அடிக்கடி நேர்மறை எண்ணங்கள், அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி எழுதி வருகிறேன் ஆனால், அதையொட்டி விமர்சனங்களும் வருகின்றன. Image Credit
முன்னரே கூறி இருந்தபடி அதற்கான விளக்கமே இது.
நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்களால் கிடைத்த நன்மைகளைப் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அதையொட்டி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரவேற்பு உள்ளது.
கருத்துப்பகுதியில் அதை வெளிப்படுத்தவில்லையென்றாலும், தனிப்பட்ட முறையில் பேசும் போது பலர் குறிப்பிடுவது மகிழ்ச்சி.
கூகுளிலிருந்து தேடி படிக்க வருபவர்களே அதிகம்.
விமர்சனங்கள்
ஆனால், என்ன தான் நேர்மறை எண்ணங்களைப் பற்றிக் கூறினாலும், ஒவ்வொருவருக்குமுள்ள பல்வேறு புரிதல்களால் விமர்சனங்கள் இருக்கும்.
இத்தளத்தைப் படிக்கும் Fahim மற்றும் Alim இருவர் கூறிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்க விரும்புகிறேன்.
இன்னொருவரும், திமுக பற்றி விமர்சிக்கும் நீங்கள், நேர்மறை எண்ணங்களைப் பற்றிப் பேசலாமா? என்று ஓரிரு வருடங்களுக்கு முன்பு கேட்டு இருந்தார்.
என்ன கட்டுரை என்று மறந்து விட்டது ஆனால், சாராம்சம் மேற்கூறியது தான்.
Fahim : நேர்மறை எண்ணங்கள், கர்மா என்று அடிக்கடி பேசும் நீங்கள் அதற்கு மாற்றாகச் செயற்படுவது இப்போது நன்றாகத் தெரிகிறது.
Alim (facebook page): நீங்கள் நேர்மையற்றவர்.
இத்தளத்தை மேற்கூறியவர்கள் இன்னும் படிக்கிறார்களா என்று தெரியாது. ஒருவேளை படித்தால், அவர்களின் கேள்விகளுக்கான பதிலே பின்வருவன.
மத ரீதியான விமர்சனங்கள்
இந்து மதம் என்ற சனாதன மதத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டுள்ளேன். எனவே, அதற்கு எதிராக நடந்தால், பேசினால் எதிர்க்கருத்தை முன் வைப்பேன்.
என் மதத்தை விமர்சித்தால் வாதத்தை முன்வைக்கிறேன். நேர்மறையை பேசுபவர் எப்படி இது போல எழுதலாம் என்றால் என்ன செய்வது?
நான் சாதாரண மனிதன். அனைத்தையும் அமைதியாகக் கடந்து போகும், முற்றும் துறந்த யோகி அல்ல.
கோபம், வருத்தம், எரிச்சல், மனக்கசப்பு, சமூகக்கோபங்கள் என்று அனைத்துமே உள்ளது. அதை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துகிறேன்.
நேர்மறை, கர்மா பேசினால் இதெல்லாம் பேசக் கூடாது என்று எதிர்பார்த்தால், அதற்கான நபர் நான் அல்ல.
தனிப்பட்ட முறையில் யாரையும் விரோதியாகக் கருதுவதில்லை.
நேர்மையற்றவர்
முதலில் நேர்மையாக பேசுபவர் என்றால் யார்? அதற்கு என்ன விளக்கம்?
நேர்மையாக பேசுபவர் யார் என்றால், நமக்குப் பிடித்தமான, நமக்கு ஏற்புள்ள கருத்துகளைக் கூறுபவரை நேர்மையானவர் என்று கூறுகிறோம் அவ்வளவே.
அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் நியாயத் தர்மங்களை நம் விஷயத்தில் மறந்து விடுகிறோம்.
அடுத்தவர் அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் ஆனால், நான் இருக்க மாட்டேன் என்பது என்ன மாதிரியான எண்ணம்?!
Alim கூறியது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை. காரணம், யாருடைய சான்றிதழையும் எதிர்பார்ப்பதில்லை.
எனவே, நேர்மையற்றவர், ஒரு சார்பாக எழுதுகிறீர்கள் என்று கூறும் போது அதை விமர்சனமாக எடுத்துக்கொள்கிறேன்.
எதையும் மறைக்கவில்லை
நடுநிலை பற்றி தெளிவாக விளக்கியும் கட்டுரை எழுதியுள்ளேன். எங்கேயுமே எதையும் மறைக்கவில்லை, அது எனக்குத் தேவைப்படவுமில்லை.
ஏற்கனவே, பல முறை கூறியது போல எழுதுவது Passion, இந்துமதம் என்ற சனாதன மதத்தின் பின் தொடர்வாளன், வலது சாரி ஆதரவாளன், ரஜினி ரசிகன் இதுவே நான்.
இதையொட்டியே என் கருத்துகளும் இருக்கும். கூறிய கருத்தில் விமர்சனம் இருந்தால், கேள்வி கேளுங்கள், நிச்சயம் பதிலளிப்பேன்.
எனவே, எதுக்கு இந்து மத, பாஜக, ரஜினி ஆதரவா எழுதறீங்க? என்று கேட்காமல், கூறியுள்ளதில் என்ன தவறோ, விமர்சனமோ அதை முன் வையுங்கள்.
அதை விடுத்து உங்கள் கருத்தை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
உங்களுக்கு ஒரு அரசியல், மத, ரசிக நிலைப்பாடு இருப்பது போல எனக்கும் உள்ளது.
திமுக எதிர்ப்பு
திமுகவை விமர்சிக்கும் போது நேர்மறை எண்ணங்கள் எங்கே சென்றது? என்று ஒருவர் கேட்டதுக்கும் மேற்கூறியதே பதில்.
இந்து மதம் என்ற சனாதன மதத்தை டெங்கு, கோவிட், மலேரியா, எய்ட்ஸ், தொழுநோய் என்று மிக மோசமாக விமர்சிக்கிறார்கள்.
இந்து மதத்தின் மீதுள்ள வெறுப்பில், HIV, தொழுநோயால் பாதிக்கப்பட்டு மனதளவிலும், உடலளவிலும் துன்பப்படுபவர்களையும் ராசா இழிவுபடுத்துகிறார்.
திமுக ஆதரவாளர்களுக்கு அவர்கள் ஆதரிக்கும் கட்சிக்காக அவர்கள் இழிவுபடுத்தும் அனைத்தையும் சகித்துச் செல்ல வேண்டிய நிலை.
என்னைப்போன்றவர்களுக்கு அப்படியிருக்க என்ன தேவை? எதற்கு இந்த அவமானத்தைக் கடந்து, சகித்துச் செல்ல வேண்டும்?!
மீம் பகிர்ந்தவரை இரவில் கைது செய்கிறார்கள் ஆனால், இந்து மதத்தை இவ்வளவு கேவலமாகப் பேசியுள்ளார்கள் ஆனால், FIR கூட இல்லை! இதையெல்லாம் கடந்து செல்லச் சொல்கிறீர்களா?
அரசியலிலும் இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று.
எனவே, ஏராளமான அரசியல் விமர்சனங்களும் உள்ளன. தமிழக அடிமை ஊடகங்களால் தவறுகளை மறைத்து வருகிறார்கள்.
கேள்வி கேட்க முழு உரிமையுண்டு
நான் கூறியதில் தகவல் பிழை இருந்தால், கேள்வி கேளுங்கள், சுட்டிக்காட்டுங்கள் ஆனால், இதை எழுதக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை.
இன்றுவரை இத்தளத்தில் கருத்து மட்டுறுத்தல் (moderation) கிடையாது.
திமுக எதிர்ப்புக் கட்டுரைகள், மோடி அரசின் நலத்திட்டங்கள், மத ரீதியான விமர்சனங்கள் தொடரவே செய்யும்.
சனாதன மதத்தை இழிவுபடுத்தும் திக, திமுக உட்பட அனைவரையும் தொடர்ந்து விமர்சிப்பேன், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
தனிப்பட்ட நபர்கள் அல்லது என் சார்ந்த தனிப்பட்ட செயல்களுக்கு மட்டுமே நேர்மறை எண்ணங்களைப் பின்பற்றுகிறேன், வைக்கப்படும் அரசியல், சமூக விமர்சனங்களுக்கு அல்ல.
எனவே, விருப்பமுள்ளவர்கள் தொடரலாம், மற்றவர்கள் புறக்கணிக்கலாம்.
நன்றி 🙏🏻
கொசுறு 1
இந்த விளக்கத்தைத் தனிக்கட்டுரையாகக் கொடுக்கக் காரணம், இதன் பிறகும் தொடர்ந்து நேர்மறை எண்ணங்களைப் பற்றிக் குறிப்பிடத்தான் போகிறேன்.
எனவே, அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் விளக்கம் கொடுக்கச் சிரமமாக உள்ளதால் இக்கட்டுரை.
இனி எவரும் கேட்டால், இந்த லிங்க் கொடுத்து விடுவேன்.
நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா? கட்டுரை பல கேள்விகளுக்கு பதிலாக கொடுக்க எளிதாக இருப்பது போல, இக்கட்டுரையும் இருக்கும்.
கொசுறு 2
மேற்கூறியவை ஒரு பக்கம் என்றாலும், நேர்மறை எண்ணங்களால் நான் அடைந்த பலன்கள், நன்மைகள் ஏராளம். எனவே, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறை எண்ணங்களைப் பின்பற்றுங்கள்.
நிச்சயம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல அற்புதங்களைக் காண்பீர்கள், எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?
எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
தரமான பதில் அதுவும் நேர்மறையான பதில்
welldone 👏👏👏👏👏👏👏👏
கிரி, வெகு சமீபத்தில் படித்த ஒன்று!!! உன்னை குறித்த விமர்சனத்துக்கு எல்லோருக்கும் பதில் அளித்து கொண்டிருந்தால், நீ பதிலை மட்டுமே அளித்து கொண்டிருப்பாய்!!! இது உண்மை தான்.. நீங்கள் எப்போதும் கடப்பது போல கடந்து கொண்டிருப்பது தான் சரி!!! எல்லோருக்கும் அவரவருக்கான நியாயங்கள். தன்னுடைய குறைகளையோ / தவறுகளையோ யாரும் இங்கு ஒத்து கொள்வதில்லை.. குறிப்பாக சமூக வலைதளங்களில் இதை எதிர்பார்க்கவே முடியாது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களுக்கு இடையிலே மாற்று கருத்துக்கள் இருக்கும் போது, பின்பு மற்றவரிடத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்.. பல ஆண்டுகளாக உங்களை தொடர்பவன் என்ற அடிப்படியில் என்னை பொறுத்தவரை உங்கள் எழுத்தை ரசிக்கிறேன்.. உங்கள் மூலம் பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறேன்.. எல்லாவற்றிக்கும் மேல் எதற்கும் சமரசமில்லா உங்கள் குணத்தை ஆதரிக்கிறேன்.. தனிப்பட்ட முறையில் சிலவற்றில் மாற்று கருத்துக்கள் இருந்தாலும், என் மனதுக்கு சரி என்று தோன்றும் வரை இந்த பயணம் நிச்சயம் எதிர்காலத்தில் தொடரும்.
@சரவணன் & ஹரிஷ் நன்றி
@யாசின்
“உன்னை குறித்த விமர்சனத்துக்கு எல்லோருக்கும் பதில் அளித்து கொண்டிருந்தால், நீ பதிலை மட்டுமே அளித்து கொண்டிருப்பாய்!”
மிகச்சரியான கருத்து யாசின்.
ஆனால், சிறு விளக்கம்.
1. நடுநிலை பற்றி தெளிவுபடுத்தியதற்கு காரணம், இதன் பிறகு நம் மீதான எதிர்பார்ப்புகள், தேவையில்லாத கேள்விகள் குறையும்.
என்ன நிலையில் உள்ளோம் என்பதை தெளிவுபடுத்தி விட்டால், எனக்கும் எளிது. ஒவ்வொரு முறையும் நடுநிலையாக எழுதுங்க என்று கேட்பவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை.
இக்கட்டுரை எழுதிய பிறகு இது போல வரும் கேள்விகள் குறைந்து விட்டது உண்மை.
பலர் பதிலளிப்பதில்லை ஆனால், நான் அனைவருக்கும் பதிலளிக்கிறேன். எனவே, ஒவ்வொரு முறை அவர்கள் கேள்விக்கு விளக்கம் கொடுக்காமல் லிங்க் கொடுத்து விடுவது எளிதாகிறது.
2. நேர்மறை பற்றி விளக்கியதற்கு காரணம், என் நேர்மறை கட்டுரைகள் பலரிடம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. நேரில் பார்க்கும் போது கூறுகிறார்கள்.
சில மின்னஞ்சல் அனுப்பியும் நன்றி தெரிவிக்கிறார்கள்.
எனவே, நேர்மறையாக சிந்திக்கும் கிரி இது போல எழுதினால் நேர்மறை பற்றி கூறுவது பொய் என்று நினைத்து, நேர்மறையாக இருக்க எடுக்கும் முயற்சிகளை தவிர்க்கலாம்.
எனவே, இது போன்ற விளக்கம் கொடுத்தால், முயற்சிப்பவர்களுக்கு குழப்பம் இருக்காது.
எனவே தான் இக்கட்டுரை.
மற்றபடி மற்றவர்கள் விமர்சனம் செய்வதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இவை என்னை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை, ஓரிரு நாளில் மறந்து விடுவேன். அதன் பிறகு இதற்காக நினைவு படுத்தினால் மட்டுமே உண்டு.
“சிலவற்றில் மாற்று கருத்துக்கள் இருந்தாலும், என் மனதுக்கு சரி என்று தோன்றும் வரை இந்த பயணம் நிச்சயம் எதிர்காலத்தில் தொடரும்.”
என்ன தான் என் கட்டுரைகளில் சிலவற்றை புறக்கணித்து நீங்கள் தொடர்ந்தாலும் ஒரு நாள் உங்கள் Limit / Threshold அடையும் போது இத்தளத்தை புறக்கணிக்கவே செய்ய முடியும்.
இதை நான் முழுமையாக உணர்ந்துள்ளேன். எனவே, என்றாவது ஒரு நாள் நடக்கும். அதை நான் முடிந்தவரை தள்ளிப்போட நினைக்கிறேன்.
யாசின் இல்லாத தளம் வெறுமையாகவே காட்சியளிக்கும் 🙂 . அதில் எனக்கு சந்தேகமில்லை.