியாது… ஒவ்வொருவரின் மரணமும் ஓராயிரம் அர்த்தங்களையும், படிப்பினையும் தரக்கூடியவை… இயற்கைக்கு முன் மனிதன் ஒரு தூசி என்பதை உணர்த்துவது மரணம் மட்டுமே!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. ஆம் கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே ஒரு மின் மயானம் அதை நினைத்து மிகவும் பிரமிப்பாக பார்த்து அனுபவித்த நினைவுகள் மறக்க முடியாதவை.
    இறந்தவர்களுக்கு இப்படியும் மரியாதை செய்யலாம் என்று கற்றுக் கொண்ட நாள்.

    அன்று முதல் இன்று வரை எனது மனதில் தோன்றுகிறது ஏன் எனது மாவட்டத்தில் (கடலூர் மாவட்டம்) இதுபோன்ற மயானம் ஒன்று கூட யாரும் முன் வரவில்லை?

    இன்னும் சொல்ல போனால் இப்படி எல்லாம் ஒரு மயானம் இருப்பதே எனது மாவட்ட மக்களுக்கு இது வரை தெரியவில்லை என்றே கூறலாம்.

    (அரசு மின் மயானம் ஆங்காங்கே ஒன்று உள்ளது மிகவும் அசுத்தமான தோற்றத்தில்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here