பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 10 வது கட்டுரை. Image Credit
கடவுளை நம்பினால் மருத்துவம் எதற்கு?
கடவுளை நம்பினால் மருத்துவம் எதற்கு? என்ற கிண்டலான கேள்வியைப் பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள்.
என்ன சொன்னாலும் அதற்கு ஒரு கூட்டம் கிண்டலடிக்கக் காத்துக்கொண்டு இருக்கும். நம்மைச் சுற்றி அதிபுத்திசாலிகள் சூழ்ந்து உள்ளார்கள்.
எனவே, அவர்களையும் சமாளித்தே நம் இருப்பை தக்க வைக்கிறோம்.
மேற்கூறிய கேள்வியைக் கேள்விப்படாத, கடக்காத எந்தவொரு நபரும் இருக்க மாட்டார். சாமி செய்யுமென்று நம்பினால் அப்புறம் எதற்கு மருத்துவரிடம் செல்கிறாய்? என்று கிண்டலடிக்கும் சமூகம்.
கடமை
கடவுள் உதவுவார் என்று நம்புகிறோம், அதற்காகக் கடமைகளைச் செய்யாமல் கடவுள் உதவவில்லை என்று கூற முடியுமா?
அந்த மருத்துவத்தைச் செய்யத் தூண்டுவதே கடவுளாக இருக்கலாம் ஆனால், கடவுள் நேரா வந்து உதவி செய்ய வேண்டும் என்றால் எப்படி நடக்கும்?
நம்புகிறீர்களோ இல்லையோ! என் வாழ்க்கையில் கடவுள் உடன் இருப்பதாகவே உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் பிரச்சனைகளிலிருந்து காப்பதாக, கற்பனையில் அல்ல உண்மையிலேயே உணர்கிறேன்.
இதற்கு எடுத்துக்காட்டுக் கூற பல வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டியதில்லை. கடந்த வாரம் நடந்த சம்பவத்தையே எடுத்துக்காட்டாகக் கூற முடியும்.
இது அனைவருக்கும் நடக்கிறது. நான் ஆராய்ந்து உணர்கிறேன், மற்றவர்கள் அதைச் சம்பவமாகக் கடந்து செல்வதால், உணர்வதில்லை.
கடவுள் ஏன் வரவில்லை?
கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு நபர் கப்பலில் செல்லும் போது கடலில் விழுந்து விடுகிறார். கடவுள் காப்பாற்றுவார் என்று முழுமையாக நம்பினார்.
அந்நேரத்தில் ஒரு பாதுகாப்பு வளையம் மிதந்து வந்து கொண்டு இருந்தது. கொஞ்சம் நீந்திச் சென்று பிடித்து விட்டால், வேறு யாராவது வரும் வரை சமாளிக்கலாம்.
ஆனால், கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று வளையத்தைப் பிடிக்காமலிருந்ததால், காற்றில் அந்த வளையம் நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்று மறைந்து விடுகிறது.
கொஞ்ச நேரத்தில் களைப்படைந்த நபர், மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் மூழ்கி இறந்து, கடவுளிடம் சென்று ‘ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?‘ என்று கேட்கிறார்.
‘உன்னிடம் வந்த பாதுகாப்பு வளையமே நான் அனுப்பியது தான். அதைப்பிடித்து இருந்தால், அடுத்து வரும் கப்பல் உன்னைக் காப்பாற்றியிருக்கும். நீ தான் புறக்கணித்து மூழ்கி விட்டாய்‘ என்று கூறுவார்.
கடவுளே நேரடியாக வராமல் மற்றவர்கள் மூலமாகவே வந்து உதவுவார். எனவே, ஒவ்வொரு வாய்ப்பையும் கடவுள் கொடுத்ததாகவே கருத வேண்டும்.
தீர்வு காண்பது தவறாகாது
பிரச்சனைக்குத் தீர்வு காண முற்படுவது கடவுளை நம்பவில்லை என்பதாகாது.
சில நேரங்களில் என்ன முயன்றாலும் எந்த மருத்துவத்தாலும், எவ்வளவு பெரிய மருத்துவராலும் ஒருவரைக் காப்பாற்ற முடிவதில்லையே ஏன்?
செயல்படுவது விஞ்ஞானம் தானே! ஏன் நடக்கவில்லை?!
இதுவே விதி எனப்படுகிறது.
நம் கடமையை, முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். அதை மீறி நடப்பது நம் கையில் இல்லை. அது உலகின் தலைச்சிறந்த மருத்துவரே மருத்துவம் பார்த்தாலும்.
எனவே, அனைத்துக்கும் கடவுளே நேரடியாக வந்து தீர்வு கொடுக்க மாட்டார். உதவி இன்னொருவர் வாயிலாக கிடைக்கும் போது அதைச் சரியாக உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.
கடவுள் நம்பிக்கை என்பது வாழ்க்கைக்கான பிடிப்புமாகும்.
மேற்கூறியதில் மையக்கருத்து மட்டுமே சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறியது. மற்றவை ஜனரஞ்சகத்துக்காக சேர்க்கப்பட்டது.
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இந்த தலைப்பை பற்றி பேசினாலோ ? எழுதினாலோ? சிந்தித்தாலோ ? நிறைய விஷியங்கள், செய்திகள், சொந்த அனுபவங்கள் மனதில் எல்லோருக்கும் எழும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன்.. ஆனால் கடவுளின் பெயரால் செய்யப்படும் போலியான செயல்களை தீவிரமாக எதிர்ப்பவன்.
என் நம்பிக்கையை / எதிர்ப்பை என்றுமே அடுத்தவர்களின் மதத்தின் மீதோ, என் குடும்பதினரின் மீதோ திணித்ததில்லை. காரணம் இந்த விஷியத்தில் எடுக்கும் முடிவு அவரவரின் சொந்த முடிவாக இருக்க வேண்டும். என் மகனோ / மகளோ வளர்ந்த பின் ஒரு தந்தையாக அவர்களின் சொந்த முடிவிற்கு நான் கட்டுப்படுவேன்.
தற்போதைய இளைய சமூகத்தினர்க்கு கடவுள் மறுப்பு என்பது ஏதோ நாகரீக வளர்ச்சி போல ஒரு எண்ணம்.. எதற்காக எதிர்க்கிறோம் என்ற எந்த சிந்தனையும், புரிதலும் இல்லாமல் எதிர்ப்பது சரியான ஒன்று அல்ல.. இதை கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் குறிப்பிட்டு இருப்பார். தனிப்பட்ட முறையில் உட்கார்ந்து பேசினால் என் சொந்த அனுபவம், உங்கள் சொந்த அனுபவம் என மணிக்கணக்கில் நிறைய பேசலாம்..
நண்பர் சக்தியுடனான நட்பு இறுக்கமான அமைய மருதமலை முருகன் கோவில் பயணம், தென்திருப்பதி கோவில் பயணமும் ஒரு முக்கிய காரணம் எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. சக்தியுடன் ஒரு ஆன்மிக பயணம் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. குறிப்பாக வட இந்தியாவில் உள்ள கோவில்கள் மற்றும் புனித தளங்கள்.
@யாசின்
“தற்போதைய இளைய சமூகத்தினர்க்கு கடவுள் மறுப்பு என்பது ஏதோ நாகரீக வளர்ச்சி போல ஒரு எண்ணம்.. எதற்காக எதிர்க்கிறோம் என்ற எந்த சிந்தனையும், புரிதலும் இல்லாமல் எதிர்ப்பது சரியான ஒன்று அல்ல.”
சரியாக கூறினீர்கள் யாசின்.
கண்ணதாசன் மிக அழகாக தான் நாத்திக பெருமையில் ஏமாந்ததை அழகாக கூறி இருப்பார்.
அக்காலத்திலேயே அப்படி எனும் போது லைக்ஸ் உலகில் இவ்வாறு பலர் பேசி நடந்து கொள்வது எனக்கு வியப்பை அளிக்கவில்லை.
நாலு பக்கம் கஷ்டம் வந்தால் நாத்திகனும் ஆத்திகன் ஆகிடுவான்.
“வட இந்தியாவில் உள்ள கோவில்கள் மற்றும் புனித தளங்கள்.”
எனக்கு பல காலமாக இந்த எண்ணம் உள்ளது. இதற்காகவே இந்தியும் கற்றுக்கொள்ளலாம் என்று முயற்சித்தும் சரியான வாய்ப்பு அமையவில்லை.
தற்போது உபியில் பல கோவில்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. என் அக்கா கணவர் அப்பகுதிக்கு மாற்றலாகி சென்றதால், இவர்கள் அங்கே சென்று வந்து எப்படியுள்ளது என்று கூறினார்கள்.
அதிலிருந்து அங்கே செல்ல வேண்டும் என்ற விருப்பம் அதிகமாகி விட்டது.
இதுவரை அதிகபட்சம் சென்றது தென் மாநிலங்கள் மட்டுமே! ஒரே முறை கோவா சுற்றுலா சென்றேன்.
எப்போது போவேன் என்று தெரியவில்லை ஆனால், நிச்சயம் செல்வேன், அதைக் கட்டுரைகளாக இங்கே எழுதவும் செய்வேன் 🙂 .