இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ

2
இந்திய ரூபாய்

ந்திய ரூபாய் மதிப்புக் குறைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன. இது உண்மையா? என்று பார்ப்போம். Image Credit

நிர்மலா சீதாராமன்

இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை மாறாக அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது‘ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர், மேலும் பலர் கிண்டலடித்து இருந்தனர்.

பொதுமக்கள், இதுகுறித்துத் தெரியாதவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆனால், அவர்களுக்குச் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டிய ஊடகங்களும் எதிர்மறையாகவே கொண்டு செல்கின்றன.

நிர்மலா சீதாராமன் கூறியதுக்கு, வடிவேல் நகைச்சுவையான “என்ன ஒரு புத்திசாலித்தனம்” என்ற மீமை விகடன் பகிர்ந்து கிண்டலடிக்கிறது.

எவ்வளவு ஒரு கேவலமான செயல்!

உண்மையை மறைப்பது ஒரு குற்றம் என்றால், உண்மை தெரிந்தும் அதைத் திரித்து மக்களிடையே கொண்டு செல்வது அப்பட்டமான மொள்ளமாரித்தனம்.

அதானி மிகப்பெரிய அளவில் வளர்ந்து செல்கிறார் அதனால், டாடா வீழ்ச்சியா?! அப்படித்தான் உள்ளது இவர்கள் ஒப்பீடு.

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு குறைவாக இருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்று அர்த்தம் இல்லை.

இது இந்தியா மட்டுமல்ல எந்நாட்டுக்கும் பொருந்தும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பது அமெரிக்க டாலரின் மதிப்பல்ல.

இந்திய ரூபாய் மதிப்புக் குறைந்து வருகிறதா?

சுருக்கமாகக் கூறினால், இல்லை என்பதே பதில்.

மாறாக மற்ற நாடுகளை விட இந்திய ரூபாயின் மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.

இன்னொரு வகையில் கூறினால், மற்ற நாடுகளின் பணமதிப்பு வீழ்ச்சியில் உள்ளது.

இதை யாரும் மறுக்க முடியாது! ஏன் என்றால் எவரும் ஒவ்வொரு நாட்டின் பணமதிப்பை பரிசோதித்துப் பார்க்கலாம்.

கூகுள் தளம் சென்று பின்வரும்படி கொடுத்தால் ஒரு மாதத்துக்குக் காட்டும், அதை ஒரு வருடத்துக்கு மாற்றினால் என்ன நிலை என்று புரிந்து விடும்.

INR to YUAN (China), INR to AUD (Australia), INR to YEN (Japan), INR to WON (South Korea), INR to Ringgit (Malaysia), INR to PESO (Philippine), INR to GBP (England), INR to New Zealand Dollar.

மேற்கூறிய நாடுகளின் நாணய மதிப்பும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாய் போலக் குறைந்துள்ளது.

ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்த டாலர் மதிப்பை விட மற்ற நாடுகளுக்கு எதிராக உயர்ந்த டாலர் மதிப்பு அதிகம்.

இது அக்டோபர் 2022 நிலை.

நான் கூறுவதை நம்ப வேண்டாம், பரிசோதித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

டாலரின் மதிப்பு மட்டும் ஏன் உயர்ந்து கொண்டே செல்கிறது?

இதற்கு ஏற்கனவே விளக்கம் கூறியுள்ளேன். இருப்பினும் சுருக்கமாகக் கூறுகிறேன்.

உலகளவில் எந்த நாட்டின் பணம் அதிகம் தேவைப்படுகிறதோ, பயன்படுத்தப்படுகிறதோ அதன் மதிப்பு உயர்வாக இருக்கும்.

தற்போது கச்சா எண்ணெய் பெரும்பான்மை விற்பனை டாலரிலேயே நடைபெறுகிறது. இதற்கு டாலர் நமக்குத் தேவைப்படுகிறது.

அந்நியசெலவாணியாக வருவதைத் தான் நாம் கச்சா எண்ணெய்யை பெறுவதற்குக் கொடுக்கிறோம். எரிபொருள், எரிவாயு தேவைக்காக டாலர் தேவை இருப்பதால், அதன் மதிப்பு நிலையானதாக உள்ளது.

எனவே, இணையத்தில் மற்றும் மற்ற பரிவர்த்தனைகளுக்கு அனைத்து நிறுவனங்களும், நாடுகளும் அமெரிக்க டாலரையே தேர்வு செய்கின்றன.

ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடனான பொதுவான பரிவர்த்தனை தேவைக்காக டாலரை அதிகளவில் சேமிக்கின்றன.

இவ்வாறு அதிகளவில் வாங்கிக்குவிக்கும் போது என்ன ஆகும்? டாலர் மதிப்பு உயரும்.

இது போன்ற காரணங்களால் டாலருக்கான தேவை உள்ளது. எனவே, தேவை (டிமாண்ட்) அதிகரிக்கும் போது அதற்கான மதிப்பு உயர்வது இயல்பு!

இதைப் புரிந்து கொள்ளப் பொருளாதாரத்தைக் கரைத்து குடித்து இருக்க வேண்டியதில்லை, அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.

சமீபமாக அமெரிக்க டாலர் உயர்வு ஏன்?

இன்னொரு வகையில் கூறுவதென்றால், எதனால் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்து வருகிறது?!

போர் காரணமாக, பணவீக்கத்தால் விலை உயர்வு காரணமாக பொருளாதார ரீதியாகப் பாதிப்படைந்து வரும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

தற்போது (நவம்பர் 2022) மிகப்பெரிய பணவீக்கத்தில் அமெரிக்கா உள்ளது. அதாவது கடுமையான விலைவாசி உயர்வு.

பொருட்களின் விலை உயர்வால், மக்கள் தங்கள் வருமானத்துக்குள் செலவைச் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

கூடுதல் பணி செய்து வருமானம் ஈட்ட முயல்கிறார்கள்.

இதனால், அமெரிக்க மத்திய வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. முதலீடு செய்யப் பலரும் முயல்வதால், டாலர் மதிப்பு வேகமாக உயர்கிறது.

ரெப்போ வட்டியை உயர்த்துவதால், அமெரிக்காவின் பணவீக்கமும் குறையும், பத்திரம், முதலீடு போன்றவற்றால் டாலருக்கான தேவையும் அதிகரிக்கிறது.

ரெப்போ வட்டி என்றால் என்ன?

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ (Repo – Repurchasing Option) வட்டியென அழைக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால், ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிய வங்கிகளும் உயர்த்த வேண்டிய நிலையில் இருக்கும்.

வட்டி உயரும் போது மக்கள் செலவைக் குறைப்பார்கள். வாங்குவதைக் குறைக்கும் போது பணவீக்கம் குறையும்.

தேவை உயர்ந்தால் விலை உயரும், தேவை குறைந்தால் விலை குறையும்.

Demand and Supply.

இது தான் ரெப்போ வட்டி மாறும் விகிதங்களால் நடந்து கொண்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

அமெரிக்கா எந்த நிலையில் உள்ளது?

அமெரிக்கா வல்லரசு நாடு, பலம் வாய்ந்த நாடு, பணக்கார நாடு என்றாலும், அமெரிக்காவும் ஏராளமான கடனில், பிரச்சனைகளில் உள்ளது.

வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது, திறமையான நபர்கள் கிடைப்பதில்லை.

தற்போது டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால் மட்டுமே அமெரிக்கா சிறப்பான பொருளாதார நிலையில் இருப்பதாக அர்த்தமில்லை.

இதுவொரு பலூன் தான், எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் வெடிக்கலாம்.

அல்லது மின்சார வாகனங்கள் அதிகரிக்கும் போது, டாலர் பொதுவான கரன்சியாக இருப்பது குறையும் போது அமெரிக்கா சிக்கலுக்குச் செல்லும்.

எனவே தான் டாலருக்கு ஆபத்து தரும் நாடுகளை எல்லாம் ஏதாவது காரணம் கூறி அமெரிக்கா அழிக்கிறது அல்லது நெருக்கடி கொடுக்கிறது.

Vostro

மின்சார வாகனங்கள் மாற்றங்களால் Organic ஆக டாலர் தேவை குறையும்.

ஆனால், பொதுவான கரன்சியாக டாலர் இருப்பது மாற, மற்ற நாடுகள் ஏற்றுமதி இறக்குமதியை எப்படிச் செய்யப்போகின்றன என்பதைப் பொறுத்து நடக்கும்.

எடுத்துக்காட்டுக்கு இந்தியாவை எடுத்துக்கொண்டால், ரூபாயை பரிவர்த்தனைக்குப் பயன்படுத்த RBI நடவடிக்கை எடுத்து வருகிறது.

Vostro என்ற பொதுக்கணக்கை உருவாக்கி வருகிறது. 

இக்கணக்கில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் தங்கள் நாட்டுப் பணத்தைக் கொண்டே பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

டாலர் பொதுக் கரன்சியாக இருக்க வேண்டிய தேவையில்லை.

ஆனால், Fuel தேவை குறைந்தாலும் ஐரோப்பா நாடுகளுக்கு எரிவாயு (Gas) தேவை இருக்கும்.

காரணம், ஐரோப்பா குளிர் பிரதேசம் என்பதால், அதைச் சமாளிக்க Gas வாங்கி வருகின்றன, அதோடு வாகனங்களுக்கும் எரிவாயு பயன்படுத்துகிறார்கள்.

இப்பரிவர்த்தனையும் டாலரிலிருந்து குறையும் போதே டாலருக்கான தேவை குறையும்

எடுத்துக்காட்டுக்கு, ரஷ்யா ரூபிளில் பரிவர்த்தனை செய்ய நிர்பந்திக்கிறது.

பெரும்பான்மை ஐரோப்பா நாடுகள் எரிவாயுவை வாங்க டாலரை பயன்படுத்தாமல் ரூபிளை பயன்படுத்தினால், டாலர் தேவை குறையும்.

ஐரோப்பா நாடுகள் எரிவாயுக்காக ரஷ்யாவை பெருமளவில் நம்பியுள்ளன.

இவ்வாறு டாலர் தேவை குறையும் போது டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். அந்த நேரத்தில் இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்து வரும்.

இது உடனே நடக்கக்கூடியது அல்ல, காலம் எடுக்கும் ஆனால், நடக்கும்.

தங்கத்தில் பரிவர்த்தனை

டாலருக்கு பதிலாகத் தங்கத்தில் பரிவர்த்தனை செய்யலாம். இதற்கு முயன்ற (லிபியா) கடாஃபியை வழக்கம்போலத் திட்டமிட்டு அழித்தார்கள்.

யாரெல்லாம் அமெரிக்க டாலரை எதிர்க்கிறார்களோ, பயன்படுத்த மாற்று வழிகளைத் தேடுகிறார்களோ அவர்களை அமெரிக்கா அழித்து வருகிறது.

தற்போது டாலர் பரிவர்த்தனையைக் குறைக்கும் முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளது ஆனால், அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியவில்லை.

இது தான் இந்தியாவின் இன்றைய நிலை.

எனவே, எதையுமே தெரிந்துகொள்ளாமல், தமிழக ஊடகங்கள் கூறுவதை நம்பிக்கொண்டு இருப்பது முட்டாள்த்தனம்.

வெளியுறவுக்கொள்கை

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. யாருக்கும் அடிபணியாமல் தேவைகளை, பிரச்சனைகளைச் சிறப்பான முறையில் இந்தியா கையாண்டு வருகிறது எனப் பாராட்டி வருகின்றன.

இந்தியாவின் பரம்பரை எதிரியான பாக் இம்ரான் கானே இரு முறை பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு ரஷ்யா மட்டுமே உண்மையாக இந்தியாக்கு உதவிக்கொண்டுள்ளது, அவர்களுக்கும் நம் தேவை இருக்கிறது என்பதால், இணக்கமாக உள்ளது.

மற்ற நாடுகள் நம்மைப் புறக்கணிக்க முடியாததால், வேறு வழி இல்லாமல் ஆதரித்து வருகின்றன.

ஆனால், இந்தியா அனைத்து நாடுகளையும் நட்பாகவே கருதுகிறது, அனுசரித்தே செல்கிறது. யாரையும் பகைமை பாராட்டுவதில்லை.

இந்தியா

இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்கள் போலி கருத்துக் கணிப்புகளை, செய்திகளை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.

இந்தியா வறுமையில் உள்ளது போன்ற கருத்துகள் உட்பட பல கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன ஆனால், இவை எதுவுமே உண்மையில்லை.

பொய் பரப்புவதில் BBC, The Guardian, Bloomberg, The NewYork Times, The Washington Post ஆகிய ஊடகங்கள் முன்னணி வகிக்கின்றன.

Recession வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இப்பிரச்சனையில் உலக நாடுகளோடு இந்தியாவும் பாதிக்கப்படலாம்.

ரஷ்யா மீதுள்ள ஈகோ / போட்டி காரணமாக சொந்த மக்களை அமெரிக்க, ஐரோப்பா நாடுகள் வதைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், தன் மக்களை இந்தியா காப்பாற்றிக்கொண்டுள்ளது.

உலகநாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது இந்தியாவில் மட்டும் உயரவில்லை காரணம், வளர்ந்த நாடுகளின் எதிர்ப்பை மீறிச் சொந்த மக்களின் நலனுக்காக ரஷ்யாவிடம் குறைந்த விலையில் இந்தியா வாங்கியது.

இது எதுவுமே தெரியாமல் இந்தியாவை விமர்சித்துக்கொண்டு இருப்பது அறிவீனம்.

கொஞ்சமாவது நாட்டின் மீது பற்றுக் கொள்ளுங்கள். அதற்கு இந்தியா முழுத்தகுதியானதே.

நிர்மலா சீதாராமன் கூறிய ‘இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை, மாறாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது‘ என்ற கருத்து 100% சரியே.

ஒவ்வொரு துறை பற்றியும் ஒரு தொடர் எழுதும் அளவுக்கு, சாதனைகள் உள்ளது ஆனால், இவை எதுவுமே புரியாமல் தமிழக ஊடகங்கள் தரும் பொய் செய்திகளை நம்பி இந்தியாவை / மோடியைத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

Believe it or not! India is ROCKING under Modi's leadership. Massive transformation is happening in India. I'm sure you will see the difference soon.

CASE closed.

கொசுறு

உலகில் இரு முட்டாள்கள் ஆபத்தானவர்கள். ஒன்று கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள், இரண்டாவது எதிர்ப்பவர்கள்.

சந்தேகம் என்றால், இணையம் செல்லுங்கள் தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது, படித்துத் தெளிந்து கொள்ளுங்கள். 

நான் உட்பட யார் கூறுவதையும் நம்ப வேண்டாம்.

உங்கள் கருத்துக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், கிணற்றுத்தவளையாகவே இருக்க முடியும்.

எப்படிப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்கள்?!

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவும் உலக நாடுகளும்

அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

RuPay வளர்ச்சியால் கதிகலங்கும் Master & Visa நிறுவனங்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. சமூக வலைத்தளங்களிலும், வாட்சப்பில் வரும் துணுக்குகளை மட்டும் படித்து விட்டு இது சொத்தை, அது நோட்டை என்று எண்ணுபவர்களுக்கு இந்த கட்டுரையின் ஆழம் நிச்சயம் விளங்காது.. உண்மைய சொல்லப்போனால் இந்த தலைமுறையினருக்கு பொருளாதார விஷியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் இருப்பது இல்லை..

    எந்த நிகழ்வையும் ஒரு சாதாரண செய்தியாக ஜஸ்ட் லைக் தட்.. எளிதில் கடந்து விடுகின்றார்..இந்த கட்டுரையின் மூலம் நானும் தெரியாத சில விஷியங்களை தெரிந்து கொண்டேன்.. மிகவும் ஆழமாக அலசி விவரித்து எழுதி இருக்கீங்க கிரி.. சமீப நாட்களில் நீங்கள் எழுதியதில் இதை மிக சிறந்த பதிவாக எண்ணுகிறேன்.. வாழ்த்துக்கள்..

    டாலரின் மதிப்பு மட்டும் ஏன் உயர்ந்து கொண்டே செல்கிறது?
    சமீபமாக அமெரிக்க டாலர் உயர்வு ஏன்?
    ரெப்போ வட்டி என்றால் என்ன?
    அமெரிக்கா எந்த நிலையில் உள்ளது?
    Vostro
    தங்கத்தில் பரிவர்த்தனை
    வெளியுறவுக்கொள்கை

    மேற்குறிப்பிட்ட உட் தலைப்புகளை நீங்கள் விவரித்த விதம் எளிமையாகவும், விவரமாகவும், தெளிவாகவும் இருந்தது மிகவும் சிறப்பு.. குறிப்பாக அமெரிக்காவின் தற்போதைய நிலையை பற்றி குறிப்பிட்டது உண்மையில் மாஸ்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “உண்மைய சொல்லப்போனால் இந்த தலைமுறையினருக்கு பொருளாதார விஷியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் இருப்பது இல்லை.”

    உண்மை யாசின்.

    பெரியவர்களுக்கே ஆர்வம் இல்லாமல், எதையும் சரி பார்க்காமல் செய்திகளில் வருவதை அப்படியே நம்பி பேசுகிறார்கள், சலிப்பாக உள்ளது.

    “எந்த நிகழ்வையும் ஒரு சாதாரண செய்தியாக ஜஸ்ட் லைக் தட்.. எளிதில் கடந்து விடுகின்றனர்”

    சரியா சொன்னீங்க.

    “மிகவும் ஆழமாக அலசி விவரித்து எழுதி இருக்கீங்க கிரி.. சமீப நாட்களில் நீங்கள் எழுதியதில் இதை மிக சிறந்த பதிவாக எண்ணுகிறேன்.. வாழ்த்துக்கள்..”

    நன்றி யாசின் 🙂 .

    இக்கட்டுரைக்காக பல கட்டுரைகளை, தகவல்களைப் படித்தேன். நண்பனிடம் பலமுறை விவாதித்து சரிபார்த்துள்ளேன்.

    நாமும் தவறான தகவல்களைக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக.

    “மேற்குறிப்பிட்ட உட் தலைப்புகளை நீங்கள் விவரித்த விதம் எளிமையாகவும், விவரமாகவும், தெளிவாகவும் இருந்தது மிகவும் சிறப்பு.”

    உங்கள் பாராட்டுக்கு நன்றி யாசின்.

    இக்கட்டுரை வழக்கமான கட்டுரைகள் போல அல்லாமல் பலமுறை படிக்கப்பட்டு, திருத்தப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது.

    எனவே, உங்கள் பாராட்டுக்குத் தகுதியான கட்டுரையே! 🙂 .

    இது போன்ற உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த மற்ற தகவல்களைப் பின்னர் கட்டுரையாக எழுதும் திட்டமிட்டுள்ளேன்.

    இதற்காக நிறைய படித்துப் பல தகவல்கள் தெரிந்து கொண்டது மகிழ்ச்சி.

    எனக்குத் தெரிந்ததை பொய் கலக்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here