“Blog” அழிந்து வருகிறதா?

12
Blog

காலங்கள் மாற மாற மாற்றங்களும் எந்த மாற்றமுமில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Image Credit  

Blog

தற்போது இந்த மாற்றம் Blog எனப்படும் “வலைப்பூ”வில் வந்து நின்று கொண்டு இருக்கிறது. இதைப் பற்றிப் பார்க்கும் முன் இது தொடர்பான முந்தைய மாற்றங்களைப் பார்ப்போம்.

உலகம் நாளுக்கு நாள் வேகமாகிக் கொண்டே வருகிறது. எதற்கான விடையையும் விரைவில் எதிர்பார்க்கும் மனநிலை அதிகரித்து வருகிறது.

பொறுமை என்ற ஒரு உணர்வு அனைவருக்கும் குறைந்து வருகிறது. இது உலக இயற்கை.

எனவே, இது குறித்துச் சஞ்சலமடையத் தேவையில்லை. இது ஒரு இயல்பான நிகழ்வு.

ஐயையோ! இப்படியெல்லாம் நடக்கிறதே என்று புலம்பாமல் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதோடு பயணிப்பதே அனைவருக்கும் நல்லது.

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் அந்தக்காலத்தில் எவ்வளவு பிரபலமானது என்பது கிரிக்கெட் விளையாடதவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் கூடத் தெரிந்த ஒரு விசயம்.

நாளடைவில் இதை இன்னும் சுவாரசியப்படுத்த வேண்டும் என்று வந்தது “ஒருநாள் போட்டி”.

காலங்கள் மாறியது இதுவும் நீண்ட நேரம் நடப்பதாக மக்கள் சலிப்புற்ற வேளையில் அறிமுகமானது ட்வென்டி20 கிரிக்கெட்.

இது வந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட் கிட்டத்தட்ட மக்களின் வரவேற்பை இழந்து விட்டது.

இதை ரசிப்பவர்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள் என்றாலும் பெரும்பான்மையானவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத் தான் உலகம் முக்கியத்துவம் கொடுக்கிறது.

“டெஸ்ட் கிரிக்கெட்” என்ற பழமை வாய்ந்த பெருமையை இழந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது.

எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் என்பது நிறுத்தப்பட்டால் அதில் அதிர்ச்சியாக ஒன்றுமில்லை.

ஒரு தினப் போட்டிகளுக்கும் நாளை இது போல ஒரு நிலை வரலாம். இன்று ட்வென்டி20 க்கு இருக்கும் வரவேற்பு பரபரப்பு ஒரு தினப் போட்டிக்கு இல்லை என்பதை எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அதிலும் IPL வந்த பிறகு ஒருதினப் போட்டிகள் ஆர்வமாகப் பார்ப்பவர்கள் குறைந்து விட்டார்கள்.

ஆனாலும், டெஸ்ட் அளவிற்கு மோசமில்லாமல் இன்னும் ஒரு சில போட்டிகள் பரபரப்பாக நடந்து ஓட்டங்கள் எடுக்கப்பட்டு அதன் முக்கியத்துவத்தையும் சுவாரசியத்தையும் நமக்கு உணர்த்தி வருகின்றன.

இதெல்லாம் இழுத்துப் பிடித்து வைக்கும் முயற்சியே தவிர, நிரந்தரமான ஒன்றல்ல.

வேகம்! என்று மக்கள் சென்று கொண்டு இருப்பதால், ட்வென்டி20 போன்ற ஆட்டங்களை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் சில காலத்தில் பத்து, ஐந்து ஓவர்கள் போடக்கூடிய கிரிக்கெட் பிரபலமானாலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை.

செய்திகள்

செய்தித்தாள் காலையில் பார்த்தால் மட்டுமே உலகில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முடியும் நிலை இருந்தது. இதன் பிறகு இணையம் வந்தது.

இதில் செய்தித்தளங்கள் செய்திகளைக் கொடுத்ததால் அவ்வப்போது பார்க்க முடிந்தது.

பின்னர் இதுவும் மெதுவாக இருப்பதாகவும், பல செய்திகள் மறைக்கப்படுவதாகத் தோன்றிய நிலையில் Blogging எனப்படும் வலைப் பூக்கள் தோன்றின.

செய்திகளில் கூட இடம்பெறாத ஊடகங்களுக்கும் முன்பே கூடச் செய்திகள் இதில் இடம்பெற்றன.

தற்போது சமூகத்தளங்கள் / குறுந்தகவல்கள் மூலம் அடுத்த நொடியில் தெரிந்து விடுகிறது.

தங்கள் படைப்புகளை அனுப்பி வெளிவருமா வராதா! என்று காத்து இருந்தவர்களுக்கு வலைப்பூ வசதி மிகவும் உதவியாக இருந்தது.

இதில் எழுத யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை, எவருடைய அனுமதியும் தேவையில்லை எனும் போது பலரின் எண்ணங்கள் எந்தக் கட்டுபாடுமில்லாமல் அனைவரையும் சென்றடைந்து வந்தது.

இதில் தங்கள் கட்டுரைகளை எழுதி ஊடகங்கள் கூறாததைக் கூட இதில் எழுதி பலர் பலத்த வரவேற்பு பெற்றனர்.

ஊடகங்கள் எழுத மறுத்தாலும் தவறாகக் கூறினாலும் என்ன நடந்தது என்பதை இவற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

சிங்கப்பூரில் நடந்த கலவரத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை பலரிடையே வரவேற்பைப் பெற்றது.

Read: சிங்கப்பூர் கலவரம் – தமிழக ஊடகங்களும் அரசியலும்

இது போலப் பலரும் தங்கள் படைப்புகளை எழுதி வந்ததால் வலைப் பூக்கள் பெரிய வெற்றி பெற்றன.

செய்திகளுக்கு, உடனடியாக உண்மை நிலை தெரிந்து கொள்ள வலைப்பூக்களையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

சமூகத்தளங்கள்

இதன் பிறகு Micro Blogging எனப்படும் சமூகத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ போன்றவை பிரபலமாகத் தொடங்கின.

இவை வந்த பிறகு அதில் பகிரப்படுபவை உடனடியாகப் பலரைச் சென்றடைந்தது.

நன்றாக இருக்கிறது இல்லை என்ற கருத்துகள் உடனடியாகத் தெரிய வந்தன. இது பலரையும் கவரத் துவங்கியது.

திரைப்பட விமர்சனங்களைத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் காத்திருந்த நிலை மாறி, படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே தெரிந்து கொள்ள முடிந்தது.

இதில் பிரச்சனைகளும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

செய்திகள் உடனடியாக அனைவரிடையே சென்றடைந்தது.

இதனால் வலைப்பூக்களில் ஒவ்வொரு தளமாகச் சென்று பார்ப்பது சிரமமாக இருந்ததால், ஒரே இடத்தில் அனைத்தையும் சுருக்கமாகப் பார்க்க முடிகின்ற சமூகத்தளங்கள் பிரபலமாகி வலைப்பூக்களுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது.

இணையக் குறுந்தகவல்

சமூகத்தளங்களே செய்திகளைக் கொடுப்பதில் தாமதமாக இருக்கின்றன என்று கருதி அதை விட வேகமாகத் தற்போது WhatsApp போன்ற இணையக் குறுந்தகவல் சேவை பிரபலமாகத் துவங்கி விட்டது.

மின்னஞ்சல் குழுமங்கள், வலைப்பூக்கள், சமூகத்தளங்கள் என்று தொடர்ந்து தற்போது [2015] இணையக் குறுந்தகவல் சேவையில் வந்து நின்று கொண்டு இருக்கிறது.

இதன் பிறகும் வேறு வேகமான தொழில்நுட்பம் வரலாம். எனவே மாற்றம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு மின்னஞ்சல் அழியப் போகிறதா? என்ற கட்டுரை எழுதி இருந்தேன்.

அது பிரபல இணையத் தளமான தட்ஸ்தமிழில் வெளியாகியது. இது கிட்டத்தட்ட உண்மையாகி வருகிறது.

அதாவது மின்னஞ்சல் பயன்படுத்துவது குறைந்து, சமூகத்தளங்களில் (Messenger) கேள்விகள் கேட்பது செய்திகளைப் பகிர்ந்து கொள்வது அதிகரித்து விட்டது.

அதுவும் தற்போது WhatsApp போன்ற இணையக் குறுந்தகவல் சேவை பிரபலமாகியதும் மின்னஞ்சல் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது.

இந்தக் கட்டுரை எழுதிய போது WhatsApp போன்றவை பிரபலமாகியிருக்கவில்லை.

கடிதம் அனுப்புவது தற்போது முற்றிலும் நின்று விட்டது, விரைவில் இந்த நிலை மின்னஞ்சலுக்கும் வரலாம். இதை ஐந்து வருடம் முன்பு கூறி இருந்தால் எவரும் நம்பி இருப்பார்களா!

இனி Blog பற்றி

மக்களுக்கு எதையும் ஒரே இடத்தில் பார்க்க / படிக்க வேண்டும் என்ற மனநிலை அதிகரித்து விட்டது.

ஒவ்வொன்றையும் பார்க்கச் சுட்டியைக் [Link] க்ளிக் செய்து போகப் பொறுமையில்லை. அதோடு பெரியதாக உள்ளவற்றைப் படிக்கப் பொறுமையில்லை.

எதாக இருந்தாலும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டும், அதையும் மீறிப் படிக்க வைக்க வேண்டும் என்றால், மிகக் கூடுதல் சுவாரசியமான வார்த்தை அமைப்புகள் தேவைப்பட்டது.

இவ்வாறு எழுதியவர்கள் மட்டுமே நிலைக்க முடியும் என்றாகி விட்டது.

இவ்வளவு இருந்தும் படிப்பவர்கள் சில பகுதிகளை Skip செய்து படிப்பார்கள், இந்தக் கட்டுரையில் கூட நீங்கள் இவ்வாறு செய்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்களுடைய மனதை இது குறித்துத் தயார் படுத்துவதற்கு (Justification) எனக்கு மேலே இருக்கும் பாதி விளக்கம் தேவைப்பட்டது.

இதைப் பலர் விரும்புவதில்லை, நேராக விசயத்துக்கு வாங்க! என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இவ்வாறு நேராக வந்து விட அனைத்து விசயத்திற்கும் முடியாது. அப்படி வந்தால் அது ஒரு முழுமையான கட்டுரையாகக் கருத முடியாது.

என்னுடன் துவக்கத்திலிருந்து எழுதிக்கொண்டு இருந்தவர்கள் சிலர் எழுதுவதையே நிறுத்தி விட்டார்கள், பெரும்பான்மையோர் சமூகத்தளங்களுக்கு நகர்ந்து விட்டார்கள்.

தற்போது இங்கே எழுதிக்கொண்டு இருப்பது புதியவர்களும், இன்னும் டெஸ்ட் / ஒரு தினப் போட்டி போல ஆர்வம் கொண்டவர்களும் மட்டுமே!

இவர்களும் எவ்வளவு நாளைக்கு இதைத் தொடர முடியும்? என்பது சந்தேகமே!

தற்போது வலைப்பூக்கள், இன்னும் டெஸ்ட் போட்டிகள் அளவிற்கு ஆகவில்லை என்றாலும் விரைவில் ஆகி விடும்.

உண்மையைக் கூறினால், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் எழுத எனக்கு விருப்பமில்லை. என் கட்டுரைகள் வழக்கமாகப் பெரிதாக இருக்கும், இந்தக் கட்டுரையே ஒரு உதாரணம்.

என்னுடைய எண்ணங்களை விளக்கமாக முடிந்தவரை சலிப்படைய வைக்காமல் உரைநடையில் எழுத முயற்சிக்கிறேன். எனவே, இதற்கு வலைப்பூ தான் சரியான ஒரு தளமாகக் கருதுகிறேன்.

ஆனாலும், இது போல எத்தனை நாட்கள் தொடர முடியும்? என்ற எண்ணம் இருப்பது உண்மை தான்.

நாம் என்ன தான் ஆசைப்பட்டாலும் நடைமுறை எதார்த்தம் என்ற ஒன்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்!

சமூகத்தளங்கள், செய்தி இணையத் தளங்களையோ, தொழில்நுட்பத் தளங்களையோ, உடன்  குறிப்பிட்ட சில பிரிவுகளையோ (உணவு, திரைப்படம், ஆன்மிகம் போன்றவை) பாதிக்கவில்லை.

ஆனால், இது போன்ற வலைப்பூக்களைப் பெரிதும் பாதித்து இருக்கின்றன.

எழுதுவது எனக்குப் பிடித்தமானது, எழுதாமல் என்னால் இருக்க முடியாது. அதே போலச் சமூகத்தளங்களில் எழுதுவதை விட இங்கே எழுதுவது தான் எனக்கு முழுத் திருப்தி அளிக்கிறது.

நாளை எப்படி இருக்கும் என்று தெரியாது! நான் மாற்றத்தோடு ஒன்றவில்லை என்றால் நான் எழுதி நானே படித்துக்கொள்ள வேண்டியது தான் 🙂 .

இந்த மாற்றம் கொஞ்சம் காலம் தாழ்த்தி வந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்.

மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

 1. கிரிகெட்டில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் என்றுமே டெஸ்ட் போட்டிகளின் காதலன் நான்.. எனக்கு தனிப்பட்ட முறையில் 20/20 போட்டிகளின் மீது விருப்பம் இல்லை…

  இந்த பதிவை தொலைநோக்கு எண்ணம் கொண்ட ஒரு நேர்த்தியான பதிவாக எண்ணுகிறேன்.. கிரி நீங்க வியாபார நோக்கில் இதை மேற்கோளும் போது எதிர்காலத்தை கண்டு பயப்படுவது நன்று..

  ரொம்ப சிரமமான ஒரு விஷியம், ஒரு வேலையை தொடர்ந்து நிறுத்தாமல் செய்வது தான்…. நீங்கள் இடைப்பட்ட காலத்தில் பல தடைகளை, சிரமங்களை தாண்டி இருப்பீர்கள்…

  நீங்கள் உங்கள் திருப்திக்காக எழுதும் பட்சத்தில் வாசகர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.. உங்கள் மன திருப்தி தான் முக்கியம்… மனதளவில் நீங்கள் முழுமையாக சோர்வடையும் போது இந்த பணியினை நிறுத்தலாம் அல்லது வேறு கோணத்தில் யோசிக்கலாம்…

  ரொம்ப ரசித்து படித்த ஒரு கவிதை : எரிந்து விட்டது குடிசை; தெளிவாக தெரியும் நிலா!!!

  பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. உண்மை தான் கிரி நான் இணையத்திற்கு வந்த புதிதில் இருந்த ப்ளாக் உலகம் இப்போது இல்லை காரணம் முக நூல். இருந்தாலும் எனக்கு முகவரி கொடுத்தது என் குடந்தையூர் தளம் தான் நானும் தொடர்ந்து எழுதுவேன்

 3. உங்களோடு சம காலத்தில் பிளாக் எழுத ஆரமித்த நான் கடந்த 5 வருடமாகவே சமூக வலைதளங்களில் செட்டில் ஆயிட்டேன் 🙂

 4. தல,

  ரொம்ப நேர்மையான பதிவு…உங்களுக்கு ஒரு விஷயம் புடிக்கும்னு அதுக்கு கொடி புடிக்காம ரியாலிட்டி சொல்லுற உங்க நேர்மை க்கு ஒரு salute…நிதர்சன உண்மைய எப்பவும் உங்க எழுத்து பிரதிபலிக்கும்.. அது இந்த பதிவுல மறுபடியும் உறுதி ஆகி இருக்கு.. உங்க எழுத்து எந்த form ல இருந்தாலும் நான் அதுக்கு ரசிகன் தான்.

  -அருண் கோவிந்தன்

 5. சமூக வலைத்தளங்கள் நிச்சயம் அழியாது….பயபடாதீங்க……….

  மலர்

 6. You may right Mr Giri. Blogging may vanish from internet community but always people acknowledged quality writing for example Ponniyin selvan is massive big novel people still reading in books and gadgets.

  I like your writing always worth to spend time to read your blog.

  All the best for your carrier and blogging.

 7. #உண்மையைக் கூறினால், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் எழுத எனக்கு விருப்பமில்லை. என்னுடைய கட்டுரைகள் வழக்கமாகப் பெரிதாக இருக்கும், இந்தக் கட்டுரையே ஒரு உதாரணம். என்னுடைய எண்ணங்களை விளக்கமாக முடிந்தவரை சலிப்படைய வைக்காமல் உரைநடையில் எழுத முயற்சிக்கிறேன். எனவே, இதற்கு வலைப்பூ தான் சரியான ஒரு தளமாகக் கருதுகிறேன். ஆனாலும், இது போல எத்தனை நாட்கள் தொடர முடியும்? என்ற எண்ணம் இருப்பது உண்மை தான். நாம் என்ன தான் ஆசைப்பட்டாலும் நடைமுறை எதார்த்தம் என்ற ஒன்றை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்!#

  அண்ணா தயவு செய்து என்ன ஆனாலும் நீங்கள் பிளாக்கில் எழுதுவதை நிறுத்தாதிர்கள். உங்கள் பதிவுகள் எல்லாம் அதிகபட்ச எதார்த்தத்தை கொண்டிருக்கும். இது போன்ற பதிவுகள் அதிகம் வருவதில்லை வருகின்ற பெரும்பாலான பதிவுகள் அப்பதிவு எழுதியவரின் தான் தான் அதிமேதாவி என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.

  இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பது உங்களை போன்ற ஒரு சிலரின் பதிவுகள் மட்டும்தான். உங்கள் திறமையை யாராலும் எந்த மாற்றத்தாலும் மாற்ற முடியாது … தொடர்ந்து எழுதுங்கள் பிளாக்கில் .. நாங்கள் இருக்கிறோம் ..

 8. எதார்த்தம்.

  சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினாலும் வலைப்பதிவுகளை நானும் முழுமையாக அங்கு பகிருவதில்லை. / மாற்றம் கொஞ்சம் காலம் தாழ்த்தி / வருகிறதோ சீக்கிரமே வருகிறதோ திருப்தி என்கிற ஒன்றுக்காகவே தொடர எண்ணியுள்ளேன். பார்க்கலாம் 🙂 .

 9. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @யாசின் மனத் திருப்தி முக்கியம் என்றாலும், நாம் எழுதுவதையும் படிக்கவும் நிறைய இருந்தால் தான் ஒரு உற்சாகம் இருக்கும். தற்போது உள்ள கூட்டம் தொடர்ந்தாலே எனக்குப் போதுமானது ஆனால், இது தொடருமா என்பது தான் தற்போது கேள்வி!

  மனத் திருப்தி என்றாலும் அதிலும் அங்கீகாரம் என்ற சுயநலம் இருக்கிறது. இது இல்லாமல் தொடர்வது சிரமம். இவ்வளவு நாள் சலிப்பில்லாமல் தொடர்ந்ததற்கு மிக முக்கியக் காரணங்களில் நீங்கள், அருண் மற்றும் கார்த்தி போன்றவர்கள் கொடுக்கும் உற்சாகம் தான். இவையும் இல்லை என்றால், இந்த அளவிற்கு வந்து இருப்பேனா என்பது சந்தேகமே!

  நான் ஒவ்வொரு முறையும் நான் உங்களையும் அருணையும் முக்கியக் கட்டுரைகளில் குறிப்பிடும் போது உங்கள் இருவர் பெயரை மட்டும் குறிப்பிடுகிறேன் என்று அதிருப்தி அடைபவர்கள் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை அறியாதவர்கள் அல்லது அறிந்தும் அதை உணராதவர்கள். நான் டெம்ப்ளேட் பின்னூட்டங்களை விரும்புவதில்லை அதே சமயம் அதை வரவேற்பதுமில்லை.

  நீங்கள் இருவரும் அது போல டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் போடாதது தான் எனக்கு பெரிய ஆறுதல் மற்றும் திருப்தி. கார்த்தியையும் இந்த விசயத்தில் பாராட்டலாம்.

  அங்கீகாரம் என்ற ஒன்று இல்லை என்றால் எத்தனை சாதனை செய்தாலும் மனத் திருப்தி என்ற ஒன்று இருக்காது. அவ்வாறு இருப்பதாகக் கூறினால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்.

  @சரவணன் 🙂

  @அப்துல்லா இப்படி எல்லோரும் சேர்ந்து கவுத்துட்டீங்களே 🙂 2008 2009 ல் எப்படி இருந்த Blog தற்போது இப்படி ஆகி விட்டது.

  @அருண் & சதீஷ் நன்றி. அவ்வப்போது பூஸ்ட் கொடுப்பது இது போல வார்த்தைகள் தான்.

  @கார்த்தி எனக்கு எழுதுவதை நிறுத்துவதில் எந்த விருப்பமும் இல்லை. நான் இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன், ஊருக்கு வந்த பிறகு வித்யாசமாக இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் வைத்து இருக்கிறேன் ஆனால், இவை எப்படி போகிறது என்பது தெரியவில்லையே! பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று.

  @ராமலக்ஷ்மி யாசினிடம் கூறியதே உங்களுக்கும். திருப்தி என்ற ஒரு விசயம் அங்கீகாரம் இல்லை என்றால் நீர்த்து விடும்.

  யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஆகி விட்டால் எத்தனை டீயை நாமே குடிப்பது 😀

  “பார்க்கலாம்”

  இது தான் நானும் 🙂

 10. ….nan munnadi neraya blogs padippen….but, ippa unga blog mattumdhan padippen….munnadi madhiri comment poduradhu illa…“Blog” அழிந்து வருகிறதா? idhukku yen badhil…irukkalam..yahoo groups azhinju, orkut famous achu, orkut azhinju face book famous achu…adhumadhiri blog agalamnu ninaikuren.. 🙁 🙁

 11. உங்கள் எழுத்துக்கு நான் அடிமை… நீங்கள் எழுதுவது அப்படியே நேரில் சொன்னால் எப்படி இருக்குமோ அது போல தான் உரை நடை மாதிரி எழுதுகிறிர்கள்…

  I was reading your blogs since 2010 onwards….Only small change I was working form IBM Bangalore and now Working from HCL Chennai Thats all.

  Pls..Pls dont stop writing…We always with you… We are following your blogs!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here