ஸ்டாலின் மேயராக இருந்த போது சென்னையில் அவரது நிர்வாகம் சிறப்பாக இருந்தது ஆனாலும், கலைஞர் அவருக்கு முதல்வர் வாய்ப்புக்கொடுக்காமல் தவிர்த்து வந்தார். Image Credit
அதாவது அவர் உயிருடன் இருக்கும் வரை வாய்ப்பைக்கொடுக்கவில்லை (துணை முதல்வராக நியமித்தார்).
ஸ்டாலின் திறமையின் மீதுள்ள அவநம்பிக்கையா அல்லது முதல்வர் பதவியின் மீதுள்ள பற்றா என்பதை அறியேன்.
திமுக நண்பர் ஒருவர் கூறும் போது,
கலைஞர் போல ஸ்டாலினுக்குப் பேச்சு திறமையில்லை ஆனால், நிர்வாகத்திறமையுண்டு. எனவே, அவர் எப்படியாவது முதல்வராகி விட்டால், அதன் பிறகு யாரும் அவரை எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்.
அவர் கூறியதில் எனக்கு ஓரளவு உடன்பாடும் இருந்தது. அதாவது பேச்சு திறமையில்லை ஆனால், நிர்வாகத்திறமை உள்ளது என்று.
காரணம், மேயராக இருந்த போது சிறப்பாகவே செயல்பட்டார்.
வியக்கும் திறமை
கலைஞரின் மறைவுக்குப் பிறகு அழகிரி பிரச்சனையைச் சர்ச்சை இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வந்தார், கட்சி தலைமையைத் திறமையாகத் தன் வசப்படுத்திக்கொண்டார்.
இதன் பிறகு கூட்டணி கட்சிகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கினார். அதாவது, இவரை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்பது போன்ற நிலையை உருவாக்கி விட்டார்.
இந்த நேரத்தில் மாநிலத்தலைவர் முருகன் தலைமையில் பாஜக வளர்ந்து வந்ததாலும், அதிமுக உட்கட்சி பூசலாலும் பாஜக எதிரியாக வரும் என்று கருதினார்.
Dravidian Stock
முதல்வராக வந்த முதல் நாளே திராவிடன் ஸ்டாக், ஒன்றியம் என்ற முழக்கத்தில் ஸ்டாலின் வந்தார். இந்த இரண்டு முழக்கங்களும் தற்போது வரை உயிர்ப்புடன், தமிழகத்தில் முக்கிய அரசியலாக உள்ளது.
எனவே, இயல்பாகவே திராவிட மயக்கத்தில் அனைவரும் இணைந்தார்கள் குறிப்பாகத் திராவிடச் சித்தாந்தத்தில் ஆர்வமுடைய இளைய தலைமுறையினர்.
அதாவது திராவிடன் ஸ்டாக் என்ற பதத்தில் பலரும் ஒருங்கிணைய வாய்ப்பாக அமைந்தது. இதை ஸ்டாலின் திட்டமிட்டு செய்தாரா அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை.
இயல்பாகவே வலது சாரி கொள்கைகள் மீது எதிர்ப்பாக உள்ளவர்களுக்குத் திராவிடன் ஸ்டாக் ஒரு பிடிப்பாக இருந்தது.
சுருக்கமாக, திராவிடன் என்று சொல்வதை விடத் திராவிடன் ஸ்டாக் என்று சொல்வது ட்ரெண்டியாக இருந்தது. இதை திமுக ஆதரவாளர்கள் ட்விட்டர் பயோவில் காணலாம்.
கலைஞர்
மக்கள் நலக்கூட்டணி என்று பிரிந்த போது கலைஞராலும் தடுக்க முடியவில்லை. எனவே, திமுக வெற்றியை மக்கள் நலக்கூட்டணி தடுத்து ‘ஜெ’ வெற்றி பெறும் சூழ்நிலையானது. திமுகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
எதிர்க்கட்சியாக ஜெ தலைமையில் அதிமுக பலமாக இருந்ததால், பாஜக அப்போது காட்சியில் இல்லாததால் கருத்தியல் ரீதியா ஒருங்கிணைக்க ஸ்டாலின் போலக் கலைஞருக்கு வாய்ப்பு கிடைக்காதது கூடக் காரணமாக இருக்கலாம்.
தற்போது கூட்டணி கட்சிகளுக்குத் திமுகவை விட்டால் வேறு வாய்ப்பில்லை என்ற இக்கட்டான சூழ்நிலையை ஸ்டாலின் கொண்டு வந்து விட்டார்.
சூழ்நிலையும் அது போல அமைந்து விட்டது.
அவ்வாறு ஸ்டாலின் உருவாக்கியதை கூட்டணி கட்சிகளும் உணராமல் அதில் விழுந்து, 4 / 5 இடங்களை வாங்கிக்கொண்டு இருக்கும்படியாக மாற்றி விட்டார்.
மக்கள் ஆதரவு இல்லையென்றாலும், கவுரமாக இருந்த கம்யூனிஸ்ட்களுக்கு 25 கோடி பணத்தைக் கொடுத்து அவர்கள் சுய மரியாதையையும் காலி செய்து விட்டார்.
தற்போது அவர்கள் எந்தப் போராட்டத்தையும் முன்னெடுப்பதில்லை.
கடந்த ஆட்சியில் மக்களுக்காகப் பொங்கிய ஊடகங்கள், போராளிகள் தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை.
கூட்டணி
மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திக, விசிக போன்றோர் திமுகவின் தீவிர ஆதரவாளராக மாறியதோடு கிட்டத்தட்ட திமுகவின் அடிமைகளாவே மாறி விட்டனர்.
இதை ஸ்டாலின் திறமையாகக் கையாண்டதாகக் கருதுகிறேன். காரணம், தற்போதைய அரசியல் திராவிடம், தேசியம் என்று மாறி வருகிறது.
இதைச் சிலர் கிண்டலடித்தாலும் எதிர்காலம் இதை நோக்கித்தான் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எனவே, ஒன்று திமுக (திராவிடம்) பக்கம் இருக்க வேண்டும் இல்லையென்றால், பாஜக (தேசியம்) பக்கம் செல்ல வேண்டும்.
எனவே, இவர்களுக்கு வேறு வழியே இல்லாத நிலையாகி விட்டது. எனவே, திமுக பல கட்சிகள் கூட்டணி பலமிக்கதாகி விட்டது.
அதிமுக
தற்போது இரட்டை தலைமை பிரச்சனை முடிந்து குழப்பங்கள் குறைந்து எடப்பாடி பழனிச்சாமி பலம் கூடியதால், திமுகவிலிருந்து பிரிய அல்லது திமுகவை மிரட்டக் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பாகியுள்ளது.
விசிக தற்போது திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக க்கு செல்ல முயற்சித்து வருகிறது. இதற்காகப் பாஜகவைக் கழட்டி விட, அதிமுகவை அறிவுரை என்ற பெயரில் வற்புறுத்தி வருகிறது.
கூட்டணி பலத்தால் மட்டுமே திமுக பலமாக உள்ளது, தனிக்கட்சி பலத்தில் அல்ல. கூட்டணி எண்ணிக்கை குறைந்தால், மிகப்பெரிய சிக்கலில் திமுக மாட்டும்.
தனியாக வெற்றி பெற முடியாது என்பதாலே, கட்சி தொடங்கியது முதல் இன்று வரை கூட்டணி இல்லாமல் தேர்தலை திமுகவால் எதிர்கொள்ள முடியவில்லை.
திமுக அரசு பலமாக இருப்பதற்கு காரணமே எதிர்க்கட்சி கூட்டணி பலமில்லாததே.
ஊடகங்கள்
கலைஞருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் உள்ள பிணைப்பு அனைவரும் அறிந்தது. மற்ற கட்சித்தலைவர்களை விடக் கலைஞரிடம் பாசம் வைத்து இருப்பார்கள்.
ஆனால், ஸ்டாலின் பொறுப்பு எடுத்த பிறகு மொத்த ஊடகங்களையும் தனது அடிமையாக்கி விட்டார்.
தமிழக ஊடகங்களில் இடது சாரி சிந்தனை உள்ளவர்களே பெரும்பான்மை. எனவே, அவர்கள் அனைவரையும் தன் பக்கம் ஒருங்கிணைத்து விட்டார்.
முதல்வரான பிறகு அவர்களுக்குச் சலுகைகள், வீடு என அனைத்தையும் கொடுத்து அவர்களின் வாயை மொத்தமாக அடைத்து விட்டார்.
கலைஞருக்கு ஆதரவாக முன்னர் எழுதினாலும் இந்தளவுக்கு ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் சரண்டர் ஆனதாகத் தெரியவில்லை.
கலைஞரின் காலத்தில் இணைய ஊடகங்கள் (YouTube உட்பட) தற்போதுள்ள எண்ணிக்கையில் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இளையவர்கள்
கலைஞர் அவருடன் வயதானவர்களை அதிகம் வைத்து இருந்தார், ஸ்டாலின் இளைஞர்களை அதிகம் தன் பக்கம் இழுத்து வந்தது கூட ஸ்டாலினின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம்.
வெற்றி என்று இங்கே குறிப்பிடுவது, ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்தது.
அதாவது இவர்கள் திராவிடன் ஸ்டாக் பெயரில் அதிகம் ஈர்க்கப்பட்டு, இணையத்தில் திமுகக்கு ஆதரவாகப் பல பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர்.
YouTube ல் இதற்கென்று பெரிய ஆதரவுக் குழுவே உள்ளது. நிதி கொடுப்பது சம்பந்தமாக அனைவரும் ஸ்டாலினை சந்தித்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
தமிழக ஊடகங்கள் தற்போது முழுக்க ஸ்டாலின் கட்டுப்பாட்டில். தினமலர் போன்ற வெகு சில ஊடகங்கள் மட்டுமே விதிவிலக்கு.
வழக்கமாக ஊடக முதலாளிகள் தான் தங்கள் ஊழியர்களை சாதகமாக எழுத வற்புறுத்துவார்கள் ஆனால், திமுக விஷயத்தில் யாருமே சொல்ல வேண்டியதில்லை ஊடகவியலாளர்களே விருப்பப்பட்டு திமுக ஆதரவாக எழுதுவார்கள்.
காரணம், இவர்கள் இயல்பிலேயே இடது சாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். எனவே, திமுக செய்திகளை மறைக்காமல் எழுதுங்கள் என்று கூறினால் தான் இவர்களுக்கு சிக்கல்.
கூட்டணி, ஊடகங்கள் இரண்டையுமே தன் கட்டுப்பாட்டில் இழுத்து, சித்தாந்த ரீதியாக இவர்களுக்கு வேறு போக்கிடமில்லை என்ற நிலையை உருவாக்கி விட்டார்.
எனவே தான் எவ்வளவு அசிங்கப்பட்டாலும், மற்றவர்கள் எவ்வளவு காறி துப்பினாலும் துடைத்து விட்டுத் தொடர்கிறார்கள்.
பிரசாந்த் கிஷோர்
தற்போது மீண்டும் ஆரம்பத்துக்கு வருகிறேன்.
திமுகவில் உள்ள சிலரே 2021 தேர்தலில் ‘பிரசாந்த் கிஷோர் வேண்டாம் நாமே களத்தில் இறங்குவோம்‘ என்று கூறியதுக்கு மறுத்துப் பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொள்ளப்பட்டார்.
இங்கே நண்பர் கூறியதுக்கு வருகிறேன்.
நிர்வாகம் திறமையாகச் செய்வார் ஆனால், ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே கடினம் ஆனால், ஆட்சியைப் பிடித்து விட்டால் அவரை எதுவும் செய்ய முடியாது என்றார்.
இதற்காகவே எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சர்ச்சைகள் இருந்தாலும் பிரசாந்த் கிஷோர் மூலமாகத் தேர்தலை ஸ்டாலின் அணுகினார் என்று கருதுகிறேன்.
2021 சட்டமன்றத்தேர்தல் வாக்கு வித்யாசத்தில் 3% மட்டும் அதிமுக கூட்டணி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு 200 இடங்களைத் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று கூறப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது.
தொகுதிகள் குறைந்ததற்கு அமமுக பிரித்த ஓட்டுகள் காரணம். அமமுக பிரிக்கவில்லையென்றால் 100+ தொகுதிகளை அதிமுக கூட்டணி பெற்று இருக்கும்.
எனவே, பிரசாந்த் கிஷோர் இல்லையென்றால், வெற்றி கிடைப்பது எளிதல்ல என்பதைத் தேர்தல் முடிவுகளில் உணரலாம்.
நிர்வாகம்
ஆட்சிக்கு வந்த பிறகு திரும்ப நண்பர் கூறியதும், நான் தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் நிர்வாகம் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் காட்சியில் வருகிறது.
நம்பிக்கையளிக்கும் விதத்தில், DGP சைலேந்திரபாபு, தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார்கள். இவர்களோடு சென்னை மாநகர ஆணையராகக் ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார்.
இந்நியமனங்கள் பலருக்கும் வியப்பை கொடுத்ததோடு ஸ்டாலின் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையையும் அளித்தது.
இவற்றோடு சிங்கார சென்னை 2.0 திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் ஸ்டாலின் நிர்வாகம் சிறப்பாகச் செய்வார் என்று நம்பிக்கையை அளித்தார்.
ஆனால், சைலேந்திரபாபும், இறையன்பும் தங்களது இறுதி காலத்தில் இப்படி விமர்சனத்துக்குள்ளாவார்கள் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை.
இறையன்பு & சைலேந்திரபாபு
இறையன்பு பணிகளானது பின்னணியில் (Backend Work) நடப்பவை. எனவே அவரது பணிகள் பொது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியாது.
ஆனால், சிங்கம் போல அறியப்பட்ட சைலேந்திரபாபுவை பூனைக்குட்டி போல ஸ்டாலின் மாற்றி விட்டார். அவர் பெற்ற அத்தனை நற்பெயரும் நாசமாகி விட்டது.
பழைய சாலையை சுரண்டி விட்டுப் புதிய சாலையை அமைக்க வேண்டும் என்ற அதிமுக காலத்திலேயே இருந்த உத்தரவை மறுபடியும் இறையன்பு பிறப்பித்தார்.
அதோடு கிரீன்வேஸ் சாலை (தற்போது DGS தினகரன் சாலை) ஒரு பகுதி மறு சீரமைக்கப்பட்டு அவர் பார்வையிட்டதாகச் செய்தியைப் பார்த்ததும், தினமும் அதே வழியில் செல்லும் நான் ஆர்வமாகப் பார்த்தேன்.
ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் திரும்ப அதே பிரச்சனையுடன் இருந்ததைக் கண்டு கடும் ஏமாற்றமாகி விட்டது. அதாவது சாலை அதே மேடாகவே இருந்தது.
அதிகாரம் இருந்தும் அவரால் செய்ய முடியவில்லையா?! என்று புரியவில்லை.
சிஸ்டம்
காரணம், அதிமுக ஆட்சியில் முன்னாள் காவல் அதிகாரி நடராஜ், மயிலைப் பகுதி MLA வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மயிலைப் பகுதியைச் சுத்தம் செய்வதில் அதி தீவிரம் காட்டினார்.
இதுகுறித்துப் பாராட்டிக் கட்டுரையும் எழுதினேன் ஆனால், நாளடைவில் பராமரிப்பு தொடரவில்லை. இதற்குக் காரணமாக நினைத்தது இவருக்குச் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லையென்பது.
எனவே, இங்கே நல்லது செய்ய நினைத்தாலும், அதை அரசு செய்ய விடாது அல்லது சிஸ்டம் செய்ய விடாது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்பிரிவில் இறையன்பு வரலாம் ஆனால், சைலேந்திரபாபு முற்றிலும் தன்மானத்தை விட்டுக்கொடுத்து விட்டார், அரசை மீறி எதுவும் செய்ய முடியவில்லையா அல்லது முயற்சிக்கவில்லையா என்று தெரியவில்லை.
கோபியில் ஒருகாலத்தில் அதிரடியான நபராக இருந்தவர், கோவை என்கவுண்டரில் பலரின் பாராட்டைப் பெற்றவர் தற்போது மிகப் பரிதாபமான நிலைக்குச் சென்றது காலத்தின் கோலம்.
தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம். காரணம், சைலேந்திரபாபு மீது அளவு கடந்த மரியாதை வைத்து இருந்தேன்.
ஒருவர் ஓய்வு பெறும் போது அவர் செய்த இறுதிக்கால நடவடிக்கைகளே மக்கள் மனதில் பதியும். தற்போது மக்கள் மனதில் என்னவாகப் பதியும் என்பதை உங்கள் எண்ணத்துக்கே விடுகிறேன்.
தன் மரியாதையையும் ஓரளவு காப்பாற்றிக் கொண்டு, அரசுடனும் ஒத்துழைப்பாக இருந்து தொடர்வது ககன்தீப் சிங் பேடி மட்டுமே.
இவரைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டு இருந்தால் அசத்தி இருப்பார் ஆனால், அவரையும் காரில் தொற்றி செல்லும் நிலைக்கு தள்ளியது பரிதாபம்.
மோசமான நிர்வாகம்
சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாலின் நிர்வாகம் மோசமாக உள்ளது.
அதாவது நினைத்தற்கு முற்றிலும் வேறாக உள்ளது. தமிழ்நாடு முழுக்கச் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கூறியதை நிறைவேற்றவில்லை, ஊழல் தலை விரித்தாடுகிறது.
TNPSC தேர்வுகள் சரிவர நடைபெறவில்லை, பொருட்கள் தரமாக இல்லை, பொதுமக்களுக்குச் சரியான முறையில் சேவைகள் சென்று சேர்வதில்லை. கஞ்சா, டாஸ்மாக் மோசமாகி குற்றங்கள் அதிகரித்து விட்டது.
கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கிவிட்டது. திமுக கவுன்சிலர்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கொலைகள் பொதுமக்கள் முன்னிலையிலேயே சர்வசாதாரணமாகத் தினமும் நடைபெறுகின்றன. சமூகநீதி கட்சியின் ஆட்சியில் அடிக்கடி சமூகநீதிக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
மாணவர்கள் தறுதலைகளாக மாறி வருகின்றனர். அவர்களை திருத்த கடுமையான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. ஒரு தலைமுறையே சீரழிந்து வருகிறார்கள்.
வட மாநிலங்களில் நடப்பது போல திருச்சியில் பட்ட பகலில் ஒருத்தன் பூங்காவில் பெண்ணை அடித்து இழுத்து சென்று மறைத்து, வாகனத்தை திருடி செல்கிறான்.
இது போல தமிழகத்தில் நடக்க இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?! தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை எனும் போது பொதுமக்கள் நிலை பரிதாபம் தான்.
திமுக ஆட்சிக்கு வந்தால், ரவுடிகள் பெருகி, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். Its not a MYTH.
ஊடகங்கள் மட்டுமில்லையென்றால், ஸ்டாலின் நிலை மிக மோசமாகி இருக்கும். ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாலே டேமேஜ் கண்ட்ரோலாகி வருகிறது.
திமுக தவறுகளை, சர்ச்சைகளை ஊடகங்கள் முற்றிலும் மறைத்து விடுகிறார்கள். வேறு வழியே இல்லாத, மறைக்க முடியாத சமூகத்தளங்களில் பரவிய செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள்.
கனிம வளக் கொள்ளை
தமிழக கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா கொண்டு செல்லப்பட்டு, அங்கே இருந்து மருத்துவ / மின் / உணவுக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுகின்றன.
அதிமுக ஆட்சியில் கழிவுகள் கொட்டப்படுவது மட்டும் நடந்தது, திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதும் சேர்ந்து நடக்கிறது.
தமிழகத்தையே சுரண்டி எடுத்துக்கொண்டுள்ளார்கள். தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் செல்வதைப் பார்க்கும் போது ஏற்படும் மனஉளைச்சல் சொல்லி மாளாது.
இதற்கு எந்த கடுமையான நடவடிக்கையும் இல்லை. நெஞ்சு பொறுக்குதில்லையே! என்ற நிலை தான் உள்ளது.
இதனால் ஏற்படும் எதிர்கால பாதிப்புகளை நினைத்துக் கையறு நிலையில் மனதினுள் புலம்புவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
ஸ்டாலின் நினைத்தால் இதைத்தடுக்க முடியாதா?! முடியும் என்றால் ஏன் தடுக்கவில்லை? முடியாது என்றால் எதற்கு முதல்வர் பொறுப்பு?
அமைச்சர்கள்
அமைச்சர்களே ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர் நொந்து போய் மேடையில் பேசினால், சிரித்துக்கொண்டுள்ளார்கள்.
RS பாரதி, பொன்முடி போன்ற மூத்த அமைச்சர்கள் பலமுறை தேவையற்ற கருத்துகளைக் கூறி அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்.
இதை ஸ்டாலினால் கண்டிக்க முடியவில்லை.
வெளியே பேச்சு எப்படியுள்ளது என்றால், சபரீசன், உதயநிதி போன்றோர் பின்னணியில் அனைத்து அதிகாரத்தையும், கட்டுப்பாடுகளையும் எடுத்துக்கொண்டார்கள். ஸ்டாலின் பொம்மையாக வந்து செல்கிறார் என்பது தான்.
எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது ஆனால், மக்களிடையே பேசப்படுகிறது.
ஆவின் பால் நிர்வாகத்தில் ஏற்பட்ட எடை குறைப்பு உட்பட பல சொதப்பல்களுக்கு எந்த விதமான தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆனால், டாஸ்மாக்கில் பிரச்சனை என்றால் உடனடி தீர்வு காணப்படுகிறது.
சர்வாதிகாரியாகி விடுவேன் என்று ஸ்டாலின் கூறியதையெல்லாம் நினைத்தாலே கடுப்பாகிறது.
உட்கட்டமைப்பு
அதிமுக ஆட்சியில் சென்னை சாலைகள் மிகச்சிறப்பாக இல்லையென்றாலும், இவ்வளவு மோசமாக இல்லை. தரமான சாலையைக் காண்பதே அரிதாக உள்ளது.
வாகனத்தை ஓட்டிச் செல்வது கடுப்பாக உள்ளது குறிப்பாக இரு சக்கர வாகனங்கள்.
எந்தத் திட்டம், கட்டுமானம் என்றாலும் மிக அதிகக் காலம் எடுத்துக் கொள்கிறார்கள். குழியைத் தோண்டி பல மாதங்களுக்கு அப்படியே போட்டு விடுகிறார்கள்.
அமைக்கப்படுவது எதுவுமே தரமானதாக இல்லை, ஒழுங்கு இல்லை.
மதுரையில் எய்ம்ஸ் கட்டவில்லை என்று சண்டை போட்டுக்கொண்டுள்ளவர்கள் 2021 திறந்து இருக்க வேண்டிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றிப் பேசுவதில்லை.
ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் திறப்பு விழா நீட்டித்துக்கொண்டே செல்கிறார்கள். இதைப் பற்றி யாராவது, ஊடகம் உட்பட விவாதிக்கிறார்களா?!
என்ன தான் செய்கிறார்கள்?
இரு வருடங்களாக இந்திரா நகர் ரயில் நிலையம் மற்றும் டைடல் பார்க் அருகே பாலங்களைக் கட்டுகிறார்கள். எந்தக்காலத்தில் முடிப்பார்கள் என்றே தெரியவில்லை.
பாலம் கட்டுகிறேன் என்று இரு வருடங்களாகச் சர்விஸ் சாலையைத் தோண்டி போட்டு விட்டார்கள். கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் படாதபாடு பட்டார்கள்.
இதோடு இங்கே மெட்ரோ வேலையும் நடைபெறுகிறது.
பலரும் விமர்சித்துச் செய்திகளில் வந்த பிறகு தற்போது சர்வீஸ் சாலையைச் சீரமைத்துள்ளார்கள் ஆனால், பால வேலை மிக மெதுவாக நடைபெற்று வருகிறது.
சந்திரமுகி படத்தில் வடிவேல் ‘கோபாலு ஒருத்தன் தான் வேலை பண்ணிட்டு இருப்பான்‘ என்பது போல இரண்டு பேர் எதோ செய்து கொண்டுள்ளார்கள்.
இந்த வேகத்தில் சென்றால், எப்போது பால வேலையை முடிப்பது? இதனால் தினமும் சிரமங்களைப் பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள்.
நிதி இல்லையென்றால் திட்டங்களை ஆரம்பிக்கக் கூடாது. ஆரம்பித்தால் முடிக்க வேண்டும். ஆரம்பித்து அப்படியே பல காலமாகப் போட்டு வைத்தால் என்ன ஆவது?
திராவிடன் ஸ்டாக்குகள் கிண்டலடிக்கும் உத்தரபிரதேசத்தில் இரு வருடங்களில் 300+ கிமீ சாலையை அமைக்கிறார்கள் ஆனால், இங்கே இரு பாலங்களை இரு வருடங்களில் அதுவும் பாதி கட்டியுள்ளார்கள்.
இதில் என்ன வியப்பு என்றால், ஸ்டாலின் மேயராக இருந்த போது கட்டப்பட்ட சென்னை பாலங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே கட்டப்பட்டுத் திறக்கப்பட்டன.
இதையெல்லாம் கருத்தில் கொண்டே முதல்வரானாலும் சிறப்பாக நிர்வாகம் செய்வார் என்று கருதினேன்.
திமுகவினர் வெறுக்கும் ‘சோ’ அவர்களே ஸ்டாலினின் நிர்வாகத்திறமையை பாராட்டி முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் என்று கூறியுள்ளார்.
வெற்று அறிவிப்புகள்
சிங்கார சென்னை 2.0 கடுமையான ஏமாற்றம்.
பாலங்களுக்கு வண்ணம் அடித்தது, பள்ளிக்கரணை சதுப்புநில புணரமைப்பு மற்றும் வெகு சில பணிகளே பாராட்டும்படியுள்ளது.
அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. தற்போதைய (2023 – 2024) நிதி அறிக்கையிலும் இதே போல அறிவிப்புகள்.
2021 – 2022 ஆண்டு சிங்காரச்சென்னை திட்டத்தில் கூறப்பட்ட ‘அண்ணா நகர் கோபுரம் புதுப்பிக்கப்படும்‘ என்ற அறிவிப்பு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
திட்டங்கள் அறிவிப்புகளாகவே உள்ளது, செயல்பாட்டுக்கு வருவது குறைவு.
மக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், சாலை, சுகாதாரம், மின்சாரப் பிரச்சனைகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
GDP அதிகரிப்பது, முதலீடுகள் வருவது சாதாரண மக்களை எந்த விதத்திலும் திருப்தி செய்யாது. அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன? உட்கட்டமைப்பு எப்படியுள்ளது? என்பதையே மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆட்சிக்கு வந்ததும் ஐந்து உலகப் பொருளாதார மேதைகளை ஸ்டாலின் நியமித்தார் நினைவுள்ளதா? அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியுமா?!
சென்னை மாநகராட்சி
சென்னையில் சுவரொட்டிக்குத் தடையிருந்தும் ஒரு சுவர் விடாமல் அனைத்திலும் சுவரொட்டியால் திமுகவினர் நாசம் செய்து விடுகிறார்கள்.
அடுத்த இரு நாட்களில் மாநகராட்சி ஊழியர்கள் கிழிக்கிறார்கள். அபராதம் மற்றவர்களுக்கு மட்டுமே, கட்சிக்காரர்களுக்கு வாங்குவது போலத் தெரியவில்லை.
அப்படி வாங்கினால், இதுபோலத் தொடர்ந்து ஒட்ட முடியாது.
எங்கள் பகுதியில் சாலை அமைக்கிறேன் என்று ஏற்கனவே இருந்த சாலையின் உயரம் குறைக்க, சாலை அமைக்கும் முன் சாலையைச் சுரண்டி எடுத்தார்கள்.
பின்னர் ஆறு மாதங்களுக்கு அப்படியே போட்டு விட்டார்கள். இதில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது என்பது நரக வேதனையாக (wobbling) உள்ளது.
சமீபத்தில் சென்னை மாநகராட்சி “நம்ம சென்னை” செயலி வழியாகப் புகார் கொடுத்த நபரின் தனிப்பட்ட விவரங்களைச் புகாரில் சம்பந்தப்பட்ட நபருக்கே மாநகராட்சி கசிய விட்டு அந்த நபர் புகார் கொடுத்தவரை மிரட்டியுள்ளார்.
இதை அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது. இப்படியெல்லாம் செய்தால், எதை நம்பி புகார் கொடுப்பது?
ஊடகங்களால், ஆதரவாளர்களால் கட்டமைக்கப்பட்டது ஸ்டாலினின் பிம்பம். அந்தப் பிம்பத்தை ஊடகங்களால் பல காலங்களுக்குத் தாங்கிப்பிடிக்க முடியாது.
ஸ்டாலின் தற்போது செய்வது நிர்வாகம் அல்ல, ஃபோட்டோ ஷூட் மட்டுமே!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
மிக ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து பல செய்திகளை வெளியிட்டு உள்ளீர்கள் அருமை. வாழ்த்துக்கள். நடுவில் ஒரு வரியில் 25 கோடி என்பதற்கு பதிலாக பல கோடி என்று எழுதி இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. நன்றி
@சக்தி
“மிக ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து பல செய்திகளை வெளியிட்டு உள்ளீர்கள் அருமை”
நன்றி சக்தி 🙂
“நடுவில் ஒரு வரியில் 25 கோடி என்பதற்கு பதிலாக பல கோடி என்று எழுதி இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது”
இது என் கற்பனை செய்தியல்ல. அதிகாரப்பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் கூறியதே.
பின்வருவது செய்தி.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன்..
திமுகவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றது உண்மைதான்.
திமுக தன் தோழமைக் கட்சிகளுக்கு 40 கோடி ரூபாய் கொடுத்தார்கள். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15 கோடி ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 கோடி ரூபாய் பெற்றுள்ளது என்று கூறினார்.
Very nicely written. Thanks for sharing such a detailed analysis.
வயதானதும் ஒரு காரணமா இருக்கலாம் ங்க கிரி…
விரிவான கட்டுரை கிரி. தி மு க ஆட்சியில் சட்ட ஒழுங்கை எதிர்பார்ப்பது வீண் என மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்கள் 2016 ல் மீண்டும் வெற்றி பெற்றதிற்கு அவர் சட்ட ஒழுங்கை சீராக வைத்தது ஒரு முக்கிய காரணம். இவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்க மாட்டார்கள். தேர்தலின் போது ஸ்டாலின் கூறிய வாக்குறுதியை நம்பி சிலர் வாக்களித்தார்கள் ஆனால் நான் முன்பே ஊகித்ததுபோல் அவர் நினைத்தாலும், அமைச்சர்களும் நிர்வாகிகளும் நினைக்க மாட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் ஸ்டாலினும் இல்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் அ தி மு க ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறையில் அடைப்போம் என்றார் ஆனால் தனி விசாரணை சிறப்பு நீதிமன்றமும் அமையவில்லை வழக்குகளின் நிலையும் தெரியவில்லை. கொடநாடு கொலை வழக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜெயலலிதா மரணம் விசாரணை, நீட் ரத்து என அனைத்திலும் தாமதம் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். தி மு க கவுன்சிலர்களும் நிர்வாகிகளும் பொது மக்களை தாக்குகிறார்கள் அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் twitter லில் விமர்சிப்பவர்களை தேடித் தேடி கைது செய்கிறார்கள் அதற்காக நீதி மன்றத்திடம் குட்டும் வாங்கி கொண்டு இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி கலவரம், கிருஷ்ணகிரி சாலை மறியல், லாக் அப் மரணங்கள், தற்போது நடந்த திருச்சி காவல் நிலைய தாக்குதல் ஆகியவை சில உதாரணங்கள். அரசாங்க ஊழியர்கள் பெரிதும் தி மு க ஆட்சியை நம்பியிருந்தார்கள் ஆனால் அவர்களும் வீதியில் இறங்கி போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இறையன்பு மற்றும் சைலேந்திரபாபு அவர்களை செயல் பட தடுக்கிறார்களா என்பதை அவர்கள் ஓய்வுக்கு பின்பு memoir எழுதினால் மட்டுமே உண்மை வெளிவரும். தமிழக அரசியலில் அதற்க்கு சாத்தியம் மிக குறைவு தான். எனக்கு மிக பெரிய ஏமாற்றம் உதய சந்திரன் அவர்கள் தான். முதல்வரின் ஆலோசகராக இருக்கிறார் ஆனால் நாட்டில் என்ன நடக்கிறது என்று அவர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சொல்கிறாரா என்று தெரியவில்லை.
நடப்பதையெல்லாம் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் எப்படி மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று 2024 & 2026 இல் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
@சிவசைலம்
நன்றி 🙂
@கனகராஜ்
தெரியவில்லை, நீங்கள் கூறுவது போலவும் இருக்கலாம்.
@மணிகண்டன்
“ஜெயலலிதா அவர்கள் 2016 ல் மீண்டும் வெற்றி பெற்றதிற்கு அவர் சட்ட ஒழுங்கை சீராக வைத்தது ஒரு முக்கிய காரணம். ”
மறுக்க முடியாத உண்மை.
“இவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்க மாட்டார்கள்.”
இது ஒரு MYTH ஆக இருக்கலாம் என்று தான் நினைத்தேன் ஆனால், இல்லை என்று நிரூபித்து விட்டார்கள்.
“தனி விசாரணை சிறப்பு நீதிமன்றமும் அமையவில்லை வழக்குகளின் நிலையும் தெரியவில்லை.”
திராவிட கட்சிகளுக்குள்ளே தனி டீலிங் உள்ளது.
“தி மு க கவுன்சிலர்களும் நிர்வாகிகளும் பொது மக்களை தாக்குகிறார்கள் அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் twitter லில் விமர்சிப்பவர்களை தேடித் தேடி கைது செய்கிறார்கள்”
இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இவர்களை விமர்சிப்பவர்களை கைது செய்கிறார்கள் ஆனால், இவர்கள் தவறு செய்தால் கண்டு கொள்வதில்லை.
“அரசாங்க ஊழியர்கள் பெரிதும் தி மு க ஆட்சியை நம்பியிருந்தார்கள் ஆனால் அவர்களும் வீதியில் இறங்கி போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.”
ஆட்சி முடியும் நேரத்தில் சிலவற்றை நிறைவேற்றுவார்கள்.