நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

5
நேர்மறை எண்ணங்கள்

தில் கூறப்பட்டுள்ள நேர்மறை எண்ணங்கள் அனைத்தும் சொந்த அனுபவங்களே!

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

நல்லதே நடக்கும், அனைத்தும் சரியாக நடக்கும், நடப்பவை நன்மைக்கே என்று எண்ணங்களை வளர்ப்பதே நேர்மறை எண்ணங்கள் ஆகும்.

இவ்வாறு நடந்து கொள்வது கடினமா?

துவக்கத்தில் இதற்காக உங்களை மாற்றிக்கொள்வது கடினமாக இருக்கும், ஒரு கட்டத்தில் அதுவே பழகி விடும்.

நேர்மறை எண்ணங்கள் பற்றிய பரவலான கருத்துகள், எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே, நேர்மறையாகச் சிந்திப்போம் என்று முடிவு செய்தேன்.

ஆனால், நினைப்பது போல அவ்வளவு எளிதாக இல்லை.

காரணம், நம் சமூகம் முழுக்க எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டுள்ளது. எனவே, எங்கே திரும்பினாலும், படித்தாலும் எதிர்மறை செய்திகளாகவே உள்ளன.

எதிர்மறை எண்ணங்களின் ஊற்றாகச் சமூகத்தளங்கள், ஊடகங்கள் உள்ளன. தொலைக்காட்சி விவாதங்களில் எதிர்மறை எண்ணங்கள் உச்சத்தில் உள்ளது.

எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

யாராவது எப்படி இருக்கீங்க? என்று கேட்டால், “எதோ இருக்கேன், வண்டி போகுது, சுமாரா இருக்கேன், மோசமா இருக்கு, நேரமே சரியில்லை” என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளைக் கூறாதீர்கள்.

ரொம்ப நல்லா இருக்கேன்” என்று உற்சாகமாகக் கூறுங்கள், இதைப் போலக் கூறுவதால் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.

இவ்வாறு கூறுவதால், கேட்டவரையும் மனதளவில் உற்சாகப்படுத்துகிறீர்கள்.

நடக்காது, கிடைக்காது என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளைப் பேசாதீர்கள். நடக்கும் என்று நம்புங்கள். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

நடக்கவில்லையென்றாலும், இதுவும் நன்மைக்கே என்று நேர்மறையாகக் கருதுங்கள்.

அடுத்தவரிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடாது?

 • அடுத்தவரைச் சோர்வடைய செய்யும் கருத்துகளைக் கூறாதீர்கள்.
 • ஒன்றை கூறுவதால் எந்தப்பயனும் இல்லையென்று கருதினால், அதைக் கூறி அடுத்தவரை வருத்த வேண்டாம்.
 • அடுத்தவரைத் தேவையற்று மன ரீதியாகப் பயமுறுத்த வேண்டாம்.
 • எதிரில் இருப்பவரை மன உறுதி இழக்கச்செய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
 • அருகில் இருப்பவரின் குறைகளைத் தேடித் தேடி கூற வேண்டாம்.
 • அடுத்தவர் மனம் நோகும்படியான பேச்சுகளைப் பேசாதீர்கள்.
 • உடல் / தோற்றம் சார்ந்த குறைகளைச் சுட்டிக்காட்டாதீர்கள்.

பயிற்சியே நம்மை மேம்படுத்தும்

நேர்மறையாகச் சிந்திக்க பயிற்சி செய்ய ஆரம்பித்த பிறகு தான், எத்தனை எதிர்மறை எண்ணங்களை நாம் கொண்டு இருக்கிறோம் என்று தெரிய வரும்.

தற்போது, எதிர்மறை செய்திகளைப் படிக்கவோ பார்க்கவோ பிடிப்பதில்லை.

எதெல்லாம் கோபப்படுத்துகிறதோ, பதட்டம், மன அழுத்தத்தை, கவலையை ஏற்படுத்துகிறதோ அவற்றை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.

நாம் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டும்! 🙂 .

நேர்மறை எண்ணங்களால் அடைந்த பயன்கள்

 • எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
 • யாரையும் பொறாமையாக நினைக்கத் தோன்றாது.
 • மற்றவர்கள் தவறாகக் கூறினாலும், அவர்களை எளிதாகப் புறக்கணிக்க முடியும்.
 • மற்றவர்கள் தவறாகப் பேசியதை பற்றி நினைத்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
 • மனதில் உள்ள வன்மம் குறையும்.
 • எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
 • கெட்டது நடந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கும்.
 • யாரையும் எதிரியாகப் பார்க்கத் தோன்றாது.
 • எதற்கு இவ்வளவு நாட்களாகப் பலரிடம் சண்டை போட்டோம் என்று தோன்றும்.
 • எதுவுமே பிரச்சனையாகத் தோன்றாது.
 • எல்லோருமே நல்லவர்களாகத் தெரிவார்கள்.
 • கோபம் குறைந்திருக்கும் / வராது.
 • மன அழுத்தம் இருக்காது.
 • மற்றவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள்.
 • எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று வியப்பாகக் கேட்பார்கள்.
 • பிரச்சனைகளே நமக்கு இல்லையா?! என்று சந்தேகம் வரும்.
 • பதட்டம் இருக்காது.
 • மனது பாரம் இல்லாமல், பறப்பது போல இருக்கும்.
 • எதிலும் சிக்காத சுதந்திரத்தை உணர்வீர்கள்.
 • எதையும் யோசித்து நிதானித்துச் செய்வீர்கள்.
 • உங்களுக்கு நல்லது நடப்பது அதிகரித்து இருப்பதை உணர்வீர்கள்.
 • அறிமுகம் இல்லாதவர்களும் நட்பாக சிரிப்பார்கள்.
 • பிரச்சனை செய்பவர்கள் அருகில் வருவது குறையும்.

பாருங்க எவ்வளவோ நன்மைகள்! 🙂 . எதிர்மறை எண்ணங்களால் இவற்றை எல்லாம் வாய்ப்பிருந்தும் இழந்து கொண்டு இருக்கிறீர்கள்.

மேற்கூறியது அனைத்துமே சொந்த அனுபவம், எந்தப் பொய்யும் இல்லை 🙂 .

விடுபட விரும்புகிறார்கள்

எல்லோருமே எதிர்மறை சிந்தனைகள், மன அழுத்தங்கள், பதட்டங்கள், கோபம் ஆகியவற்றில் இருந்து வெளியே வர விரும்புகிறார்கள்.

காரணம், தற்போதைய வாழ்க்கை முறை அனைவருக்கும் இது போல நெருக்கடியைக் கொடுக்கிறது. எனவே, இதில் விடுபட அனைவரும் விரும்புகிறார்கள்.

முதலில் இது போல நாம் மாற வேண்டும் என்று நினைப்பதே மிகப்பெரிய மாற்றம். இதன் சூடு குறையாமல் அப்படியே தொடர்ந்தால், பின்பற்றுவது எளிது.

எதிர்மறை எண்ணங்களால் இழப்பு மட்டுமே

எதிர்மறை எண்ணங்களால் பாதிப்பு மட்டுமே.

நேர்மறை எண்ணங்களைப் பின்பற்றுவதால், கண் முன்னே பல நன்மைகள், நல்ல செயல்கள் நடக்கும்போது…

மன உளைச்சலை, கவலையை, பதட்டத்தை, சோகத்தை, எரிச்சலை, மன அழுத்தத்தை, பொறாமையை, கெட்டதைத் தரும் எதிர்மறை எண்ணங்களைத் தேடிப்போய் ஏன் பின்பற்றுகிறீர்கள்.

எல்லோரும் நினைப்பது போல உலகம் மிக மோசமானது அல்ல, சூழ்நிலைகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.

பிரச்சனை என்று நினைத்தால் எல்லாமே பிரச்சனைகள் தான்.

சில விதிவிலக்குகளைக் காரணம் காட்டி, எதிர்மறை எண்ணங்களை நியாயப்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

கண்ணில் படும் நல்லதை கவனிக்க ஆரம்பித்தால், இதுவரை காணாத நல்ல காட்சிகளும் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

கண் முன்னே பார்த்து வருவதால், அனுபவித்ததால், உணர்ந்ததால் கூறுகிறேன்.

நேர்மறை எண்ணங்களின் பலம் அபரிமிதமானது. நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும். இது கதையல்ல அனுபவ உண்மை.

தொடர்புடைய கட்டுரைகள்

கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

கர்மாவை வெல்ல முடியுமா?

எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

நீங்கள் மாறாமல் பிரச்சனைகள் தீராது!

மன அழுத்தம் எப்படி இருக்கும்?!

நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?

https://www.facebook.com/giriblog

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. கோவையைச்சேர்ந்த ஹீலர்பாஸ்கர் என்பவரின் மனதின் மனம்,ரங்கராட்டின ரகசியம் மற்றும் ஆங்கில ஆவணப்படத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பான ரகசியம் எனும் காணொளிகளை பாருங்கள் இன்னும் எவ்வாறு நேர்மறையாக இருப்பது என ஆழமாக கற்றுக்கொள்வீர்கள்.

 2. கிரி.. தற்போதைய என்னுடைய மனநிலை ஓரளவுக்கு உங்களுக்கு தெரியும்.. கடந்த சில மாதமாக நான் சகஜ நிலைக்கு வந்ததாக உணர்கிறேன்.. பொதுவாக கோபம் வராது.. நான் ம்ப பொறுமைசாலி.. கோபத்தை வரவைக்க நினைத்தாலும், அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவேன்.. என் மாற்றத்திற்கு காரணம் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் உங்களின் அனுபவங்கள்!!!

  நான் தற்போது எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை, யாருடைய நேர்காணலையும் கேட்பதில்லை… ஒவ்வொரு முறை உங்கள் அனுபவத்தை பகிரும் போது, அதன் சாரத்தை நான் எடுத்து கொள்வேன்.. அது சில நேரங்களில் எனக்குள் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும்.. தற்போது நான் எதை பற்றியும் யோசிப்பதில்லை.. நடப்பவை நன்றாக நடக்கும், என்ற மனநிலைக்கு வந்து விட்டேன்.. நிறைய பேசலாம்.. நேர்ல பேசினால் நன்றாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @pratheepan அவர் காணொளிகளில் ஆர்வமில்லை.

  @யாசின் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தாலே பாதி பிரச்சனைகள் தவிர்க்கப்படும். பொறுமையோடு அனைத்தையும் அணுகினால் அதற்கான தீர்வை பெறலாம்.

 4. வணக்கம், மேலே நீங்க சொன்ன எல்லாம் 100 % சதவீதம் மிக மிக சிறப்பான உண்மை. நான் சொல்ல வில்லை என் அனுபவம் சொல்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here