நெகிழி (பிளாஸ்டிக்) தடை | கவனம் பெறா செய்திகள்

3
Plastic Bag ban நெகிழி (பிளாஸ்டிக்) தடை

மிழக அரசு எடுத்த மிகச்சிறந்த முடிவு நெகிழி (பிளாஸ்டிக்) தடை. உடனடி அமுல் என்று சில நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்துச் சொதப்பாமல் கிட்டத்தட்ட ஆறு மாத அவகாசம் கொடுத்துத் தடை செய்துள்ளார்கள்.

நெகிழி (பிளாஸ்டிக்) தடை

இத்தடை வழக்கம் போல நீட்டிக்கப்படும் என்று 100% நம்பினேன் ஆனால், நம்பிக்கை பொய்த்ததில் மகிழ்ச்சி.

நெகிழியால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. நிலம் மாசுபடுகிறது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களாக நெகிழிகள் உள்ளன.

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க சில கடுமையான முடிவுகள் கட்டாயம்.

இத்தடையால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது அனைவருமே எதிர்பார்த்த ஒன்று.

வாழ்க்கை இதோடு முடிந்து விடுவதில்லை, இந்தச் சோதனைக்குப் பிறகு இவர்கள் வேறு வகையில் சற்றுத் தாமதமாக ஆனால், கண்டிப்பாக மீள்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

ஒருவரின் நட்டம் இன்னொருவரின் இலாபம்

இத்தடையால் நெகிழி தொடர்பான நிறுவனங்களுக்கு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் காகிதம், பாக்கு மட்டை, வாழை இலை, தாமரை இலை தொடர்பானவைகளுக்குத் தேவைகள் அதிகரித்துள்ளன.

எனவே, இது தொடர்பான மக்களுக்கு நிச்சயம் இலாபம் கிடைக்கும், தொழிலாளர்களுக்கு, நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சுய தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்பை இப்புத்தாண்டு வழங்கியுள்ளது.

மாற்றுப் பயன்பாடு

தமிழக அரசு இத்தடையை அறிவித்த பிறகு மாற்றுப் பயன்பாட்டுக்கான வழிகளைப் பிரபலப்படுத்தவில்லை. பெயருக்குச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதை அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அமுல்படுத்தி இருந்தால், தற்போது ஏற்படும் நடைமுறை சிக்கல் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

ஆனால், சில மாவட்ட ஆட்சியர்கள் இதைச் செயல்படுத்த முன்பே ஆர்வம் காட்டியது பாராட்டத்தக்கது. இதனாலே பல நிறுவனங்கள் தயாராக இருந்தன.

கோவையில் ஒருவர் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மக்கும் (நெகிழி பைகளைப் போலவே உள்ள) பைகளை (Bio Bag) அறிமுகப்படுத்தி இருந்தார்.

Read : கோவையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயோ-பேக் விற்பனை

நன்றி மாலை மலர்

இது நிச்சயம் நெகிழிக்கு மிகச்சிறந்த மாற்றாக அமையும்.

இவர்களைப் போன்றவர்களின் முயற்சிகளுக்கு அரசும் மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். நிறுவனங்கள் இவற்றைப் பயன்படுத்தி நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

தண்ணீர் பயன்பாடு

நெகிழி பயன்பாடு குறைவதால், தண்ணீரின் பயன்பாடு அதிகரிக்கலாம்.

பொருட்களைக் கழுவவும், பைகளை உற்பத்தி செய்யவும் தண்ணீர் பயன்பாடு அதிகம் தேவை. எனவே, இந்த ஆண்டுத் தண்ணீரின் தேவை அதிகரிக்கும்.

சென்னையில் மழையில்லை எனவே, இந்தவருடம் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. எனவே, இப்பிரச்சினைகள் எதிரொலிக்கலாம்.

நெகிழி டம்ளர்

தமிழக அரசு நெகிழி டம்ளர்களுக்கு விலக்கு அளிக்கப் பரிசீலித்து வருவதாக அமைச்சர் கூறி இருந்தார். இது மிக மோசமான பரிசீலனை.

நெகிழி டம்ளர்களின் பயன்பாடு டாஸ்மாக்கில் தான் தினமும் அதிகளவில் உள்ளது. இவர்கள் தினமும் ஏற்படுத்தும் லட்சக்கணக்கான நெகிழி குப்பையின் அளவு பல டன்கள் இருக்கும்.

எனவே, இதற்கு நிச்சயம் விலக்கு அளிக்கக் கூடாது. பயன்படுத்திவிட்டு அப்படியே கசக்கி எறிந்து விடுகிறார்கள். இதனால் ஏற்படும் குப்பைகள் சொல்லி மாளாது.

மக்களின் ஒத்துழைப்பு தேவை

மக்களின் ஒத்துழைப்பு தமிழக அரசின் தடைக்கு அவசியம் வேண்டும். அரசு மட்டுமே இதில் பங்களிப்பைக் கொடுத்து விட முடியாது.

பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், மக்கள் இந்த நல்ல முயற்சிக்குக் காரணங்களைக் கூறி முட்டுக்கடை போட்டு விடாமல், வெற்றி பெற உதவ வேண்டும்.

கடைகளுக்குச் செல்லும் போது தயவுசெய்து துணிப் பைகளை எடுத்துச் செல்லுங்கள். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்கும் போது எளிதாகி விடும்.

நெகிழி இல்லா தமிழ்நாடு காண்போம்! சுற்றுச்சூழல் பாதுகாப்போம்!!

3 COMMENTS

 1. நம் மக்களுக்கு அரசாங்கம் சொன்னால் தான் செய்வேன் என்ற அடம் உள்ளது. கடந்த ஒரு வருடமாக இதனை என் அன்றாட கடமைகளில் ஒன்றாக செய்து வந்தேன். மகள்கள் கூட நெகிழிப் பற்றி படித்தாலும் எழுதினாலும் மனம் மாறவில்லை. அப்புறம் அவர்களும் என் வழிக்கு வந்து விட்டார்கள். ஒயர் கூடையும் மஞ்சள் பையையும் நான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வதுண்டு. இப்போது மனைவியும் சில மாதங்களுக்கு முன் மாறிவிட்டார். இப்போது அரசாங்கமும் சட்டமாக கொண்டு வந்து விட்டது. பல கடைகளில் எனக்கு பிளாஸ்டிக் பை வேண்டாங்க என்ற போது சிலர் ஆச்சரியமாகவும் என்னைப் பார்த்துள்ளார்கள்.

 2. மீண்டும் பள்ளி பருவத்திற்கு திரும்பியது போல ஒரு உணர்வு!!! 10 ஆம் வகுப்பு வரை துணிப்பையில் தான் பாட புத்தகங்களை கொண்டு சென்றோம்.. பிளாஸ்டிக் பைகளை காண்பது அரிது.. அது ஏதோ மேல்வர்க்கத்தினர்க்கு மட்டும் தான் என்ற உணர்வும் இருந்தது.. நாட்கள் செல்ல செல்ல எல்லா இடங்களிலும் இவைகளின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது..

  பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் தெரிந்தும் அதை இத்தனை காலங்கள் கடத்தி, எப்படியோ கடைசியில் அரசாங்கம் தடை செய்ததற்கு நன்றி!!! இந்த தடை நிச்சயம் தொடர வேண்டும்… நிச்சயம் இதை நம்பி தொழில் இருப்பவர்கள் பாதிப்படைவார்கள், அவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் / நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்..

  “நெகிழி டம்ளர்களின் பயன்பாடு டாஸ்மாக்கில் தான் தினமும் அதிகளவில் உள்ளது. இவர்கள் தினமும் ஏற்படுத்தும் லட்சக்கணக்கான நெகிழி குப்பையின் அளவு பல டன்கள் இருக்கும்…” இத்தனை ஆண்டு காலம் எத்தனை லட்சம் டன் குப்பை டாஸ்மார்க்கினால் ஏற்படுத்த பட்டிருக்கும் என்பதை யோசித்தால் தலை சுற்றுகிறது…பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @ஜோதிஜி நானும் முன்பே பிளாஸ்டிக் பயன்பாட்டை வெகுவாக குறைத்து விட்டேன். தற்போது தீவிரமாக பின்பற்றுகிறேன்.

  @யாசின் தாமதமான முடிவு என்றாலும், சிறப்பான முடிவு.

  ஆமாம் டாஸ்மாக்கில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே டன் கணக்கில். இவனுக எதுல குடித்தால் என்ன? இங்கு தான் தடையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here