எதிர்க்கட்சி நபர்களும், கட்சி சாராத நபர்களும் பாராட்டும் ஒரு பாஜக அமைச்சர் என்றால், அது நிதின் கட்கரி தான். Image Credit
நிதின் கட்கரி
இந்தியாவின் சாலை கட்டமைப்பில் மிகப்பெரிய சாதனையை, வளர்ச்சியைக் கொண்டு வந்து மிரட்டிக்கொண்டுள்ளார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
இந்தியா முழுக்கச் சாலைகள் மூலமாக இணைத்து வருகிறார்.
வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது தங்க நாற்கரச் சாலை என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப்பெரிய இணைப்பை நடத்தினார்.
இதன் பிறகு நிதின்கட்கரி இந்திய நெடுஞ்சாலை வளர்ச்சியை எங்கேயோ கொண்டு போய்க்கொண்டுள்ளார்.
தன் துறையில் என்னெவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து வருகிறார். தன் துறை சாராத எந்தக் கருத்தையும் கூறுவதில்லை.
நிதின் கட்கரியின் சிறப்பு என்னவென்றால், ‘செயலில் வேகம், ஊழல் இல்லை, புதிய முயற்சிகள், திட்டமிடல், பணத்தைச் சேமித்தல், தெளிவான சிந்தனை‘ ஆகியவை.
சில திட்டங்களுக்கு வீணாகப் பணம் செலவாகிறது என்று IIT மாணவர்களின் ஆராய்ச்சிக்காகப் பணத்தைக்கொடுத்து அவர்கள் பரிந்துரைகள் மூலம் குறைந்த செலவில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
IIT மாணவர்களின் திறனை நம் நாட்டில் வெளிப்படையாக அறிவித்துப் பயன்படுத்தி பயனடைந்த அரசியல்வாதி நிதின் கட்கரி மட்டுமே.
கோடிகளைக் கொட்டி திறமையான IIT மாணவர்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு இந்தியா தாரைவார்த்து வருவது கசப்பான உண்மை.
FasTag
சுங்கச்சாவடிகளில் ஊழல் நடக்கிறது என்று FasTag முறையை விமர்சனங்கள் பல வந்த போதும் பிடிவாதமாக அறிமுகப்படுத்தினார்.
தற்போது முன்பு வசூலாகிய தொகையைவிடப் பல மடங்கு வசூலை நெடுஞ்சாலைச்துறை பெற்று வருகிறது.
FasTag மூலம் தமிழகத்தில் நடந்த ஊழலும் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
FasTag வசூல் மூலம் எதிர்காலத்தில் தடங்கல் இல்லாமல் புதிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளலாம், நிதி பற்றாக்குறை இருக்காது என்று கூறியுள்ளார்.
எந்தத் திட்டம் எடுத்தாலும் நிதி போதவில்லை என்று கூறும் அமைச்சர்களிடையே, எனக்குக் கூடுதலாக எந்த நிதி உதவியும் தேவையில்லை என்று கூறியவர்.
FasTag கட்டணத்தை அதிகரித்துக்கொண்டே செல்வதை நிதின் கட்கரி கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டண உயர்வு நாட்டின் பணவீக்கத்துக்கும் காரணமாக அமைகிறது.
இங்கே அதிகரிக்கும் கட்டணம், பொருட்களின் விலை உயர்வுக்கும் மிக முக்கியக்காரணமாக அமைகிறது.
நிதின் கட்கரி இப்பணத்தை வீணாக்கவில்லை, திருடவில்லை என்றாலும், மக்களைக் கட்டணம் மூலம் கசக்கி பிழிவதை நிறுத்த வேண்டும்.
சாதனைகள்
ஒரு நாளைக்கு 37 கிமீ அளவில் சாலை அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார், முன்பு ஒரு நாளைக்கு 12.7 கிமீ ஆக இருந்தது.
45 கிமீ உயர்த்தி உலகச் சாதனை செய்யவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ஸ்ரீநகர் – லே க்கு இடையே நடைபெறும் சுரங்கப்பாதை பணிகள் ₹11,000 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி என்று இருந்ததை ₹5000 கோடியாகக் குறைத்துள்ளனர்.
வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி காரணமாக, முதலீட்டுப் பணம் குறைகிறது.
பணப்பற்றாக்குறை இல்லாமல் ஒப்பந்த நிறுவனங்களுக்குத் தொகை சரியாக வழங்கப்படுவதால், ஊழல், தாமதம் இல்லாமல் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
பசுமைவழி நெடுஞ்சாலைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை எதிர்காலச் சுற்றுசூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற ஒரு சாலை தான் தமிழகத்தில் (சென்னை – சேலம் Express Way) எதிர்ப்புக் காரணமாகக் கை விடப்பட்டது.
திரும்ப இச்சாலையைக் கொண்டு வர முயற்சித்து வருகிறார்கள்.
நிதின் கட்கரி போன்ற ஒருவரை வைத்துக்கொண்டு தமிழகம் பலனைப் பெறாமல் மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பது மிக வருத்தமளிக்கிறது.
எதிர்காலம்
பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிதின் கட்கரி இந்திய தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மிகப்பெரிய அளவில் எடுத்துச் சென்று விடுவார் என்பதில் சந்தேகமில்லை.
தன் துறை பணியை Passion ஆகக் கருதி செய்து வரும் நிதின் கட்கரி போன்றவர்களே நாட்டுக்குத் தேவை.
சமீபத்தில் நடந்த விழாவில் நிதின் கட்கரி குறிப்பிட்ட தகவல் முக்கியமானது.
'அமெரிக்கா பணக்கார நாடாக இருப்பதால், இந்நாட்டுச் சாலைகள் சிறப்பாக இருக்கவில்லை. அமெரிக்கச் சாலைகள் சிறப்பாக இருப்பதால் தான், அமெரிக்கா பணக்கார நாடாக இருக்கிறது.'
என்று அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி கூறியதை நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
எனவே, சாலைகள், உட்கட்டமைப்புகள் சிறப்பாக இருந்தாலே ஒரு நகரம், மாவட்டம், மாநிலம், நாடு வளர்ச்சி பெறும்.
தற்போது புதிய சாலைகள் அமைப்பதிலேயே அதிக நிதியைச் செலவிடுவதால், ஒரு கட்டத்தில் புதிய தேவைகள் குறையும் போது அரசின் கவனம் சாலையின் தரத்தின் மீது திரும்பும் அப்போது நாம் உலகத் தரச் சாலைகளைப் பெற முடியும்.
எதிர்காலத்தில் மிகச்சிறந்த தேசிய நெடுஞ்சாலை இணைப்பை, கட்டமைப்பை இந்தியா கொண்டிருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
ரொக்கமில்லா பரிவர்த்தனை நோக்கி இந்தியா
நிதின் கட்கரி என்பதே சரியான பெயர்.
தமிழில் வடநாட்டு மக்களின் பெயர்கள் அனைத்திலும் எக்ஸ்ட்ரா கால் போட்டு விடுவார்கள். உதாரணமாக பிபின் ரவாத் என்பதே சரியான உச்சரிப்பு பெயர். திரைப்படம் பெயரிலும் இங்கே தவறாக தான் சொல்கிறார்கள். தபங் திரைப்படத்தை தபாங் என்று சொல்வார்கள்.
அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன்.