GST (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. இதில் விதிக்கப்பட்டுள்ள வரிச் சதவீதங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் சேவை வரி அவசியமானது என்பது என் கருத்து. Image Credit
வரிச் சதவீதங்களில் பலருக்கும் இருக்கும் மாற்று கருத்து எனக்கும் உள்ளது. குறிப்பாக இதற்கு ஏன் 5%? இதற்கு ஏன் 18%? இதற்கு ஏன் 28%? என்ற கேள்விகள்.
அதிகபட்சம் 28% வரி
அதோடு அதிகபட்சம் 28% வரி என்பது மிக அதிகம்.
வளர்ந்த நாடுகளில் கூட இவ்வளவு அதிக வரிகள் இல்லை. நான் வரிக்கு எதிரானவன் அல்ல ஆனால், வசூலிக்கப்படும் வரி வீணாக்கப்படுவதே எரிச்சலுக்குக் காரணம்.
மற்ற நாடுகளில் வரிகள் அதிகம் இருந்தாலும், மக்களுக்கு அரசு செய்து கொடுக்கும் வசதிகள் ஏராளம் ஆனால், இந்தியாவில் அவ்வாறு இல்லை.
இங்கே ஒரே ஒரு பிரச்சனை மற்ற நாடுகளைப் போல வரிக் கட்டுபவர்கள் எண்ணிக்கை இல்லை, மிகக் குறைவு. GST வந்ததால் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம்
வரியைக் கட்டாமல் ஏமாற்றுவது எப்படித் தவறான செயலோ அதே போல மக்கள் வரியை அரசாங்கம் வீணடிப்பதும்.
கண் முன்னே எத்தனை கொள்ளை? எத்தனை வீணடிப்பு?! இதைப் பார்க்கும் பொதுமக்களுக்கு எப்படி நேர்மையாக வரி கட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும்?!
இவனுக கொள்ளையடிக்க, திருட, மகிழ்ச்சியாக, சொகுசாக இருக்க நாம் கடினப்பட வேண்டுமா?! என்ற எண்ணமே மேலோங்கும்.
வரி குறித்து மாற்றுக் கருத்துகள் இருப்பினும், நான் GST வரி விதிப்பை ஆதரிக்கிறேன். தற்போது சிரமமாக இருந்தாலும் இது பல்வேறு நடைமுறை சிக்கல்களைக் களைந்து, எதிர்காலத்தில் நிச்சயம் அனைவருக்கும் பலனளிக்கும்.
GST வரி குறித்துச் சிறு விளக்கம்
GST என்பது ஒரே பொருளுக்குப் பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தி ஒரே வரியாகக் கொண்டு வருவது.
இதன் மூலம் மறைமுக விலையுயர்வை கட்டுப்படுத்துவது.
உதாரணத்துக்கு,
மொத்த வியாபாரி 100₹ மதிப்புள்ள பொருளைச் சில்லறை வியாபாரியிடம் லாபம் 10₹ வைத்து 110₹ + வரி 10₹ உடன் 120₹ க்கு விற்கிறார்.
இவர் தான் கொடுத்த 100₹ + 10₹ வரியில் 10₹ GSTIN கணக்கு மூலம் வரியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு இவரிடம் வாங்குபவரும் GSTIN வைத்து இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது சில்லறை வியாபாரி ரசீது கொடுக்காமல், நம்மிடம் விற்கும் போது அவரால் அவர் மொத்த வியாபாரியிடம் கொடுத்த வரியைத் திரும்பப் பெற முடியாது.
நடைமுறை உதாரணம்
தற்போது தண்ணீர் கேன் 30 ரூபாயில் இருந்து 40 ருபாய் ஆகி இருக்கிறது.
மொத்த வியாபாரியிடம் இருந்து வாங்கும் போது 18% வரி என்ற அளவில் 4.50₹ வரி கொடுத்து 34.50₹ க்கு வாங்கி இருப்பார்.
நம்மிடம் விற்கும் போது ரசீது கொடுப்பதில்லை.
எனவே, அவர் மொத்த வியாபாரியிடம் கொடுத்த வரி 4.50₹ யைத் திரும்பப் பெற முடியாது. எனவே அவர்களுக்குக் கொடுத்த வரியை நம்மிடம் கூடுதலாகச் சேர்த்து 40₹ வசூலிக்கிறார்கள்.
இவர் GSTIN வைத்து முறையாக விற்பனை செய்து இருந்தால், 34.50₹ தான் நமக்கு வந்து இருக்கும் ஆனால், நாம் கூடுதலாகக் கட்டவேண்டிய சூழ்நிலை.
Goods and Services Tax Identification Number (GSTIN)

20 லட்சம் அளவுக்கு ஆண்டுப் பரிவர்த்தனைகள் செய்பவர்களுக்கு GSTIN கட்டாயமில்லை. Image Credit – cleartax.in
ஆனால், மொத்த வியாபாரி தான் கொடுத்த வரியைத் திரும்பப் பெற மற்றும் கணக்கு வழக்குகளைச் சரி வரக் காட்ட சில்லறை வியாபாரியிடம் GSTIN யை நிர்பந்திக்கிறார்.
GSTIN இருந்தால் மட்டுமே பொருட்களை விற்பேன் என்று கூறுகிறார்.
எனவே, பெயரளவில் 20 லட்சத்துக்குக் கீழ் ஆண்டுப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு GSTIN தேவையில்லை என்றாலும், மறைமுகமாக அவர்களுக்கும் தேவை என்ற நெருக்கடி ஏற்படுகிறது.
28% அதிகபட்ச வரி என்பது அதிகம்
அதிகபட்ச வரி 28% என்பது நம்மைப் போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு மிக மிக அதிகம். காங் அரசு அதிகபட்சம் 18% GST திட்டமிட்டதாகச் செய்திகளில் வந்தது.
ஆனால், இவர்கள் இருந்தால் அனைவரையும் திருப்தி செய்ய நினைத்து இன்னும் குழப்பிக்கொண்டே இருப்பார்கள், கொண்டு வந்தே இருக்க மாட்டார்கள்.
பாஜக அரசு கொண்டு வரும் ஆனால், இது போல அதிக வரிகளைப் போட்டுத் தாக்கும்.
தற்போது GSTIN கணக்கில் இணையம் வழியாகவே பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. எனவே, ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல, இருப்பினும் ஏமாற்ற முடியும்.
சமாளிக்கப் பல உள்ளடி வேலைகள் செய்ய வேண்டும், இவை பின்னாளில் சிக்கலில் கொண்டு சென்று விடலாம். எப்போதுமே அனைவரையும் ஏமாற்றி விட முடியாது, என்றாவது மாட்டுவோம்.
GST வரி விதிப்பை வரவேற்கிறேன் ஆனால்…
எனவே, GST வரி விதிப்பை நான் வரவேற்கிறேன் ஆனால், அதிகபட்சம் 28% வரி என்பதை எதிர்க்கிறேன்.
காரணம், அரசு மக்களிடையே வசூலிக்கும் வரிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு எந்த வசதியையும் ஒழுங்காகச் செய்து தருவதில்லை.
மற்ற நாடுகளில் அதிக வரி இருந்தாலும், பல்வேறு சேவைகள் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன ஆனால், இங்கே தான் வரியையும் கொடுத்து நம்மையும் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
50% க்கு மேல் வரி கட்டுகிறோம்
வருமானவரி 30%, இதன் பிறகு என்ன வாங்கினாலும், சாப்பிட்டாலும், விளையாடினாலும், திரைப்படம் பார்த்தாலும், சாலையில் சென்றாலும் அதற்கும் GST வரி என்று கிட்டத்தட்ட வருமானத்தில் 50% க்கு மேல் வரியாகவே கொடுக்கிறோம்.
ஆனால், அதற்கேற்ப தரமான வாழ்க்கை சூழல் கிடைக்கிறதா! அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா!! கட்டமைப்பு உள்ளதா!!! என்றால்… இல்லை!
கடந்த வாரம் வேலூர் சென்றோம், சாலை சுங்க கட்டணம் வசூலித்தார்கள் ஆனால், சாலை படு மோசமாக இருக்கிறது. பின் எதற்கு இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது?
வரி கட்டுபவர்களுக்காவது ஏதாவது சலுகைகள் தர வேண்டும். அப்போது தான் மக்களுக்கும் வரி கட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும். வரி கட்டுவதைப் பெருமையாக நினைப்பார்கள்.
GST குறித்த குழப்பங்கள் நீங்கி, நிலைத்தன்மை ஏற்படக் குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.
பார்ப்போம் GST எந்த அளவுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று!
கொசுறு 1
எதிர்ப்புத் தெரிவிப்பவர்களில் நியாயமான கோரிக்கைகள் இருந்தாலும், பலர் முன்பு போல ஏமாற்ற முடியாது என்ற கடுப்பே எதிர்க்கக் காரணம்.
கொசுறு 2
தமிழகத்தில் GST சதவீதத்தை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதைக் கவனித்து இருப்பீர்கள்.
அதோடு தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு போராட்டங்கள் நடைபெறுகிறது? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கும்.
1. தமிழ்நாடு உற்பத்தி மாநிலம் எனவே, போராட்டங்கள் நடைபெறுவது வழக்கமானது, வியப்படைய ஒன்றுமில்லை.
கேரளா, பீகார் போல உற்பத்தி குறைவு / அற்ற மாநிலம் அல்ல.
உதாரணத்துக்கு நதிகள் இணைப்புக்கு முயற்சி செய்தால், தமிழ்நாடு வரவேற்கும் ஆனால், கர்நாடகா, கேரளா, ஆந்திரா எதிர்க்கும், போராட்டங்கள் நடைபெறும். ஏன்?
இதற்கு பதில் கிடைத்தால், மேலே நான் கூறியதுக்கும் பதில் கிடைக்கும்.
2. அனைத்து உற்பத்தி மாநிலங்களிலும் இது போலப் போராட்டங்கள் நடைபெறுகிறது ஆனால், நமக்குத் தமிழ்நாடு செய்திகள் மட்டுமே தெரிவதால், இங்கே மட்டுமே போராட்டம் நடைபெறுவது போல ஒரு பிரம்மை ஏற்படுகிறது.
நல்ல நேர்மையான கட்டுறை.. உயர்தட்டு கார்பரேட் வியாபாரிகளை இந்த வரி எதுவும் செய்ய முடியாது..!(அம்பானியின் இலவச phone அறிவிப்பு-!! )