யோகி ஆதித்யநாத் என்ற பெயர் 2017 ம் ஆண்டு வரை பலருக்கு பரிச்சயமில்லாதது ஆனால், இன்று இவரைப் பற்றிப் பேசாத மாநிலங்கள், அரசியல் கட்சிகள் இல்லை.
அப்படி என்ன செய்து விட்டார் என்பதைப் பார்ப்போம். Image Credit
யோகி ஆதித்யநாத்
கோரக்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக 1998, 1999, 2004, 2009 & 2014 வரை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
2017 சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் இரண்டாம் முறையாக 2022 தேர்தலில் மீண்டும் முதலமைச்சரானார்.
திருமணம் செய்து கொள்ளாதவர், இந்துத்வா கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.
இவர் தீவிர இந்துத்துவா நபர் என்றாலும், இவரது ஆசிரமத்தின் முக்கிய பொறுப்புகளில் முஸ்லிம்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சிகள்
யோகியை பற்றிப்பேசும் முன் எதிர்கட்சிகளைப் பற்றிப் பேச வேண்டியது முக்கியம்.
2017 க்கு முன் கடைசியாகப் பாஜக ஆட்சிக்கு வந்தது 1997 ம் ஆண்டு. இதன் பிறகு 20 வருடங்களுக்குப் பிறகு 2017 ல் ஆட்சியைப் பிடித்தது.
இடைப்பட்ட 15 வருடங்கள் முலாயம் சிங் மற்றும் மாயாவதி கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன.
யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வரும் முன் அதிகபட்சம் 10 வருடங்கள் ஒட்டுமொத்தமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது.
துவக்க காலங்களில் காங்கிரஸ் (கிட்டத்தட்ட 30 வருடங்கள்) எந்த வளர்ச்சியையும் உத்தரப்பிரதேசத்துக்குக் கொடுக்கவில்லை.
அதன் பிறகு வந்த மாநில கட்சிகளான முலாயம், மாயாவதி கட்சிகளும் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் அம்மக்களை அடிமைகளாகவே வைத்து இருந்தனர்.
சுருக்கமாக, வளர்ச்சி என்பது பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் மக்களை வைத்து இருந்தார்கள். இது தான் வாழ்க்கை என்பது போல மக்களும் பழகி விட்டார்கள்.
சாதியை வைத்து அரசியல் செய்து வெற்றிபெற்றாலும் மக்களின் நிலை அப்படியே தான் இருந்தது.
காங்கிரஸ், முலாயம் & மாயாவதி கட்சிகள் வளர்ச்சித் திட்டங்களைச் செய்தாலும், அவற்றால் மாநிலம் வளராமல் குறிப்பிட்ட சிலரே பயன்பெற்றனர்.
இந்நிலையில் தான் அமித்ஷா திட்டத்தின் பயனாகப் பாஜக மிகப்பெரிய வெற்றியை 2017 ல் பெற்றது ஆனால், இதைப் பலரும் எதிர்பார்க்கவில்லை.
இவ்வெற்றிக்கு முழு முதற்காரணம் அமித்ஷா மட்டுமே!
2017 தேர்தலில் யார் முதல்வர் என்று அறிவிக்கப்படாமலே தேர்தலை எதிர்கொண்டார்கள். வெற்றிக்குப் பிறகு யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதுவரை மற்ற மாநில மக்களுக்கு யோகி என்பவரைப் பற்றி எதுவும் அறிமுகமில்லை.
யோகி ஆதித்யநாத் முந்தைய சூழ்நிலை
யோகியை பலருக்கு மிரட்டலாகப் பார்த்தே பழக்கம் அல்லது அதிரடியான நடவடிக்கைகளைப் பார்த்தே பழக்கம்.
ஆனால், எதிர்கட்சிகளின், ரவுடிகளின் மிரட்டல்களால் பாராளுமன்றத்தில் (2007) அழுதுள்ளார் என்பது பலருக்குத்தெரியாதது.
அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், அவரது ஆசிரமத்துக்கு மிரட்டல், சேதம் என்று அவரைக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள்.
இதையெல்லாம் அழுதுகொண்டே பாராளுமன்றத்தில் பேசிய போது சபாநாயகர் ஆறுதல்படுத்தினார்.
யோகியால் ஏற்பட்ட மாற்றம்
யோகியின் நிர்வாகத்தாலும் மத்திய அரசின் உதவியாலும் உத்தரப்பிரதசம் இதுவரை கண்டிராத வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இதைத்தான் ‘டபுள் எஞ்சின்‘ அரசாங்கம் என்று கூறி வருகிறார்கள்.
ஏழை மக்களுக்குக் கொடுத்த பணமில்லா உணவுப்பொருட்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது, தற்போதும் தொடர்ந்து வருகிறது.
முன்னர் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து இருந்தது ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டு வருகிறது.
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை நேரடியாகவோ மறைமுகமாகவோ கிடைக்கிறது.
இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் செய்த சொதப்பல்களையும் யோகி கணக்கில் எழுதித் தமிழக ஊடகங்கள் அவரை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
சுதந்திரம் அடைந்ததிலிலிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்தை முன்னேற்றாமல், மக்களை முட்டாள்களாக, வன்முறையாளர்களாக வைத்து இருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தவறுகளும் யோகி கணக்கில் எழுதப்படுகிறது.
யோகி ஆட்சியில் தான் உத்தரபிரதேச மக்கள் வளர்ச்சி என்றால் என்ன? வாழ்க்கை தரம் என்றால் என்ன? என்பதையே உணர்ந்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசம் பண்டைய காலத்தில் மிகவும் சிறப்பு பெற்ற பகுதியாக இருந்தது ஆனால், மொகலாயர்கள் படையெடுப்பு, ஆங்கிலேயர்கள் ஆதிக்கம், சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தில் சீரழிந்து விட்டது.
வாய்கிழிய சமூகநீதி பேசுபவர்கள் தான், முன்னேற்றமடையாத மக்களை, அவர்களின் அறியாமையை கிண்டலடித்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. கிண்டலடித்தவர்கள் அன்று வாய் மூடி இருப்பார்கள்.
கேங்ஸ்டர்கள்
உத்தரப்பிரதேசத்தில் இதுவரை நாம் கேள்விப்படாத ஒரு விஷயம் உள்ளது. அங்கு முஸ்லீம் மற்றும் பிராமின் கேங்ஸ்டர்கள் அதிகம் உள்ளனர்.
முஸ்லிம்கள் குற்றச்செயல்களாகப் பெரும்பாலும் செய்திகளில் காண்பது, தங்கம், போதை பொருட்கள் கடத்தும் போது சிக்கினார்கள் என்பதைத்தான் ஆனால், இங்கோ கேங்ஸ்டர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் (உடல்பலத்தில்) சாதுவாக அறியப்படும் பிராமின்களும் ரவுடிகளாகவும், கேங்ஸ்டர்களாகவும் இங்கே உள்ளனர்.
இவர்கள் கடந்த ஆட்சிக்காலங்களில் ஆட்சியாளர்கள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன.
அதிரடி சோதனை நடத்தப்பட்டுப் பல ஆயிரம் கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரானவரா?
யோகி ஒரு இந்துத்வா நபர் என்பது அனைவரும் அறிந்தது. ஒரு துறவியாக கருதப்பட்டாலும், Aggressive ஆன நபராகவே உள்ளார்.
இதுவரை வாக்கரசியலால் அரசியல்வாதிகள் தயங்கிய இடங்களில் தைரியமாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கிறார்.
மேற்கூறியது போலப் பல கேங்ஸ்டர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது முஸ்லிம்கள் மீதான நடவடிக்கையாகச் செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும் விமர்சனங்கள் இருக்கவே செய்கிறது. அதில் சில உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம்.
மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு முஸ்லீம் பெண்களின் ஆதரவு யோகிக்கு கிடைத்துள்ளது. இதனாலே முஸ்லீம்கள் அதிகமுள்ள இடங்களிலும் வெற்றி பெற்று வருகிறார்.
வெளிப்படையாகவே முஸ்லிம்கள் பலர் யோகியை ஆதரிக்கின்றனர். ஆதரித்தலால், சிலர் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.
கொடுங்கனவு
மத ரீதியாகப் பிரச்சனை ஏற்படுத்துபவர்களுக்கு யோகி சிம்ம சொப்பனமாக உள்ளார். வன்முறையில் ஈடுபட்டால், முதலில் வருவது புல்டோசர் தான்.
எனவே, தற்போது மதரீதியிலான குற்றங்கள் புல்டோசர் பயம் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பெருமளவு குறைந்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு சமூகத்தளங்களில் ஒரு காணொளி (Few moments later) பிரபலமாக இருந்தது.
அதாவது, போராட்டத்தில் காவலரைத் தாக்கிய ரவுடி கண்டுபிடிக்கப்பட்டுப் பொளக்கப்பட்டுச் சாலையில் அழைத்து வருவது.
மற்றவர்களைத் திருப்தி செய்ய நடவடிக்கை எடுக்கத் தயங்காமல் தவறு செய்பவர்களுக்குக் கொடுங்கனவாக யோகி உள்ளார்.
கேங்ஸ்டர்கள், பொறுக்கிகள், மத ரீதியிலான பிரச்சனைகளைச் செய்து வந்தவர்கள், பெண்களை இழிவுபடுத்தியவர்கள் அனைவரும் கதிகலங்கியுள்ளனர்.
ஒரு பெண்ணை இழிவுபடுத்திப் பேசினார் என்று பாஜக தலைவரின் ஆக்கிரமிப்பு கட்டடமும் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. யாராக இருந்தாலும் தண்டனை உறுதி.
கடல் போக்குவரத்து
உத்தரப்பிரதேசம் பெரியளவில் வளர்ச்சி பெறாததற்கு அங்கு நிலவிய அரசியல் சூழல், பிற்போக்கு எண்ணம், சாதி மத மோதல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு எனக் காரணங்கள் இருந்தாலும், முக்கியக்காரணங்களில் ஒன்று அங்கு கடல் இல்லாதது.
இதனாலே அங்கு நிறுவனங்கள் தொடங்க பலரும் விரும்புவதில்லை. காரணம், உற்பத்தி செய்த பொருட்களை அனுப்புவதில் அதிகச் செலவானதே காரணம்.
கடல் போக்குவரத்து இருந்தாலே, மற்ற நாடுகளுக்கு உற்பத்தி செய்த பொருட்களை குறைவான செலவில் எளிதாக அனுப்பலாம்.
தமிழக வளர்ச்சியில் கடல் போக்குவரத்தும் ஒரு முக்கியக் காரணம்.
தேசிய நெடுஞ்சாலைகள்
இதனால், தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கக் கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கு மத்திய அரசு உதவியதாலும், மாநில அரசு துடிப்பாக பணிபுரிந்ததாலும் ஏராளமான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.
எவ்வளவு வேகமாகப் பணி புரிகிறார்கள் என்பதற்குச் சிறு எடுத்துக்காட்டு.
2018 ம் ஆண்டு சென்னையில் கோயம்பேடு 1.7 கிமீ மேம்பாலம் துவங்கப்பட்டது அதே 2018 அக்டோபரில் உத்தரப்பிரதேசத்தில் 340 கிமீ தொலைவுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலை துவங்கப்பட்டது.
இரு பணிகளும் முடிந்தது 2021 ல். ஒரு பக்கம் 1.7 கிமீ. இன்னொரு பக்கம் 340 கிமீ.
340 கிமீ தொலைவு நெடுஞ்சாலையில் எவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டு இருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்.
இந்த ஒரு தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்ல கிட்டத்தட்ட 6 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன, 7 அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவும் 2017 க்கு பிறகு நடந்து வருகின்றன.
இவை அனைத்துமே மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் வேகத்துக்கு ஏற்ப மாநில அரசு ஒத்துழைப்பதால், இவ்வளவு விரைவாக நெடுஞ்சாலைகள் அமைக்க முடிகிறது.
மாநில அரசு ஒத்துழைப்பு என்றால், அனைத்துத் துறைகள் அனுமதி, நிலம் கையகப்படுத்துதல் உட்பட அனைத்தையும் விரைவாக முடித்துத் தருதல்.
நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, மெட்ரோ ரயில் அமைப்பதிலும் சாதனை செய்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளின் மாநிலமாக உத்தரப்பிரதேசம் திகழ்கிறது.
சுற்றுலாத்துறை
சுற்றாலத்துறையில் உத்தரப்பிரதசம் இரண்டாம் இடத்தில் உள்ளது, முதலிடம் தமிழகம்.
2024 வருடம் ராமர் கோவில் திறக்கப்பட்டு விடும் மற்றும் கவனிக்கப்படாமல் விடப்பட்ட சில பண்டைய கோவில்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மோடி (வாரணாசி MP) தனது தேர்தல் வாக்குறுதியில் (2019) கூறியபடி மிகக்குறைந்த காலத்தில் காசியை மறு சீரமைப்புச் செய்து விட்டார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்குள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கி நிலத்தையையும் கையகப்படுத்தி, வழக்குகளால் தாமதமாகாமல் கோவிலையும் புதுப்பித்துள்ளார்கள்.
2700 சதுர அடியில் இருந்த கோவில் 5,00,000 சதுரடியாக விரிவுபடுத்தப்பட்டது. விரிவாக்கத்தின் போது மறைந்து இருந்த புதிய கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது இங்கே சுற்றுலா பயணியர் அதிகரித்து விட்டனர். 2022 ல் மிகச்சிறப்பாகத் தமிழ் சங்கமம் காசியில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஆன்மீகப் பகுதிகளையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது. புதிய விமான நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
2025 / 2026 ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் சுற்றுலாவில் முதலிடத்தைப் பெறுவதற்கு 100% வாய்ப்புகள் உள்ளன.
தொழில் நிறுவனங்கள்
தொழில் நிறுவனங்களை உத்தரப்பிரதேசத்தில் அமைக்கக் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
எனவே, புதிய முதலீடுகள் வந்துகொண்டுள்ளன. இதனால், உத்தரப்பிரதேசம் பெரியளவில் மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
சமீபத்தில் சென்னையில் முதலீடு கூட்டம் நடத்தி ₹10,000 கோடி முதலீடுகளைப் பெற்று சென்றுள்ளார்கள். இது பற்றித் தமிழக ஊடகங்கள் பேசவே இல்லை.
தமிழகத்தில் வடக்கன்ஸ் அதிகரித்து விட்டார்கள் என்று இங்கே பலர் புகார் கூறி வருகிறார்கள்.
ஆனால், இன்னும் 10 வருடங்கள் யோகி ஆட்சி தொடர்ந்தால், வடக்கன்ஸ் பலரும் தமிழகம் வருவதைத் தவிர்த்து அங்கேயே இருந்து விடுவார்கள்.
தமிழகத்தின் வேலை வாய்ப்புகள் காரணமாகவே பலரும் தமிழகத்துக்கு வருகிறார்கள் ஆனால், உத்தரப்பிரதேசத்திலேயே கிடைத்தால், அங்கேயே பணி புரியவே விரும்புவார்கள்.
அந்நேரத்தில் வடக்கன்ஸ் இல்லாமல் தமிழகம் பிரச்சனையில் இருக்கும்.
யோகி ஆட்சி
தற்போது மக்கள் யோகி ஆட்சியை விரும்புகிறார்கள். காரணம் சட்ட ஒழுங்கு மற்றும் மாநில வளர்ச்சி.
கடந்த வருடங்களில் உத்தரப்பிரதேசத்தை வைத்து ஏராளமான குற்ற சம்பவங்கள் செய்திகளில் வரும் ஆனால், தற்போது குறைந்துள்ளது.
இதுவரை அங்கு நடந்துவந்த சீரழிவுகள் ஓரிரு வருடங்களில் சரியாகாது. இவை மாற இன்னும் 10+ வருடங்களுக்கு மேல் ஆகலாம்.
ஆனால், மாற்றங்களைக் கண்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாகக் குற்றங்களுக்குத் தண்டனை நீதிமன்றங்களையும் தாண்டிக் கிடைக்கிறது. எனவே, மக்களும் ஆட்சிக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள்.
ஏராளமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்கள்.
யோகி மிகச்சிறந்த ஆட்சியைக் கொடுத்து வருகிறார். இவர் ஆட்சி மேலும் 10 வருடங்கள் தொடர்ந்தால், உத்தரப்பிரதேசம் கற்பனை செய்ய முடியாத வளர்ச்சியை அடையும்.
பாஜகவிலேயே யோகி அல்லாமல் வேறொருவர் வந்து இருந்தால், இந்த அளவுக்கு உத்தரப்பிரதசம் வளர்ச்சி பெற்று இருக்குமா என்றால், சந்தேகமே!
ஆனால், தமிழக ஊடகங்களும், எதிர் கட்சிகளின் ஆதரவாளர்களும் இவர் சாதனைகளை, செய்து வரும் மாற்றங்களை அறியாமல் கிண்டலடித்து வருகிறார்கள்.
இரு முறை முதலமைச்சரானவர் யோகி ஆனால், அவரது சகோதரி சிறு கடை வைத்து இன்னமும் சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார்.
அதிரடியாக செயல்படும் யோகி, காவியில் ஒரு காக்கி என்பதில் சந்தேகமில்லை.
பின்குறிப்பு
உத்தரப்பிரதேத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் என்ன என்பதை மாநில அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
அருமையான பதிவு கிரி
யோகி ஆதியநாத் ஆட்சியிலும் குறைகள் இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் அவரின் நோக்கத்தை கொச்சைப்படுத்துவதையும் அவரை ஏதோ தீவிர மதவாதி போல சித்தரிப்பதையும் திராவிட கட்சிகள் மற்றும் திராவிட ஆட்சியின் அடிமையாக வாழும் நடிகர் நடிகைகள அவ்வப்போது வந்து கூவி விட்டு போகிறார்கள்
ஆனால் யோகி ஆட்சியில் உபி மக்களுக்கு கிடைத்திருக்கும் நலன்கள் இது வரை காணாதது 2024 யிலும் யோகி மற்றும் மத்தியில் மோடி ஆட்சியே
உபி இந்தியா வளர்ச்சியை நோக்கி வீறு நடை போடுகிறது. Jai Hind
@விஜய்
குறைகள் இல்லாத, பிரச்சனைகள் இல்லாத ஆட்சியை எந்த நபராலும் நடத்த முடியாது.
ஒட்டுமொத்தமாக ஒருவர் ஆட்சி எப்படி நடத்துகிறார் என்று தான் பார்க்கணுமே தவிர, ஒவ்வொரு குறைக்கும் ஆட்சி சரியில்லை என்றால், எவருமே ஆட்சியாளாரா இருக்க முடியாது.
யோகி தீவிர இந்துத்வா தான் ஆனால், அவரிடம் அல்லது மாநிலத்துக்கு, நாட்டுக்கு, மதத்துக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
சில நேரங்களில் அப்பாவிகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதை சரி செய்து கொள்ள வேண்டும்.
யோகி ஆட்சியில் உபி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது ஆனால், இங்குள்ளவர்கள் இன்னமும் எதுவுமே தெரியாமல் அவரைக் கிண்டலடித்து வருகிறார்கள்.
தமிழகத்தை உபி மிஞ்சி விட்டது என்ற செய்தி வரும் போது தான், இவர்கள் தவறை உணர்வார்கள்.
100 சதவீதம் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன் Giri.
என்னுடைய ஆதங்கம் அல்லது கோபம் என்னவென்றால் எதற்காக மோடி மற்றும் யோகி மீது வன்மத்தை கொட்டுகிறார்கள்.
இவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்று தெரியாமல் இன்னமும் ஒரு தரப்பினர் அவர்கள் இருவரையும் மதவாதிகள் என்று குற்றம்சாட்டுகிறார்கள் என்பதே.
இந்த அறிவிலிகளுக்கு இவர்கள் இருவரும் பல தரப்பு மதத்தை சேர்ந்தவர்கள் ஓட்டு போட்டு ஜெயித்திருக்கிறார்கள் என்று
உணராமல் இருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது