பெயர் மாற்ற அடாவடிகள்

2
Chennai

நேற்றுத்தான் தமிழக அரசை நெகிழி தடைக்காகப் பாராட்டினேன் ஆனால், இன்று திட்ட வேண்டிய கட்டாயம். என்னே சோதனை!

பெயர் மாற்றப் பிரச்சனையில், தமிழக அரசு ஒரு விஷயத்தில் சிறப்பாகவும் இன்னொரு விஷயத்தில் கிறுக்குத்தனமாகவும் நடந்து வருகிறது.

முதலில் நல்ல விசயத்தைப் பார்ப்போம்.

ஆங்கிலப் பெயர்கள் மாற்றம்

நகரங்களின் ஆங்கிலப்பெயர்கள், புரியாத சமஸ்கிருத பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படவுள்ளன. பலத்த வரவேற்பு அனைத்துப் பக்கங்களிலும் கிடைத்துள்ளது.

உதாரணத்துக்குத் தூத்துக்குடி / திருவல்லிக்கேணி ஆங்கிலத்தில் Tuticorin / Triplicane என்று கூறப்படுவது இனி ஆங்கிலத்திலும் தூத்துக்குடி / திருவல்லிக்கேணி என்றே அழைக்கப்படும்.

ஆங்கிலேயர்கள் உச்சரிக்க சிரமமாக இருந்ததால், இது போல மாற்றியதாக ஒரு பேச்சு உண்டு.

ஏதாகினும் இது மிக நல்ல மாற்றம் முழு மனதோடு வரவேற்கிறேன்.

அதிமுக செய்யும் அட்டகாசம்

அதிமுகக்கு எம்ஜிஆர் அவர்கள் மீது பற்று, மரியாதை இருப்பதில் தவறில்லை அதற்காக இவர்கள் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

கொஞ்ச மாதங்கள் முன்பு கோயம்பேடு “சென்னை புறநகர் பேருந்து நிலையம்” (CMBT) பெயரை “எம்ஜிஆர் புறநகர் பேருந்து நிலையம்” என்று மாற்றிக் கடுப்பேற்றினார்கள்.

ஏற்கனவே, உள்ள இடத்தின் பெயரை மாற்ற வேண்டிய தேவையென்ன?

மாதவரம் பேருந்து நிலையம் தமிழக அரசால் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது, இதற்கு எம்ஜிஆர் பெயரை வைத்தால் அதில் நியாயமுள்ளது.

ஏற்கனவே வைக்கப்பட்ட பெயரை மாற்றியதால், தற்போது அதை அனைத்து இடங்களிலும், பேருந்துகளிலும் மாற்ற வேண்டிய சூழ்நிலை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.

ஒரு பொதுவான பெயரில் இருந்து அரசியல் தலைவர் பெயருக்கு மாறுகிறது.

“சென்ட்ரல்” “எழும்பூர்” பெயர்களுக்கு வந்த தலைவலி

தற்போது நூற்றாண்டு பெருமை வாய்ந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை “புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்” என்று மாற்ற வேண்டும் என்று ஆரம்பித்து விட்டார்கள்.

இதோடு எழும்பூர் (Egmore) ரயில் நிலையத்தின் பெயரையும்.

சென்ட்ரல் / மத்திய ரயில் நிலையம் என்பது மக்களோடு கலந்து விட்ட பெயர்.

அதை எதற்கு மாற்ற வேண்டும்?! சென்ட்ரல் என்பது எனக்கெல்லாம் ஒரு சென்டிமென்ட்டான பெயர்.

மெட்ராஸ் என்ற பெயரைச் சென்னை என்று மாற்றியதில் ஒரு நியாயமுள்ளது ஆனால், சென்ட்ரல் / மத்திய ரயில் நிலையம் என்ற பெயரை அரசியல் தலைவரின் பெயரில் மாற்றுவது எப்படிச் சரியாகும்?

கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி உங்களுடைய எதிர்ப்பைக் காட்டலாம் என்று தெரிவித்துள்ளது. நான் அனுப்பி விட்டேன், நீங்களும் அனுப்புங்கள்.

gm@sr.railnet.gov.in, agm@sr.railnet.gov.in, ccm@sr.railnet.gov.in, ddpg@sr.railnet.gov.in, crb@rb.railnet.gov.in, mt@rb.railnet.gov.in, secyrb@rb.railnet.gov.in, mr@rb.railnet.gov.in, edrsc@rb.railnet.gov.in, dpgmrcc@gmail.com, edpg@rb.railnet.gov.in

தடை வேண்டும்

ஓரிரு வருடங்களுக்கு முன்பு,  அனைத்து விமான நிலையங்களின் பெயர்களும் அரசியல் தலைவர் பெயர்களில் இருந்து அந்தந்த நகரின் பெயரிலேயே மாற்றம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மிகச்சிறப்பான முடிவு. இதை ஏன் இன்னும் செயல்படுத்தவில்லை என்பது புரியவில்லை!

அரசியல் தலைவர்கள் பெயரை வைத்து அரசியல் செய்வதே ஒரு வியாதியாகி விட்டது. பெயர் வைப்பதையும், பொது இடத்தில் சிலை வைப்பதையும் தடுக்க சட்டம் வேண்டும்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என்று அனைத்து பொது இடங்களுக்கும், சேவைகளுக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்களை வைக்கத் தடை விதிக்க வேண்டும்.

இதனால் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்கள் ஏற்படுகிறது. அதோட மக்கள் சொத்தில் விளம்பரம் செய்ய இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?!

“ஜெ” முதல்வராக இருந்த போது “சென்ட்ரல் ரயில் நிலையமும், அங்கேயுள்ள மெட்ரோ ரயில் நிலையமும் ஒருங்கிணைக்கப்பட்டு “மத்திய சதுக்கம்” (Central Square) என்ற பெயரில் அழைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

எவ்வளவு அழகான பெயர்! ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, தற்போது இந்தக் கொடுமை.

அரசியல்வாதிகளே! மக்களின் சொத்தில் உங்கள் தலைவர்கள் பெயரைப் பொறிப்பதை நிறுத்தித் தொலைங்கய்யா..! செம்ம காண்டாகுது.

தொடர்புடைய கட்டுரைகள்

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!

அசிங்கப்பட்ட IRCTC தளம்!

எவனோ சூனியம் வச்சுட்டான்

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. அரசியல் தலைவர்களின் பெயர்கள், கொடி, சிலை, சுவரொட்டிகள், சுய விளம்பரங்கள்.. இது போல பல விஷியங்கள் பார்த்தாலே கிறுகிறுக்கும்…
    பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என்று அனைத்து பொது இடங்களுக்கும், சேவைகளுக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்களை வைக்கத் தடை விதிக்க வேண்டும். (இதுமட்டும் அல்ல கல்விநிலையங்கள்.. உட்பட எந்த அரசாங்கம் சம்பந்தப்பட்டவைகளுக்கு அரசியல் தலைவர்கள் பெயர் தடை செய்ய வேண்டும்)..

    நேர்மையாக பணிபுரிந்து விட்டு ஓய்வில் செல்லும் மாவட்ட ஆட்சியாளர்களின் பெயர்களை அந்த அலுவலகத்தில் காண்பதே அரிது.. 5 வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாறிக்கொண்டிருக்கும், அரசியல் தலைவர்களின் பெயர்களை விளம்பரப்படுத்துவது என்ன நியாயம்???? அதுவும் மக்கள் வரிப்பணத்தில்!!!!!

    (இதனால் தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்கள் ஏற்படுகிறது. அதோட மக்கள் சொத்தில் விளம்பரம் செய்ய இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது???) நியமான கேள்வி ஆனால் விடை????? இவர்கள் எல்லாம் திருந்துவார்களா???? என்று தெரியவில்லை… திருந்தினால் எல்லோருக்கும் நன்மை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. இவங்க பண்ணுற அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. மக்களின் வரிப்பணத்தில் இவர்களுக்கு இலவச விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    பார்க்கவே செம்ம கடுப்பாகுது. இவர்கள் திருந்த போவது இல்லை எனும் போது இன்னும் காண்டாகுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here