RBI அறிமுகப்படுத்திய பிறகு பலராலும் டிஜிட்டல் கரன்சி பற்றிப் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்துத் தெரிந்து கொள்வோம். Image Credit
டிஜிட்டல் கரன்சி
நம்முடைய ரூபாய் தாள் மதிப்புக்கு இணையாகப் பரிவர்த்தனை வசதியை டிஜிட்டலில் கொண்டு வருவதே டிஜிட்டல் கரன்சி ஆகும்.
Central Bank Digital Currency (CBDC) யை RBI கட்டுப்படுத்துகிறது.
டிஜிட்டல் கரன்சி e₹ குறியீடு மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது.
கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி மதிப்பு பங்குச்சந்தை போல ஏறி இறங்குவது, நிலையானதல்ல.
இதன் மதிப்பு உயர்ந்து வந்த போது அதிக இலாபத்துக்காக இந்தியாவிலும் அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், இது சூதாட்டம் போல, மதிப்புக்குறைந்தால் மக்கள் நட்டத்தை எதிர்கொள்வார்கள் என்று RBI / மத்திய நிதித்துறை அமைச்சகமும் மறுத்து விட்டது.
நேரடியாகக் தடைவிதிக்கவில்லையென்றாலும், வரி உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடுமையானதாக்கி விட்டது.
கிரிப்டோ கரன்சிக்கு எந்தக்கட்டுப்பாடும், யார் கட்டுப்பாட்டிலும் இல்லை.
இன்று கிரிப்டோவில் முதலீடு செய்தவர்களுக்குக் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா எடுத்த உறுதியான முடிவால், இந்தியர்கள் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
டிஜிட்டல் கரன்சியில் என்ன சிறப்பு?
ஏற்கனவே டிஜிட்டலில் பணம் அனுப்பலாமே! அதுவே டிஜிட்டல் கரன்சி தானே! இதில் என்ன சிறப்புள்ளது என்று பலரும் நினைத்து இருப்பார்கள்.
ஏனென்றால், இணையத்தில் வங்கிக்கணக்கின் வழியாக, UPI, IMPS, NEFT, RTGS என்று ஏற்கனவே டிஜிட்டல் தானே பயன்படுத்துகிறோம்.
அப்படியிருக்க இதிலென்ன சிறப்பு?! என்று தோன்றுவது இயல்பு தானே!
சுருக்கமாகக் கூறினால், சராசரி மக்களுக்கு டிஜிட்டல் கரன்சியால் தற்போது எந்தப் பயனும் இல்லை.
ஆனால், அதிகளவில் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு, வேறு நாடுகளுக்குப் பணம் அனுப்புபவர்களுக்கு மிக உதவியானது.
என்னவென்று பார்ப்போம்.
சிறப்புகள் என்ன?
- கிரிப்டோ கரன்சி போல மதிப்பு மாறிக்கொண்டே இருக்காது. இந்திய மதிப்பில் ரூபாய்க்கு என்ன மதிப்புள்ளதோ அதே மதிப்பு தான் டிஜிட்டல் கரன்சியும்.
- ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு டிஜிட்டல் கரன்சி வழியாகப் பணம் அனுப்பினால், உடனடியாக வரவு வைக்கப்படும், Conversion உடனடியாக நடக்கும்.
- எடுத்துக்காட்டுக்கு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 1 லட்சம் ரூபாய் டிஜிட்டல் கரன்சி அனுப்பினால், அமெரிக்க டாலருக்கு அன்றைய நாளில் என்ன மதிப்போ அந்தப்பணம் Forex Rate உடன் உடனடியாக வரவு வைக்கப்படும்.
- இது ஒரு Real Time Transfer அதாவது UPI, IMPS போல் உடனடியாகச் சென்று விடும்.
- நடுவே வேறு எந்த ஒரு அமைப்பின் உதவியும் தேவையில்லை.
- இடைத்தரகர்கள் இல்லையென்பதால், பணம் அனுப்புபவர்களுக்கு செலவு குறையும், கூடுதல் பரிவர்த்தனைக் கட்டணங்கள் இல்லை.
- எதிர்காலத்தில் Vostro கணக்குகள் கூடத் தேவைப்படாது. இரு நாடுகளுக்கிடையேயான பணப்பரிமாற்றம் எளிதாகி விடும்.
- பெரு நிறுவனங்கள் தங்கள் வியாபார பணப்பரிமாற்றத்தை சிக்கல் இல்லாமல் மேற்கொள்ளலாம்.
- Advanced Encrypt Coding முறையைப் பின்பற்றுவதால், வழக்கமான மின்னணு பரிவர்த்தனையை விட டிஜிட்டல் கரன்சி அதிகப் பாதுகாப்பானது.
- மின்னணு முறை என்பதால், ரூபாய் தாளை அச்சடிக்கும் வேலையில்லை. எனவே, பல ஆயிரம் கோடிகள் மத்திய அரசுக்கு / RBI க்கு மிச்சமாகும்.
- தாள் கிழிந்து விட்டது என்ற பிரச்சனையில்லை.
- அனைத்துமே கணக்கில் வருவதால், கள்ளப்பணம், கணக்கில் வராத பணம் என்ற நிலையிருக்காது.
- ஊழல் பணத்தைப் பதுக்கி வைப்பது போல, இதைச்செய்ய முடியாது.
எப்படிப்பயன்படுத்துவது?
இதற்கு வங்கிக்கணக்கே தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Wallet இருந்தாலே போதுமானது. Paytm, PhonePe போல Wallet. இது குறித்த விரிவான விளக்கங்கள் பின்னர் தெரியவரலாம். Image Credit
ரூபாயின் மதிப்பு ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500, ₹2000 என்று (Denomination) இருப்பது போல, இதிலும் இதே போன்று டோக்கன்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
பணத்தின் பரிவர்த்தனையை வங்கிகள் அல்லாது RBI கட்டுப்பாட்டினுள் வைத்து இருக்கும்.
ஒவ்வொரு ரூபாய் தாளுக்கும் ஒரு அடையாள எண் இருப்பது போல இதிலும் அடையாளம் இருக்கும்.
Wallet என்பதால், வழக்கமாக வங்கிகளில் பணம் வைத்து இருந்தால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் வட்டி இதில் கிடைக்காது.
மொத்த விற்பனை முறைக்கு 2022 நவம்பர் 1 அனுமதியளிக்கப்பட்டது, 2022 டிசம்பர் 1 முதல் சில்லறை விற்பனைக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
சில்லறை விற்பனைக்கு வரும் போது பயன்பாடு அதிகரிக்கும்.
டிஜிட்டல் கரன்சிக்கும் UPI க்கும் என்ன வேறுபாடு?
UPI வழியாக பரிவர்த்தனை செய்யும் போது இடையில் வங்கி உள்ளது.
அதாவது, ஒரு பொருளுக்கு / சேவைக்குப் பணம் செலுத்துகையில் வங்கி வழியாக பணம் சென்று மற்றவரை அடைகிறது.
நாம் –> வங்கி –> பெறுபவர்
டிஜிட்டல் கரன்சியில் Wallet நம்மிடம் உள்ளது. பணம் அனுப்பும் போது நேரடியாக பெறுபவரை அடைகிறது.
நாம் –> பெறுபவர்
எளிமையாக புரிந்து கொள்ள,
நாம் வங்கியிலிருந்து பணம் எடுத்துப் பர்ஸில் வைத்துக்கொள்கிறோம். கடைக்குச் சென்று பொருள் வாங்கினால், நம் பர்ஸில் இருந்து பணம் எடுத்துக்கொடுக்கிறோம்.
இதே போல, வங்கியிலிருந்து டிஜிட்டல் கரன்சி பெற்று நம் Wallet ல் வைத்துக்கொள்கிறோம். கடைக்குச் சென்று பொருள் வாங்கினால், அங்குள்ள QR Code வழியாக Wallet ல் இருந்து பணம் செலுத்துகிறோம்.
இடையில் வங்கியில்லை.
நமக்கு தேவையான டிஜிட்டல் கரன்சிக்கு ஈடாக வங்கியில் பணத்தைக்கொடுத்து, அவர்கள் கொடுக்கும் டிஜிட்டல் கரன்சியை நம் Wallet ல் வைத்துக்கொள்ளலாம்.
இது ரொக்கப் பணத்தை பர்ஸில் வைத்து இருப்பதற்கு ஈடானது. Purse = Wallet.
பர்ஸை Wallet என்று அழைப்பவர்களும் உள்ளனர்.
பிரச்சனைகள் என்ன?
பாதுகாப்பானது என்றாலும், ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதற்கு RBI என்ன வழிமுறைகள் வைத்துள்ளது என்பது பின்னர் தெரிய வரலாம்.
படிப்பறிவற்றவர்கள், தொழில்நுட்பம் தெரியாதவர்களுக்கு இதைப்பயன்படுத்துவது எளிதல்ல.
இணையம் தேவை என்றாலும், UPI Lite தொழில்நுட்பம் போல இணையம் இல்லாமலும் பயன்படுத்தும் முறை வரலாம்.
இதற்கு NFC / Bluetooth தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம்.
டிஜிட்டல் கரன்சியால் யாருக்குப்பயன்?
வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவர்களுக்கு.
தொழில் முறையில் / வியாபார ரீதியாகப் பணத்தை அனுப்புவர்களுக்கு.
அதிகளவிலான மதிப்புடைய பணம் அனுப்புபவர்கள்.
சராசரி பொதுஜனத்துக்கு என்ன பயன்?
சுருக்கமாகக் கூறினால், தற்போது எந்தப்பயனுமில்லை காரணம், வழக்கமான மின்னணு பரிவர்த்தனையே போதுமானது.
ஆனால், பின்னர் டிஜிட்டல் கரன்சி பயன்பாடு அதிகரிக்கும் போது, மற்ற பயன்பாட்டுக்கும் தேவை அதிகரிக்கும்.
இந்நிலையில் அனைவரும் UPI, IMPS போலப் பயன்படுத்தத் துவங்குவார்கள்.
இதற்குக் காலம் எடுக்கும், உடனே நடக்கும் செயலல்ல.
தற்போது குறிப்பிட்ட சில வங்கிகளுக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து வங்கிகளும் அனுமதியைப் பெறும் நிலையில் பயன்பாடு பரவலாகும்.
தொடர்புடைய கட்டுரை
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
டிஜிட்டல் கரன்சியும், க்ரிப்டோவும் ஒன்றென்று நினைத்திருந்தேன். தெளிவுக்கு நன்றி!
டிஜிட்டல் கரன்சி குறித்து விவரமாக எளிமையாக புரியும் படி எழுதி உள்ளீர்கள் கிரி.. வாழ்த்துக்கள்.. இதுவரை எனக்கும் இது குறித்து எந்த விதமான ஐடியாவும் இல்லை.. ஆனால் தற்போது தெளிவாக புரிந்து விட்டது..
ஒரு சின்ன கேள்வி.. இது போன்ற பொதுவான தகவல்களை இணையத்தில் படிப்பீர்களா?? அல்லது பத்திரிகை மூலமா? இல்லையென்றால் நண்பர்களின் உதவியின் மூலமாக தெரிந்து கொண்டு எழுதுவீர்களா?? காரணம் நீங்கள் பொது வெளியில் எழுதுவதால் இதில் 100% உண்மையும், நம்பகத்தன்மையும் இருக்கவேண்டும்.. உங்கள் பதிவுகளில் நான் அதை பார்க்கிறேன்.. அதனால் தான் கேட்டேன்..
ஒரு சொந்த அனுபவ பதிவாகவோ, சினிமா விமர்சனமாகவோ, அரசியல் பதிவாகவோ இது போன்ற பதிவுகளை கடந்து போக முடியாது.. தொழில்நுட்ப பதிவுகளில் நீங்கள் அந்த துறையில் இருப்பதால், கண்டிப்பாக உங்களுக்கு நேரிடையான அனுபவம் உண்டு..
ஆனால் சம்பந்தமே இல்லாத பதிவுகளை (குறிப்பாக பொருளதார பதிவுகளை) நீங்கள் எழுதுவது எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.. உங்கள் ஆர்வமும் என்னை வியப்படைய வைக்கும்.. இந்த பணி தொடரட்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்
“டிஜிட்டல் கரன்சியும், க்ரிப்டோவும் ஒன்றென்று நினைத்திருந்தேன்”
தொழில்நுட்ப ரீதியில் ஒன்று வழிமுறைகளில் வேறு.
டிஜிட்டல் கரன்சி RBI கட்டுப்பாட்டில் உள்ளது. கிரிப்டோ கரன்சி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.
@யாசின்
“இது போன்ற பொதுவான தகவல்களை இணையத்தில் படிப்பீர்களா?? அல்லது பத்திரிகை மூலமா? இல்லையென்றால் நண்பர்களின் உதவியின் மூலமாக தெரிந்து கொண்டு எழுதுவீர்களா??”
இக்கட்டுரைக்கு இணையம், நண்பர்கள் மூலமாக உதவி பெற்றேன். பத்திரிகைகள் படிக்க வாய்ப்புக் குறைவு.
இதே போல https://www.giriblog.com/is-reducing-indian-rupee-value/ கட்டுரைக்கும்.
எந்த கட்டுரை எழுதினாலும், புரிதல் இருந்தால் மட்டுமே எழுதுவேன். அதாவது எனக்கு திருப்தி அளித்தால் மட்டுமே எழுதுவேன், வெளியிடுவேன்.
“நீங்கள் பொது வெளியில் எழுதுவதால் இதில் 100% உண்மையும், நம்பகத்தன்மையும் இருக்கவேண்டும்.. உங்கள் பதிவுகளில் நான் அதை பார்க்கிறேன்.. அதனால் தான் கேட்டேன்.”
பொய்யான, தவறான தகவல்களைக் கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன்.
வலது சாரி ஆதரவாளன் என்றாலும், அது சார்ந்து கொடுக்கும் தகவல்களில் மிகைப்படுத்தலோ பொய் தகவல்களோ இருக்காது.
அப்படி எதுவும் வந்தால், அவை என் எச்சரிக்கையையும் தாண்டி ஏற்பட்ட Genuine தவறாக மட்டுமே இருக்கும், intentional கிடையாது.
எனவே தான் மற்றவர்கள் என்னை விமர்சிக்கும் போது என்னை அவை பாதிப்பதில்லை காரணம், நான் எப்படி என்று எனக்குத் தெரியும்.
“ஒரு சொந்த அனுபவ பதிவாகவோ, சினிமா விமர்சனமாகவோ, அரசியல் பதிவாகவோ இது போன்ற பதிவுகளை கடந்து போக முடியாது.. தொழில்நுட்ப பதிவுகளில் நீங்கள் அந்த துறையில் இருப்பதால், கண்டிப்பாக உங்களுக்கு நேரிடையான அனுபவம் உண்டு.”
சரியாக சொன்னீங்க யாசின்.
இவ்வகை கட்டுரைகளை எழுதுவது எளிது. அதோடு அனுபவங்களையே கொடுப்பதால், தவறு ஏற்பட வாய்ப்பில்லை.
மாற்று கருத்துகள் வரலாமே தவிர தவறு என்று கூற முடியாது.
அதோடு இவ்வகை கட்டுரைகளை எவரும் எழுதலாம் ஆனால், பொருளாதாரம் என்று வரும் போது இஷ்டத்துக்கு எழுதி விட முடியாது.
“ஆனால் சம்பந்தமே இல்லாத பதிவுகளை (குறிப்பாக பொருளதார பதிவுகளை) நீங்கள் எழுதுவது எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.”
இதையும் சரியாக கவனித்து உள்ளீர்கள்.
எனக்கு அனைத்து வகை கட்டுரைகளையும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் துவக்கத்தில் இருந்தே உள்ளது.
எனவே, தெரியவில்லை என்றாலும், அவற்றை பற்றி தெரிந்து கொண்டு, சம்பந்தப்பட்டவர்களின் தகவல்களைக் கேட்டு எழுதுவேன்.
இவற்றையும், இணையத்தில் ஒப்பிட்டு இவர்கள் கூறியது சரியா என்று மறு பரிசீலனை செய்வேன்.
எடுத்துக்காட்டுக்கு https://www.giriblog.com/menopause-pyschological-issues/ கட்டுரையைக் கூறலாம்.
இதை நான் எப்படி எழுத முடியும்?!
பெண்கள் அல்லது அத்துறை சார்ந்த வல்லுநர்கள் மட்டுமே எழுத முடியும் ஆனால், எழுதுகிறேன் என்றால், அதில் என் உழைப்பு உள்ளது.
டிஜிட்டல் கரன்சி கட்டுரையை அறிமுகப்படுத்திய நவம்பர் 1ம் தேதியே எழுதி இருக்க முடியும் ஆனால், எங்குமே தெளிவான தகவல்கள் இல்லை.
இதற்காக ஏராளமான கட்டுரைகளைப் படித்தேன் ஆனால், அவை அனைத்துமே மேலோட்டமாக இருந்தது, என் சந்தேகங்களுக்கு பதில் இல்லை.
குறிப்பாக வழக்கமான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும், டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைக்கும் என்ன வித்யாசம் என்பதை எவருமே விளக்கவில்லை.
இதனால் சராசரி நபருக்கு என்ன பயன் என்பதையும் கூறவில்லை.
இதுவே அனைவரின் அடிப்படை கேள்விகளாக இருக்கும்.
ஒரு கட்டுரையை எழுதும் போது ஒரு சராசரி நபரின் பார்வையிலேயே கட்டுரையை எழுதுவேன்.
எனவே, உங்களுக்கு வரும் சந்தேகங்கள் எனக்கும் வரும், அவை தீர்க்கப்பட்டாலே எழுதுவேன். இதனாலே தாமதமானது.
பின்னர் கடைசியாக நண்பனிடம் விவாதித்து தகவல்களைப் பெற்று எழுதி அவனை இரு முறை படிக்க வைத்துத் திருப்தி ஆன பிறகே வெளியிடுகிறேன்.
எனவே, இக்கட்டுரையில் ஏராளமான உழைப்பு உள்ளது 🙂 .
நீங்கள் இணையத்தில் எந்தத் தளத்தில் வேண்டும் என்றாலும் தேடி படியுங்கள், இக்கட்டுரையில் உள்ள விவரங்களைப் போல எங்குமே உங்களால் காண முடியாது.
சவாலாகவே கூறுகிறேன். ஏனென்றால், அந்த அளவுக்குத் தேடி விட்டேன்.
இதே ONDC என்ற அமேசான் ப்ளிப்கார்ட் போட்டியாக வரும் அரசு நிறுவனத்தைப் பற்றிய கட்டுரையும் பல மாதங்களாக, சரியான விளக்கங்கள் கிடைக்காமல் தள்ளிச் செல்கிறது.
அதையும் எழுத வேண்டும்.
மற்றவர்கள் கடமைக்கு எழுதுகிறார்கள் ஆனால், எனக்கு இது Passion.
மேற்கூறியவற்றை கொசுறுவாக சுருக்கமாக எழுதி இருந்தேன் ஆனால், அவை சுயபுராணமாக இருக்கும் என்று வெளியிடும் போது நீக்கி விட்டேன்.
தற்போது நீங்கள் கேட்டதால், இதைக் கூற எனக்கு வாய்ப்புக்கிடைத்தது. எனவே, வாய்ப்புக்கொடுத்த உங்களுக்கு நன்றி 🙂 .
உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி கிரி. உண்மையில் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தில் நல்ல முதிர்ச்சியும், தெளிவும் எனக்கு தெரிகிறது (உங்களை மதீப்பீடு செய்யவில்லை, அதற்கான அனுபவமும் எனக்கில்லை.. நீண்ட வருடமாக நான் தொடர்வதால் முந்தைய பதிவுகளுக்கும், தற்போதைய பதிவுகளுக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது) வாழ்த்துக்கள்.. சும்மா உங்களை வெறுமனே ஏத்தி விட வேண்டும் என்று கூறவில்லை.. என் பார்வைக்கு தோன்றியதை நான் கூறுகிறேன்.. நல்லத கொண்டாடவில்லை என்றாலும் பாராட்டலாம் அல்லவா???