giriblog தள மாற்றங்களும் அறிவிப்புகளும்

4
giriblog தள மாற்றங்களும் அறிவிப்புகளும்

ளத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. எனவே, அதிகம் எழுத முடியவில்லை. Image Credit

சமூகத்தளங்கள் வழியாகத் தளத்துக்கு வந்து படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள். காரணம், படிப்பதை விடப் பார்ப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்.

இது குறித்து ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

எழுதினாலும் எழுதவில்லையென்றாலும், தினமும் கூகுள் தேடுதல் வழியாக வருபவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.

ஆனால், சமூகத்தளங்கள் வழியாக வருபவர்கள் புதிய கட்டுரைகள் வந்தால் மட்டுமே வருவார்கள்.

என்ன எழுதி இருக்கிறேன் என்று பார்க்க தினமும் நேரடியாக வருபவர்கள் எண்ணிக்கையும், கூகுள் தேடுதல் வழியாக வருபவர்கள் எண்ணிக்கையும் பெரிய மாற்றம் இல்லாமல் இருக்கும்.

எனவே, கூகுள் தேடுதல் வழியாக வருபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாற்றங்களைச் செய்ய வேண்டியது இருந்தது.

கூகுள் தேடல்

கூகுள் தேடல் ஒரு அற்புதமான தொழில்நுட்பம்.

பல்வேறு Algorithm கொண்டு இயங்குகிறது. தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

கட்டுரை சரியான அளவில் உள்ளதா? தரமானதாக உள்ளதா? புதுபிக்கப் படுகிறதா? படிக்க எளிதாக உள்ளதா? தளம் வேகமாக உள்ளதா?

என்பது உட்படப் பல்வேறு காரணிகளை மையப்படுத்துகிறது.

மேற்கூறியவற்றில் பொருந்தும் தளங்களின் கட்டுரைகளை அதிகளவில் தேடலில் காட்டும்.

எனவே, இதற்குத் தகுந்த மாதிரித் தளத்தை மாற்றியமைக்க வேண்டியதுள்ளது.

இது எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தளத்தை வைத்துள்ள அனைவருக்கும் பொருந்தும்.

என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

giriblog தளத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்பை விட வேகமாக இருப்பது, படிப்பதற்கு எளிதான வடிவமைப்பு ஆகியவற்றை உணர்ந்து இருக்கலாம்.

இவற்றோடு பழைய பலரும் படிக்காத, புறக்கணிக்கப்பட்ட கட்டுரைகள் அதிகம் இருந்தால், கூகுள் தரத்தைக் குறைக்கும்.

அதோடு கூறப்பட்டுள்ள தகவல்கள் Outdated ஆக இருந்தாலும், தரத்தைக் குறைக்கும்.

எனவே, கிட்டத்தட்ட 150+ கட்டுரைகளை நீக்கியுள்ளேன். பெரும்பாலும் இவை தொழில்நுட்ப கட்டுரைகள்.

இவை படிக்கும் போது தற்காலச் சூழ்நிலைக்கு அவசியமற்றதாக இருக்கும். எனவே, இவற்றால் யாருக்கும் பயனில்லை.

கஷ்டப்பட்டு எழுதியதை நீக்குவது வருத்தம் என்றாலும், நல்லதுக்கே எனும் போது சமாதானமாகிறது.

எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் போன்றவற்றை முடிந்தவரை சரிசெய்துள்ளேன் ஆனால், அனைத்தையும் சரி செய்ய முடியவில்லை, அதிக நேரம் எடுக்கிறது.

நிழற்படங்கள் சிலவற்றை மேலும் ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. விரைவில் நேரம் கிடைக்கும் போது செய்து விடுவேன்.

ஆர்வம்

தொழில்நுட்பத்தில் ஆர்வம் என்பதால், இது குறித்து நிறையப் படித்துத் தெரிந்து கொண்டு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன், சுவாரசியமாக உள்ளது.

இதுவரை வெகு சில பிரச்சனைகளுக்கே அடுத்தவரை நாடியுள்ளேன். பெரும்பாலானவற்றை நானே தேடி சரி செய்து கொண்டேன்.

தற்போது தளத்தில் உள்ள அனைத்துக்கட்டுரைகளையும் திருத்தம் செய்துள்ளேன். எனவே, பழைய கட்டுரைகளும் படிக்க எளிதாக இருக்கும்.

இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, கூகுள் தேடல் மூலமாக வருபவர்களின் எண்ணிக்கை 200% உயர்ந்துள்ளது.

எனக்குக் கட்டுரை எழுத எடுக்கும் நேரத்தை விட, அதற்குப் பொருத்தமான படத்தைத் தேர்ந்தெடுக்கவே அதிக நேரமெடுக்கும் 🙂 .

மேலும் தெரிந்து கொள்ள –> Google Page Experience | இணையத் தரத்தை மேம்படுத்தும் கூகுள்

கொசுறு

முன்பெல்லாம் ஒரு கட்டுரையின் கீழே கொசுறு என்று எழுதுவேன்.

இதற்கு நன்கு வரவேற்பு இருந்தது ஆனால், பலரும் கட்டுரையை விட இதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்று புரிகிறது.

இதைத் தாமதமாக உணர்ந்தேன். இதன் பிறகு கொசுறு கொடுப்பதை நிறுத்தி விட்டேன். கொடுத்தாலும் அது கட்டுரைக்குச் சம்பந்தம் என்றால் மட்டுமே.

இதுவரை எழுதியதில் புரிந்து கொண்டது, Evergreen கட்டுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று.

இனி வரும் கட்டுரைகள் இதை மனதில் வைத்தே இருக்கும். தற்காலிக கட்டுரைகள் தவிர்க்க முடியாமல் எழுதினாலும் பின்னர் பயனில்லை என்றால் நீக்கப்படலாம்.

பழைய கட்டுரைகளைத் திருத்தும் போது சில சுவாரசியமான கட்டுரைகள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஐந்து கட்டுரைகளை மட்டும் கொடுத்துள்ளேன்.

விருப்பமுள்ளவர்கள் படித்துப்பாருங்கள் 🙂 .

  1. “கோலங்களும் அரசியும்” என்னைப் படுத்தும் பாடு 🙁
  2. நேஷனல் ஜியாகரஃபிக் மிரட்டல் படங்கள்
  3. காமன்வெல்த் பெருமைகள்!
  4. இந்த கேலாங் ரோடு எப்படிப் போகணும்?
  5. நீ அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டே!

தொழில்நுட்பக்கட்டுரைகளில் நான் கூறியது அல்லது எதிர்பார்த்தது பல நடந்துள்ளது. இது பற்றி வேறொரு நாளில் விளக்கமாக எழுதுகிறேன்.

சலிப்பே இல்லை

இவ்வளவு வருடங்களாக எழுதுகிறேன் ஆனால், சலிப்பே வரவில்லை.

எழுத்தோடு, தொழில்நுட்பமும் பிடிக்கும் என்பதால், இரண்டும் கலந்து இருப்பதால் விருப்பமானதாக உள்ளது.

இன்னும் பல வருடங்களுக்குச் சலிப்பு வரும் என்று தோன்றவில்லை 🙂 . காரணம், எழுத அவ்வளவு உள்ளது.

அதே போலக் காலத்துக்குத் தகுந்த மாதிரி எழுத்தையும், தளத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பேன்.

விமர்சனங்களை வரவேற்கிறேன். ஏனென்றால், பலரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டே மாற்றங்களைச் செய்து வருகிறேன்.

தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களாலே தொழில்நுட்ப ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தளத்தை மேம்படுத்த முடிகிறது. 

தொடர்பில் இருங்கள்.

அன்புடன்

கிரி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. அருமை திரு. கிரி அவர்களே
    காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றங்கள் மிகவும் அவசியம் . உணர்ந்து அதைக் கொண்டு வந்தது பாராட்டுக்குறியது. கிட்டதட்ட 5 வருடங்களுக்கும் மேலாக தங்களின் பதிவுகளை படித்து வருகிறேன். நடு நிலையோடு தாங்கள் கூறும் கருத்துக்கள் அருமை. தொழில்நுட்ப கட்டுரைகளும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் தந்து வருகிறீர்கள். இனியும் தங்களை தொடர்ந்து வருவேன். மிகவும் நன்றி. வணக்கம்

  2. கிரி, உண்மைய சொல்லப்போனால் எனக்கு 2009/2010 காலகட்டங்கள் வரை இணையத்தில் இது போல BLOG இருப்பது தெரியாது..காரணம் அலுவலகத்தில் என் விருப்பம் போல் இணையத்தை பயன்படுத்த முடியாது.. அலுவலக பணிக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.. என்னோட தனிப்பட்ட ஈமெயில் கூட பயன்படுத்த முடியாது..

    வேலைக்கு புதிது என்பதால் நானும் இதை பெரிதாக எண்ணவில்லை.. ஆனால் நாட்கள் செல்ல,செல்ல உயரதிகாரியிடம் 12 நேரத்திற்கு மேல் பணி.. ஓய்வு நேரத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை?? என்ற போது இணையம் பயன்படுத்த அனுமதி தரப்பட்டது.. அந்த சமயத்தில் நான் Email, தினசரி செய்திகளையும், Cricinfo தளத்தையும் மட்டும் பார்வையிடுவேன்..

    அந்த சமயத்தில் தான் ஏதாவது தமிழ் புத்தகங்களை படிக்கலாம் என்று இணையத்தில் துழாவும் போது, வைரமுத்துவின் தண்ணீர் தேசம், பிரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை, சேரனின் டூரிங் டாக்கீஸ்.. என pdf இல் டவுன்லோட் செய்து படித்தேன்.. பின்பு படிப்படியாக எஸ்.ராமகிருஷ்ணன் சார், முத்துலிங்கம் ஐயா,ஜெயமோகன் இவர்களின் தளங்கள் எனக்கு அறிமுகமாயின..

    இதில் எஸ்.ரா வையும், முத்துலிங்கம் ஐயாவையும் மிகவும் விரும்பி படித்தேன்.. தற்போதும் படித்தும் வருகிறேன்..ஜெயமோகன் எழுத்துக்கள் என்னை கவர்ந்தாலும் அவற்றை உள்வாங்கி கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவு இருப்பதாக உணரவில்லை..

    இந்த காலகட்டங்களில் இணையத்தில் உங்களின் அறிமுகம் கிடைத்தது. (எப்படி என தற்போது வரை தெரியவில்லை) சில பதிவுகளை படிக்கும் போதே உணர்ந்தேன்.. நிச்சயம் இவர் நம்மை போன்ற ஒரு எளிய மனிதர்.. அதனால் தான் பதிவுகள் மிகவும் எளிமையாகவும், இயல்பாகவும் இருக்கிறது.. இங்கு தான் என் பயணம் உங்களுடன் தொடங்கியது.. எதிர்காலத்திலும் தொடரும்..

    என்னை ஆரம்பத்தில் வெகுவாக கவர்ந்த நிகழ்வு.. 2011 கிரிக்கெட் உலககோப்பைக்கு முன் உங்களிடம் சிறு பிள்ளை தனமாக ஒரு பதிவில் ஆஸ்திரேலியா அணிக்காக நான் பேசி இருப்பேன்..(என்னையும் யாரோ ஒருவர் ஆதரித்து பேசி இருப்பார்) நீங்களும் எனக்கு பதிலளித்து இருப்பீர்கள்..நான் மொக்க ஆங்கிலத்தில் உங்களிடம் மல்லு கட்டி இருப்பேன்.. சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த பதிவை படிக்கும் போது மிகவும் நகைச்சுவையாக இருந்தது..

    உங்களை தொடர ஆரம்பித்த பின் வேறு யாரையும் தொடர விருப்பம் வரவில்லை.. குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை.. நான் தொடர்ச்சியாக பின்னுட்டம் இடுவதும் உங்கள் தளத்தில் மட்டும் தான்.. நிச்சயம் இதற்கான காரணம் என்னை நீங்கள் அனுமதித்து தான்.. உங்கள் அனுமதி இல்லாவிடின் ஒரு பொது வெளியில் நான் என் கருத்தை உங்கள் தளத்தில் கூற இயலாது.. இத்தனை ஆண்டுகளில் நீங்கள் என்றுமே என்னை மட்டும் அல்ல யாரையும் நீங்கள் கட்டுப்படுத்தியது கிடையாது.. இந்த நிகழ்வு என்னை உங்களுடன் இன்னும் நெருக்கமாகியது..

    ஆரம்பத்தில் உங்கள் பதிவுகளை படிக்கும் போது, 100 இல் ஒருவனாக இருந்தேன்.. அப்போதெல்லாம் நிறைய நண்பர்கள் பின்னுட்டம் இடுவார்கள்.. என்னை யாரென்று தெரியப்போகிறது என்று எண்ணியும் இருக்கிறேன்.. ஆண்டுகள் செல்ல, செல்ல நிறைய பேர் படித்தாலும் பின்னுட்டம் இடுவது குறைந்து போனது..

    அந்த தருணத்திலும் எனக்கு உங்கள் பதிவுகளை படிப்பதிலோ, பின்னுட்டம் இடுவதிலோ சலிக்கவேயில்லை.. மாறாக நாட்கள் செல்ல செல்ல இன்னும் சுவாரசியம் கூடி கொண்டுதான் போனது.. உங்கள் பதிவுகள் தொடரும் வரை, என் பின்னுட்டமும் தொடரும்.. இது உங்கள் கடும் முயற்சிக்கான என்னால் முடிந்த ஒரு சிறு அர்ப்பணிப்பு…

    நீங்கள் இதில் குறிப்பிட்ட 5 கட்டுரையும் படித்து பார்த்தேன்.. ரசிக்கும் படி இருந்தது.. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!!! செம்ம!!! செம்மையா எழுதி இருக்கீங்க.. தற்போதைய தலைமுறை ரசிக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் என் சம வயது உள்ளவர்கள் நிச்சயம் ரசிப்பார்.. காத்தவராயனின் பின்னுட்டம் ரசிக்கும் படி இருந்தது.. சிங்கையின் மங்கை.. செம்ம!!!(குண்டு பயபுள்ள எப்படி கொத்து விட்டுட்டு போகுது பாரு!!! அந்த காமெடி நினைவுக்கு வந்து போனது..)

    சொல்லாததும் உண்மை புத்தகத்தில் ஒரு வரி வரும் : அவ பேசிட்டு இருக்கும் போது, கேட்டுட்டு இருக்குறதுல உள்ள சந்தோஷம் , அவளை தொடும் போது இல்லைனு!!! இது சத்தியமான உண்மை.. கிட்டத்திட்ட உங்களை போல எனக்கும் இருவேறான காதல் அனுபவங்கள் உள்ளது.. ஒன்றை மனைவியிடம் கூறி விட்டேன்.. மற்றொன்றை மனதிற்குள் வைத்து எப்போவது நினைத்து பார்ப்பதுண்டு..

    சில தினங்களுக்கு முன்பு தான் இணையத்தில் பார்த்தேன்.. தற்போது எத்தனை blog ஆக்ட்டிவாக இருக்கிறது என்று, கிட்டத்திட்ட 1000 கும் மேற்பட்ட blog குகள் ஒரு சமயம் இருத்திருக்கிறது.. தற்போது சிலது மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளது.. அதில் நீங்களும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.. உங்கள் பணி இன்னும் எதிர்காலத்தில் சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள் & பிராத்தனைகள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. அருமை தொடரட்டும் உங்கள் பணி.நல்ல நல்ல வலைப்பூக்கள் என்ன ஆனதேன்றே தெரியவில்லை. காட்சி ஊடகத்தில் உள்ள விஷயங்கள் மனதில் நிற்காமல் சென்று விடும். எழுத்து அப்படி இல்லை. பின்னூட்டங்கள் பெரும்பாலும் படிக்கும்படி பொழுது இல்லை. சில காலம் முன்பு பின்னூட்டங்களை படிப்பதே சுகமாக இருக்கும்.

  4. @விபுலானந்தன்

    நன்றி.

    நீங்கள் நன்றியுணர்ச்சி பற்றி லீ பதிவில் கூறியது இன்னும் நினைவில் உள்ளது.

    “நடு நிலையோடு தாங்கள் கூறும் கருத்துக்கள் அருமை”

    நான் நடுநிலை இல்லை ஆனால், என் மனசாட்சிப்படி எழுதுகிறேன்.

    “இனியும் தங்களை தொடர்ந்து வருவேன்.”

    நன்றி

    @யாசின்

    “எப்படி என தற்போது வரை தெரியவில்லை”

    கூகுளில் எதோ தேடும் போது வந்து இருக்கும் 🙂 .

    “சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த பதிவை படிக்கும் போது மிகவும் நகைச்சுவையாக இருந்தது”

    கட்டுரைகளைத் திருத்தும் போது இது போல பல கட்டுரைகள் கருத்துகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

    சில சுவாரசியமாக இருந்தது.

    “இந்த நிகழ்வு என்னை உங்களுடன் இன்னும் நெருக்கமாகியது..”

    மாடரேஷன் இல்லாதது கூட ஒருவகையில் நன்மை பயக்கும் போல 🙂

    “அந்த தருணத்திலும் எனக்கு உங்கள் பதிவுகளை படிப்பதிலோ, பின்னுட்டம் இடுவதிலோ சலிக்கவேயில்லை.”

    திருத்தும் போது பெரும்பாலான கட்டுரைகளில் உங்கள் கருத்து இருந்தது.

    “இது உங்கள் கடும் முயற்சிக்கான என்னால் முடிந்த ஒரு சிறு அர்ப்பணிப்பு…”

    நன்றி யாசின் 🙂

    “தற்போதைய தலைமுறை ரசிக்குமா என்று தெரியவில்லை”

    தற்போதைய தலைமுறை இன்ஸ்டாகிராம் தலைமுறை 🙂

    “ஒன்றை மனைவியிடம் கூறி விட்டேன்.. மற்றொன்றை மனதிற்குள் வைத்து எப்போவது நினைத்து பார்ப்பதுண்டு..

    சொல்லிடாதீங்க 😀

    ” தற்போது சிலது மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளது.. அதில் நீங்களும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.”

    எனக்கும் வருத்தமே! போட்டி இருந்த போது சுவாரசியமாக இருந்தது, தற்போது தனியா சாலையில் நடப்பது போல உள்ளது.

    @விஜயகுமார் நன்றி 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here