இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு (1 ஜூலை 2017) ஐந்து வருடங்களில் பல்வேறு மாற்றங்கள் விமர்சனங்களை ஜிஎஸ்டி கடந்து வந்துள்ளது. Image Credit
வரி விகிதம்
ஜிஎஸ்டி க்கு முன்பு வரிகள் பல பெயர்களில் ஒழுங்கற்று இருந்தது. இதனால், மத்திய அரசால் வரியைச் சரியாகக் கையாள முடியாமல் இருந்தது.
எளிமையாகக் கூறினால், தற்போது மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் எரிபொருள் விலையில் எவ்வளவு சர்ச்சைகள்? விவாதங்கள்? குற்றச்சாட்டுகள்? விளக்கங்கள்?
எரிபொருளை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வந்தால், மேற்கூறிய அனைத்துமே ஒன்றுமே இல்லாமல் ஆகி விடும். காரணம், குழப்பமில்லாத தெளிவான வரி முறை.
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வரி விதிப்பு முறையைப் பின்பற்றினால், எப்படி ஒழுங்குக்குக் கொண்டு வர முடியும். இது போன்ற சிக்கல்களைக் களைய கொண்டு வரப்பட்டதே ஜிஎஸ்டி.
ஜிஎஸ்டியை பாஜக கொண்டு வந்தாலும் இதற்கு அறிமுகம் கொடுத்தது, கொண்டு வர முதலில் முயற்சித்தது காங்கிரஸ்.
ஆனால், தனிப் பெரும்பான்மை இல்லாதது, கூட்டணி கட்சிகளைச் சம்மதிக்க வைக்க முடியாததால், காங் அரசால் ஜிஎஸ்டியை கொண்டு வர முடியவில்லை.
மாநிலங்களுக்கு இழப்பா?
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது புதிய மாற்றங்களால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளுக்கு இழப்பீட்டுத்தொகை ஐந்து வருடங்களுக்குக் கொடுக்கப்படும் என்று முடிவானது.
அதன் படி கொடுக்கப்பட்டு வந்த தொகை ஜூன் (2022) மாதத்தோடு முடிந்து 2026 – 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநிலங்களின் வரி வருவாய் உயர்ந்து வருகிறது. கோவிட் காரணங்களால் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகத்தால், மாநிலங்களுக்கு வரி இழப்பு என்று தமிழக அரசு கூறி வருகிறது ஆனால், உண்மையில் ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பிறகு தமிழக அரசின் வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மற்ற பெரும்பான்மை மாநிலங்களை விட அதிகத் தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ள தமிழகத்துக்கு ஜிஎஸ்டி மிகப்பெரிய வருமானம் தரும் வாய்ப்பாக மாறியுள்ளது.
ஆனாலும், அரசியல் காரணங்களுக்காகத் தமிழக அரசு ஜிஎஸ்டியை குறை கூறி வருகிறது.
தமிழகத்தில் வரி செலுத்தாமல், பொய் கணக்குகளைக் காட்டி ஏமாற்றி வரும் நிறுவனங்களை மத்திய வரி அமைப்பு கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
பின்வருவது The Hindu செய்தித்தாளில் வந்த செய்தி.
Around 30% of the dealers registered with Tamil Nadu’s Commercial Taxes Department (3.26 lakh) did not pay a single rupee in the Goods and Services Tax (GST) during 2021-22.
Besides, about 1.94 lakh dealers had paid less than ₹1,000 throughout the year.
These findings have been made through a recent study done by the Department of the tax remittances.
There are about 11 lakh registered dealers in the State, of whom 6.72 lakh come under the State jurisdiction and the rest under the Centre.
The threshold for the registration of taxpayers dealing in goods is ₹40 lakh and for those dealing in services ₹20 lakh.
சம்பளக்காரன்
அரசுக்கு ஒழுங்காக வரி செலுத்துவது ஊதியம் பெறுபவர் மட்டுமே. மற்ற பெரும்பாலானோர் போலிக்கணக்குகளையே காட்டி வருகின்றனர்.
ஒரு சாதாரணச் சம்பளக்காரர் ஒரு ஆண்டுக்குச் செலுத்தும் வரியைவிடப் பல இலட்சங்கள் / கோடி சம்பாதிக்கும் நிறுவனம் குறைவாக வரி செலுத்துகிறது அல்லது செலுத்துவதே இல்லை.
இது தான் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும் வரை இருந்த நிலை. தற்போதும் இந்த நிலையுள்ளது ஆனால், மாறி வருகிறது.
ஏமாற்றுபவர்கள் என்றாவது ஒரு நாள் மாட்டுவார்கள் என்ற நிலையுள்ளது. எனவே, தற்காலிகமாக ஏமாற்றலாமே தவிர ஒரு நாள் வசமாக மாட்டுவது உறுதி.
வரி ஏய்ப்புச் செய்பவர்களைக் கண்டுபிடிக்கப் பல்வேறு தொழில்நுட்பங்களை வருமான வரி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
GST + PAN + Aadhar இணைப்பு பல்வேறு Checkpoint களை ஏற்படுத்தி விட்டது. ஒன்றில் தற்போது தப்பித்தாலும் இன்னொன்றில் மாட்டிக்கொள்வார்கள்.
காங் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும் சம்பளக்காரர்களிடமிருந்து மட்டுமே ஒழுங்காக வரி கிடைக்கிறது என்று பிழிந்து எடுக்கிறார்கள்.
சம்பளக்காரர்கள் எவ்வளவு தான் தாங்குவார்கள். ஊதியத்தில் 30% பிடிக்கப்பட்டுத்தான் கைக்கே வருகிறது. வரிக்குறைப்பு இதுவரையில்லை.
தற்போது ஜிஎஸ்டி வந்ததால், மற்ற துறையினரும் ஒழுங்காக வரி செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வரி வருமானம் அதிகரிக்கும் போது அனைவருக்குமான வரி குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
ஜிஎஸ்டி தவறுகள்
ஜிஎஸ்டி மிகச்சிறந்த வரி முறை. உலகம் முழுக்க பல நாடுகளால் ஏற்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது 18%, 28% வரி விதிப்பில் பல முக்கிய விற்பனைகளை, சேவைகளைச் சேர்த்து விட்டார்கள்.
இதுவே ஜிஎஸ்டி மீது தவறான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது. ஜிஎஸ்டி என்றால், கூடுதல் வரி என்ற மனநிலையை ஏற்படுத்தி விட்டது.
உண்மையில் ஜிஎஸ்டி க்கு முன்பு இருந்த வரி விதிப்பிலேயே அதிகளவு வரி இருந்தது, அவை ஜிஎஸ்டியில் சீரமைக்கப்பட்டது அல்லது குறைக்கப்பட்டது.
ஆனால், 18%, 28% வரி பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக உணவகங்களுக்கு 12% வரி விதித்தது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி, பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்குச் சென்றது.
பின்னர் ஜிஎஸ்டி கவுன்சில் ஒவ்வொரு முறையும் இதில் உள்ள தவறுகளைக் களைந்து Fine Tune செய்து வந்து, தற்போது வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 28% வரி ஆடம்பர பொருட்களுக்கான வரி என்று மட்டுமேயானது என்று மாறியுள்ளது.
வணிகர்களுக்கு எளிமைப்படுத்தியுள்ளது
வரிக் குழப்பங்களை மட்டுமே ஜிஎஸ்டி தீர்க்கவில்லை, வணிகர்களுக்கு ஏற்படும் நடைமுறை பிரச்சனைகளையும் களைந்துள்ளது.
ஒரு நிறுவனம் தனது பொருட்களைத் தன் இடத்திலிருந்து அனுப்ப (Delivery) வேண்டும் என்றால், அதற்கு முறையான ஜிஎஸ்டி Receipt இருந்தால் போதுமானது.
வழியில் எந்தப் போக்குவரத்து அதிகாரியும் நிறுத்தி, காரணம் இல்லாமல் பிடித்து வைக்க முடியாது, லஞ்சம் கேட்க முடியாது.
மாநிலங்களுடையேயான போக்குவரத்து, வரி விகிதம் எளிதாகியுள்ளது. வாகனங்கள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
பொருளைப் பெற, கொடுக்க வரி முறைகள் சீரமைக்கப்பட்டதால், பரிவர்த்தனை முறை மிக எளிமையாகியுள்ளது.
துவக்கத்தில் ஜிஎஸ்டியை குறை கூறிய நிறுவனங்கள், தற்போது இதனால், வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்று ஒத்துக்கொள்கின்றன.
தைரியமான முடிவு
தைரியமான முடிவுகளுக்குப் பெயர் போனவர் பிரதமர் மோடி அவர்கள்.
அனைவரையும் திருப்தி செய்ய வேண்டும் என்று முடிவுகளை எடுக்காமல், தற்காலிக சிரமத்தைக் கருத்தில் கொண்டு முடிவுகளைத் தள்ளிப்போடாமல் நாட்டுக்கு நல்லது என்று நினைப்பவற்றை நிறைவேற்றுகிறார்.
மக்கள் விரும்புவதை செயல்படுத்துபவரை விட, என்ன செய்தால் எதிர்காலத்தில் மக்களுக்கு நாட்டுக்கு நல்லது என்று முடிவு எடுப்பவரே சிறந்த தலைவர்.
அது போன்று தைரியமாக எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்றே ஜிஎஸ்டி.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது ஏராளமானோர் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டார்கள். பலர் நட்டத்துக்குள்ளாகினர்.
ஒரு பெரிய முடிவு எடுக்கப்படும் போது தற்காலிக சிரமங்கள், பாதிப்பு தவிர்க்க முடியாதது ஆனால், எதிர்கால வரி விகிதம் ஒழுங்குக்கு வந்த பிறகு அனைத்தும் எளிதாகி விடும். மாற்றங்களைத் துணிந்து எவரேனும் எடுத்தே ஆக வேண்டும்.
வரி முக்கியம்
இன்று மாதம் எவ்வளவு வரி வந்துள்ளது என்று எளிதாக எவரும் தெரிந்து கொள்ள முடிகிறது. நாட்டின் வளர்ச்சியைச் சாதாரண நபரும் அறிந்து கொள்ள முடிகிறது, கேள்வி கேட்க முடிகிறது. வரி வருவாயை அரசு ஏமாற்ற முடியாது.
ஜிஎஸ்டி யைப் பலரும் எதிர்க்க முக்கியக்காரணமே இதுவரை வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்தது இனி செய்ய முடியாது என்பதாலையே. அதோடு சில வரி விகிதங்கள் அதிகரித்ததும்.
இலாபத்தில் இழப்பு ஏற்படுவதே பலரின் கோபத்துக்குக் காரணம்.
வரி ஏய்ப்புச் செய்து வந்தவர்களைத் திடீர் என்று வரி கட்ட வேண்டும் என்றால், கோபம் வரத்தானே செய்யும். இப்படியே ஒவ்வொருவரும் வரி கட்டமால் ஏமாற்றி வந்தால், அரசை எப்படி நடத்த முடியும்?!
நாட்டின் வளர்ச்சிக்கு வரி முக்கியம் அதை அனைவரும் சரியாகச் செலுத்தும் போது நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும் அதோடு வரி விகிதமும் குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். வரி கட்டுபவர் முட்டாள், ஏய்ப்பவர் புத்திசாலி என்ற நிலை மாற வேண்டும்.
வரும் காலங்களில் வரி செலுத்துபவர் எண்ணிக்கை அதிகரித்து ஏய்ப்பவர் குறைந்து விடுவர். PAN இணைப்பு காரணமாக ஏமாற்றுவது குறைந்து வருகிறது.
ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட முறை தவறாக இருந்தாலும் அதன் நோக்கம் சரியானது. இன்னும் 5+ வருடங்களில் மேம்படுத்தப்பட்டு, தவறுகள் களையப்பட்டு ஜிஎஸ்டி மிகச்சிறப்பான வரி முறையாக மாறி இருக்கும்.
கொசுறு
இக்கட்டுரைக்கு ஏராளமான புள்ளி விவரங்களைக் கொடுக்க முடியும் ஆனால், புள்ளி விவரங்களைப் பலர் படிப்பதே இல்லை. தேவைப்படுகிறவர்கள் https://gstcouncil.gov.in/ தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
ஒரு சராசரி வாசகன் புரிந்துகொள்ளும் வகையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தொடர்புடைய கட்டுரை
பணமதிப்பிழப்பு – GST சரியா தவறா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உண்மையில் GST வரவேற்க்கதக்க ஒன்று.. அதில் மாற்று கருத்து ஒன்றும் இல்லை.. வரி ஏய்ப்பு என்பது என்பது பல வருடங்களாக தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.. அரசும் இதை தடுக்க பல்வேறான முயற்சிகள் எடுத்து கொண்டு தான் வருகிறது.. நிச்சயம் எதிர்காலத்தில் எல்லா பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு வரி ஏய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும்..
என் சொந்த அனுபவத்தில் நான் வேலை பார்த்த நிறுவனங்களிலும் வரி ஏய்ப்பை பார்த்துள்ளேன்.. வரி வருவாய் என்பது அரசின் முக்கிய வருமானம்.. அதை முறையாக பெற வேண்டியதும், பெற்ற வருவாயை சரியான முறையில் திட்டமிட்டு செலவிடுவதும் அரசின் மிக முக்கிய பணி..
(சரியான திட்டமிடல் இல்லையென்றால் அண்மையில் இலங்கையில் நடந்தது உலகின் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்).. ஏதோ குடும்ப ஊழல் தான் காரணம் என்று எளிதில் கடந்து விட முடியாது.. வெனிசுலா, ஈரான்,எகிப்து,சிரியா,இராக் என பல நாடுகளை உதாரணமாக சொல்லலாம்.. செல்வ செழிப்பாக இருந்த பல நாடுகள் ஏதேதோ காரணங்களால் இன்று மிக பெரிய சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது.. இவற்றை பார்க்கும் போது நம் தேசத்தின் அடிப்படை கட்டமைப்பு மிகவும் வலுவாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.. உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.. கடந்த சில ஆண்டுகளில் நமது அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு GST ஒரு முக்கிய காரணி என்பதை மறுக்க முடியாது..
ஆனால் ஒரே ஒரு விஷியம் மட்டும் எனக்கு புரியவில்லை.. மாநில அரசோ / மத்திய அரசோ தான் உலகளவில் வாங்கிய கடனுக்காக மிக பெரிய தொகை வட்டியாக செலுத்துகின்றோம் என்று நினைக்கிறேன்.. சாதாரணமாக ஒரு நடுத்தர குடும்பத்தில் கடனை வாங்கி விட்டு வட்டி கட்டுகிறோம் என்றால் காலம் முழுவதும் வட்டி தான் கட்டுவோமே தவிர அசலை செலுத்த முடியாது..கடன் கொடுப்பவரும் நாம் நிலை தெரிந்து தான் கடன் கொடுக்கிறார்.. இதே நிலை தான் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.. இதை ஏன் எந்த அரசாலும் சரி செய்ய முடியவில்லை.. (உங்களுக்கு காரணம் தெரிந்தால் பகிரவும்).
தமிழ்நாடு அரசின் நிதி பற்றாக்குறை கிட்டத்திட்ட5 லட்சம் கோடிக்கு மேல் என நினைக்கிறேன்.. 2000 ஆம் ஆண்டில் 23,000 கோடியாக இருந்தது.. தற்போது பல மடங்கு உயர்ந்து.. 5 லட்சம் கோடிக்கு மேல், விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டது.. எதிர்காலத்தில் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை.. இரண்டு அரசுகளும் மாறி மாறி ஒருவரை குறை கூறலாமே தவிர இதற்கான தீர்வு என்னவென்று தெரியவில்லை.. மத்திய அரசின் நிலை என்ன வென்று எனக்கு சரியாக தெரியவில்லை..
எத்தனை பொருளாதார வல்லுநர்கள் இருந்தாலும் இதற்க்கான சரியான தீர்வை ஏன் காண முடியவில்லை.. ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் போடப்படுகின்ற எல்லா திட்டங்களும் நிறைவேற்றபடுகின்றனவா??? எதனால் இந்த கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது என்று புரியவில்லை கிரி.. நிறைய கேள்விகள் மனதில் எழுந்து கொண்டே இருக்கிறது..
@யாசின்
“நிச்சயம் எதிர்காலத்தில் எல்லா பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு வரி ஏய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும்..”
முற்றிலும் தடுக்கப்படுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது ஆனால், 90% வரை தடுக்க முடியும் என்று தோன்றுகிறது.
இதைச்செய்தாலே மிகப்பெரிய சாதனை.
மத்திய அரசு சிறப்பாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து சட்ட ஓட்டைகளை அடைத்து வருகிறது.
“வரி வருவாய் என்பது அரசின் முக்கிய வருமானம்.. அதை முறையாக பெற வேண்டியதும், பெற்ற வருவாயை சரியான முறையில் திட்டமிட்டு செலவிடுவதும் அரசின் மிக முக்கிய பணி.”
சரியாக கூறினீர்கள்.
அரசு இதை ஒழுங்காக செய்யவில்லையென்றால், ஒழுங்காக கட்டுபவர்களே தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகி வருவார்கள்.
“இவற்றை பார்க்கும் போது நம் தேசத்தின் அடிப்படை கட்டமைப்பு மிகவும் வலுவாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.. உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது..”
வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியா பற்றி நீங்கள் அறிந்து வைத்து இருப்பது மகிழ்ச்சி. ஒருவேளை அங்கே இருப்பதால் தான் உங்களால் ஒப்பிட்டு பேச முடிகிறது என்று நினைக்கிறேன்.
நீங்கள் கூறியது பற்றிய கட்டுரையை விரைவில் எழுத நினைத்துள்ளேன்.
தற்போது உலக நாடுகள் பல கச்சா எண்ணெய் விலை உயர்வால் திணறி வரும் நிலையில் இந்தியா மிகச்சிறப்பாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது.
இதன் அருமை இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை.
“இதே நிலை தான் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.. இதை ஏன் எந்த அரசாலும் சரி செய்ய முடியவில்லை..”
இதற்கு காரணம், மாநிலத்தின், நாட்டின் வருமானம் உயரும் போது தான் அசலை கட்டுவதற்கான பணம் கிடைக்கும்.
இதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது ஆனால் தமிழக அரசு முயற்சிகளை எடுக்கவில்லை.
தமிழக அரசின் வருமானத்தில் 45% அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அவர்கள் சலுகைகளுக்கு சென்று விடுகிறது. 30% க்கும் மேல் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு சென்று விடுகிறது.
மீதி 20 – 25% தான் மக்களின் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
இப்படியிருந்தால் எப்படி சமாளிக்க முடியும்? இந்நிலை மாறினால் மட்டுமே நீங்கள் கேட்பது நடக்கும்.
“தமிழ்நாடு அரசின் நிதி பற்றாக்குறை கிட்டத்திட்ட5 லட்சம் கோடிக்கு மேல் என நினைக்கிறேன்.”
பற்றாக்குறை அல்ல, தமிழகக் கடன்.
“இரண்டு அரசுகளும் மாறி மாறி ஒருவரை குறை கூறலாமே தவிர இதற்கான தீர்வு என்னவென்று தெரியவில்லை”
இதற்கு தீர்வு, செலவுகளைக் குறைக்க வேண்டும். மேலாண்மைக்கு அதிகம் செலவு செய்யும் எந்த நிறுவனமும், அரசும் வெற்றிகரமாக இருக்க முடியாது.
“மத்திய அரசின் நிலை என்ன வென்று எனக்கு சரியாக தெரியவில்லை..”
மத்திய அரசுக்கும் ஏராளமான கடன் உள்ளது ஆனால், அதைக் கட்டுவதற்கான திட்டங்களை அவர்கள் முறையாக செயல்படுத்தி வருகிறார்கள்.
“எதனால் இந்த கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது என்று புரியவில்லை கிரி”
சரியான திட்டமிடல் இல்லாததும், திட்டமிட்டதை செயல்படுத்தாததும் தான் காரணம் யாசின்.
Very well written Giri, giving an easy glimpse for layman to understand GST and why it is important