பாஜக உள்ளே வந்திடும்

11
பாஜக உள்ளே வந்திடும்

மிழகத்தில் இடது சாரிகளால் குறிப்பாகச் சமூகத்தளங்களில் பரவலாகக் கூறப்படும் வார்த்தை பாஜக உள்ளே வந்திடும். Image Credit

பாஜக உள்ளே வந்திடும்

தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முயற்சித்து வருகிறது. சமீப வருடங்களில் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக மாநில தலைவராக இருந்த தமிழிசையை மாற்றி எல். முருகனை கொண்டு வந்தார்கள்.

பெரும்பான்மையோருக்கு அறிமுகமில்லாத எல். முருகன் குறைந்த காலத்திலேயே தன் தேர்வை நியாயப்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆதரவைத் திரட்டினார். குறிப்பாகக் கறுப்பர் கூட்டத்துக்கு எதிரான ‘வேல் யாத்திரை’ கவனம் பெற்றது.

பல கட்சிகளில் இருந்து பாஜக க்கு வந்தவர்கள், எல் முருகன், அண்ணாமலை போன்றோரின் இருப்பு, பரப்புரை பாஜக மீதான வட மாநிலக்கட்சி எண்ணத்தை மாற்றி வருகிறது.

இது இயல்பாகவே இடது சாரி சித்தாந்தத்தில் உள்ளவர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, முடிந்தவரை பாஜக மீதான மக்கள் வெறுப்பைத் தக்க வைக்க அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை தான் பாஜக உள்ளே வந்திடும்.

திமுக திக விசிக கம்யூனிஸ்ட்

பாஜக மீது மிகுந்த கடுப்பில் திமுக உள்ளது காரணம், இதுவரை திமுக இந்துக்களைப் புறக்கணித்து அல்லது கண்டுகொள்ளாமல் இருந்தது.

எப்படியிருந்தாலும் இந்துக்கள் வாக்கு வரும் என்பதால், முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

எனவே, இந்துக்களை, அவர்களது பண்டிகைகளை, வழக்கங்களை மறைமுகமாகவும் நேரடியாகவும் கிண்டலடித்து வந்தனர்.

ஆனால், பாஜக மேற்கொண்ட பரப்புரை மற்றும் பொறுமையிழந்த இந்துக்கள் பகுதியினர் காரணமாக, தற்போது கடும் எதிர்ப்பு எழுகிறது.

முன்பு போல எதையும் பேசி விட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

வாக்குகளுக்குண்டான மதிப்பை மனதில் வைத்துத் திமுக போன்ற பெரிய கட்சி அடக்கி வாசித்தாலும், திருமாவளவன் போன்றோர் இன்னும் இந்துக்கள் வழக்கத்தை, அது தொடர்பான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

காரணம், திமுக போன்ற பெரிய கட்சிக்கு இருக்கும் நெருக்கடி திருமாக்கு இல்லை.

இதனாலயே பாஜக வந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் குறைவாக இருந்தாலும் 6 சீட்டுக்கு திமுக விடம் ஒத்துக்கொண்டார்.

இவரைப்போலவே மற்றவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

சிறுபான்மையினர் ஆதரவு

தமிழகத்தின் பல இடங்களில் சிறுபான்மையினர் ஆதரவு, வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், அவர்களுக்கு ஆதரவை வழங்கி அவர்கள் சார்பு விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

சிறுபான்மையினர் அளவுக்கு இந்துக்கள் மதம் சார்ந்து எண்ணுவதில்லை என்பதால், இதுவரை இடது சாரியினருக்குப் பிரச்சனை இல்லை.

ஆனால், தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது நெருக்கடியைத் தந்துள்ளது.

சிறுபான்மையின மத தலைவர்கள் / குருமார்கள் தங்கள் மதக்கூட்டங்களில் வெளிப்படையாகவே பாஜக க்கு வாக்களிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

தங்கள் மதத்துக்குச் சிறுபான்மையினர் முக்கியத்துவம் கொடுக்கும் போது, தாங்கள் ஏன் அது போல இருக்கக் கூடாது?! என்ற எண்ணத்தை இயல்பாகவே இந்துக்களிடையே தோற்றுவிக்கிறது.

இப்பவும் அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தாது என்றாலும், குறிப்பிட்ட சதவீத மக்கள் எண்ணுகின்றனர்.

பாஜக மீதான வெறுப்புணர்வு

துவக்கத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜக மீதான வெறுப்பு எண்ணத்தை மக்களிடையே விதைத்து விட்டார்கள்.

அதைத் திமுக போன்ற கட்சிகள் நீர்த்து விடாமல் பார்த்துக்கொண்டு வருகின்றன.

காரணம், இந்நிலை மாறினால் எதிர்காலத்தில் திமுக போன்ற கட்சிகளுக்கே சிக்கலாகி விடும்.

எனவே தான், திமுக கூட்டணியினர் அதிமுக வை விமர்சிப்பதை விட அதிகம் பாஜக வை விமர்சித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் பாஜக சித்தாந்த ரீதியாகத் தனக்கு எதிரான பெரும்பான்மை வாக்குகளை ஒன்று திரட்டி விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

இதன் வெளிப்பாடே திருமாவளவன் போன்றோர் அவர்கள் கட்சியைப் பற்றிப் பேசுவதை விட, பாஜக உள்ளே வந்திடும் என்பதைத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

தற்போது பாஜக உள்ளே வந்திடும் என்பதைப் பாஜக ஆதரவாளர்கள் மீம்ஸாகப் போட்டு அவ்வாறு கூறுவதின் அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்து வருகிறார்கள்.

அதாவது இப்படிக்கூறினாலே அது நகைச்சுவையாகப் பார்க்கும் படியாகி விட்டது.

நிதி தடுப்பு

கிறித்துவத் தலைமைக்கு வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை மத்திய அரசு கட்டுப்படுத்தியது / தணிக்கை செய்தது அவர்களுக்குக் கடுப்பை வரவழைத்துள்ளது.

எஸ்றா சற்குணம் வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார்.

எனவே, தமிழகத்தில் சிறுபான்மையினர் பாஜக வால் மத ரீதியாகப் பாதிக்கப்படவில்லையென்றாலும், தொடர்ச்சியாகப் பாஜக மீதான பயத்தை, வெறுப்புணர்வை கட்டமைத்து வருகிறார்கள்.

இதே நிலை தான் முஸ்லீம் ஜமாத்துகளிலும். இவர்களும் தங்கள் பரப்புரைகளில் பாஜக வை வீழ்த்த வேண்டும் என்பதை முன்னிறுத்தி பேசி வருகின்றனர்.

இது தொடர்பான காணொளிகளைச் சமூகத்தளங்களில் காண முடியும்.

இந்நிலை மறைமுகமாக இந்துக்களையும் தங்கள் மதம் சார்ந்து சிந்திக்க வைக்கிறது.

சிறுபான்மையினர் தங்கள் மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது நாம் ஏன் கொடுக்கக் கூடாது?‘ என்ற இயல்பான கேள்வியை முன் வைக்கிறது.

முக்கியத்துவம்

சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இதைச் சிறுபான்மையினரும் உணர்ந்தது போலத் தெரியவில்லை.

உண்மையில் பாஜக வை விடத் திமுக விசிக திக கட்சிகளே இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடையே வெறுப்புணர்வை வளர்த்து வருகிறார்கள்.

இவர்களின் பாகுபாடே தேவையற்ற பிரச்சனைகளை, மத ரீதியான சிந்தனைகளை இந்துக்களிடையே தோற்றுவிக்கிறது.

2021 தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் நிச்சயம் முந்தைய வாக்குச் சதவீதத்தை விடப் பாஜக கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது.

ஆனால், 2026 தேர்தலில் பாஜக முக்கியக் கட்சியாக வளர்ந்து இருக்கும்.

ஆம்! பாஜக உள்ளே வந்துவிடும் ஆனால், அதற்குத் திமுக விசிக திக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத ரீதியான பாகுபாடே முக்கியக் காரணமாக இருக்கும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

 1. உள்ளே வருகிற வழி குறுக்கு
  வழி மற்றும் ஒரு பெரிய கட்சியை உடைத்து உள்ளே வருகிற அற்ப புத்தி?? அதை பற்றி ஒரு வரி இல்லயே???

 2. ஒவ்வொரு தேர்தல் நடைபெறும் போதும் சாதாரண அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பு, ஏதேனும் நல்லது நடக்க வேண்டும் என்பது தான்.. இந்த தேர்தலிலும் அதை தான் எதிர்பார்க்கிறேன்.. என் தனிப்பட்ட விருப்பப்படி சகாயம் ஐயா இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.. இந்த தேர்தலில் அவரின் நிலை எவ்வாறு இருக்கும் என யூகிக்க முடியவில்லை.. ஆனால் அடுத்த தேர்தலில் மிக பெரிய சக்தியாக மாறி இருப்பார் என நம்புகிறேன்.. நல்ல திறமையான தலைவர்கள் நம்மை ஆள வேண்டும்.. நம் மாநிலத்தின் வளர்ச்சியும் நன்றாக இருக்க வேண்டும்.. மற்ற மாநிலத்திற்கு முன் உதாரணாமாக நம் மாநிலம் திகழவேண்டும்..பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. நண்பர் கிரி,

  நீங்கள் இந்த இடுகையை எழுதிய நேரம் பாஜகவின் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது சம்பவமும் நடைபெற்றது. அதைப்பற்றி இந்த இடுகையில் தேடினேன். கிடைக்கவில்லை. ஆதலால் இதை முதலே தெரிவித்துக்கொள்கிறேன்.

  இந்த இடுகை எதை வெளிப்படுத்துகிறது என்று எனக்கு புரியவில்லை. தவயுசெய்து நடுநிலை என்று கூறிவிடாதீர்கள். ஒரு மோசமான சம்பவம் நடைபெறும்போது அதை வெறுமனே நடைபெறுகிறது என்று கூறுவது நடுநிலைமையாக தெரியவில்லை.

  பாஜகவிற்கு அடித்தளம் போட்டு அதை தமிழகம் முழுவதும் அறியச்செய்த பெருமை கண்டிப்பாக தமிழிசை அவர்களையேச்சேரும். கட்சியில் இருந்த ஏனையோரும் வடிவேல் போல “பொய் சொல்லுறோமோ பீலா உடுறோமோ, எல்லாரும் நம்மளையே பார்க்கணும்” என்ற வகையில் நடந்துகொண்டதாலேயே இன்று பாஜக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் இது ஒரு நல்ல வழியிலான வளர்ச்சியாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

  பாஜகவின் அடிப்படையே பிரிவினைவாதம். ஏனென்றால் அதன் தாய்கழகம் ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்குத் தேவையானது மக்களைப் பிரிக்க ஒரு காரணம். முக்கியமாக மதம். எனக்குத்தெரிந்து (நான் பார்த்து புரிந்துகொண்டவற்றில்) மதம், ஜாதி இரண்டையும் முக்கியமாக நினைப்பவர்களே, அதிகம் பாஜகவிற்கு ஆதரவு தருவது தெரிகிறது. ஆனால் அவர்களின் திட்டமே வேற மாதிரியாக இருக்கும். அதிகமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற விடயங்கள் நடக்கும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இங்கே வந்து பெண்களின் பாதுகாப்பே தன் கட்சியின் கொள்கை என்று கூறுகிறார் என்றால் அதையும் கை தட்டி வரவேற்பது அறிவுடைய செயலாகத் தெரியவில்லை.

  தமிழ், தமிழ் என்று இன்றைக்கு பொங்குபவர்கள் அரசு சுற்றறிக்கைகளை இந்தியிலேயே வெளியிடுகிறார்கள். மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் இருந்து தமிழ் நீக்கப்படுவதும், பின்னர் எதிர்ப்பு எழுந்தபின் அதை சேர்ப்பதும் தொடர்கதையாகி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்தியில் கடிதம் அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்ப வேண்டாம் என்று கூறிய பிறகும், அடுத்த முறையும் இந்தியிலே அனுப்பப்படுகிறது. இவையெல்லாம் கவனக்குறைவு என்று மட்டுமே நம்புவோமாக.

  இவற்றைப்பற்றி ஒரு வரி கூட தாங்கள் எழுதவில்லை. அதிலும் தமிழை அழிக்க நினைக்கும் பாஜக, மதத்தை (மன்னிக்கவும் நானும் அதே மதத்தை சேர்ந்தவன் என்றாலும்) தூக்கிப்பிடிக்கும் காரணத்தினால் அது தங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

  இதைக்கூறும் நேரத்தில் இன்னொன்றையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அது, திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று பல்டி அடித்திருப்பது. அனைவரும் இங்கு மோசமானவர்கள், திமுகவும், காங்கிரசும், யாராக இருப்பினும், அரசியலில் மோசமானவர்களே. திரைப்பட வசனத்தைப்போல் “கெட்டவனில் கேடு கெட்டவனை” ஏற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை. ஏதேனும் தங்களுக்கு வருத்தம் தரும் வகையில் எழுதியிருந்தால், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

 4. மதத்தை மட்டும் கட்டி அழும் நிலைக்கு மக்கள் வருவது பிற்போக்குதனம் இல்லையா?, சாதி தவறு மதம் தவறு இல்லையா?

 5. /தமிழகத்தில் சிறுபான்மையினர் பாஜக வால் மத ரீதியாகப் பாதிக்கப்படவில்லையென்றாலும், தொடர்ச்சியாகப் பாஜக மீதான பயத்தை, வெறுப்புணர்வை கட்டமைத்து வருகிறார்கள்./

  பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள்ல சிறுபான்மையினர் பாதிக்கபடாமல் இருக்காங்களா?

  https://en.wikipedia.org/wiki/Cow_vigilante_violence_in_India
  https://www.wired.com/story/indias-frightening-descent-social-media-terror/

 6. @பிரபாகரன்

  “ஒரு பெரிய கட்சியை உடைத்து உள்ளே வருகிற அற்ப புத்தி?? அதை பற்றி ஒரு வரி இல்லயே?”

  ஒவ்வொரு கட்சியின் துவக்கத்தை எடுத்துப்பார்த்தால், எல்லோருமே ஒவ்வொரு வகையில் பிரிந்து வந்தவர்கள் தான். ஏற்கனவே இருந்த கட்சியைப் பிரித்து / உடைத்து வந்தவர்கள் தான்.

  இக்கட்டுரை பாஜக வருவதை நினைத்துப் பயப்படுகிறவர்களை, எதனால் பாஜக வளருகிறது என்பதைப் பற்றியது மட்டுமே.

  @யாசின்

  சகாயம் கட்சி வெற்றி பெறாது. எதிர்காலத்திலும் அவரால் வெற்றி பெற முடியாது. வேறு கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்.

  சகாயம் வேட்பாளராக நின்றால் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

  “நம் மாநிலத்தின் வளர்ச்சியும் நன்றாக இருக்க வேண்டும்.. மற்ற மாநிலத்திற்கு முன் உதாரணாமாக நம் மாநிலம் திகழவேண்டும்”

  இதுவே என் விருப்பமும்.

  @ஆதி

  “மதத்தை மட்டும் கட்டி அழும் நிலைக்கு மக்கள் வருவது பிற்போக்குதனம் இல்லையா?, சாதி தவறு மதம் தவறு இல்லையா?”

  கண்டிப்பாகத் தவறு தான் ஆனால், அனைத்து கட்சிகளும் இதைத்தான் செய்துகொண்டுள்ளன. யாரும் விதிவிலக்கல்ல.

  @டோனி டேவிட்

  “பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள்ல சிறுபான்மையினர் பாதிக்கபடாமல் இருக்காங்களா?”

  நிச்சயம் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அதே சமயம் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

  நான் கூற வருவது யார் செய்தாலும் எந்த மதத்தினர் செய்தாலும் தவறு தான். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

 7. @கனி

  “நீங்கள் இந்த இடுகையை எழுதிய நேரம் பாஜகவின் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது சம்பவமும் நடைபெற்றது. அதைப்பற்றி இந்த இடுகையில் தேடினேன். கிடைக்கவில்லை. ஆதலால் இதை முதலே தெரிவித்துக்கொள்கிறேன்.”

  நீங்க தேடும் அளவுக்கு அவ்வளவு பெரிய கட்டுரை இல்லை என்று கருதுகிறேன்.

  இக்கட்டுரை பொதுவான நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டது. எந்த குறிப்பிட்ட சம்பவத்தையும் வைத்து எழுதப்படவில்லை.

  “இந்த இடுகை எதை வெளிப்படுத்துகிறது என்று எனக்கு புரியவில்லை. தவயுசெய்து நடுநிலை என்று கூறிவிடாதீர்கள். ஒரு மோசமான சம்பவம் நடைபெறும்போது அதை வெறுமனே நடைபெறுகிறது என்று கூறுவது நடுநிலைமையாக தெரியவில்லை.”

  உங்களுக்குப் புரியாமல் போனதுக்கு வருந்துகிறேன்.

  இக்கட்டுரை என் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்த மட்டுமே. எனவே, நீங்கள் எதிர்பார்ப்பதை நான் எழுதாமல் இருக்கலாம்.

  முதலில் நான் நடுநிலை என்று எங்கேயாவது கூறி உள்ளேனா? நடுநிலை என்ற ஒன்றே எங்கும் கிடையாது.

  நான் என் கருத்தை தெரிவிக்கிறேன், நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கிறீர்கள். அவ்வளவே!

  நடுநிலை என்பதை யார் தீர்மானிப்பது? எனவே, நடுநிலை என்பதெல்லாம் எங்குமே கிடைக்காத ஒன்றே.

  “பாஜகவிற்கு அடித்தளம் போட்டு அதை தமிழகம் முழுவதும் அறியச்செய்த பெருமை கண்டிப்பாக தமிழிசை அவர்களையேச்சேரும். ”

  பாஜக வை வளரவிடாமல் செய்ததே தமிழிசை தான். மாற்றிக்கூறிக்கொண்டுள்ளீர்கள்.

  தற்போது வந்த எல் முருகன் இன்னும் சில வருடங்களுக்கு முன்பே வந்து இருந்தால், தமிழக பாஜக அடைந்த வளர்ச்சியே வேறாக இருக்கும்.

  “இது ஒரு நல்ல வழியிலான வளர்ச்சியாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?”

  என்னங்க பேசுறீங்க 🙂 . எந்த கட்சி நல்ல வழியில் வளர்ந்துள்ளது? உங்களுக்குத் தெரிந்த வளர்ந்த கட்சியின் பெயரை கூறுங்கள்.

  “பாஜகவின் அடிப்படையே பிரிவினைவாதம். ஏனென்றால் அதன் தாய்கழகம் ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்குத் தேவையானது மக்களைப் பிரிக்க ஒரு காரணம். முக்கியமாக மதம்.”

  தமிழகத்தில் எந்தக் கட்சி பிரிவினைவாதம் செய்யவில்லை?

  மதசார்பற்ற கூட்டணியில் இருப்பவர்கள் யார்? பாஜக க்கு வாக்களிக்க கூடாது என்று சொல்பவர்கள் யார்?

  சீமான் செய்து கொண்டு இருப்பது என்ன?

  இக்கட்டுரையில் கூறியுள்ளபடி, பாஜக வளர்வதே இங்குள்ளவர்கள் செய்யும் பிரிவினைவாதத்தால் தான்.

  “அதிகமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற விடயங்கள் நடக்கும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இங்கே வந்து பெண்களின் பாதுகாப்பே தன் கட்சியின் கொள்கை என்று கூறுகிறார் என்றால் அதையும் கை தட்டி வரவேற்பது அறிவுடைய செயலாகத் தெரியவில்லை.”

  நான் அதை செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் திரும்பவும் ஒருமுறை தேடி பார்க்கலாம்.

  “தமிழ், தமிழ் என்று இன்றைக்கு பொங்குபவர்கள் அரசு சுற்றறிக்கைகளை இந்தியிலேயே வெளியிடுகிறார்கள். மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் இருந்து தமிழ் நீக்கப்படுவதும், பின்னர் எதிர்ப்பு எழுந்தபின் அதை சேர்ப்பதும் தொடர்கதையாகி உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்தியில் கடிதம் அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்ப வேண்டாம் என்று கூறிய பிறகும், அடுத்த முறையும் இந்தியிலே அனுப்பப்படுகிறது. இவையெல்லாம் கவனக்குறைவு என்று மட்டுமே நம்புவோமாக.”

  தமிழ் தமிழ் என்று பொங்குபவர்கள் பலர் பள்ளியில் இந்திக்கு தானே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

  தமிழ் தமிழ் என்று கூறி தமிழ் இனத்தையே அழிக்க துணை புரிந்தார்களே. நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தியது உண்மை என்று நம்புவோமாக.

  550+ மீனவர்கள் காங் ஆட்சி பத்து வருட காலத்தில் கொல்லப்பட்டார்கள். கடந்த பாஜக ஏழு வருடங்களில் 5 பேர் கொல்லப்பட்டு இருந்தாலே அதிகம். கைது செய்யப்பட்டாலும், உடனே விடுவிக்கப்பட்டார்கள்.

  இதைப்பற்றி எந்த ஊடகமாவது விவாதித்து இருக்குமா?!

  “இவற்றைப்பற்றி ஒரு வரி கூட தாங்கள் எழுதவில்லை.”

  நீங்கள் எதிர்பார்ப்பதையெல்லாம் நான் எழுத வேண்டும் என்றால், நீங்கள் சொல்ல சொல்ல நான் எழுதினால் தான் உண்டு கனி.

  நான் கூறியதில் என்ன விமர்சனம் என்று கூறினால் பதில் அளிக்கலாம் ஆனால், நீங்கள் நினைப்பதையெல்லாம் நான் எழுதவில்லை என்றால் நான் என்ன செய்வது?

  அனைவரையும் திருப்தி செய்வது என் வேலை அல்ல. அதை யாராலும் செய்யவும் முடியாது.

  நீங்க கட்டுரை எழுதினால் அதில் வந்து நீங்க ஏன் இதை எழுதவில்லை, அதை எழுதவில்லை என்று கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

  “தமிழை அழிக்க நினைக்கும் பாஜக, மதத்தை (மன்னிக்கவும் நானும் அதே மதத்தை சேர்ந்தவன் என்றாலும்) தூக்கிப்பிடிக்கும் காரணத்தினால் அது தங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.”

  தமிழை நான் மிக நேசிக்கிறேன்.

  என் தளத்தைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்றால், தமிழுக்கு சிக்கலை ஏற்படுத்திய மத்திய அரசை விமர்சித்து ஏராளமான கட்டுரைகளை எழுதி இருப்பதை படித்து இருப்பீர்கள்.

  அதற்கெல்லாம் நீங்கள் கருத்திடவில்லையே கனி!

  உங்களை ஏற்றுக்கொள்ள கூறி நான் எங்கேயும் கேட்கவில்லையே. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.

  தமிழை பாஜக மட்டும் தான் அழிப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டு இருந்தால், உங்களை நினைத்து வருத்தப்படுகிறேன்.

  “திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று பல்டி அடித்திருப்பது. அனைவரும் இங்கு மோசமானவர்கள், திமுகவும், காங்கிரசும், யாராக இருப்பினும், அரசியலில் மோசமானவர்களே.”

  இதைத்தான் நானும் கூறுகிறேன். கூற வருகிறேன். இதை புரிந்து கொண்டு இருந்தால், கட்டுரையும் புரிந்து இருக்கும்.

  “திரைப்பட வசனத்தைப்போல் “கெட்டவனில் கேடு கெட்டவனை” ஏற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை.”

  அதே தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் உள்ளது. நீங்க ஒருவரை / கட்சியை நினைக்கிறீர்கள். நான் வேறு கட்சிகளை நினைக்கிறேன் அவ்வளவே.

  “ஏதேனும் தங்களுக்கு வருத்தம் தரும் வகையில் எழுதியிருந்தால், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.”

  வருத்தப்பட என்ன உள்ளது? உங்கள் கருத்தை நாகரீகமாக முன் வைக்கிறீர்கள். இதற்கு ஏன் மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையெல்லாம்.

  உங்கள் கருத்து ஸ்பாம் க்கு சென்று விட்டதால், முன்பு வெளியாகவில்லை.

 8. சிறுபான்மையினர், மதம் அதெல்லாம் வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே இருக்கிற பிரித்தாளும் கொள்கை தான். பழகியாச்சி sir.
  பக்கத்து State ல பிஜேபி தான், ஆனா கர்நாடகவினர்க்கு தான் அரசு வேலை.

  இங்க இந்தில ஃபெயில் ஆன வட நாட்டான், தமிழ் டெஸ்ட் clear பண்ணி, அரசாங்க வேலைக்கு போரான்.
  இத எப்படி பொறுக்க முடியும்.
  என்னைய மாதிரி ஆள் இந்த கேள்விய கேக்கல, கோர்ட்ல நீதிபதி கேட்டுருக்கார்.

  https://www.polimernews.com/amp/news-article.php?id=123321&cid=1

 9. @Aloy இது பற்றி 2017 ம் ஆண்டே விரிவாக எழுதியுள்ளேன். மத்திய மாநில அரசுகள் எவ்வாறு வட மாநிலத்தவரை இங்கே நுழைக்கிறார்கள் என்று.

  https://www.giriblog.com/hindi-imposition-damages-tamil-identity/

  நிச்சயம் இது ஏற்புடையதல்ல. சட்டப்படி வருவது தவறில்லை ஆனால், ஏமாற்றி வருவது மிகத்தவறு. மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.

 10. அந்த கட்டுரையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். அதில் நீங்கள் கூறியிருந்த ஏடிஎம் செண்டரில் தமிழ்மொழி தேர்ந்தெடுப்பது, ஹிந்தியில் பேச ஆரம்பிக்கும் டெலி காலர்களிடம், தமிழில் பேச சொல்வது முதலான காரியங்களை அப்போது முதல் நான் செயல்படுத்த தொடங்கினேன்.

  ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நீங்கள் அந்தக் கட்டுரையை பிஜேபியை ஆதரிக்கும் முன் எழுதியது என நினைக்கின்றேன்.

  H. ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விமர்சித்து எழுதி உள்ளீர்கள்.

  இப்பொழுது அவர்கள் எல்லாம் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி விட்டார்களா?அல்லது உங்களால் தான் அதே போன்று அவர்களை விமர்சித்து மீண்டும் எழுத முடியுமா.

  என் ஆறுதலுக்காக நீங்கள் எழுதிய அந்த கட்டுரை மீண்டும் ஒருமுறை நீங்களே படித்துப் பாருங்கள்.

 11. @Aloy நான் வலதுசாரி ஆதரவாளன் அதற்காக அனைவரையும் கண்ணை மூடிட்டு ஆதரிக்க மாட்டேன்.

  என் மனசாட்சிக்கு சரியென்று படுவதை பாராட்டுவேன், தவறு என்று தோன்றுவதை விமர்சிப்பேன். H ராஜா பொன் ராதாகிருஷ்ணன் எல்லாம் எனக்கு யாருங்க?

  நான் ஏன் அவர்களை காரணம் இல்லாமல் ஆதரிக்கப்போகிறேன்.

  H ராஜா என்ன.. மோடி தவறு செய்தாலும் விமர்சிப்பேன்.. இதில் என்ன இருக்கு?

  இது 2018 ல் எழுதியது.. https://www.giriblog.com/tamilnadu-bjp/ இது 2019 ல் எழுதியது https://www.giriblog.com/why-tn-bjp-is-not-successful/

  அடுத்த வாரம் எழுதப் போற கட்டுரையில் கூட H ராஜா பற்றிக் குறிப்பிடுவேன்.

  “நீங்கள் அந்தக் கட்டுரையை பிஜேபியை ஆதரிக்கும் முன் எழுதியது என நினைக்கின்றேன்.”

  கிடையாது. மோடியை பிரதமராக ஆதரித்து 2013 ம் ஆண்டே கட்டுரை எழுதியுள்ளேன். எனக்கு முதலில் தமிழ், தமிழ்நாடு அப்புறம் தான் மற்றவர்கள் எல்லாம்.

  https://www.giriblog.com/i-support-modi-for-pm-candidate/

  நான் பாஜக செயல்பாடுகளை திட்டியது 2014, 2017, 2018, 2019.

  இக்கட்டுரைகளும் பின்னர் எழுதியது

  https://www.giriblog.com/goods-and-service-tax/

  https://www.giriblog.com/is-india-developing-because-of-hindi/

  https://www.giriblog.com/hindi-vs-other-indian-languages/ இக்கட்டுரையால் நண்பர் காயத்ரிநாகா வுடன் கடும் விவாதமே வந்து விட்டது

  கோபித்துக்கொண்டு போனவர் தான் இப்ப வரை ஆளை காணோம் 🙂 .

  இவையல்லாமல் IRCTC யில் இந்தியை நுழைத்ததற்கு கழுவி ஊத்தி இருக்கிறேன்.

  ஆனால், பலர் மோடியை, பாஜக வை, மத்திய அரசை விமர்சித்ததை மட்டும் மறந்து விடுகிறார்கள்.

  நான் இரண்டையுமே செய்கிறேன் ஆனால், பாராட்டியது மட்டும் கவனம் பெறுகிறது.

  நீங்களே சொல்லுங்க.. இதற்கு மேல என்ன பண்ணுறது?

  மோடி அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது பாராட்டுகிறேன், மேற்கூறிய காரணங்களுக்கு விமர்சிக்கிறேன்.

  நான் ரஜினிக்கு மட்டுமே ரசிகன், வேறு யாருக்கும் கிடையாது.

  வலதுசாரி ஆதரவாளன் என்பதால், மோடி அரசு மீது எனக்கு மரியாதையுண்டு அதற்காக அனைத்தையும் ஆதரிப்பேன் என்று நினைக்க வேண்டாம்.

  அதே போல மற்றவர்கள் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை. அனைவரையும் திருப்தி செய்வது என்னால் முடியாது.

  நீங்க நாகரீகமாகக் கேட்டீங்க.. அதனால் பதில் அளிக்கிறேன். வேற மாதிரி கேட்டு இருந்தால், புறக்கணித்து இருப்பேன் அவ்வளவே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here