பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது அதிலிருந்து 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன். அதிலிருந்து 4 வது கட்டுரை. Image Credit
மன அமைதியை அடைவது எப்படி?
எல்லோரும் கூறுவது…
‘மனசே சரியில்லைங்க, எதையோ யோசித்துட்டே இருக்கேன், தூக்கமே வர மாட்டேங்குது, யாராவது ஏதாவது சொல்லிடுறாங்க, மனசு ஒரே குழப்பமா இருக்கு‘.
இவை அனைத்துக்கும் காரணம், தேவையில்லாத சிந்தனைகள் தான். இச்சிந்தனைகளை ஒதுக்கினாலே மனம் அமைதி அடைந்து விடும்.
விண்கல (ராக்கெட்) எடுத்துக்காட்டு
இதுவரை எவ்வளவோ எடுத்துக்காட்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பலர் கூறி கேட்டு இருந்தாலும், சுவாமி திரு சச்சிதானந்தா கூறிய விண்கல எடுத்துக்காட்டு அசத்தல்.
இப்பிரச்சனைக்கு இதைவிடச் சிறப்பான, எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளும் எடுத்துக்காட்டைக் கூற முடியாது.
விண்கலம் விண்ணுக்கு செல்ல வேண்டும் என்றால், ஈர்க்கும் புவி ஈர்ப்பு விசையை விண்கலம் கடக்க வேண்டும். அதோடு இதைக் கடக்க எரிபொருள் தேவை.
விண்கலம் ஏவப்படும் போது அதில் தொழில்நுட்ப கோளாறுகள் இருக்கக் கூடாது.
இவை அனைத்தும் சரியாக உள்ளது என்றால், புவி ஈர்ப்பு விசையைக் கடந்து விண்கலம் விண்ணுலகுக்கு சென்று விடும்.
செல்லும் போது பல்வேறு சோதனைகளைக் கடந்து, அதிர அதிர மேலே சென்று புவி ஈர்ப்பு விசையைக் கடந்தவுடன் விண்கலம் அமைதியாகி விடுகிறது.
இதை மனதோடு ஒப்பிட்டு அழகாக கூறியுள்ளார்.
மனம் எதனால் குழப்பம் அடைகிறது?
எதிர்மறை சிந்தனைகள், கோபம், எதிர்கால பயம், கடந்த கால கவலை, மற்றவர்கள் விமர்சனம், கிண்டல் என்று ஏராளமான காரணங்கள்.
இவற்றை புவிஈர்ப்பு விசை, தொழில்நுட்ப கோளாறுகள் ஆகியவற்றோடு ஒப்பிடலாம்.
நேர்மறை சிந்தனைகள், தியானம், நிகழ்கால எண்ணத்தில் பயணப்படுவதை விண்கல எரிபொருளோடு ஒப்பிடலாம்.
நம் மனதை அமைதியாக்க வேண்டும் என்றால், நம்மைக் கீழே இழுக்கும் எதிர்மறை சிந்தனைகள், கடந்த கால கவலைகள், எதிர்கால பயத்திலிருந்து விடுபட வேண்டும்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்து, பொறாமை, வன்மம், கோபம் ஆகியவற்றை தவிர்த்துப் பயணித்தால், அனைத்தில் இருந்தும் விடுபட்டு மனம் விண்ணுலகம் என்ற அமைதி நிலையை அடையும்.
புவி ஈர்ப்பு விசையைக் கடந்தால், எப்படி பரபரப்பின்றி விண்கலம் அமைதியாகப் பயணிக்கிறதோ அது போல நம் மனம் அமைதியை நோக்கிப் பயணிக்கும்.
மனம் அமைதியாக இருக்கிறது என்றால், சிந்தனையும் சிறப்பாக இருக்கும். அவசரப்பட மாட்டோம். பொறாமை, வன்மம், கோபம் இருக்காது.
சுவாமி திரு சச்சிதானந்தா அவர்கள் கூறிய இந்த விளக்கம் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் என்று நம்புகிறேன் 🙂 .
எனவே, நேர்மறை எண்ணங்களை வளர்த்து மன அமைதியைப் பெறுங்கள்.
கொசுறு
சுவாமி திரு சச்சிதானந்தா அவர்கள் கூறியதால், இது ஏதோ கடினமான வேலை என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.
துவக்கத்தில் பழகும் வரையே கடினமாக இருக்கும். பழகி விட்டால், இதற்காக கூடுதல் உழைப்பை செலவிடாமல் இயல்பாகவே இம்மாற்றம் நடக்கும்.
இதைப் பின்பற்றி வருகிறேன் என்பதால், 100% உண்மை.
தொடர்புடைய கட்டுரைகள்
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?
எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?
மன அழுத்தம் எப்படி இருக்கும்?!
நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, ஒரு காலகட்டத்தில் எந்த சிந்தனையும் இல்லாமல் கோவையில் இருந்த போது திரிந்து கொண்டிருந்தேன்.. நாட்கள் செல்ல செல்ல வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்லும் போது வலிகளும், வேதனைகளும், சோர்வுகளும், சந்தோஷங்களும் மாறி மாறி வந்து போனது.. எந்த மோசமான நிகழ்வுகள் வந்த போதும், மகிழ்வான நிகழ்வுகளையும், சக்தியை தவிர வேறு யாரிடமும் பகிர்ந்து கிடையாது..
என்னை பொறுத்தவரை கடினமான சூழ்நிலையில் உள்ள போது நாம் நேசிக்கும் ஒருவரிடம் (அம்மா, அப்பா, மனைவி, சகோதரன், நண்பர்கள்..etc ) என யாரிடமாவது மனம் விட்டு பேசினால் தீர்வு கிடைக்குமோ இல்லையோ, ஆனால் நிச்சயம் நமது பிரச்சனையை நாம் சொன்னவரும், நம்முடன் சேர்ந்து சுமப்பது போல் ஒரு உணர்வு தோன்றும்.. அந்த தருணமே பாதி பிரச்சனை முடிந்தது போல் உணர முடியும்..
என் கடினமான நாட்களை எளிதாக கடந்து போக உதவியது கிரிக்கெட்டும், இசையும் தான்.. நல்ல விருப்பமான புத்தகங்கள் நமது சிந்தனையை செம்மையாக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. காரல் மார்ஸ் போல் அறை முழுவதும் புத்தகங்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உள்ளது.. நீண்ட பயணம் மேற்கொண்டு மிக சிறந்த அனுவத்தை பெற வேண்டும் என்ற ஆசையும் உண்டு..பகிர்வுக்கு நன்றி கிரி..
//நல்ல விருப்பமான புத்தகங்கள் நமது சிந்தனையை செம்மையாக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.// ஆம் உண்மைதான்.
//அறை முழுவதும் புத்தகங்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உள்ளது.. நீண்ட பயணம் மேற்கொண்டு மிக சிறந்த அனுவத்தை பெற வேண்டும் என்ற ஆசையும் உண்டு// எனக்கும் இந்த ஆசை உள்ளது.
கடினமான சூழ் நிலையில் என்னால் புத்தகம் படிக்க முடியவில்லை. நல்ல அமைதியான மன நிலையில் தான் படிக்க முடிகிறது. அந்த அளவுக்கு டார்ச்சர் பன்றாங்க. அதனால பைக் எடுத்துகிட்டு உள்ளூர்லயே ஒரு ரவுண்டு அடிப்பேன்.
முயற்சி பன்றேன் கிரி அண்ணா
@யாசின்
யாரிடமாவது நம் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், தேவையற்ற மனஉளைச்சலே ஏற்படும்.
அதற்குச் சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது நம் பொறுப்பு.
எதிர்காலத்தில் புத்தகங்களே இருக்காது என்று நினைக்கிறேன் யாசின். எல்லாமே Kindle போல மின்னணு புத்தகங்களாக மாறி விடும்.
பழைய புத்தகங்கள் மட்டுமே தொடரும்.
@கார்த்திக் முயற்சிக்கிறேன் என்று கூறுவதோடு நிறுத்தி விடாமல், செயலிலும் செயல்படுத்த அறிவுறுத்துகிறேன்.
பலரும் நினைப்பது போல கடினமான செயல் அல்ல.
அவசியமற்ற யோசனைகளை தவிர்த்து இருந்தாலே போதுமானது.