ரஜினி அவர்களின் ஆன்மீக குரு சுவாமி திரு சச்சிதானந்தா அவர்களின் புத்தகம் பொன்னான நிகழ்காலம்.
பொன்னான நிகழ்காலம்
இப்புத்தகத்தை நண்பர் மாயவரத்தான் ரமேஷ் அவர்களுக்கு, ரஜினி அவர்கள் பரிசாகக் கொடுத்தார். இப்புத்தகத்தை ரமேஷ் எங்களுக்கு அறிமுகம் செய்தார்.
எனக்கு ரஜினி அவர்களின் எண்ணங்களோடு ஒத்துப்போவதால், அவரின் பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடுண்டு.
எனவே, அவர் பரிந்துரைத்த புத்தகம் என்பதால், இயல்பாகவே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. என்னுடைய எதிர்பார்ப்பை இப்புத்தகம் ஏமாற்றவில்லை.
நான் என்ன எதிர்பார்த்தேனோ அவை இருந்தன, இப்புத்தகம் மூலம் நான் அதிகம் கற்றுக்கொண்டேன்.
இப்புத்தகம் எதைப் பற்றிக் கூறுகிறது?
நேர்மறை எண்ணங்களை வளர்த்து எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள்.
கடவுளை நம்புங்கள்.
எதற்கும் கவலைப்படாதீர்கள்.
எதிர்பார்ப்பைக் குறையுங்கள்.
அடுத்தவர் பற்றிக் குறை சொல்வதை நிறுத்துங்கள்.
அனைவரையும் நேசியுங்கள்.
வன்மத்தை மனதில் வைக்காதீர்கள்.
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே.
அமைதியாக இருக்கப் பழகுங்கள்.
கடந்த / எதிர்காலத்தை எண்ணி வருத்தமும் பயமும் படாமல், நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை அனுபவியுங்கள் என்கிறார்.
சொற்பொழிவு
இப்புத்தகம் சுவாமி சச்சிதானந்தா அவர்கள் சொற்பொழிவு ஆற்றியதில் இருந்து கருத்துக்களை எடுத்து ஒரு நாளைக்கு ஒரு கருத்து என்று, 12 மாதங்களின் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒன்றாக விளக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒரே சமயத்தில் முழுமையாகப் படித்து முடித்தாலும், தினம் ஒரு கருத்து என்று திரும்பப் படிப்பது நாம் படித்ததை மேலும் நன்கு புரிந்து கொள்ள உதவும்.
மேற்கூறியதை ஏற்கனவே பல தருணங்களில் நீங்கள் படித்துக் கேட்டு இருக்கலாம். இருப்பினும், ஒரு புத்தகமாகப் படிக்கும் போது அதற்குப் பலன் அதிகம்.
சில கருத்துகள் திரும்ப வருகின்றன, அதற்குச் சொற்பொழிவில் இருந்து எடுத்தாண்டது ஒரு காரணமாக இருக்கும்.
இதில் கூறியுள்ள பலவற்றை என்னோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. இதில் ஏற்கனவே, பலவற்றை நான் பின்பற்றி வருகிறேன்.
இருப்பினும் புரிந்தும் புரியாமல் இருந்த சில, இப்புத்தகத்தைப் படித்ததும் தெளிவானது. தீராத சந்தேகங்களும் உள்ளது.
நேர்மறை எண்ணங்கள்
நான் அடிக்கடி என்னுடைய தளத்தில், நேர்மறை எண்ணங்கள் பற்றிச் சிந்திப்பதால் எனக்குக் கிடைத்த, கிடைக்கும் நன்மைகளைக் கூறி வருகிறேன்.
“நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் போது நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் விலகி விடும். தீயவை கேட்காதே பார்க்காதே பேசாதே” என்கிறார்.
படித்த பிறகு நினைத்துப் பார்த்தேன். இவர் கூறுவது சரி, நான் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க ஆரம்பித்தது முதல் என்னுடைய மனம் அமைதியாகி வருகிறது.
எப்படிச் சொல்வது..
“ஒரு மாதிரி கவலையே இல்லாத மாதிரியான ஒரு மனநிலை. மன அழுத்தமோ, பயமோ, கவலையோ, வெறுப்புணர்வோ எதுவுமே இல்லை அல்லது ரொம்பக் குறைவாக உள்ளது.“
இதைப் பழகிய பிறகு எனக்கு தற்போது எதிர்மறைச் செய்திகளைப் படிக்கவே பிடிக்கவில்லை.
அமைதியே முக்கியம்
நாம் பதட்டம், கோபம் ஆகும் போது தான் நம்முடைய நிம்மதி போகிறது, அமைதி மறைகிறது. இதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், வாழ்க்கை சிறப்பானதாக உள்ளது.
இரு வருடங்களாகப் பின்பற்றி அதனால் பலனைப் பெற்று வருகிறேன். இதைப் பேச்சுக்காகக் கூறவில்லை, உண்மையாகவே தான்!
கடவுளை நம்புங்கள், அவரிடம் உங்கள் பொறுப்புகளை ஒப்படைத்து விடுங்கள் என்பது போன்ற கருத்துகளை வலியுறுத்துகிறார்.
சிலர் ஏற்கனவே, இது போல இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டலாக இருக்கும், அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
30 – 50 கட்டுரைகள்
இக்கட்டுரையில் இருந்து என்னால் தனித்தனியாக 30 – 50 கட்டுரைகள் எழுத முடியும். அந்த அளவுக்கு இதில் கூற வேண்டியவை உள்ளன.
எனவே, இனி வரும் காலங்களில் அவ்வப்போது இதில் உள்ள கருத்துகளை வைத்து கட்டுரைகள் எழுதலாம் என்ற முடிவில் உள்ளேன்.
எனக்கும் நான் செய்வதை மேலும் தெளிவாக உணர்ந்து புரிந்து கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும் அதோடு, உங்களில் இவற்றில் விருப்பமுள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு புத்தகம் படித்து அதில் 30 – 50 கட்டுரைகள் எழுதலாம் எனும் அளவுக்கு எனக்குத் தோன்றியது இப்புத்தகம் மட்டுமே! 🙂 .
ஆன்மீகம்
சச்சிதானந்தா படத்தைப் பார்த்ததும் இது இந்து மதத்துக்கானது என்று நினைக்க வேண்டாம். இதில் எந்தக் கடவுளையும் முன்னிறுத்தவில்லை.
பொதுவாகக் கடவுள் என்று கூறுகிறார். அதோடு உதாரணத்துக்கு ஏராளமான இடங்களில் ஏசுவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
தீபாவளி கிறிஸ்துமஸ் ரம்ஜான் என்று அனைத்தைப் பற்றியும் வருகிறது. இதை எவரும், அவரது மதத்து கடவுளோடு தொடர்புபடுத்திப் படிக்கலாம்.
ஆன்மீகம் என்றால், மதங்களைக் கடந்தது என்பதைக் கூறாமல் இதில் கூறியிருக்கிறார்.
ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்திய தலைவருக்கும், ரமேஷுக்கும் நன்றி!
அனைவைரையும் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகவரியில் சென்று வாங்கலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் இழப்புகள்
கொசுறு
தியானம் செய்தால் நல்லது, நம் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது உடல் சுறுசுறுப்பைக் கொண்டு வரும் என்று இப்புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரஜினி அவர்களும் இதை வலியுறுத்திக்கொண்டே உள்ளார். 68 வயதிலும் அவரின் வேகம், சுறுசுறுப்பு அசாத்தியமானது.
எனக்கு எப்போதும் வியப்பை அளிக்கும்.
எனவே, ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் முயற்சித்து கைவிட்டு இருந்தாலும் திரும்ப ஒருமுறை முயற்சிக்க நினைத்துள்ளேன்.
காரணம், முன்பை விட மனம் கொஞ்சம் பக்குவப்பட்டுள்ளது. எனவே, மாற்றம் இருக்கலாம் 🙂 .
ஆன்மீகத்தில் இறங்குமளவிற்கு உங்களுக்கு இன்னமும் வயசாகவில்லை. ரஜினியின் ஆன்மீக குரு ராகவேந்திரர் / பாபா இல்லையா?. நடிகர் அஜித்திற்கு இதே புத்தகத்தையா ரஜினி கொடுத்தார். ரஜினி புத்தகத்தை படித்த்பின்னர்தான் அஜித் முன்னபோல் இல்லாமல் மாறியதாக எங்கேயோ படித்த நியாபகம்.
கிரி.. கடந்த சில வருடங்களாகவே பல சமயங்களில் மிகவும் குழப்பமான மனநிலையிலே நான் இருந்து வருகிறேன்.. இதை அலுவலக வட்டாரத்தில் யாரும் சுட்டி காட்டியதாக தெரியவில்லை.. ஆனால் என் மனைவி சில முறை கூறியுள்ளார்.. என்னுடைய இந்த நிலைக்கு சரியான காரணம் தெரியவில்லை.. மிகவும் ஆழமாக யோசிக்க முடியவில்லை..
தற்போதைய சூழ்நிலையில் ஒரே ஆறுதல் சில (புத்தகங்கள் படிப்பது, கிரிக்கெட் விளையாடுவது, இளையராஜாவின் பாடல்கள், கவிஞர் வாலி ஆகியவை குறித்த தகவல்களை திரட்டி படிப்பது..)..
எல்லாம் இருந்ததும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு.. இந்த உணர்வு எல்லா நேரங்களிலும் இல்லை.. எப்போதாவது அது போல தோன்றும்.. நான் எப்போதும் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவன்.. ஆனால் தீவிர பக்தன் கிடையாது.. கர்மாவை அதிகம் நம்புபவன்.. நீங்கள் குறிப்பிட புத்தகத்தை படிக்கின்ற மனநிலை தற்போது இல்லை.. முயற்சிக்கிறேன்..
கடவுளை நம்புங்கள்.
எதற்கும் கவலைப்படாதீர்கள்.
எதிர்பார்ப்பைக் குறையுங்கள்.
அடுத்தவர் பற்றிக் குறை சொல்வதை நிறுத்துங்கள்.
அனைவரையும் நேசியுங்கள்.
வன்மத்தை மனதில் வைக்காதீர்கள்.
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே.
அமைதியாக இருக்கப் பழகுங்கள்.
இவற்றில் பல விஷியங்களை நான் முன்பேயிருந்து பின்பற்றி வருகிறேன்.. நம் செயல்கள் யாவும், நம் எண்ணத்தை பொறுத்தே அமைகிறது என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவன் நான்.. எப்போதும் நான் கவனமாக இருக்க நினைப்பது “கோபம்” மட்டும் “முன்போபம்”.. மோசமான அரக்கன்.. இவனை விட்டு ஒழித்தாலே 50% பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ப்ரியா ஆன்மீகத்தில் இறங்கவில்லை ஆனால், மேற்கூறிய கருத்துகளை அனைவரும் பின்பற்றுவது நமக்கு நல்லது.
மேற்கூறியவற்றை பின்பற்றுவதால், பல நல்ல மாற்றங்கள் என்னால் உணர முடிகிறது. இதனால் மிக மகிழ்ச்சியடைந்து இருக்கிறேன். கோபம், அவசரம் குறைந்து இருக்கிறது. நிதானம் வந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ரொம்ப நிறைவாக உணர்கிறேன். உன்னையும் இவற்றை பின்பற்ற பரிந்துரைக்கிறேன்.
இதைப் பின்பற்றுவது ஆன்மீகத்தில் ஈடுபடுவதாகாது.
ஸ்ரீ ராகவேந்திரர் பாபா அவரது விருப்பக் கடவுள்கள்.
ஆன்மீகக் குரு என்பவர் நமக்கு நேரடியாக வழிகாட்டுப்பவர், கருத்துகளை கூறுபவர், சந்தேகங்களை தெளிய வைப்பவர், நமக்கு சரியான பாதையை வழிகாட்டுபவர்.
அஜித்துக்கு ரஜினி பரிந்துரைத்தது Himalayan Masters
@யாசின் யாசின் நான் கூறியதை பின்பற்றுங்கள் போதும், குழப்பங்கள் மறைந்து தெளிவாகி விடுவீர்கள்.
எதை பற்றியும் கவலைப்படாதீர்கள். நாம் கவலைப்படுவதால் எதுவும் மாறப்போவதில்லை. கவலைப்படுவதால் குழப்பமாவதால் அனைத்தும் சரியாகும் என்றால் இன்று உலகில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்களே!
அப்படி எதுவுமே இல்லாத போது ஏன் குழப்பமடைந்து கவலைப்பட்டு நம்மை வருத்திக்கொள்ள வேண்டும்.
திரும்ப உங்களை சந்திக்க நேர்ந்தால், நேரில் விளக்குகிறேன்.
நேர்மறையாக சிந்தியுங்கள், இவை உங்கள் வாழ்வை மாற்றும்.
//புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் பின்வரும் முகவரியில் சென்று வாங்கலாம்.
முகவரி?
அத்தளத்தில் புத்தகம் இல்லையாததால் நீக்கி இருந்தேன். தற்போது வேறு தளத்தின் முகவரியை இணைத்துள்ளேன். வாங்கிக்கொள்ளுங்கள். நன்றி