மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வந்தே பாரத் ரயில் பயணம் குடும்பத்துடன் செல்லத் திட்டமிட்டுப் பின்னர் தனிப்பட்ட காரணங்களால் செல்ல முடியாததால், சென்னையிலிருந்து காட்பாடி வரை சென்று வந்தேன். Image Credit
வந்தே பாரத்
இந்தியாவின் மிக வேகமான ரயிலாக வந்தே பாரத் அமைந்துள்ளது ஆனால், சென்னை மைசூரு வழித்தடத்தில் வளைவுகள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் முழுமையான வேகத்தில் செல்வதில்லை.
விரைவில் பிரச்சனைகள் களையப்பட்டு முழுமையான வேகத்தை (160 கிமீ) எட்டும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில் எப்படியுள்ளது?
- பெட்டிகளில் தானியங்கி கதவுகளாக உள்ளது. ரயில் புறப்படும் முன் கதவு தானாகவே மூடிக்கொள்கிறது.
- எனவே, தாமதமாக வந்து தாவுவது இனி முடியாது.
- 3+2 & 2+2 இருக்கைகளுள்ள பெட்டிகள் உள்ளன. நான் பயணித்த ரயிலில் C1 முதல் C14 வரை பெட்டிகளும் E1 & E2 (2+2) பெட்டிகளும் இருந்தன.
- இந்திய மற்றும் மேற்கத்திய பாணி கழிவறைகள் எதிரெதிரே உள்ளன. கதவு மற்றும் கைப்பிடி பயன்படுத்த எளிதாக உள்ளன.
- விமானத்தில் இருப்பது போல அமைப்பில், காற்றின் மூலம் (flush) உள்ளிழுக்கப்படுகிறது. Wash Basin, Tissues உள்ளன.
- கழிவறைக்கும் பெட்டிக்கும் இடையே ஒரு தானியங்கி கதவுள்ளது (Auto open close).
- ஒவ்வொரு இருக்கையின் கீழேயும் USB, Plug Point உள்ளன, இவை இடைஞ்சல் இல்லாமல் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
- முன்புற இருக்கையில் சிறிய வகைப் பையை மாட்டிக்கொள்ள முடியும்.
- அறிவிப்புகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இருந்தது (ஒளி & ஒலி அறிவிப்புகள்).
- ஒலி அறிவிப்பு தெளிவாக இல்லை (C3), கரகரப்பாக இருந்தது. கேட்க எரிச்சலாக இருந்தது. புது ரயிலில் இது போன்ற மோசமான தரம் எதிர்பாராதது.
- கால் வைக்கப் போதுமான இடமுள்ளது.
- உணவை வைத்துக்கொள்ள முன்புற இருக்கையின் பின்புறம் உள்ள தட்டு வசதியாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது.
- AC குளிர் சரியான அளவில் இருந்தது.
- பெட்டிகளை மேலே வைத்துக்கொள்ள விமானத்தில் இருப்பது போல அகலமான இடமுள்ளது. எனவே, தலை மீது விழுந்து விடுமோ என்ற பயமில்லை.
- பயணிக்கும் பெரும்பாலானவர்களிடம் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கிறோம் என்ற மகிழ்ச்சி மற்றும் பெருமையைக் காண முடிந்தது.
- காலையில் ரயில் கிளம்பும் முன் செல்ஃபி எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகமிருந்தது. செல்ஃபி எடுக்க விரும்பாத நானும் எடுத்துக்கொண்டேன் 🙂 .
- சென்னை சென்ட்ரலில் முதல் பெட்டியாக C14 இருந்தது, C1 கடைசிப் பெட்டி.
வந்தே பாரத் ரயில் வேகம்
- முன்னரே குறிப்பிட்டபடி முழுமையான வேகத்தில் செல்லவில்லை, அதிகபட்சம் 110 கிமீ.
- ரயிலின் உள்ளே இருந்து பார்க்கும் போது வேகம் தெரிவதில்லை.
- மிகக்குறைந்த அளவிலேயே அதிர்வுகள் உள்ளன. வெளி சத்தம் உள்ளே கேட்பதில்லை.
- வழக்கமாக அருகே வேறு விரைவு ரயில் சென்றால், அதிகச் சத்தம் இருக்கும் ஆனால், இதில் அப்படியெதுவும் கேட்கவில்லை.
- தொல்லையாக இருந்தது கழிவறை Flush சத்தம் மட்டுமே! காற்றாக உள் இழுப்பதால், அதன் சத்தம் அமைதியான இடத்தில் தொந்தரவாக இருந்தது.
- பனி மூட்டம் காரணமாகச் சில இடங்களில் வேகம் குறைந்தே சென்றது.
- காட்பாடிக்கு 15 நிமிடங்கள் தாமதமாகவே சென்றது. அடுத்த 10 நிமிடங்களில் சதாப்தி வந்து விட்டது.
பணியாளர் சேவை
- பணியாளர்கள் சீருடையுடன் உள்ளார்கள்.
- ரயில் கிளம்பும் முன் நடைமேடை பகுதி கண்ணாடி மட்டும் துடைக்கப்படுகிறது.
- ரயில் கிளம்பியவுடன் தண்ணீர் பாட்டில், நாளிதழ், பிஸ்கட், காஃபி பவுடர் கொடுக்கப்படுகிறது. சுடுதண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.
- காட்பாடி தாண்டியவுடன் காலை உணவு கொடுக்கப்படுகிறது.
- கவனித்தவரையில் பணியாளர் சேவை திருப்திகரமாகவே இருந்தது.
காட்பாடி ரயில் நிலையம்
காலையில் 8.30 மணிக்குக்கூடக் கொடைக்கானல், ஊட்டி போலப் பனி மூட்டமாக இருந்தது வியப்பளித்தது.
காட்பாடி நகரம் டிஜிட்டல் இந்தியாவில் 7x வேகத்தில் வளரும் நகரமாக மாறியுள்ளதாகக் கூகுள் பரிந்துரைத்த செய்தி கூறியது.
ரயில் நிலையத்தில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டேன், UPI வசதி இருந்தது.
சென்னை செல்லப் பயணசீட்டு ₹75, அதி விரைவு ரயில் கட்டணம்.
8.30 க்குத் திருவனந்தபுரம் அதி விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறிக்கொண்டேன், அமர இடமில்லை.
திருவனந்தபுரம் விரைவு ரயிலே 105 கிமீ வேகத்தில் செல்கிறது ஆனால், ஆட்டம் பலமாக இருந்தது 🙂 . பிடித்து நிற்கவில்லையென்றால், கீழே விழ வாய்ப்பு.
பெட்டியில் பெரும்பாலும் வட இந்தியர்களே இருந்தனர்.
அதில் ஒருத்தனுக்கு எங்கே போகிறான், எந்த நிறுத்தம் எதுவும் தெரியவில்லை, அருகில் இருந்தவரிடம் கேட்டுக்கொண்டு இருந்தான்.
என்னிடம் மொபைல் கேட்டுப் பேசி விட்டு அழைத்த எண்ணை உஷாராக நீக்கி விட்டுக் கொடுத்தான். இதில் எல்லாம் விவரமா இருக்கானுங்க.
ஆனால், அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவன் அழைத்த அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது ஆனால், எடுக்கவில்லை.
அந்தப் பையன் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு இருந்தான், இவன் அப்படியே பேசிட்டுப் போனை கீழே போட்டுவிட்டால் என்ன செய்வது என்று கொடுக்கவில்லை.
அரக்கோணம் வந்த பிறகு இறங்கி புறநகர் ரயிலில் ஏறிக்கொண்டேன்.
கொசுறு 1
ரயில் பாதையில் வரும் மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதுவதால் ஏற்படும் சேதத்தைச் சிலர் கிண்டல் செய்கிறார்கள்.
அடிப்படை புரியாதவர்களே இப்படிப் பேச முடியும்.
வந்தே பாரத் ரயில் வடிவமைப்பு எடையைக் குறைத்து வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. காரணம், கூடுதல் எடை, வேகத்தைக் குறைக்கும்.
எனவே தான் அதிக எடையுள்ள இரும்பால் செய்யப்பட்ட முகப்பை வைக்காமல், வேகத்துக்காகவும், எடை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதோடு, அதன் உள்ளே இருப்பது உறுதியான இரும்பே, மேற்புறம் அழகுக்காகவும், காற்றைக் கிழித்து வேகமாகச் செல்ல பைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் தரமற்றது என்பதில்லை.
வழக்கமான ரயில்களில் உள்ளது போலவே வைக்க எவ்வளவு நேரம் ஆகி விடப்போகிறது?! இதை யோசிக்க மாட்டார்களா?!
மாடுகள் குறுக்கே செல்வதைத் தடுக்க வேலி அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க மற்ற ரயில்களிலும் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன ஆனால், வந்தே பாரத் மட்டுமே விமர்சிக்கப்படுகிறது.
யார் என்ன கூறினாலும், வந்தே பாரத் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகிறது.
கொசுறு 2
மேற்கு வங்கத்தில் 7வது வந்தே பாரத் ரயில் துவங்கப்பட்டதிலிருந்து இரண்டு முறை கற்கள் வீசப்பட்டுக் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் யார் என்று அறியப்பட்டுக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சியை, புகழை விரும்பாதவர்களால் மட்டுமே வந்தே பாரத் ரயிலைக் கிண்டலடிக்க, சேதப்படுத்த முடியும்.
கொசுறு 3
அடுத்ததாக வந்தே பாரத் ரயிலில் படுக்கும் வசதி வரப்போகிறது.
இந்தியா முழுக்க உள்ள 1950 / 60 களில் வடிவமைக்கப்பட்ட ரயில்களை வந்தே மெட்ரோ மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களால் மாற்றப்போகிறார்கள்.
1000 ரயில் நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 85% க்கும் மேல் மின்சாரப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2023 வருடத்தில் 100% முடிந்து விடும்.
ரயில்வே துறையில் நடந்து வரும் மாற்றங்கள் அளப்பரியது. இதுபற்றிப் பின்னாளில் விரிவாக எழுதுகிறேன்.
இந்திய ரயில்வே துறையில் நடந்து வரும் மாற்றங்களுக்கும், வளர்ச்சிகளுக்கும் காரணமான, பிரதமர் மோடி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
தொடர்புடைய கட்டுரைகள்
ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
வந்தே பாரத் ரயில் பயண அனுபவங்கள் பதிவு அருமையாக இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் பயணிப்பேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின்
சமீப காலத்தில் உங்களுடைய சிறிய கருத்து. வேலையாக இருந்தீர்களோ! 🙂 .