பயம் எதனால் ஏற்படுகிறது?

3
பயம் எதனால் ஏற்படுகிறது?

பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 13 வது கட்டுரை. Image Credit

பயம் எதனால் ஏற்படுகிறது?

ஒரு அரசர் ஒரு யானையைச் செல்லமாக வளர்த்து வந்தார். அதைப் பாகன் தினமும் ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து அழைத்து வருவான்.

அவ்வாறு அழைத்து வரும் வழியில் ஒரு சிறுவன் யானை தும்பிக்கையைப் பிடித்து நிறுத்தி ‘நீ சரியாக நடக்கவில்லை‘ என்று கூறி வந்தான்.

தினமும் தொடர, எப்படி தைரியமாக யானையைத் தடுக்கிறான் என்று வியப்படைந்த பாகன், இந்நிகழ்வை அரசரிடம் கூறுகிறான்.

வியப்படைந்த அரசரும் ‘எப்படி சிறுவனால் யானையைத் தைரியமாக நிறுத்த முடிகிறது?‘ என்று அமைச்சரிடம் ஆர்வமாகக் கேட்கிறார்.

அரசே! அச்சமும், கவலையும் இல்லாத ஒருவரால் எதையும் எதிர்க்க முடியும்‘ என்று கூறுகிறார். அப்படியானால் அதை நிரூபியுங்கள் என்கிறார் அரசர்.

அந்தப்பையனைத் தினமும் கண்காணித்ததில், அவன் பாட்டியிடம் வளர்வதும், அவர் அவனுக்கு அனைத்தையும் செய்து தருவதை அமைச்சர் அறிந்தார்.

ஒருநாள் அந்தப் பாட்டியிடம் சென்று, ‘பையனுக்கு என்ன கேட்டாலும் கொடுப்பீர்களா?‘ என்று கேட்க, ‘ஆம்!‘ என்று ஆமோதிக்கிறார்.

அப்படியென்றால், அந்தப்பையனுக்கு நாளை உணவில் உப்பு குறைவாகப் போடுங்கள், பேரன் கேட்டால், உப்பு தீர்ந்து விட்டது அதனால் போடவில்லை‘ என்று கூறுங்கள் என்கிறார்.

அரசர் உத்தரவு என்பதால், பாட்டியும் சரி என்று ஒப்புக்கொள்கிறார்.

உணவுக்கு வரும் பேரன், ‘எதனால் உணவு சுவையாக இல்லை?‘ என்று கேட்கிறான், உப்பு தீர்ந்து விட்டது என்று அமைச்சர் கூறியதை கூறுகிறார்.

கடைக்குச் செல்லும் சிறுவன் உப்பைக் கேட்டதும், பணம் கேட்ட கடைக்காரரிடம் ‘பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?‘ என்று கேட்டதுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார்.

இதனால், வாங்க முடியாமல் வீட்டுக்கு வரும் சிறுவன் பாட்டியிடம் கேட்கப் பாட்டி பணமில்லை என்று கூறி விடுகிறார்.

உப்புக்கு என்ன செய்வது? இனி எப்படிச் சுவையாகச் சாப்பிடுவது?‘ என்ற கவலையோடு தூங்க ஆரம்பித்தவன், காலையிலும் அதே யோசனையில் இருந்தான்.

அடுத்த நாள் யானையைப் பார்த்தான் ஆனால், யானையிடம் தடுத்துக் கூற அவனுக்கு பயமாக இருந்தது. யானையும் கடந்து விட்டது, அவனும் நகர்ந்து விட்டான்.

இந்தச் சம்பவத்தை அமைச்சர் கூறி, தனது கவலையால் சிறுவன் தன் மனவலிமையை இழந்து விட்டான் என்று அரசருக்குத் தெளிவுபடுத்துகிறார்.

இவையே காரணம்

கவலை, சந்தேகம், யோசனை, அதிகப்படியான எதிர்கால, கடந்த காலச் சிந்தனைகள் மனிதனின் தைரியத்தைக் குறைத்து விடுகிறது.

துணிச்சலாக எதையும் செய்ய முடியாது, பயம் இருக்கும். இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

அதில் ஒன்று அர்த்தமுள்ள இந்த மதம் புத்தகத்தில் கண்ணதாசன் கூறியது.

பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடுகின்றன. தைரியத்தினால் தான் அவை கனமடைகின்றன‘ என்கிறார், இது 100% உண்மை.

பணக்கார பசங்களைக் கவனித்தால், அவர்கள் தைரியமாக இருப்பார்கள். எதையும் கூச்சம், தயக்கமின்றி எளிதாக அணுகுவார்கள்.

ஆனால், அதே நடுத்தர வகுப்பு பசங்களுக்கு அந்தத் தைரியம் இருக்காது. இரண்டிலும் சிலர் விதிவிலக்காக இருக்கலாம் ஆனால், பெரும்பான்மை இது தான்.

இதற்கு காரணம், நடுத்தர வகுப்பு பசங்களுக்கு ஏராளமான பொறுப்புகள், கடமைகள், எதிர்கால தேவைகள், பணத்தட்டுப்பாடு, பணியில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குடும்பக் கடன் என்று அழுத்தும் பொருளாதார சுமைகள் அதிகம்.

இதில் ஏதாவது ஒன்று சொதப்பினாலும், வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயம் அவர்களைத் துணிந்து ஒரு செயலைச் செய்ய விடாது, முயற்சிக்க மாட்டார்கள்.

ஆனால், என்ன நடந்தாலும் பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. எனவே, எப்படியும் தப்பித்து விடலாம் என்ற உறுதி பணக்கார பசங்களுக்கு இருக்கும்.

எனவே, எதிலுமே கவலை, பயம் இருப்பதில்லை.

தற்போது புரிகிறதா எதனால் பயம் வருகிறது என்று 🙂 . பிரச்சனைகள் ஏராளம் இருந்தாலும் அதைத் தகர்த்து தைரியமாக முயற்சிப்பவர்களே சாதிக்கிறார்கள்.

பயம் பற்றிக் கண்ணதாசன் அவர்கள் கூறிய போதே, தெளிவாகப் புரிந்து விட்டது. தற்போது சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறிய கதை மேலும் தெளிவாக்கி விட்டது.

என் அனுபவம்

எனக்குத் துவக்கத்தில் குடும்பக் கடனை அடைக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. சென்னையில் குறிப்பிடத் தக்க அளவில் கொடுக்கப்பட்ட சம்பளம் இருந்தாலும், இந்தச் சம்பளத்தை வைத்துக் கடனைக் கட்ட முடியாது.

எனவே, சிங்கப்பூர் செல்லத் துணிந்து எடுத்த முடிவு என் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அன்று எடுத்தது போன்ற துணிவு இன்று வரை வரவில்லை.

காரணம், அப்போது பொறுப்புகள் இருந்தாலும் வயது இருந்தது. தற்போது வயதும் அதிகம், பொறுப்புகளும் கூடியதால், பயம் அதிகரிக்கிறது.

சிறு எடுத்துக்காட்டு, பொறுப்புகள் இல்லாத இளம் வயதில் பைக்கில் வேகமாகச் செல்வார்கள், திருமணத்துக்குப் பிறகு கூடும் பொறுப்புகளால் பைக் வேகம் வருடாவருடம் குறைந்து கடைசியில், வாகனமே மாறி விடுகிறது 🙂 .

இது தான் வாழ்க்கை.

தொடர்புடைய கட்டுரைகள்

த்தா.. பயத்தை மட்டும் மூஞ்சில காட்டிடாதே!

பயம் பதட்டம் ஏன் ஏற்படுகிறது?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி.. வாழ்க்கையின் நாம் கடந்து வருகின்ற பருவங்களையும் / அனுபவங்களையும் வைத்து தான் இது தீர்மானிக்க படுகிறது.. நீங்கள் கீழே கூறியது போல…

    பொறுப்புகள் இல்லாத இளம் வயதில் பைக்கில் வேகமாகச் செல்வார்கள், திருமணத்துக்குப் பிறகு கூடும் பொறுப்புகளால் பைக் வேகம் வருடாவருடம் குறைந்து கடைசியில், வாகனமே மாறி விடுகிறது. இது தான் வாழ்க்கை. நிச்சயம் உண்மை கிரி.. உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்..
    ==================

    தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது கரும்பை சுவைக்கும் போது நடுவில் வரும் கசப்பாக இருக்கும் கணுவை போல இடையில் இந்த கசப்பான நிகழ்வுகள் வந்து போகின்றன.. இது ஏன்? ஏற்படுகிறது? என்று எப்போதும் தீவிர யோசனை செய்ததில்லை..

    வாழ்க்கை நம்மை கூட்டி செல்லும் வழியிலே பயணத்தை மேற்கொள்கிறேன்.. வழியில் சில கரடு முரடான பாதைகள் இருந்தாலும் செல்லும் இடம் பூஞ்சோலையாக தான் இருக்கும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன். சில நேரம் நமது கணிப்பும் தவறாகிறது.. அதையும் ஏற்று கொண்டு தான் பயணத்தை தொடர்கிறேன்.

    பயம் என்ற ஒன்று இல்லை என்று சொல்ல முடியாது.. ஆனால் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.. பயமும், கோபமும் நம்மை சிந்திக்க விடாது.. நம்மை அவசர பட வைக்கும்.. அதனால் நிதானத்தை இழக்க நேரிடும்.. யாமிருக்க பயம் ஏன்?? – என்ற ஒரு நம்பிகையை நாம் மனதில் ஆழமாக விதைத்தாலே, இந்த பயம் நம்மை விட்டு மெல்ல, மெல்ல குறையும்..

  2. நடுத்தர வகுப்பு பசங்களுக்கு ஏராளமான பொறுப்புகள், கடமைகள், எதிர்கால தேவைகள், பணத்தட்டுப்பாடு, பணியில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குடும்பக் கடன் என்று அழுத்தும் பொருளாதார சுமைகள் அதிகம்.

    இதில் ஏதாவது ஒன்று சொதப்பினாலும், வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயம் அவர்களைத் துணிந்து ஒரு செயலைச் செய்ய விடாது, முயற்சிக்க மாட்டார்கள்.

    நானே உணர்ந்துள்ளேன்.
    இன்னும் பயம் விட்டபாடில்லை…

  3. @யாசின்

    “கரும்பை சுவைக்கும் போது நடுவில் வரும் கசப்பாக இருக்கும் கணுவை போல இடையில் இந்த கசப்பான நிகழ்வுகள் வந்து போகின்றன.. இது ஏன்? ஏற்படுகிறது? என்று எப்போதும் தீவிர யோசனை செய்ததில்லை.”

    இது தான் வாழ்க்கை. இன்பம் துன்பம் இரண்டுமே வந்து செல்லும்.

    ‘பயமும், கோபமும் நம்மை சிந்திக்க விடாது.. நம்மை அவசர பட வைக்கும்.. அதனால் நிதானத்தை இழக்க நேரிடும்.”

    முயற்சிக்கவும் விடாது.

    “யாமிருக்க பயம் ஏன்?? – என்ற ஒரு நம்பிகையை நாம் மனதில் ஆழமாக விதைத்தாலே, இந்த பயம் நம்மை விட்டு மெல்ல, மெல்ல குறையும்.”

    ஆனால், இது கால சூழ்நிலைகளில் நடப்பதால், தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். இதற்கு முடிவு என்பதே கிடையாது என்றே நினைக்கிறன்.

    வாழ்க்கையின் போக்கே அப்படித்தான்.

    @கனகராஜ்

    இது அனைவருக்கும் இயல்பானது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!