கடவுள் நமக்கு உதவுகிறாரா?

2
கடவுள் உதவுகிறாரா

பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 11 வது கட்டுரை. Image Credit

முழு நம்பிக்கை

இன்பம், துன்பம் இவ்விரண்டின் வழியாக நீங்கள் சரியான பாதையில் முன்னேறுவதற்கு ஆண்டவன் உதவ முயன்று வருகிறான். அவன் ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னாலும் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்.

அவன் என்றும் உதவிக்கொண்டு இருக்கிறான். ஆண்டவன் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தால், உங்கள் மனத்தில் துன்பம் தரும் ஆசைகள் கூட எழ மாட்டா.

என்று சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறுகிறார்.

கடவுள் உதவுகிறாரா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா? என்ற சந்தேகம் ஒரு கட்டத்தில் குறைந்து கடவுள் இருக்கிறார் / இருக்கலாம் என்று நம்பத் துவங்குவோம் அல்லது நம்புவோம்.

அதன் பிறகு கடவுள் உதவுகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் / எதிர்பார்ப்பு துவங்கும். இது வயதின் ஒவ்வொரு கால கட்டத்தில் வரும்.

கடவுள் உதவுகிறார் என்று தோன்றினாலும், உறுதியாகத் தெரியாத காரணத்தால், சந்தேகத்துடனே இருப்போம்.

ஆனால், Breaking Point என்று கூறப்படும், ஏதாவது ஒரு கட்டத்தில் நமக்கு நடக்கும் ஒரு சம்பவம் இந்தச் சந்தேகத்தைப் போக்கி விடும்.

சிலருக்கு கடவுள் நம்பிக்கை முற்றிலும் அற்றுப்போகும்.

உணர்ந்த காலம்

எனக்குக் கடவுள் உதவுகிறார் என்பதை உணர்ந்த காலம் 2015 ம் ஆண்டு நவம்பர். இக்காலத்தில் நடந்த சம்பவம், கடவுள் உதவுகிறார் என்ற உண்மையை உணர்த்தியது.

மிகவும் தனிப்பட்ட காரணம் என்பதால், அதை என்னவென்று எழுத முடியவில்லை.

இது ஏன் தற்போது நடந்தது? எப்படி நடந்தது? என்று யோசிக்க ஆரம்பித்த பிறகே இவ்வளவு வருடங்களாகச் செய்து வந்த தவறுகள் புரிய ஆரம்பித்தது.

அதுவும் இரு வாரங்கள் கழித்து.

கடினமான சூழ்நிலை வரும் போது கடவுள் அதைச் சரி செய்ய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார் ஆனால், அதை உணரவில்லை, வாய்ப்பையும் வீணடித்துள்ளேன்.

உணராமலே கடவுளை விமர்சித்து வந்துள்ளேன், கடவுள் உதவவில்லையே என்று.

2015 நவம்பருக்குப் பிறகு, உணர ஆரம்பித்த பிறகு பின்னோக்கி யோசிக்க துவங்கிய பிறகே ஒவ்வொன்றாக நினைவு வருகிறது. அட! இந்த வாய்ப்புக் கிடைத்ததே! அதை நாம் ஏன் பயன்படுத்தவில்லை! என்று.

இதன் பிறகு எந்தப் பிரச்சனை வந்தாலும், காரண காரியத்தை ஆராய முற்பட்டேன்.

ஆராயுங்கள்

உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால், அது ஒருவேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்.

எளிமையாகப் புரியும் படி கூறுகிறேன்.

பல காலம் திட்டமிட்டு ஒரு இடத்துக்குப் போக விரும்புகிறீர்கள். இதற்காக உங்கள் உழைப்பைச் செலவிட்டு, பணத்தைத் திட்டமிட்டு தயாராகிறீர்கள்.

அந்த நாளும் ஓரிரு நாளில் வரப்போகிறது. அந்நிலையில் வாகனத்திலிருந்து விழுந்து அடிபட்டுச் செல்ல முடியாமல் போகிறது.

என்ன நினைப்பீர்கள்? இவ்வளவு நாட்களாக இதற்காகத் திட்டமிட்டுச் செய்தும் இப்படி நடந்து விட்டதே. ச்சே! நமக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று எரிச்சலாவீர்கள்.

ஆனால், நீங்கள் பயணிக்கத் திட்டமிட்ட பேருந்து விபத்தாகி இருக்கலாம் ஆனால், உங்களுக்குத் தெரியாது.

கடவுள் உங்களைக் காப்பாற்றி இருக்கிறார் ஆனால், தெரியாது. எனவே, ஒரு சம்பவம் நடக்கவில்லையென்றால், அதற்குக் காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.

உண்மையான உழைப்பைக் கொடுத்தும் நடக்கவில்லையென்றால், ஏதாவது ஒரு நல்ல காரணத்துக்காக நடந்து இருக்கலாம் என்று நேர்மறையாக எண்ணுங்கள்.

அதே போல, அதற்கான முயற்சிகளைக் கை விடாமல், தவறு இருந்தால், அதைச் சரி செய்து அதை அடைய தொடர்ந்து முற்படுங்கள்.

உண்மையே!

நான் தெரியாமல் காத்துக்கொண்டு இருந்தது போல, நீங்களும் காத்துக்கொண்டு இருக்காதீர்கள் அல்லது இதையே ஒரு Breaking Point ஆகக் கருதிக்கொள்ளுங்கள்.

கடவுள் உண்மையிலேயே நமக்கு உதவுகிறார்.

கடவுள் என்னுடனே பயணிப்பதாக உணர்வது மிகப்பெரிய தைரியத்தை அளிக்கிறது. கடவுள் நம் கூட இருக்கும் போது என்ன கவலை! என்ற உணர்வைத் தருகிறது.

அந்நேரத்துக்குக் கவலை, பயம் இருக்கலாம் ஆனால், பின்னர் அவை விலகி நம் கூடத்தான் கடவுள் இருக்கிறாரே! என்ற பலம் வந்து விடுகிறது.

இதை என் ஒவ்வொரு கடினமான தருணத்திலும் உணர்கிறேன்.

ஒவ்வொரு சம்பவம் நடக்கும் போதும் ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? எப்படி நடந்தது? ஏன் தற்போது நடக்க வேண்டும்? இது ஏன் எனக்கு நடக்க வேண்டும்? என்று உங்களுக்குள்ளே கேள்விகளைக் கேட்கப்பழகுங்கள்.

இக்கேள்விகள் உங்களுக்கான பதிலை உடனே தரவில்லையென்றாலும், சிறிது காலத்துக்குப் பிறகு உணர வைக்கும்.

மேற்கூறியவற்றை அனுபவ ரீதியாக உணர்ந்து உறுதியாகக் கூறுகிறேன். இதில் எந்தப் பொய்யும் கலப்படமில்லை.

சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறியது உண்மையே!

தொடர்புடைய கட்டுரை

நம்பினால் நம்புங்கள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி.. என்னை பொறுத்தவரை கண்ணதாசன் அவர்கள் கூறிய வார்த்தைகளை(அனுபவமே கடவுள்) எப்போதும் மனதில் எண்ணி கொள்வதுண்டு.. நமக்கு நல்லது நடக்கும் போது நம் திறமையால் நடந்தது போலும், தீயது நடந்தால் அடுத்தவர்களின் மீதோ, கடவுள் மீதோ குறை கூறுவது தான் பெரும்பான்மை மனிதர்களின் எண்ணம்.

  கோவையில் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து நிறுவனத்தில் 500 ரூபாய் ஊதிய உயர்வு கொடுத்து 380 ரூபாய் PF பிடிக்க போவதாக அறிக்கை வந்தது. படிச்ச உடன் மண்டை உடனே சூடாகி விட்டது.. காரணம் ஒரு வருடம் நான் உண்மையாக, நேர்மையாக, 8 மணி நேரத்துக்கு மேல் பணி புரிந்தது மட்டுமில்லாமல், விடுமுறை நாட்களிலும் தேவைப்பட்டால் பணிக்கு நான் மட்டும் வருவது எல்லோர்க்கும் தெரியும்.

  அந்த கோபத்தில் நான் நிறுவன HR அலுவலருக்கு EMAIL அனுப்பினேன். இந்த ஊதிய உயர்வு 500 ரூபாய் எனக்கும் வேண்டாம். பழைய சம்பளத்திலே இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறேன் என்று. EMAIL படித்து அவர் சூடாகி நிறுவன GM க்கு இதை பற்றி கூறியுள்ளார். நிறுவனத்தின் GM எப்போதும் கடும் கோபம் கொள்ளும் மனநிலையில் இருப்பவர். அவரின் வேலை பளு அது போல.

  ஆனால் ஊழியர்களை தட்டி கொடுத்து வேலை வாங்கும் மன பக்குவம் கொண்டவர். குறிப்பாக என் போன்ற இளைஞர்களை. இந்த நிகழ்வுக்கு பின் என்னை அழைத்து தனிமையில் கொடுத்த அறிவுரை என் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று.. அந்த சந்திப்பை நான் கடவுளின் ஏற்பாடாக உணர்கிறேன். நான் இன்றும் அவர் கூறியதை நினைவில் கொள்வதுண்டு..

  கடந்த 5 வருடங்களுக்கு மேல் என் வாழ்வில் சோதனையான பல தருணங்களை சந்தித்து வருகிறேன்.. என்றுமே கடவுளை குறை கூறியதில்லை.. காலங்கள் மாறும் போது காட்சிகளும் மாறும் என்பதை மட்டும் நினைவில் கொண்டு என் நாட்களை நகர்த்தி வருகிறேன். யார்க்கும் துரோகம் செய்யாமல் நம் பணியை செவ்வனே செய்யும் போது கடவுள் நமக்கானதை, இன்று இல்லாவிடியும் என்றாவது ஒரு நாள் அருள்வார் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு..

  இரண்டு வருடம் முன்பு மேல் தளம் வீடு கட்டும் போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சற்று கலக்கமடைந்த தருணத்தில், உங்கள் தளத்தில் முன்பு எப்போதோ உதவியை பற்றி ஒரு பதிவை படித்த நினைவு.. கிரிக்கெட் விளையாடும் குழுவில் இருக்கும் 2 நண்பர்களிடம் மட்டும் உதவியை தயக்கத்துடன் கேட்டேன்.. (கிரிக்கெட்டை தவிர வேறு உறவு ஏதும் இல்லாத நட்பு..) இருவரும் உதவினார்.. வீட்டு வேலையும் சீக்கிரம் முடிந்து விட்டது.

  உண்மையில் நான் இது போன்ற உதவிகளை எப்போதும் யாரிடமும் கேட்டதில்லை.. சின்ன வயதில் அம்மா எப்போதாவது வீட்டில் உணவு செய்யாமல் இருக்கும் போது, பக்கத்து உறவினர் வீட்டில் சாப்பிட சொல்வர்.. நான் தயக்கத்துடன் சாப்பிட செல்லாமலே அம்மாவிடம் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்வேன். ஒரு வித தயக்கம், கூச்சம் சிறு வயதிலிருந்தே இருக்கும். இந்த உதவி உங்கள் பதிவின் மூலம் எனக்கு கடவுள் அருளியதாக உணர்கிறேன்.. அதனால் உங்களுக்கும் நன்றி.

 2. @யாசின்

  “நமக்கு நல்லது நடக்கும் போது நம் திறமையால் நடந்தது போலும், தீயது நடந்தால் அடுத்தவர்களின் மீதோ, கடவுள் மீதோ குறை கூறுவது தான் பெரும்பான்மை மனிதர்களின் எண்ணம்.”

  உண்மை 🙂 .

  “யார்க்கும் துரோகம் செய்யாமல் நம் பணியை செவ்வனே செய்யும் போது கடவுள் நமக்கானதை, இன்று இல்லாவிடியும் என்றாவது ஒரு நாள் அருள்வார் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு..”

  இதில் எப்போதும் உறுதியாக இருங்கள்.

  “இந்த உதவி உங்கள் பதிவின் மூலம் எனக்கு கடவுள் அருளியதாக உணர்கிறேன்.. அதனால் உங்களுக்கும் நன்றி.”

  கடவுளுக்குத் தெரியும் எந்த நேரத்தில் எதைக் கொடுக்க வேண்டும் என்று. நம் வேலையை மட்டும் சரியாக செய்து வந்தால் போதும்.

  எனக்கு என் நண்பன் கேட்காமலே 5 லட்சம் கொடுத்து உதவினான். இதெல்லாம் கடவுளே யார் மூலமாகவோ உதவுவதாகவே கருதுகிறேன்.

  அதே போல உதவி செய்த நண்பனை என்றும் மறக்க மாட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here