கனவு வீடு என்ன ஆகும்?

5
கனவு வீடு

சொந்த வீடு கட்டுவது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு. அந்தக்கனவு நிறைவேறியும் திருப்தி இல்லாத சூழ்நிலை உள்ளதை இக்கட்டுரையில் பார்ப்போம். Image Credit

வாழ்நாள் கனவு

பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் சொந்த வீடு கட்ட, வாங்க வேண்டும். அதில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இதுவொரு பேராசை அல்ல, அடிப்படைத் தேவை, விருப்பம்.

பார்த்துப் பார்த்து, தங்கள் விருப்பப்படி, மற்றவர்களின் வீடுகளில் பார்த்த சிறப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து இதில் கட்டுவார்கள்.

அதாவது, குறிப்பிட்ட வடிவமைப்பு ஒரு வீட்டில் பிடித்து இருந்தால், அதை அல்லது அதில் உள்ள வசதியைப் புது வீட்டில் சேர்த்து இருப்பார்கள்.

ரசித்துக்கட்டிய வீட்டில் நிம்மதியாக இருக்க முடிகிறதா? என்பதே இக்கட்டுரை.

வாழ்க்கை சூழ்நிலை

1990 க்கு முன் பெரும்பான்மையோர் அவரவர் சொந்த நகரத்தில், கிராமத்தில் அல்லது சிறு தொலைவில் பணி புரிந்து வந்தார்கள்.

எனவே, அவரவர் வீட்டிலிருந்து செல்வது இயல்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் பணிக்காக இடம்பெயர்வு அதிகரித்து விட்டது. பக்கத்து நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்று மாறி விட்டது.

இதுவே பெரிய நகரமாக இருந்தால், நகரின் இன்னொரு பகுதி என்று மாறி விட்டது.

சம்பாதித்த பணத்தில் தங்கள் சொந்த ஊரில் வீடு கட்டுகிறார்கள் அல்லது அவர்கள் தற்போது இருக்கும் நகரிலேயே வீட்டை வாங்கிக்கொள்கிறார்கள்.

சொந்த ஊரில் வீட்டைக் கட்டினாலும், வசிப்பது வேறு இடத்தில் எனும் போது பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் வசிக்க முடியாததாகி விடுகிறது.

யார் இருப்பார்கள்?

சொந்த ஊரில் வீட்டைக் கட்டுகிறார்கள் என்றால், அங்கே அவர்களது பெற்றோர்கள் இருப்பார்கள். அவர்களது காலத்துக்குப் பிறகு?

இதுவொரு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

யாரும் இல்லையென்றால், வீட்டை யார் பராமரிப்பார்கள்? வாடகைக்கு விட்டால், வருபவர் நாம் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை நன்றாக வைத்துக்கொள்வார் என்பது உறுதியில்லை.

வாடகைக்கு விடவில்லையென்றால், பயன்படுத்தாததால் வீடு சிதிலமடைந்து விடும், பாதுகாப்பற்றதாக மாறி விடும். எனவே, நெருக்கடியாகிறது.

சொந்த ஊரில் வீட்டை வாங்கினால் இப்பிரச்சனை என்று பணி புரியும் நகரிலேயே வாங்கினாலும், பணி மாறுதலால் அலுவலக இடம் மாறுகிறது.

எடுத்துக்காட்டுக்கு, முகப்பேரில் வசிக்கும் ஒருவருக்கு சோழிங்கநல்லூரில் அலுவலகம் என்றால், தினமும் வந்து செல்வது என்பது மிகப்பெரிய சிக்கல்.

பயண நேரமே அதிகம் எடுத்துக்கொள்ளும், அதோடு அலைச்சல்.

எனவே, சென்னையிலேயே சொந்த வீடு இருந்தாலும், பணிக்காக, பள்ளிக்காக வேறு வீட்டுக்கு வாடகைக்கு செல்ல வேண்டியதாகி விடுகிறது.

எனவே, கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் வசிக்க முடியாததாகி விடுகிறது.

முதியோர்கள் வாழ்விடங்கள்

கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் பணிக்காக நகரத்துக்குச் சென்று விடுவதால், இங்கே பெற்றோர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். கிராமங்களில் பல வீடுகளில் பெற்றோர்கள் மட்டுமே உள்ளனர்.

தெரிந்த ஒருவர் சமீபத்தில்,

நாங்கள் வசிக்கும் பகுதி (கோபியில்) முதியோர்கள் பகுதி போல மாறி விட்டது, முழுக்க வயதானவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்‘ என்று கூறினார்.

இதுவொரு கசப்பான உண்மையே!

என்னையே எடுத்துக்கொண்டால், அம்மா மட்டுமே நான் கட்டிய வீட்டில் இருக்கிறார்கள், அருகிலே இருப்பதால் அக்கா கவனித்துக்கொள்கிறார்கள்.

சொந்த ஊருக்குத் திரும்ப முடியுமா?

சிலருக்கு ஊர் பாசம் குறைவாக இருக்கலாம். எனவே, அவர்கள் இந்த வீட்டை விற்று விட்டு, வசிக்கும் நகரத்திலேயே தொடரலாம்.

ஆனால், என் போன்றவர்களுக்கு அது நடக்கவே நடக்காத காரியம். இதுவரை என் முடிவுகளில் உறுதியாக இருந்துள்ளேன். எனவே, ஊருக்குச் செல்வது உறுதியே.

எனவே, இதற்கான சேமிப்பை, திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறேன். அதில் ஒன்று முன்கூட்டிய பணி ஓய்வு (Early Retirement).

எதிர்பார்த்த மாதிரி சேமிப்பு, திட்டங்கள் அமையவில்லையென்றால், கூடுதல் காலம் ஆகும் ஆனால், இறுதி என்னவோ சொந்த ஊரில் தான், அதில் மாற்றம் இல்லை.

சிங்கப்பூரிலிருந்து வர முடிந்த என்னால், சென்னையிலிருந்து கோபிக்கு போய் விட முடியாதா?! 🙂 . கடவுள் கருணை காட்டுவார் என்று நம்புகிறேன்.

கனவு வீடு

இனி கனவு வீடு கட்டலாமே தவிர ஆனால், அதில் இறுதி வரை வசிக்க முடியுமா என்றால், மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

காரணம், உலகமயமாக்கலுக்குப் பிறகு தேவை, பணி சூழ்நிலைக்குத் தகுந்த படி வசிப்பிடம் மாற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இன்னொன்று, நாமாக நம்மைப் பார்த்துக்கொள்ளும் வரை தொடரலாம், நம்மைப் பார்த்துக்கொள்ள ஒருவர் வேண்டும் என்ற நிலையில் அடுத்த சிக்கல் வருகிறது.

எனவே, வீடு கட்டியும் வசிக்க முடியாத நிலையே இருக்கும்.

சொந்த ஊரிலேயே வாழ்ந்து, சொந்த வீட்டிலேயே இருந்து பணிக்குச் சென்று வருபவர்கள், என்னைப்பொறுத்தவரை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

இவர்களைக்கேட்டால், நிச்சயம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று ஒரு காரணம் இருக்கும் ஆனால், இப்பக்கமும் வந்தாலே நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

பணம், தனிப்பட்ட வசதி, வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு இவ்வகை சென்டிமென்ட்ஸ் எதுவும் இருக்காது. இவர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் எதுவுமில்லை, இது தவறும் கிடையாது.

உங்க கருத்து என்ன?

வீடு சென்டிமென்ட்ஸ் பிற்காலத்தில் மாற்றம் பெற்று விடும் என்றே கருதுகிறேன். அதாவது, சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் குறைந்து வரும்.

இல்லையென்றால், நிதர்சனம் புரிந்தாலும், சொந்த வீடு வாங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதை நோக்கிப் பயணிப்பார்கள்.

எதிர்காலத்தில், பெரும்பான்மை மக்களின் நிலை வீடு கட்டியும், வாங்கியும் சொந்த வீட்டில் வசிக்க முடியாத சூழ்நிலையே இருக்கும்.

உங்களின் நிலை என்ன? இப்பிரச்சனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொடர்புடைய கட்டுரை

வயதானவர்களின் நிலை என்ன?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. // சிங்கப்பூரிலிருந்து வர முடிந்த என்னால், சென்னையிலிருந்து கோபிக்கு போய் விட முடியாதா?!

    உங்கள் கட்டுரையை 15 வருடங்களுக்கு மேலாக படித்து வருகிறேன்.
    நீங்கள் செய்ய கூடியவர் என்பதை பார்த்திருக்கிறேன்.

  2. எனக்கு பிடித்த பணி என் வீட்டிலிருந்து செல்லும் தொலைவில் கிடைத்த காரணத்தினாலேயே மிக நீண்ட காலம் (10yrs) ஒரே நிறுவனத்தில் இருந்தேன். பிறகு எதிர்காலம் கருதி வேறு மாநிலத்திற்கு சென்றும் WFH கார்ணமாக வீட்டிலிருந்தே 2 ஆண்டுகளாக பணிபுரிகிறேன் 😃. சொந்த ஊரில் இருப்பதே என் விருப்பம் 🙏🏽

  3. வாழ்நாள் கனவு : ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்ததால் பெரிய கனவுகளை கண்டதில்லை.. சொல்லப்போனால் கனவு காண எண்ணியது கூட இல்லை. சில ஆண்டுகளுக்கு பின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகும் வாழ்நாள் கனவு என்று இதுவரை ஏதும் இல்லை.. ஆனால் சம்பாரிக்க தொடங்கும் முன், என் தாத்தாவிற்கு (என் தந்தை சிறு வயதில் தவறியதால், எனக்கு மிகவும் பிடித்தவர்) அவர் போதும், போதும் என்னும் அளவிற்கு பணத்தை அதிகம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை அவர் மரணிக்கும் வரை செய்ய முடிந்தது.

    படையப்பா படத்தில் (வெற்றி கொடி கட்டு) பாடலின் நடுவில் வரும் வரிகளை தற்போது கேட்டாலும் ஒரு கணம் யோசிக்க வைக்கும்..

    யாருக்கும் தீங்கின்றி
    வாழ்பவன் மனிதன்
    ஊருக்கே வாழ்ந்து
    உயர்ந்தவன் புனிதன்..

    கிட்டத்திட்ட இது போன்ற வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் உண்டு..

    அதே போல் அம்மாவின் ஒரே ஆசை / விருப்பம் / கனவு சொந்த வீடு மட்டுமே.. காரணம் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீடுகள் மாறி மாறி வசித்து வந்ததால் அவரின் விருப்பம் சொந்த வீடு என்பது தான். கடவுள் கிருபையால் இந்த இரண்டையும் என்னால் நிறைவேற்ற முடிந்தது..ஒவ்வொரு வீட்டையும் காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு போகும் போது “எப்படா” இந்த நிலை மாறும் என்று இருக்கும். பொதுவாக என் அம்மா அவரின் எமோஷன்ஸ் வெளிக்காட்டி கொள்ளமாட்டார்.

    சொந்த ஊரிலேயே வாழ்ந்து, சொந்த வீட்டிலேயே இருந்து பணிக்குச் சென்று வருபவர்கள், என்னைப்பொறுத்தவரை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் – 200% நிச்சயம் ஏற்று கொள்கிறேன். இதே கருத்தை நான் என் கல்லூரி நண்பர்களிடம் பகிரும் போது அவர்களின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது.. நீங்கள் சொல்வது போல் அக்கரைக்கு இக்கரை பச்சை. பொதுவாக வெளிநாட்டு வேலை என்பது நண்பர்களிடம் வேறு மனநிலை உள்ளது.. பெரியப்பா பையன் திருச்சியில் ரயில்வே பணியில் இருக்கிறான்.. என்னை விட இரண்டு வயது சிறியவன். அவனிடம் சில நேரம் இது போன்றவைகள் குறித்து பேசுவதுண்டு..

    சிங்கப்பூரிலிருந்து வர முடிந்த என்னால், சென்னையிலிருந்து கோபிக்கு போய் விட முடியாதா?! கடவுள் கருணை காட்டுவார் என்று நம்புகிறேன் : – நிச்சயம் உங்களால் முடியும் கிரி.. நீங்கள் பொதுவாக சரியான திட்டமிடுதலுடன் எல்லா காரியத்தையும் செய்வதால் நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேறும்.. கிட்டத்திட்ட சக்தியும் இப்படி தான்.. முறையாக திட்டமிட்டு சரியாக செய்வார்..

  4. @சங்கர்

    “உங்கள் கட்டுரையை 15 வருடங்களுக்கு மேலாக படித்து வருகிறேன்.
    நீங்கள் செய்ய கூடியவர் என்பதை பார்த்திருக்கிறேன்.”

    உங்களுடைய நம்பிக்கைக்கு நன்றி சங்கர் 🙂 .

    என் எழுத்தின் மூலம் படிப்பவர்களுக்கு என்னைப் பற்றிய ஒரு உறுதியாக புரிதலைக் கொடுத்துள்ளேன் என்பது மகிழ்ச்சி.

    @பாலா

    “பிறகு எதிர்காலம் கருதி வேறு மாநிலத்திற்கு சென்றும் WFH கார்ணமாக வீட்டிலிருந்தே 2 ஆண்டுகளாக பணிபுரிகிறேன் 😃. சொந்த ஊரில் இருப்பதே என் விருப்பம் 🙏🏽”

    அருமை. உங்கள் மகிழ்ச்சி தொடர என் அன்பான வாழ்த்துக்கள் 🙂 .

  5. @யாசின்

    “ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்ததால் பெரிய கனவுகளை கண்டதில்லை.. சொல்லப்போனால் கனவு காண எண்ணியது கூட இல்லை.”

    வியப்பாக உள்ளது யாசின். வழக்கமாக சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் ஒரு குறிக்கோள், நோக்கம்.. இதை அடைய வேண்டும் என்ற வெறி இருக்கும்.

    “அவர் போதும், போதும் என்னும் அளவிற்கு பணத்தை அதிகம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை அவர் மரணிக்கும் வரை செய்ய முடிந்தது.”

    படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    நானும் இது போன்று அம்மாவிடம் கூறியுள்ளேன், அதைத் தற்போதும் பின்பற்றி வருகிறேன்.

    பணத்துக்காக கடந்த 15 வருடங்களாக என் அம்மாவைக் காக்க வைத்தது இல்லை.

    பல வருடங்களாக பணத்துக்காக சிரமப்பட்டவர்கள் என்பதால், என் பொறுப்பு வந்த பிறகு அந்த சிரமத்தைக் கொடுக்கவில்லை.

    எனக்கு இதில் பரம திருப்தி,

    “கடவுள் கிருபையால் இந்த இரண்டையும் என்னால் நிறைவேற்ற முடிந்தது..ஒவ்வொரு வீட்டையும் காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு போகும் போது “எப்படா” இந்த நிலை மாறும் என்று இருக்கும்.”

    நிச்சயம் சொந்த வீடு என்பது பலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பே.

    செல்லும் வீட்டில் ஓனர் சரியாக அமைந்தால் பிரச்சனையில்லை, இல்லையென்றால் வெறுப்பே மிஞ்சும்.

    “நீங்கள் பொதுவாக சரியான திட்டமிடுதலுடன் எல்லா காரியத்தையும் செய்வதால் நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேறும்.”

    நீங்கள் கூறுவது சரி தான், நான் எதையும் திட்டமிட்டே செயல்படுத்துவேன். முன்கூட்டியே அனைத்தையும் திட்டமிடுவேன்.

    இப்ப நீங்க, சங்கர் கூறுவதை பார்க்கும் போது பலருக்கு என்னைப்பற்றிய புரிதல் இருக்கு என்றே புரிந்து கொள்கிறேன்.

    கட்டுரையை படிப்பதோடு நிறுத்தாமல், எழுதப்படும் கருத்துகளில் எடை போடும் போக்கும் அனைவரிடமும் உள்ளது என்பதும் புரிகிறது.

    சரியோ தவறோ கிரின்னா இப்படித்தான் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளேன் என்பது புரிகிறது.

    கூடுதலாக இன்னொன்றையும் கூற விரும்புகிறேன்.

    பெரும்பாலானவர்களுக்கு இரு முகங்கள் அல்லது மூன்று முகங்கள் இருக்கும்.

    ஒன்று சமூகத்தளங்களில், இன்னொன்று வீட்டில், இன்னொன்று தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது.

    அதாவது நேரில் பேசும் போது சமூகத்தளங்களில் அப்படி எழுதறாரு ஆனால், நேரில் இப்படி பேசுகிறாரே அல்லது நடந்து கொள்கிறாரே என்ற முகங்கள் இருக்கும்.

    சிலர் எழுத்துக்கும் வீட்டில் நடந்து கொள்வதற்கும் பெரும் வித்யாசம் இருக்கும்.

    அதாவது சமூகத்தளங்களில் பெண்ணியம், புரட்சி என்பார்கள் ஆனால், வீட்டில் வேறு மாதிரி இருப்பார்கள்.

    ஆனால், எனக்கு ஒரே முகம் தான்.

    இங்கே எப்படி எழுதுகிறேனோ அதே தான் வீட்டிலும் இருப்பேன், நேரிலும் நடந்து கொள்வேன். சிலர் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

    சிலர் குறிப்பிட்டு சொன்ன பிறகே சிலருக்கு பல முகங்கள் உள்ளது என்பதே தெரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here