மும்பை தாக்குதல் | சாவு வீட்டில் விளம்பரம்

36
மும்பை தாக்குதல் Mumbai attack

மும்பை தாக்குதல் பிரச்சனையில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சாவு வீட்டில் விளம்பரம் செய்ததை பார்த்து நொந்து போகாதாவர்கள் மிகக் குறைவு. Image Credit

சாவு வீட்டில் விளம்பரம்

தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேடிங்கை அதிகப்படுத்தச் செய்த செயல்கள், கமாண்டோக்களுக்கு இவர்கள் கொடுத்த இடைஞ்சல்கள்.

அத்து மீறிய விமர்சனங்கள், தேவையற்ற பீதி பரபரப்பு, ஒரு தலைப்பட்சமான பேட்டிகள், கருத்துத் திணிப்புகள் என்று தங்களால் எவ்வளோ கேவலமாக நடக்க முடியுமோ அந்த அளவிற்கு நடந்து கொண்டார்கள்.

செய்தியாளர்களின் முக்கியப் பணி, நடக்கும் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது தான், இதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், எந்த ஒரு செயலுக்கும் வரைமுறை உண்டு. கமாண்டோக்கள் செய்வதை நேரலை செய்து, அவர்கள் கெஞ்சி கூத்தாடி இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று சொல்கிற நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

அடிபட்டவர்களை மருத்துவமனை செல்ல அனுமதிக்காமல் அவர்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

TRP போட்டி

சேனல்களின் கடும் போட்டியால் யார் செய்தியை முந்தித் தருவது என்று போட்டி போட்டுக்கொண்டு இருந்தது, தற்போது வரம்புமீறிப் போய்க்கொண்டு இருக்கிறது.

பல விஷயங்கள் மக்களுக்குத் தெரியவர இவர்கள் காரணமாக இருந்தாலும், மனிதபிமானம் என்பதை விடத் தொழில் தர்மம்! என்கிற பெயரில் இவர்கள் செய்த செயல்களை மனிதாபிமானமுள்ள எவரும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்தப் பிரச்சனையின் போது பலர் அங்கே கட்டுப்பாடு இல்லாமல் சுற்றிக் கொண்டு இருந்ததைப் பார்த்த போது வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.

மேலை நாடுகள்

மேலை நாடுகளில் இதைப் போலக் குண்டு வெடிப்புகள் என்றால் என்ன நடக்கும்!

அப்பகுதியை சுற்றி தடுப்பு அமைக்கப்படும், காவலர்கள் தவிர எவரும் அந்தப் பகுதியில் நுழைய முடியாது, ஆனால் மும்பையில் நடந்தது என்ன?

எந்தக் கட்டுப்பாடும் இல்லை ஒழுங்கும் இல்லை, பலர் கண்டபடி சுற்றி கொண்டுள்ளார்கள்.

பத்திரிகைகளுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் யாராவது பொறுப்பான ஒருவர் தகவல்களைக் கொடுத்தால் சரி.

ஆனால், அனைவரும் பேட்டி கொடுக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று எல்லாவற்றையும் விலாவரியாக விவரித்துக்கொண்டுள்ளார்கள்.

இதை உள்ளே உள்ள தீவிரவாதிகள் கை தொலைபேசி மூலம் மற்றவர்களிடமிருந்து தெரிந்துகொள்ளமாட்டார்களா!

இவர்களின் பரபரப்பிற்கு இளிச்சவாயர்கள் ஏதும் அறியா பொதுமக்கள் தான் கிடைத்தார்களா!

அரசியல்வாதிகளும் ஊடகங்களும்

தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் வெட்டி பந்தாவிற்காகவும் அரசியல் பரபரப்பிற்காகவும் செயல்படும் அரசியல்வாதிகளும் ஊடகங்களுமே.

அங்கே அவனவன் உயிர் போய்க் கொண்டு இருக்கிறது உயிரைப் பணயம் வைத்து அவர்களை NSG, காவல் துறை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது.

இங்கே அரசியல்வாதிகள் சம்பவ இடத்திற்கு வந்து அரசியல் ஸ்டண்ட் அடித்துக்கொண்டுள்ளார்கள்.

அரசு சரி இல்லை, எதிர் கட்சி சரி இல்லை என்று மாற்றி மாற்றிச் சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள்.

பாதுகாப்பு படையினர்

அங்கே உள்ள பாதுகாப்பு படையினர் உள்ளே சிக்கியவர்கள் பற்றிக் கவலை படுவார்களா! இல்லை இதைப் போல ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருப்பார்களா!

மற்ற நாட்டினர் நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லையா! இவர்களால் பைசா பிரயோஜனம் உண்டா!

சாவு வீட்டில் கூட விளம்பரம் தேடுபவர்களை என்ன செய்வது?

நமது அரசாங்கம் கிரிக்கெட் வீரர்களுக்குத் தரும் மரியாதையில் கால் பங்கு கூட நமது நிஜ வீரர்களுக்குத் தருவதில்லை.

இத்து போன அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வண்டி பின்னும் அவர்கள் பின்னும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது வயித்தெரிச்சலாக உள்ளது.

கம்பீரமாக நாட்டைக் காக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகளுக்குக் கூர்க்கா போல வேலை பார்த்துக்கொண்டு உள்ளார்கள்.

நாட்டிற்காக உயிரைக் கொடுப்பவர்களுக்கு நம் அரசாங்கம் செய்யும் மரியாதை இது தானா!

உண்மையாக இருப்பவர்கள் அவமானபடுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

மதச்சண்டை

முஸ்லீம் குண்டு வைத்தான் இந்து குண்டு வைத்தான் என்று சண்டை போட்டு நியாயம் கற்பித்துக் கொண்டுள்ளார்கள் ஒரு சிலர்.

இவர்களைப் போன்றவர்கள் மனிதர்களே கிடையாது அப்புறம் எப்படி இவர்களை மதத்தை வைத்துப் பேசுவது.

இவ்வாறு செய்பவர்களை எந்த மதத்தினராவது தங்கள் மதத்தினர் என்று ஒப்புக்கொள்ள முடியுமா!

மதங்கள் என்பது எதற்கு உருவாக்கப்பட்டது? மக்களை நல்வழிப்படுத்தவே!

ஆனால் இங்கு நடப்பது என்ன! தீவிரவாதிகளாவது எப்பாவது தான் இப்படிக் குண்டு வைத்து மக்களைக் கொல்கிறார்கள்.

ஆனால், மதத்தின் பெயரால் இங்கே அனைவரும் அடித்துக் கொண்டு சாவது தீவிரவாதிகள் கொல்லும் மக்கள் எண்ணிக்கையை விட அதிகம்.

செய்தி நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியை இன்னும் ஒரு வாரக் காலத்திற்குக் கூறிக்கொண்டு இருப்பார்கள் வேறு பரபரப்பு!! செய்தி கிடைத்தால் இதை எவரும் சீண்ட மாட்டார்கள்.

தொடர்கதை

பொதுமக்களாகிய நாமும் பெட்ரோல் விலை ஏறினால் ஒரு வாரம் புலம்பி விட்டுப் பழகிக் கொள்வது போல ஒரு வாரம் இதைப் பேசி விட்டு நம் பிரச்னையைப் பார்க்கப் போய் விடுவோம்.

இன்னும் கொஞ்ச காலம் கழித்து வழக்கம் போல இப்படியொரு சம்பவம் நடக்கும் அப்போதும் இதைப் போலக் கூறுவோம் புலம்புவோம்.

மறுபடியும் முதலிலிருந்து படியுங்கள் இது தான் நடந்து கொண்டு இருக்கும்.

துப்புக்கெட்ட அரசியல்வாதிகளும், அவர்களை ஓட்டுப் போட்டும், வெட்டிப் பேச்சு மட்டும் பேசிக் கொண்டு ஓட்டுப் போடாமல் தேர்ந்தெடுக்கும் அறிவுஜீவிகளும் இருக்கும் வரை இதைப் போலச் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்.

இதற்கு முடிவே கிடையாது இது தான் இந்தியா. அடபோங்கப்பா!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

36 COMMENTS

  1. //இதற்க்கு முடிவே கிடையாது இது தான் இந்தியா.//

    நடக்கும் கலவரங்களுக்கு நடுவே இதுதான் நமக்கு பெரிய கலவரமாய் இருக்கிறது:(!

  2. சர்வேசன், ராமலக்ஷ்மி, நாஞ்சில் பிரதாப், நல்லதந்தி, என் கற்பனை, பாஸ்கர் அனைவரின் வருகைக்கும் நன்றி

  3. //முஸ்லீம் குண்டு வைத்தான் இந்து குண்டு வைத்தான் என்று சண்டை போட்டு நியாயம் கற்பித்து கொண்டுள்ளார்கள் ஒரு சிலர், இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இவர்களை போன்றவர்கள் மனிதர்களே கிடையாது அப்புறம் எப்படி இவர்களை மதத்தை வைத்து பேசுவது.//

    என்னை அதிகம் பாதித்தது இதுதான். எந்த மதமாக இருந்தாலும் தவறு தவறுதான்.

  4. // துப்புகெட்ட அரசியல்வாதிகளும், அவர்களை ஒட்டு போட்டும், வெட்டி பேச்சு மட்டும் பேசி கொண்டு ஒட்டு போடாமல் தேர்ந்தெடுக்கும் அறிவுஜீவிகளும் இருக்கும் வரை இதை போல சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும், இதற்க்கு முடிவே கிடையாது இது தான் இந்தியா.//

    நிஜம் சுடும்!

  5. //vasuhi said…
    உண்மை தான்.
    அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை பெருக்குவதில் தான் எப்போதும் நோக்கமாக இருப்பர்கள்.
    நாட்டை , மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை//

    தலைமை சரியாக இருந்தால் தான் எதுவும் சரியாக அமையும் ஆனால் இங்கு எதுவுமே சரி இல்லை.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வாசுகி

    ===================================================================

    //பரிசல்காரன் said…
    அதே.. அதே.. அதே.. அதே… :-(//

    வருகைக்கு நன்றி கே கே

    ===================================================================

    //கபீஷ் said…
    கொஞ்சமே கொஞ்சம் டிப்ளமாடிக்கா எழுதியிருக்கீங்க. அதத்தவிர நல்ல பதிவு//

    நன்றி கபீஷ்

  6. அனைவருக்கும் வணக்கமையா!
    சமீபத்தில் நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு, ஆகிய சம்பவங்களால் மக்களாகிய நாம் வேதனை படுகிறோம், கொதிப்படைகிறோம், அண்டைய நாட்டிலிருந்து வந்து ஒரு நாட்டின் மிக பெரிய வர்த்தக நகரத்தின் முக்கிய இடத்தில் புகுந்து இத்தனை உயிர்களை பலியாக்கிய அவர்கள் எத்தனை சாதுர்யம் மிக்கவர்களாக இருந்திருப்பார்கள்? எங்கே போயின நம் தேச பாதுகாப்பு,
    இதுவரை எத்தனையாவது குண்டு வெடிப்புகள்? இப்போது தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நமது உள் துரைமைச்சரும், பிற அமைச்சர்களும், இதற்க்கு காரணம் முழுக்க முழுக்க அரசே சாரும் அரசியலே சாரும்,இதொடில்லாமல் வடநாட்டில் நடந்த சில குண்டு வெடிப்புகளுக்கு ஹிந்து அமைப்பை சேர்ந்த சில அமைப்புகளும் காரணம் என்கிறன சில பத்திரிக்கைகள், ஏன்? இத்தனை வக்கிரங்கள், மண்ணிற்கு போகும் போது எந்த மதத்தின் வர்ணத்தில் நாம் அடையாள படுத்துகிறோம், நாற்டமடிக்கும் பிண்டமாக தானே மண்ணோடு மண்ணாகிறோம்! இது ஏன் யாருக்கும் புரிய மாட்டேனென்கிறது?

  7. //இங்கே அரசியல்வாதிகள் சம்பவ இடத்திற்கு வந்து அரசியல் ஸ்டண்ட் அடித்துக்கொண்டுள்ளார்கள்.//

    இந்த ஒன்றைத்தவிர மற்ற அனைத்து கருத்துக்களிலும் ஒன்றுபடுகிறேன் !

  8. //அரசியல்வாதிகள் மற்றும் எப்படி பணத்தை கொள்ளை அடிக்கலாம், எப்படி விளம்பரம் தேடலாம் என்று நினைக்கும் இவர்களால் நாட்டிற்கே பெருத்த அவமானம்.//

    உண்மை தான்.
    அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை பெருக்குவதில் தான் எப்போதும் நோக்கமாக இருப்பர்கள்.
    நாட்டை , மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. பெரும்பாலான நாடுகளில் இது தான் கதி.
    அதுவும் south asian country எனில் சொல்லவே தேவை இல்லை.

  9. //Indian said…
    There was one young chap, reporter for Timesnow TV in front of the Taj hotel. On the saturday morning when the NSG commandos were returning in a bus after their action, this guy was litterally begging for some sound bites from the commandos;//

    இவர்களை செய்வதை பார்த்தால் பொறுமையோடு இருப்பவனும் தன் பொறுமையை இழந்து விடுவான்.

    ===================================================================

    //வடகரை வேலன் said…
    என்னை அதிகம் பாதித்தது இதுதான். எந்த மதமாக இருந்தாலும் தவறு தவறுதான்.//

    புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே ..அது தான் வருத்தமாக உள்ளது.

    ===================================================================

    //பழமைபேசி said…
    வேடிக்கை பாக்குறதை ஒழிக்கணும் மொதல்ல!//

    பொதுமக்கள் வேடிக்கை பார்த்தால் பெரிய பாதிப்பில்லை ஆனால் அரசாங்கம் வேடிக்கை பார்த்தால்!

  10. //துப்புகெட்ட அரசியல்வாதிகளும், அவர்களை ஒட்டு போட்டும், வெட்டி பேச்சு மட்டும் பேசி கொண்டு ஒட்டு போடாமல் தேர்ந்தெடுக்கும் அறிவுஜீவிகளும் இருக்கும் வரை இதை போல சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும், இதற்க்கு முடிவே கிடையாது இது தான் இந்தியா//

    ஆமாம்.

    கொஞ்சமே கொஞ்சம் டிப்ளமாடிக்கா எழுதியிருக்கீங்க. அதத்தவிர நல்ல பதிவு

  11. There was one young chap, reporter for Timesnow TV in front of the Taj hotel. On the saturday morning when the NSG commandos were returning in a bus after their action, this guy was litterally begging for some sound bites from the commandos; doing all sorts of nautanki and spouting platitudes on them. I’m sure even Arnab Goswami would have felt embarassed by his act.

  12. //மோகன் said…
    டேய் நீங்க பண்ணது தப்புன்னு உங்களுக்கு தெரியுதா?//

    ஊருக்கு தான் உபதேசம்

    ===================================================================

    //நசரேயன் said…
    மறுக்க முடியாத உண்மை//

    கசப்பான உண்மையும் கூட

  13. ஆமுங்க….

    கலவரமா, நின்னு வேடிக்கை!
    புயல் அடிச்சா நின்னு வேடிக்கை!
    காத்து அடிச்சா நின்னு வேடிக்கை!!
    சண்டையா, நின்னு வேடிக்கை!
    கட்டிடம் சாயுதா, நின்னு வேடிக்கை!
    ஆழிப்பேரலை வந்தா நின்னு வேடிக்கை!!!
    கண்கட்டு வித்தையா, நின்னு வேடிக்கை!!
    குண்டு வெடிக்குதா, நின்னு வேடிக்கை!!!
    பாலத்துமேல வெள்ளமா, நின்னு வேடிக்கை

    அதை விட்டுட்டு ஓடிப் போய் உசுரக் காப்பாத்திக்கோ அப்பு! நின்னு காப்பாத்துறவனுக்காவது வழிய விடு!!

    ஆமுங்க கிரி, நீங்க சொன்னாச் சரியா இருக்கும்.வேடிக்கை பாக்குறதை ஒழிக்கணும் மொதல்ல!

  14. இந்த மீடியாக்கள் (டிவிக்கள்) செய்யும் அட்டுழியம் தாங்க முடிய வில்லை. இவர்கள் பாதுகாப்பு படையினர் செய்யும் செயல்களை பொது மக்களுக்கு நேரடியாக ஒளிப்பரப்பினாங்களா இல்லை அந்த தீவிரவாதிங்களுக்கு நேரடி சேவை செஞ்சாங்களோ. பெரிய இவனுங்க மாதிரி அரசியல் வாதிகள் பண்ணினது தப்பா இல்லையான்னு பேசறாங்களே. டேய் நீங்க பண்ணது தப்புன்னு உங்களுக்கு தெரியுதா?

  15. /*முஸ்லீம் குண்டு வைத்தான் இந்து குண்டு வைத்தான் என்று சண்டை போட்டு நியாயம் கற்பித்து கொண்டுள்ளார்கள் ஒரு சிலர், இவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இவர்களை போன்றவர்கள் மனிதர்களே கிடையாது
    */
    மறுக்க முடியாத உண்மை

  16. கிரி

    பதிவுக்கு நன்றி. கிட்டத்தட்ட உங்கள் கருத்துகளை அப்படியே எதிரொலித்திருக்கிறது நான் (கடுப்புடன்) எழுதிய பதிவும்.

    How fragile our country is – என்பதை நினைத்து நினைத்து மாய்ந்து போகிறேன்.

  17. அப்படியே கொட்டிங்க கிரி . இந்த மீடியாவை நினச்சி தலைலதான் அடிச்சிக்கனும் போல .ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரியா சொல்ரானுங்க. ஒரு நாதாரி புல் தரயில படுத்துகிட்டே ரன்னிங் கமண்டரி கொடுக்க அத ஒரு பொட்டபிள்ள படம்பிடிக்க பின்னாடி மக்கள் பீதில ஓடுறாங்க .

    ( மதத்தின் பெயரால் இங்கே அனைவரும் அடித்து கொண்டு சாவது தீவிரவாதிகள் கொல்லும் மக்கள் எண்ணிக்கையை விட அதிகம்.)

    இதற்க்கு பழமை வாத மத தலைவர்களும் ஒரு காரணம்

  18. //வற்றாயிருப்பு சுந்தர் said…
    கிரி
    பதிவுக்கு நன்றி. கிட்டத்தட்ட உங்கள் கருத்துகளை அப்படியே எதிரொலித்திருக்கிறது நான் (கடுப்புடன்) எழுதிய பதிவும்.//

    நன்றி சுந்தர். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க.

    ===================================================================

    // S.R.ராஜசேகரன் said…
    // ஒரு நாதாரி புல் தரயில படுத்துகிட்டே ரன்னிங் கமண்டரி கொடுக்க அத ஒரு பொட்டபிள்ள படம்பிடிக்க பின்னாடி மக்கள் பீதில ஓடுறாங்க//

    இவர்களுக்கு இது ஒரு “பரபரப்பு” அனுபவம், கொடுக்கும் செய்தியை மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

    வருகைக்கு நன்றி ராஜசேகரன்.

  19. நான் எழுத நினைச்ச பதிவு இது கிரி. இருக்க கோவத்துல என்னால் நாகரீகமான வார்த்தைகள போட்டு பதிவெழுத முடியல. நான் எழுதியிருந்தா கூட உங்க அளவுக்கு நாசூக்கா, அதே நேரம் எல்லா கேள்விகளையும் கேட்ருப்பேனான்னு தெரியல.
    எனக்கு வந்த ஆத்திரத்துக்கு பாதுகாப்பு படையில இருந்தவங்க ஒன்னு ரெண்டு கையெறி குண்டையாவது தூக்கி இவிங்க மேல போட்ருக்கணும்னு தோணுச்சு. கழுதைங்க செத்துட்டு போயிருக்கனும், தீவிரவாதிதான் குண்டு போட்டான்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம். உள்ள இருந்த தீவிரவாதியெல்லாம் பிளாக் பெரி போன் வைச்சுக்கிட்டு அதுலயே எல்லா டிவியையும் பார்த்துருக்கான். எப்படி அவ்ளோ நெருக்கமா டிவிகாரங்கள உள்ள விட்டாங்க? நம்ம கிட்ட பேரிடர் சமாளிப்புத் திறன் சுத்தமா இல்ல, வரும் முன்னரும் காத்துக்க தெரியல. வந்த பின்னாடியும் சமாளிக்கத் தெரியல. இனி வராமத் தடுக்கவும் வழிபார்க்கத் தோணல.
    உள்துறை அமைச்சரைவிட இதுல ரொம்பத் தப்பு செஞ்சது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தான். தேசத்துல பாதுகாப்புன்னு ஒன்னு இருக்கா என்ன? இவரு என்ன வேலை செய்யிறாரு? இவர ஏன் இன்னும் வைச்சுக்கிட்டு அழணும்? தூக்கிருக்க வேண்டாம்? மன்மோகன் சிங் பொருளாதாரத்தை தவிர வேறெதுலயும் புலியில்ல. பொருளாதாரம் என்பது உயிரோடு இருக்கும் குடிமக்கள் வசதியா வாழ வழி செய்வது. உசுருக்கே உத்ரவாதம் இல்லண்ணா பொருளாதாரம் இருந்தா என்ன? செத்தா என்ன?

  20. //Silly Village Girl said…
    அடபோங்கப்பா!//

    முதல் வருகைக்கு நன்றி Silly Village Girl

    ===================================================================

    //ஜோசப் பால்ராஜ் said…
    அதே நேரம் எல்லா கேள்விகளையும் கேட்ருப்பேனான்னு தெரியல.//

    நன்றி ஜோசப் பால்ராஜ்

    //எப்படி அவ்ளோ நெருக்கமா டிவிகாரங்கள உள்ள விட்டாங்க?//

    இவர்களை கண்டிப்பாக அனுமதித்து இருக்க கூடாது, அப்படியே இருந்தாலும் நேரலை செய்யவெல்லாம் கண்டிப்பாக தடை விதித்து இருக்க வேண்டும். எந்த அரசாங்கம் வந்தாலும் மக்களை பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை.

  21. இப்போ புதுசா ஒரு உள்துறை அமைச்சர் வந்துருக்காரு, என்ன செய்யுராருன்னு பார்ப்போம்.

  22. //வால்பையன் said…
    இப்போ புதுசா ஒரு உள்துறை அமைச்சர் வந்துருக்காரு, என்ன செய்யுராருன்னு பார்ப்போம்.//

    🙂

    அருண் உங்க தம்பி திருமணம் நல்லபடியா முடிந்ததா?

  23. //மங்களூர் சிவா said…
    //அடபோங்கப்பா!//

    :((((//

    வருகைக்கு நன்றி சிவா

    ===================================================================

    //Vaanathin Keezhe… said…
    தேசத்தின் மனநிலையைப் பிரதிபலித்திருக்கிறீர்கள், கிரி….//

    நன்றி வினோ

  24. //புதுகை.அப்துல்லா said…
    உண்மையான ஆத்திரம் கூட சில நேரங்களில் கொச்சைப் படுத்தப்படுகின்றது பெரும் வேதனையைத் தருகின்றது.//

    அப்துல்லா உங்கள் வருத்தம் உணர முடிகிறது, உங்களுக்கு ஒரு சிலவற்றை கூற விரும்புகிறேன்.

    அவர் உண்மையிலேயே உங்களை நினைத்தும் கூறி இருக்கலாம் இல்லை வேறு ஒரு பதிவரை நினைத்தும் கூறி இருக்கலாம். அவர் கூறியதை ஒரு விமர்சனமாக எடுத்து கொள்ளுங்கள். வரும் பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.

    நான் ரஜினி ரசிகன் என்ற ஒரே காரணத்திற்காக குசேலன் படம் வந்த போது எத்தனை பதிவர்களால் கிண்டலடிக்கபட்டேன், என்னை கிண்டல் செய்து பதிவுகள் வந்தன என்பது உங்களுக்கு தெரியுமா! என்று எனக்கு தெரியாது. முதலில் நானும் உங்களை போல ஆத்திரப்பட்டேன் கடும் மன அழுத்தமாக இருந்தது, ஆனால் சில நாட்களுக்கு பிறகு மற்றவர்கள் பற்றி நாம் ஏன் கவலை பட வேண்டும், நாம் எந்த அசிங்கமான பதிவுகளும் எழுதவில்லை, தனிமனித தாக்குதலில் பதிவுகள் எழுதவில்லை பின் நாம் ஏன் வருத்த பட வேண்டும் இவர்களை நினைத்து கவலை பட வேண்டும். நம் மனதிற்கு சரி என்பதை செய்து விட்டு இவர்களை புறந்தள்ளுவோம், நம் மனசாட்சி படி நடப்போம் என்று முடிவு செய்தேன். அதன்படியே இன்றுவரை நடந்து வருகிறேன்.

    ஹிட்டிற்க்காக பதிவுகள் எழுதுவதில்லை, வேண்டும் என்றே யாரையும் புகழ்வதில்லை முக்கியமாக யாரை பற்றியும் கவலை படுவதில்லை, என் பதிவுகளை ஒரு சிலர் கிண்டலடித்தாலும் (என்னுடைய சிங்கப்பூர் பற்றிய பதிவுகள் வந்த போது கூட அதை கிண்டல் செய்து ஒரு பதிவும் அதற்க்கு பின்னூட்டங்களும் வந்தது) இவ்வாறு செய்பவர்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று என் வழி நான் நியாயமாக போகிறேன். தற்போது பதிவுகளை குறைத்து நிம்மதியாகவே இருக்கிறேன்.

    எனவே உங்களுக்கு என்னுடைய அன்பான அறிவுரை யாரை பற்றியும் கவலைபடாதீர்கள். உங்கள் வழியில் நீங்கள் நியாயமாக இருங்கள். புறம் கூறுபவர்களை பற்றி என்றும் கவலை படாதீர்கள், உங்களுக்கு தோன்றுவதை எழுத பயப்படாதீர்கள், எழுதுவதை நாகரீகமாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள், தவறு ஏற்பட்டால் அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த முறை சரி செய்து கொள்ளுங்கள். தவறே செய்யாமல் இருக்க முடியாது, நாம் சாதாரண மனிதர்கள் தானே.

  25. தீவிரவாதிகளாவது எப்பாவது தான் இப்படி குண்டு வைத்து மக்களை கொல்கிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் இங்கே அனைவரும் அடித்து கொண்டு சாவது தீவிரவாதிகள் கொல்லும் மக்கள் எண்ணிக்கையை விட அதிகம்.
    //

    அன்ணே சத்தியமாகச் சொல்கிறேன் இதே விஷயத்திற்கா அடக்க முடியாத ஆத்திரத்தில் நான் ஒரு பதிவு எழுதினேன். அதில் ஆத்திரத்தில் தீவிரவாதிகளை நாய்கள் என்று குறிப்பிட்டேன். ஆனால் தராசு என்ற பதிவர் என்னை மனதில் வைத்து “தீவிரவாதத்தைக்குறித்து தெரிகிறதோ இல்லையோ, ஒருமுறையாவது, எழுதிவிடுங்கள், “இவுனுங்க நாய்க்கு பொறந்தவனுங்க”” அப்படின்னு எழுதுனீங்கன்னா உங்க பதிவு தமிழ்மணத்தில் சூடான இடுகையில் வரும்ன்னு ஒரு பதிவு போடுறாரு. உண்மையான ஆத்திரம் கூட சில நேரங்களில் கொச்சைப் படுத்தப்படுகின்றது பெரும் வேதனையைத் தருகின்றது.

  26. தொலைக்காட்சி ஊடகங்கள்.. அக்கிராமத்தில் தலை விரித்து ஆடுவது, இந்தியாவில் தான்.. ஒரு கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது..
    என்னமோ, கிரிக்கெட் மேட்ச் லைவ் ஒளிப்பதிவு போல மும்பை கோர சம்பவங்களை ஒளிபரப்பி தங்களுக்கு வருமானமும், நாட்டிற்க்கு கெட்ட பெயரும் தேடிக்கொண்டார்கள்…தீவிரவாதிகளுக்கு உறு துணை போனதில், நமது நாட்டு ஊடகங்களுக்கு நிரம்பவே பங்கு உண்டு… இந்த சம்பவத்தை, நமது மல்லு முதல்வர் (அச்சுதானந்தன்) அரசியல் ரீதியாக்க, மேலும் சிலர் (மோடி, தேஷ்முக்) குளிர் காய, தாக்கரே கோஷ்டிகள் தங்களை தாக்கியதாக எண்ணி மாயமாகிவிட, தூ…இதைவிட கேவலம் எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லை… ஆண்டவன் தான் காப்பாத்தணும்..நம்ம நாட்டை..

  27. //கீ – வென் said…
    தொலைக்காட்சி ஊடகங்கள்.. அக்கிராமத்தில் தலை விரித்து ஆடுவது, இந்தியாவில் தான்.. ஒரு கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது//

    இந்த ஜனநாயகம் என்ற ஒரு வார்த்தையை வைத்து இன்னும் எத்தனை கொடுமை தான் செய்வார்களோ!

    //ஆண்டவன் தான் காப்பாத்தணும்..நம்ம நாட்டை..//

    நம்பிக்கை குறைவாக உள்ளது 🙁

  28. ஞாநியின் சில நியாயமான கருத்துகள் குமுதத்தில்:-

    ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும்.ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள்.

    ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும்.

    பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது.ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா?இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.

    காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது.காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம்.

    பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான்.பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது.சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான்.

    இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை.தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை.

    பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள்.

    இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும்.பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான்.

    அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும்.

    தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது.
    அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?.

  29. குண்டு வைத்தவர்களை வன்மையாகக் கண்டிப்பார்கள் – மீண்டும் ஒரு முறை குண்டு வெடிக்கும் வரை.

    டிவி தொகுப்பாளினிகள் சொல்வார்கள் – “மீண்டும் அடுத்த ஞாயிறு காலை 10 மணிக்கு உங்களைச் சந்திக்கும் வரையில் வணக்கம் கூறி விடை பெறுவது”. அப்படின்னு.

    அதுபோல – நம்ம அரசியலார் சொல்லுகிறார்கள் “மீண்டும் அடுத்த குண்டு வெடிப்பு நிகழும் வரை – கண்டனம் கூறிக்கொண்டிருப்பது” உங்கள் அதே பழைய அரசியல்வாதி.

    என்ன கொடுமை சார் இது?ன்னு சொல்ல வைச்சுடுறாங்க கிரி. சார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here