சில விஷயங்களைச் சம்பந்தப்பட்டவரிடம் கூறுவது எவ்வளவு அவசியமோ அதே போலக் கூறாமல் இருப்பது. நாம் கூறுவது மற்றவருக்குப் பயனில்லை ஆனால், மன உளைச்சல் என்றால் கூறாதீர்கள். Image Credit
தகவல்கள்
தினமும் பல்வேறு சம்பவங்களை, செய்திகளைக் கடந்து வருகிறோம்.
அவை நேரடியாகப் பார்த்ததாக, மற்றவர்கள் தெரிவித்ததாக, செய்திகளில் படித்ததாக, நமக்கு நேர்ந்ததாக இருக்கலாம்.
இவற்றை அனைத்தையும் மற்றவரிடம் கூற வேண்டும் என்பதில்லை. குறிப்பாகக் குடும்பத்தினருக்கு, நெருங்கிய நபர்களிடையே சில விஷயங்களைத் தவிர்ப்பது.
காரணம், அவர்களால் இப்பிரச்சனையில் எதுவுமே செய்ய முடியாது ஆனால், கூறும் செய்திகளால் அவர்கள் மன உளைச்சல் அடையலாம், மன அழுத்தம் ஏற்படலாம்.
சம்பந்தப்பட்ட பிரச்சனை தானாகவே சரியாகி விடலாம். எனவே, அதற்குள் அவசரப்பட்டு இன்னும் நான்கு பேரைப் பதட்டத்துக்கு உள்ளாக்குவது தவறு.
பெரும்பாலும் இவ்வாறு கூறக்காரணம், தங்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தை யாரிடமாவது கூறினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைப்பார்கள்.
இது தவறில்லை ஆனால், பக்குவப்பட்டவராக இருந்தால் கவலையில்லை ஆனால், அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தால் பிரச்சனை.
எனவே, சிலவற்றைக் கூறாமலே தவிர்க்கலாம் அல்லது அதைக் கூறினால் பக்குவமாகக் கையாள்பவர்களாக இருக்க வேண்டும்.
எதிர்காலப் பயம்
சில விஷயங்கள் எதிர்காலத்தில் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். எனவே, அவற்றைத் தற்போதே எளிதாக எடுத்துக்கொள்ளாதவரிடம் கூறினால், அவர் எதிர்காலத்தை நினைத்துப் பதட்டமாவார்.
இதனால், சம்பந்தமே இல்லாமல் ஒருவரை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை.
காரணம், யாராலும் எதுவும் செய்ய முடியாது. நடக்கும் போது தான் முடிவு தெரியும் என்றால், யார் தான் என்ன செய்து விட முடியும்?!
எச்சரிக்கை படுத்துவது வேறு, பயப்படுத்துவது வேறு.
கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்வதை விட நிகழ்காலத்தில் வாழ்வதே சிறந்தது.
எனக்கு எல்லாமே தெரியும்!
தனக்குத்தான் எல்லாமே தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இவை பொருந்தாது.
ஒரு விஷயத்தில் நமக்குத் தெளிவில்லை என்றால், அதைச் சரியான நபரிடம் கூறி ஆலோசனை கேட்பது நல்லது.
நாம் எடுக்கும் முடிவு தான் சரி என்று கூறாமல் விட்டால், எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாகி விடக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
எனவே, ஒரு விஷயத்தை மற்றவரிடம் கூறினால் அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியாது ஆனால், மன உளைச்சல் மட்டுமே அடைவார்கள் என்று 100% தெரிந்தால் மட்டுமே தவிர்க்க வேண்டும்.
தனிப்பட்ட அனுபவங்கள்
மேற்கூறிய அனைத்து நிலைகளிலும் இருந்து, அதைக்கடந்து வந்துள்ளேன் என்பதால், முழுக்கத் தனிப்பட்ட அனுபவங்களை வைத்தே கூறியுள்ளேன்.
எடுத்துக்காட்டுக்கு, சில விஷயங்களைப் பயனில்லை என்றால் அம்மாவிடம் கூற மாட்டோம். காரணம், கூறினாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
கூறுவதால், அம்மா மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் காரணம், அவரால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மிகவும் மெல்லிய மனது கொண்டவர்.
எனவே, அனைத்தும் முடிந்த பிறகு செய்தியாகக் கூறும் போது அதன் தாக்கம் இருக்காது என்பதால், அம்மாவும் அதைத் தகவலாக எடுத்துக் கடந்து விடுவார்கள்.
இது போல மனைவிக்கு, நண்பர்களுக்கென்று நிறைய நடந்துள்ளது.
நிகழ்காலம்
எனக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. காரணம், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், நிகழ்காலத்தில் வாழ்கிறேன்.
இதற்கு நேர்மறை எண்ணங்கள் மிக உதவியாக உள்ளது.
எனவே, முக்கியமான விஷயத்தை மற்றவரிடம் கூறும் முன்பு பல முறை யோசித்துப் பின் கூறுங்கள். இதனால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, என்னை பொறுத்தவரை ஆலோசனைகளை / கருத்துக்களையோ / அனுபவங்களையோ யாரிடம் பகிர்வதில்லை..(சக்தியை தவிர்த்து). மற்றவர்களிடம் பகிர்வதில் விருப்பமில்லை.. அனுபவம் தான் கடவுள் – இது கண்ணதாசன் ஐயாவின் வார்த்தை. இது சத்தியமும் கூட.. நமக்கு ஏற்படும் அனுபவம் தான் நம்மை செதுக்குகிறது..
ஓவ்வொருவருக்கும் ஒரு விதமான அனுபவங்கள், உங்களுக்கு ஏற்படுவது எனக்கில்லை, எனக்கேற்படுவது மற்றொருவருக்கு இல்லை.. அப்படி இருக்கும் போது அடுத்தவர்களின் வாழ்வியல் முறைகள் இன்னொருவருக்கு எப்படி பயன்படும்???
என் அம்மாவிற்கு இருக்கும் பக்குவம், நிச்சயமாக எனக்கு இல்லை.. எனக்கு இருக்கும் பக்குவம் உறுதியாக என் மனைவிக்கு இல்லை.. நிலைமை இவ்வாறு இருக்கும் போது யாரும், யாரையும் பின்பற்ற முடியாது. எல்லோருக்கும் ஒரே மாதிரியும் நிகழ்வுகள் அமையாது..
என்னை பொறுத்தவரை தேவையில்லாத பிரச்சனைகள் எழும் போது, உடனே எந்தவித ரியாக்ட்டும் நாம் செய்யாமல் சில கணங்கள் அமைதியாக இருந்தாலே 50% பிரச்சனை தானாகவே முடிந்த உணர்வு ஏற்படும். அந்த உணர்வு வந்து விட்டாலே பிரச்சனையை எதிர்கொள்ளும் தைரியமும் வந்து விடும்.. எனக்கு பிரச்சனைகள் எழும் போது புத்தகத்தில் படித்த வரிகளை என்றும் நினைவு கூறுவேன்..
================================
முற்றிலும் எரிந்து
விட்டது வீட்டின்
கூரை!!! இனி
தெளிவாக தெரியும்
நிலா!!!
================================
காலையில் பட வேண்டிய
கவலைக்கு, அழகான ஒரு
ராத்திரியை ஏன்
தொலைக்கனும்…
பகிர்வுக்கு நன்றி கிரி..
அருமை
@யாசின்
“மற்றவர்களிடம் பகிர்வதில் விருப்பமில்லை..”
எனக்கு நெருங்கிய நண்பர்கள், உறவுகளிடம் மட்டுமே ஆலோசனையைப் பகிர்வேன்.
அவர்கள் ஆர்வம் காட்டினால் தொடர்வேன், இல்லையெனில் தவிர்த்து விடுவேன்.
“ஓவ்வொருவருக்கும் ஒரு விதமான அனுபவங்கள், உங்களுக்கு ஏற்படுவது எனக்கில்லை, எனக்கேற்படுவது மற்றொருவருக்கு இல்லை.. அப்படி இருக்கும் போது அடுத்தவர்களின் வாழ்வியல் முறைகள் இன்னொருவருக்கு எப்படி பயன்படும்???”
நீங்கள் கூறுவது சரி தான் ஆனால், சில நேரங்களில் அப்போது பயனளிக்கவில்லையென்றாலும், பின்னாள் பயனளிக்கலாம்.
“என் அம்மாவிற்கு இருக்கும் பக்குவம், நிச்சயமாக எனக்கு இல்லை.. எனக்கு இருக்கும் பக்குவம் உறுதியாக என் மனைவிக்கு இல்லை.. நிலைமை இவ்வாறு இருக்கும் போது யாரும், யாரையும் பின்பற்ற முடியாது. எல்லோருக்கும் ஒரே மாதிரியும் நிகழ்வுகள் அமையாது.”
பின்பற்ற வேண்டியதில்லை… நம் ஆலோசனைகள் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம், இல்லையெனில் தவிர்த்து விடலாம்.
எனக்கும் நண்பர்கள் சிலர் யோசனைகளைக் கூறுவார்கள் ஆனால், அனைத்தையும் எடுத்துக்கொள்வதில்லை.
எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டுமே செயல்படுத்துகிறேன்.
எடுத்துக்காட்டுக்கு சென்னை வந்த போது வீடு வாங்க அனைவரும் அறிவுறுத்தினார்கள் ஆனால், திரும்ப என்னால் கடனாளியாக முடியாது என்று மறுத்து விட்டேன்.
ஆனால், இன்று நான் எடுத்த முடிவு எவ்வளவு சரியானது என்று உணர்கிறேன். நண்பர்களும் ஆமோதிக்கிறார்கள்.
“என்னை பொறுத்தவரை தேவையில்லாத பிரச்சனைகள் எழும் போது, உடனே எந்தவித ரியாக்ட்டும் நாம் செய்யாமல் சில கணங்கள் அமைதியாக இருந்தாலே 50% பிரச்சனை தானாகவே முடிந்த உணர்வு ஏற்படும்.”
மிகச்சரியாக கூறினீர்கள்.
அவசரப்பட்டு எதிர்வினை ஆற்றுவதாலே பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதைப் பல காலமாக பின்பற்றி வருகிறேன். இதனால் பிரச்சனைகள் குறைந்துள்ளன.
ஒரு ஜென் நிலையை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறேன் 😀
இந்த பதிவை ஒட்டி இருப்பதால் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவத்தை நினைவு கூறுகிறேன்..
ஊரில் நெருங்கிய நண்பனுக்கு மூன்றாவது குழந்தை (பெண்) கடந்த வாரம் பிறந்தது.. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பன்.. தற்போது காலம் இருவருக்கும் இடையில் மிக பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.. என் மனைவி மூலம் குழந்தை பிறந்த தகவலை தெரிந்து கொண்டேன். ஒரு வாரமாகியும் நண்பன் எனக்கு தகவல் சொல்லவேயில்லை..
எனக்குள் சிறு, சிறு குழப்பம்.. அப்படி என்னடா?? நான் தவறு செய்து விட்டேன்.. நிச்சயம் அவன் இந்த செய்தியை எல்லோரிடமும் பகிரும் போது, நான் அவன் நினைவில் வந்து போய் இருப்பேன்.. இருப்பினும் எனக்கு அவன் சொல்லவேயில்லை என்ற ஆதங்கம் உள்ளுக்குள் இருந்தது.. குறைந்தபட்சம் ஒரு வாட்சப் மெசேஜ் ஆவது செய்து இருக்கலாமோ?? என்று கூட தோன்றியது..
சிறிய யோசனைக்கு பின் , நான்கு / ஐந்து கடந்த பின் நான் அவனுக்கு கால் செய்தேன்.. அவன் அலைப்பேசி எண் வேலை செய்யவில்லை.. பின்பு வாட்சப்பில் மட்டும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.. என் செய்தியை பார்த்த நண்பன், அவனின் புதிய அலைப்பேசி எண்ணை பகிர்ந்து இருந்தான்..
ஒரு மனது புதிய எண்ணுக்கு செய்து பழைய நட்பை புதுப்பித்து கொள்ள விழைகிறது.. இன்னொரு மனது (எனக்குள் இருக்கும் ஈகோ வா, இல்லை கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளா??? என்னன்னு சொல்ல தெரிய வில்லை,) கால் செய்ய வேண்டாம் என தடுக்கிறது..
அலைப்பேசியில் உலகின் எந்த துருவத்தில் இருப்பவர்களை அழைத்து பேசும் அளவிற்கு பணம் இருக்கிறது.. நண்பனின் எண்ணை பிரஸ் செய்தால் அடுத்த நொடி அவனிடம் நட்பு பாராட்ட முடியும்.. ஆனால் முடியவில்லை.. வாழ்வின் டிசைன் என்னவென்றே புரிந்து கொள்ள முடிவில்லை கிரி..
வாழ்க்கை நமக்கு தினமும் புதிய செய்திகளைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே உள்ளது யாசின்.
சில நேரங்களில் மற்றவர்கள் செய்வதை நாம் கண்டுகொள்ளாமல், நாம் முடிந்தவரை எப்போதும் போலவே இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக நம் வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.
முடியாத பட்சத்துக்கு அமைதியாக இருந்து கொள்ளலாம்.
நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்துக்கொண்டால், மேற்கூறிய பிரச்சனைகளை எளிதாக கடந்து வரலாம்.