கர்மாவை வெல்ல முடியுமா? கட்டுரை பகுத்தறிவாளர்களுக்கு உண்டானது அல்ல, தொடர்வது அவரவர் விருப்பம்.
இந்து மதம் என்றால் அதில் மிகப் பிரபலமானது “கர்மா“.
இது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் பலர் கர்மா பற்றிக் கூறுவதும், எடுத்துக்காட்டாக விளக்குவதும் நடைபெறுகிறது. Image Credit
கர்மாவை வெல்ல முடியுமா?
கர்மா என்பது நாம் முன்பு செய்த தவறுகளுக்குக் கிடைக்கும் தண்டனையாகவும், செய்த நல்லதுக்கு கிடைக்கும் பலனாகவும் கூறப்படுகிறது.
அதாவது தவறுகளைச் செய்ய வேண்டாம், அதற்கான தண்டனைகளிலிருந்து தப்ப முடியாது.
எனவே, நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று மக்களை வழிப்படுத்த என்பதாக.
கர்மா பற்றி எழுதிய போது அதில் ஒருவர் “வர்ணாசிரமம்” படிக்கக் கூறி விமர்சித்து இருந்தார். இதன் தொடர்பாகச் சிலதை படித்தும் சரியாக விளங்கவில்லை.
ஆனால், “அசுரன்” நாவல் எனக்குத் தெளிவாகப் புரிய வைத்தது.
Read: கர்ம வினையும் இந்து மதமும்
Read: அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
கர்மாவில் எனக்கு இரு வேறு கருத்துகள் உள்ளன.
கர்மாவை காரணம் காட்டி நம் தவறை நியாயப்படுத்தக் கூடாது என்பது.
அதாவது நம்முடைய சொதப்பலால் நடைபெறும் சம்பவங்களுக்குப் பிரச்சனைகளுக்குக் கர்மாவை காரணம் காட்டக் கூடாது.
இது நம்மையே ஏமாற்றிக் கொள்வது போல.
இன்னொன்று உண்மையாவே எந்தத் தவறும் செய்யாதவர்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்களே அது எப்படிக் கர்மாவாகும்? என்று விடை கிடைக்காத கேள்வி.
பலர் பல காரணங்கள் கூறினாலும், திருப்தியாகும்படியான பதிலை இன்னும் பெறவில்லை.
வர்ணாசிரமம் பற்றிப் புரிந்து கொள்ள அசுரன் நாவல் உதவியது போல, இக்கேள்விக்கான பதிலும் எங்காவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.
விதியும் கர்மாவும்
இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான் ஆனாலும், வித்யாசம் உள்ளது.
விதி முன்னரே தீர்மானிக்கப்பட்டு இது தான் என்று இருக்கும், அதன் படியே நடக்கும். இதற்கும் விதியை மதியால் வெல்லலாம் என்று கூறுகிறார்கள்.
எனவே, முயற்சி இருந்தால், விதியை மாற்றலாம் என்பது தான் இதன் உள்ளடக்கம்.
கர்மா நாம் செய்யும் நல்லது கெட்டதைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.
கெட்டது செய்தால் நல்லதை அதிகம் செய்வதன் மூலம் தண்டனையின் வீரியத்தைக் குறைக்க முடியும் ஆனால், தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.
எப்படி எப்போது எங்கே நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது ஆனால், கண்டிப்பாக நடக்கும்.
கர்மா பொய்யல்ல
கர்மா பொய் என்று கூற முடியாது. ஏனென்றால், என் வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவத்திலும் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருப்பதை உணர முடிகிறது.
என் வாழ்க்கை சம்பவங்களுக்குக் காரணத்தை ஆராய முடிகிறது. எனவே, கர்மா 100% உண்மை ஆனால், அதில் விடை தெரியாத கேள்விகள் எனக்கு உள்ளது.
ஏழைகள் என்ன பாவம் செய்தார்கள்? அது எப்படிக் கர்மாவாகும்? என்று விடை தெரியாத கேள்விகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.
ஆனால், சரியான வழியில் முயல்வதின் மூலம் விடைகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
ஏழைகள் பலருக்கு சரியான வழியைக் காட்ட வழிகாட்டிகள் இல்லை.
இதை அவர்கள் உணர்ந்து தங்கள் பிரச்னை என்ன? அதை எப்படித் தீர்ப்பது? என்பதைப் புரிந்து தங்களை மாற்றிக்கொண்டால், பிரச்சனைகளிலிருந்து மீண்டு வரலாம்.
எடுத்துக்காட்டுக்கு, படிப்பில் கவனத்தைச் செலுத்தி மற்ற விஷயங்களைப் புறக்கணித்துக் குறிக்கோளுடன் செயல்பட்டால், ஏழ்மை என்ற கடினத்தில் இருந்து வெளியே வரலாம்.
கர்மாவே இதற்குச் சிறந்த உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அந்த ஒன்று எது?
சிலர் ரொம்ப கடினப்பட்டு உழைப்பார்கள் ஆனால், வெற்றி பெற முடியாது. சிலர் மிக எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள்.
வாய்ப்புகள் இருவருக்குமே சம அளவில் இருந்தும், எப்படி இந்த வித்யாசம்?!
இதை யோசித்தால், நமக்குப் புரியாத ஒன்று உள்ளது என்று தானே அர்த்தம்.
அந்த ஒன்று எது?
கர்மாவை வெல்ல முடியுமா?
கர்மாவை வெல்லலாமா என்று கூறத் தெரியவில்லை.
ஆனால், குறிக்கோள், சரியான பாதை, வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான சிந்தனை இருந்தால், கர்மா நல்லதையே கொண்டு வரும் என்று தோன்றுகிறது.
நாம் எப்பவோ செய்த தவறுகளால் தண்டனை பெற வேண்டியதாக இருந்தாலும், இவ்வாறான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் அதன் தாக்கத்தை நிச்சயம் குறைத்து உயரலாம்.
Hard Worker என்பதை விட Smart Worker ஆக இருந்தாலே சாதிக்க முடியும்.
அடுத்தவரைப் புறம் கூறாமலும், நம் தவறுக்குக் காரணம் தேடாமலும், நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலமும், சரியாகக் திட்டமிட்டு, சாதிக்க வேண்டும் என்ற “தீ” இருந்தால், நல்லதே நடக்கும்!
பின்குறிப்பு
இதெல்லாம், அனுபவங்களில் தெரிந்து கொண்டதை வைத்துக் கூறியது. இதில் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றதை புறக்கணித்து விடுங்கள்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அண்ணா எனக்கு கர்மா மேல நம்பிக்கை இருக்கிறது..நான் அதை நம்புகிறேன்…ஆனால் என்னுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் எப்படி கர்மா காரணம் ஆகும் என்பதுதான் எனக்கு புரியவில்லை…இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன,…
எனக்கு இந்த கர்மா வர்ணாசிரமம் ஆகியவற்றில் செம குழப்பம் ..அதனால் அதிகம் இதை பற்றி நான் சிந்திப்பது இல்லை..தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டுவது இல்லை….என்னால் யாருக்கும் எந்த துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்..அதே நேரத்தில் மற்றவர்களுக்காக என்னுடைய சந்தோசத்தை வீட்டுக் கொடுக்கவும் நான் தயாராக இல்லை..
“இதை யோசித்தால், ஏதோ ஒன்று நமக்கு புரியாத ஒன்று இருக்கிறது என்பது தானே அர்த்தம்.”
அந்த ஒன்று = ABILITY TO VISUALIZE
தங்களால் Future ஐ Past போலவே தெளிவாக , துல்லியமாக, உணர்வுகளுடன் Visualize செய்ய முடியும் என்றால் எதுவும் சாத்தியம்.
இந்து மதத்துக்கு மட்டுமல்ல
கடவுள் மறுப்பு மதமான ஜைனத்துக்கும்
பௌத்தத்துக்கும் கர்மா அடிப்படைதான்
கிரி, வாழ்க்கையில் நடைபெறுகின்ற பல நல்ல விஷயங்களும் / கெட்ட விஷியங்களும் ஏன் நடைபெறுகின்றது என்ற கேள்வி எப்போதும் உண்டு!!! என்னை பொறுத்தவரை நான் கடவுள் நம்பிக்கை உடையவன்.. யாருக்கும் துன்பம் தரக்கூடாது என்று நினைப்பவன்.. சக மனிதனையும் சகோதரனாக நினைப்பவன்..
நாம் செய்யும் நல்லவைகள் எல்லாம் நமக்கு கண்டிப்பாக நன்மையாக முடியும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவன்.. தீமையும் அதுபோல தான்.. என்னுடைய சொந்த வாழ்வில் பல தருணங்களில் நான் அனுபவித்து இருக்கிறேன்.. உங்களை போல என் மனதிலும் விடை காணாத, பல கேள்விகள் ஓடி கொண்டு தான் இருக்கின்றது..
இருப்பினும் கடந்த சில நாட்களாக மனதிற்குள் எண்ணம் புரியாத சிந்தனைகள் வந்து வந்து போகிறது.. காரணம் என்னவென்று தெரியவில்லை..ஒரு நீண்ட அமைதியான துயில் கொள்ள மனம் நாடுகிறது.. இதைப்பற்றி யாரிடமும் பேச தோன்றுவது இல்லை நண்பன் சக்தியை தவிர்த்து..எதிலுமே என்னால் 100 சதம் கவனத்தை செலுத்த முடியவில்லை.. ஒரு குழப்பமான மனநிலையிலே எந்நாட்கள் நகர்ந்து செல்கிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@கார்த்தி உனக்கு அனுபவம் கிடைக்கும் போது புரியும்
“என்னால் யாருக்கும் எந்த துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்”
அவ்வளோ தான் விஷயம்.
@மாரிசெல்வம் அது கடினம்
@ராஜேந்திரா ரைட்டு
@யாசின் எல்லாமே நம்ம மனது தான் காரணம் யாசின். பிரச்சனை யாருக்கு தான் இல்லை என்று நினைத்து, அனைத்தையும் ஒதுக்கினால் தெளிவாகி விடுவோம்.
குழப்பங்கள் நீங்கி விடும்.