பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடனை Waive-off Write-off செய்வது சர்ச்சையாக உள்ளது. Image Credit
Waive-off Write-off
Waive-off Write-off க்கும் வித்தியாசம் புரியாமல் அல்லது புரிந்தும் புரியாதது போல ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்.
இதனால், சராசரி மக்களும் நடுவண் அரசை விமர்சித்து வருகின்றனர்.
தவறு செய்தால் விமர்சிப்பதில் தவறில்லை ஆனால், தவறாகப் புரிந்து கொண்டு விமர்சிப்பது சரியான ஒன்றல்ல.
Waive-off
- Waive-off என்பது வாங்கிய கடனை வங்கியோ நிதி நிறுவனங்களோ முற்றிலும் தள்ளுபடி செய்வது.
- இவ்வாறு செய்வதால் வழக்கு எதுவும் கிடையாது. எனவே, கடன் வாங்கியவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
- இதன் பிறகு வங்கியோ, நிதி நிறுவனமோ கடன் பெற்றவரின் மீது சட்ட நடவடிக்கைகள் எதையும் எடுக்காது.
- கடனுக்கு அடமானமாகக் கொடுத்தவை கடன் பெற்றவருக்கு வங்கியால் திரும்பக் கொடுக்கப்பட்டு விடும்.
- தள்ளுபடி செய்த வங்கிக்கு, நிதி நிறுவனத்துக்கு, அரசுக்கு நட்டம் ஏற்படும்.
- எடுத்துக்காட்டு, விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி.
Write-off
- Write-off என்பது கொடுத்த கடனைத் தற்காலிகமாக வேறு கணக்குக்கு ஒதுக்கி வைப்பது, தள்ளுபடி அல்ல.
- அதாவது, கொடுத்த கடனை வங்கியின் Balance Sheet ல் இருந்து எடுத்து, தனியாக இதற்கென்று உள்ள பராமரிப்பு கணக்குக்கு மாற்றி விடுவார்கள்.
- இதன் மூலம் வங்கியின் நிதி நிலை அறிக்கையில் இக்கடன்களைத் தொடர்ந்து காண்பிக்க வேண்டியதில்லை.
- ஆனால், மற்ற கணக்கில் கடன் கொடுத்தவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுக் கொடுத்த கடன் வசூலிக்கப்படும்.
- எடுத்துக்காட்டுக்கு விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களுக்குக் கொடுத்த கடன் பெரும்பாலானவை வசூலிக்கப்பட்டு விட்டன.
- மீதியையும் வசூலிக்கச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுருக்கமாக, Write-off என்பது வங்கியின் நிதி நிலை அறிக்கையிலிருந்து பிரிக்கப்பட்டு, வேறு கணக்குக்கு மாற்றப்படுவதாகும்.
இவ்வாறு செய்தாலும், கடன் பெற்றவரிடம் தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடன் வசூலிக்கப்படும்.
Balance Sheet
வங்கியின் Balance Sheet / நிதி நிலை அறிக்கையில் தாமதமாகும் கடன்களைத் தொடர்ந்து காண்பித்து வருவது, வங்கிக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
- Write-off செய்யவில்லையென்றால், தாமதமாகும் வாராக்கடனுக்கு ஈடான பணத்தை வங்கியின் இருப்பிலிருந்து ஒதுக்க வேண்டும்.
- முறையற்ற கணக்குகளைத் தொடர்வது பங்கு சந்தையில் பங்குதாரர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
- வங்கிக்கு RBI கொடுக்கும் கடன் விகிதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
- இவையல்லாது Balance Sheet ஆய்வு செய்து தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் மதிப்பெண்களில் (Rating) இழப்பு ஏற்படும்.
- எனவே, Balnace Sheet லிருந்து வாராக்கடன்கள் வேறு இடத்துக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டு, பொறுமையாகச் சட்டத்தின் துணையுடன் வசூலிக்கப்படும்.
இவற்றை முறைப்படுத்துவது வங்கியின் நிதி நிலை அறிக்கையைச் சரியாகக் காட்ட உதவுவதோடு வாராக்கடனுக்காகத் தனியாக நிதி ஒதுக்காமல், அதை வேறு தேவைகளுக்கு வங்கி பயன்படுத்த முடியும்.
கொசுறு
திவால் சட்டம் வந்த பிறகு, கடுமையான சட்ட விதிமுறைகளால், கடனை வாங்கி ஏமாற்றுவது பெருமளவில் குறைந்து விட்டது.
இன்னொருவகையில் கூறுவதென்றால், வங்கியில் கடனை வாங்கினால் திரும்பச் செலுத்தியே ஆக வேண்டும்.
இது பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
மிகவும் எளிமையாகவும், புரியும் படியும் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி கிரி..
நன்றி யாசின் 🙂