கோபிசெட்டிபாளையம் 2023

3
கோபிசெட்டிபாளையம் 2023

பொங்கலுக்காக ஒரு வார விடுமுறை வழக்கம் போல இல்லாமல் சரியான அளவில் இருந்தது. ஒரு சில வேலைகளைச் செய்ய முடியவில்லையென்றாலும் அது என் திட்டமிடுதலில் ஏற்பட்ட தவறே. Image Credit

பயணக்குறிப்புகள்

ஊருக்குச் சென்றால் முன்பு போலப் பயணக்குறிப்புகளை எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன்.

காரணம், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அனுபவங்களாக இருப்பதால், படிப்பவர்களுக்குச் சுவாரசியம் இருக்காது என்பதே காரணம்.

எனவே, வருடத்துக்கு ஒருமுறை பொங்கலுக்கு ஊருக்குச் சென்று வரும் போது எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இதிலும் கிட்டத்தட்ட பழைய தகவல்கள் இருக்கும் என்றாலும், முடிந்தவரை புதிய தகவல்களை எழுத முயற்சிக்கிறேன்.

கோபி

எப்படியிருந்த கோபி யார் கண் பட்டதோ கண்டம் ஆகி இருக்கிறது.

கோபி என்றாலே தரமான, சுத்தமான சாலைகள் தான் பிரபலம் ஆனால், தலைகீழாகச் சமீப வருடங்களில் மாறி விட்டது.

கொடூரமான சாலைகளாக உள்ளது. இது போதாது என்று கோபி குடியிருப்புப் பகுதி முழுக்க ஜல் ஜீவன் திட்டத்துக்காகச் சாலை நடுவே குழி தோண்டி இருப்பதால், அதை Patch Work பண்ணாமலே இருக்கிறார்கள்.

செய்து இருந்தால், மேடாக உள்ளது.

கார்களில் செல்பவர்களுக்குப் பெரியளவில் தெரியாது ஆனால், இரு சக்கர வாகனங்களில் செல்வர்களுக்கு spinal cord பிரச்சனை வந்தாலும் வியப்பில்லை.

குப்பையாக, மணலாக உள்ள கோபியைப் பார்க்கவே ரத்தக்கண்ணீர் வருகிறது. நகராட்சி என்ன செய்கிறது என்றே தெரியவில்லை!

செங்கோட்டையன் பெயருக்குத் தான் MLA, கோபியையே மறந்து பல காலங்களாகி விட்டது. எந்தப் புதிய திட்டங்களும் 10 வருடங்களாக இல்லை.

மனசாட்சியே இல்லாமல் கண்டுகொள்ளாமல் உள்ளார். இவருக்கே வாக்களித்துள்ளேன், அடுத்த முறை இவருக்கும் இல்லை, திமுகக்கும் இல்லை.

ஈரோடு சத்தி சாலை

ஈரோடு சத்தி சாலையை நான்கு வழிப்பாதையாக்கி வருகிறார்கள். இன்னும் ஒரு வருட பணி ஈரோடு – கோபி வழியில் உள்ளது.

கோபி – சத்தி வழி இரு வருடங்களுக்கு மேலாகும்.

நகரத்தின் முக்கியப் பகுதியான, இதயமான டவுன்ஹால் பிரியாணி உணவகத்துக்கும் ஈபீஸ் கடைக்கும் இடைப்பட்ட சாலையை வாக்கு அரசியல் காரணங்களால் அகலமாக்காமல் தவிர்த்து விட்டார்கள்.

நிச்சயம் இந்தப்பகுதி மட்டும் போக்குவரத்து நெரிசல் ஆவது உறுதி. இதையும் அகலமாக்கி இருந்தால், போக்குவரத்துக்கு எளிதாக இருந்து இருக்கும்.

மேலே உள்ளது பழைய படம், இடது புறம் உள்ள மரங்கள் எதுவுமே தற்போது இல்லை, கடைகளாகி விட்டது.

பாரியூர்

பொங்கல் நேரத்தில் வழக்கமாக வரும் பாரியூர் கொண்டத்து காளியம்மன் தேர் திருவிழாக்கு பசங்க கூடச் சென்று வந்தேன். கூட்டம் காரணமாகக் கோவிலுக்குச் செல்லவில்லை.

கடைகளுக்குக் கட்டணத்தொகை / ஏலத்தொகை ஏகத்துக்கும் ஏற்றி விட்டார்களாம்.

ஒரு விளையாட்டுக்கு ₹100 கேட்டதால், கட்டுபடியாகாது என்று இரு ரைடு மட்டும் சென்றோம். அதிகக் கட்டணத்தால், பசங்களே வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

கொரானா காரணமாகக் கடந்த வருடங்களில் விழா நடத்த முடியாததால், கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூட்டம் அதிகமிருந்தது.

கேரளா குலுக்கி என்று ஜூஸ். தகர மேசையில் அடித்து மேலே பறக்க விட்டு (Bar ல செய்வது போல) ஜூஸ் போட்டுத் தந்தார்கள், நன்றாக இருந்தது.

Zomato

கோபியில் Zomato வந்து விட்டது என்பதை நம்ப முடியவில்லை. யார் ஆர்டர் செய்கிறார்கள்?! சென்னை போலச் சுற்றிக்கொண்டே உள்ளார்கள்.

கோபியில் எல்லாமா தொடர்ந்து ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள்! என்று உள்ளது. ஒன்றும் சொல்வதற்கில்லை.

உணவகங்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து விட்டது. எப்படிக் கூட்டம் போகிறது? எப்படி நடத்துகிறார்கள்? என்று புரியவில்லை.

மண்ணின் மைந்தர்கள்

கோபியில் மண்ணின் மைந்தர்கள் குறைந்து வருகிறார்கள் என்பது புதிய நபர்கள் நடமாட்டங்களைக் காணும் போது புரிகிறது.

என்னைப்போலப் பலர் சென்னை, பெங்களூரு, வெளிநாடு என்று உட்கார்ந்து கொண்டு இதைக்கூற வருத்தமாக உள்ளது, இருப்பினும் கூறாமல் இருக்க முடியலை.

பெரும்பாலான கடைகள் கொங்கு அல்லாத வெளி மாவட்டத்தினரே வைத்துள்ளார்கள்.

கோபி ஒரு அமைதியான, தொழில் செய்யச் சிறந்த இடம் என்பதாலையே பலரும் இங்கே வருகிறார்கள். இதனால் மகிழ்ச்சி வருத்தம் இரண்டுமே உள்ளது.

மகிழ்ச்சி கோபி வளர்கிறதே என்று உள்ளது, வருத்தம் இப்படி கோபியின் அடையாளம் தொலைந்து வருகிறதே என்று உள்ளது.

கொங்கு வழக்கில் பேசுபவர்களே குறைந்து விட்டார்கள்.

கோபியை மிக நேசிக்கிறேன்.

காஸ்மோபாலிடன் க்ளப்

சென்னையின் பழம் பெருமைகளில் ஒன்றான காஸ்மோபாலிடன் க்ளப் கோபியிலும் உள்ளது.

இங்கே உறுப்பினராகச் சேர வேண்டும் என்பது சிறு வயது விருப்பம். சிறு வயதில் அப்பா மற்றும் உறவினருடன் சென்று வந்ததிலிருந்து ஒரு காதல்.

முன்பு உறுப்பினராக ₹2000 என்று இருந்தது என்று கூறப்பட்டது தற்போது வைப்புத்தொகை ₹1,00,000 ஆகி விட்டதாம்.

பணம் கொடுத்தால் மட்டும் அனைவரும் உறுப்பினராகி விட முடியாது, அங்குள்ள உறுப்பினர்கள் அனுமதித்தால் மட்டுமே முடியும்.

பணிக்காலம் முடிந்தால் கோபி தான் என் வாழ்க்கை என்று தீர்மானமாக இருப்பதால், இதற்காகப் பணம் சேர்த்தவுடன் இணைந்து விட முயற்சி எடுத்து விடுவேன் 🙂 .

அதோடு காஸ்மோபாலிடன் க்ளப் என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் உள்ளது.

திருமணம்

முன்பு பெண்கள் குறைவாக இருந்தார்கள் என்று திருமணத்துக்குப் பெண்கள் கிடைப்பது பிரச்சனையாக இருந்தது ஆனால், தற்போது ஆண்கள் குறைவு, பெண்கள் அதிகரித்து விட்டார்கள்.

ஆனாலும், பெண் கிடைப்பதில்லை.

இது பெரிய உளவியல் மற்றும் சமூக சிக்கல்கள். எனவே, பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

புதிய கடைகள்

கோபியில் பெரிய நகரங்களில் உள்ள கடைகள் கூட வந்து விட்டன. Max, Specsmakers என்று ஏராளமான கடைகள் வந்து விட்டன.

Black Pekoe என்ற chain காஃபி கடை வைர விழா பள்ளி அருகே வந்துள்ளது.

எப்போதும் கூட்டம். அக்கா பையன் சொன்னான் என்று சென்று வந்தேன், கட்டணமும் (₹10) குறைவு (பின்னர் உயர்த்தப்படலாம்), சுவையும் அதிகம்.

கோபியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான CKS பங்களா (நாட்டாமை, சின்னத்தம்பியில் வரும் வீடு) பகுதியில் பிரபல நகைக்கடையான டாடா நிறுவனத்தின் Tanishq வருகிறதாம்.

எங்கள் பகுதியைச் சுற்றி ICICI வங்கி, பெட்ரோல் நிலையம், சூப்பர் மார்க்கெட், பழமுதிர் நிலையம், காய்கறி சந்தையென அனைத்துமே இருப்பது எளிதாக உள்ளது.

UPI

ஏற்கனவே கூறி இருந்தேன், எங்க வீட்டின் அருகே உள்ள ஒரு பால் தயிர் கடையில் UPI இல்லை.

வழியில் அம்மா அழைத்து வாங்கி வரக்கூறினார்கள் என்று சென்றேன். வேட்டி கட்டியிருந்ததால், பர்ஸ் எடுத்து வரவில்லை.

Google Pay இருக்கிறதா என்று கேட்டவுடன், இல்லை என்று கூறி விட்டு நான் திரும்பிய பிறகு அங்கே இருந்த இன்னொரு பெண் வாடிக்கையாளரிடம் எதோ கூறி சிரித்தார்.

இவர் ஒரு நாள் UPI கண்டிப்பாக வைக்கத்தான் போகிறார் அன்று நான் சிரித்து விட்டு வருகிறேன் 🙂 .

UPI யைத் தள்ளிப்போடலாம் ஆனால், எதிர்காலத்தில் தவிர்க்க முடியாது. கோபியில் பெரும்பாலான கடைகளில் UPI வைத்துள்ளது வசதியாகவுள்ளது.

இலந்தை வடை

இலந்தை பழம் கிடைப்பதே அரிதாகி வருகிறது. எப்படியோ கிடைத்து அக்கா தயார் செய்து வைத்துள்ளார்கள். காய்ந்த பிறகு சென்று எடுத்து வர வேண்டும் 🙂 .

பல கடைகளில் தற்போது ரெடிமேடாகக் கிடைக்கிறது. மார்க்கெட் பகுதி மீரா கடையில் உள்ள வடை நன்றாக இருந்தது.

இலந்தை பழ வாசனையே கிறுகிறுக்க வைத்து விடும். புதியவர்கள் பலருக்கு பிடிக்காதது எனக்கு வசதி, யாரும் பங்குக்கு வர மாட்டார்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரை

இலந்தை வடை சாப்பிட்டு இருக்கீங்களா?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. பயணக்குறிப்புகள்: எனக்கு அப்படி தோன்றவில்லை கிரி.. காரணம் நீங்கள் பயணம் குறித்த கட்டுரையை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தான் எழுதுறீங்க..

    கோபி : அடிப்படையில் எல்லா ஊருக்கும் சில சிறப்புகள் இருக்கும்.. நான் கோவையிலும் அதை சுற்றியும் பயணித்த காலத்தில், எங்கள் பகுதியும், உங்கள் பகுதியும் முற்றிலும் இருவேறான துருவங்கள்.. அழகி படம் எடுத்து எங்கள் ஊரில் இருந்து 4 / 5 கிலோமீட்டர் தொலைவு தான்..

    ஈரோடு சத்தி சாலை : நான் இந்த சாலையில் முன்பு பயணித்து இருக்கிறேன்.. ஆனால் பெரும்பாலும் இரவு நேர பயணம் என்பதால், தூக்கத்திலே பயணிப்பது உண்டு.

    பாரியூர் : இதுவரை நான் சென்றது இல்லை.. காந்தார படத்தில் ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் எப்படி மாற்றம் அடைகிறது என்பதை மிகவும் அழகாக காட்டி இருப்பார்கள்.. படத்தின் காட்சிகளை நன்றாக கவனித்தால் மாற்றங்கள் எல்லாம் தெளிவாக புரியும்.

    Zomato : கிரி, பல ஆண்டுகளுக்கு முன் குடிநீரை பாட்டிலில் அடைத்து coke நிறுவனம் விற்கும் போது, எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக இருக்கும்.. இதை யவன்டா வாங்கி குடிக்க போறேன் என்று.. ஆனால் சில ஆண்டுகளிலே நிலைமை தலைக்கீழ்.. கிட்டத்திட்ட zomoato வும் அப்படி தான்..

    மண்ணின் மைந்தர்கள் : இந்த பிரச்சனை பரவலாக எல்லா இடங்களிலும் உண்டு.. (என்னைப்போலப் பலர் சென்னை, பெங்களூரு, வெளிநாடு என்று உட்கார்ந்து கொண்டு இதைக்கூற வருத்தமாக உள்ளது, இருப்பினும் கூறாமல் இருக்க முடியலை.) உண்மை இது தான்.. பாண்டவர் பூமி படம் சரியான உதாரணமாக இருக்கும்..

    காஸ்மோபாலிடன் க்ளப் : நீங்கள் சிறு வயதிலிருந்து ரசித்து இருப்பதால் இந்த ஆர்வம் உங்களுக்கு வந்து இருக்கும்.. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எப்போதும் இல்லை.. ஆனால் முதுமையிலும் உடல் ஒத்துழைக்கும் வரை விளையாடி கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

    திருமணம் : தற்போதை தலைமுறையினர்க்கு ஒரு சிக்கலான பிரச்சனை.. இவர்களை விட கூடுதல் சுமை பெற்றோர்க்கு இருப்பதாக நினைக்கிறேன்..

    புதிய கடைகள் : வரவேற்க தக்க ஒன்று.. நாம் விரும்பினாலும் விரும்பா விடினும் மாற்றங்கள் ஏற்பட்டே தீரும்..

    UPI : இன்னும் வெகு விரைவில் UPI பால், தயிர் கடையில் வந்து விடும்.. அப்போது உங்களை எதிர் கொள்ள அந்த பெண்கள் தயங்குவார்கள்.. அது மட்டுமில்லாமல் உங்களை ஒரு தீர்க்கதரிசி என எண்ணுவார்கள்..

    இலந்தை வடை : இது வரை நான் சாப்பிட்டதில்லை.. சிறு வயதில் எலந்தம்பழம் ஊறுகாய் ஒன்று கடையில் விற்கும்.. அதை விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன்.. நொறுக்கு தீனி எனக்கு பிடிக்கும்.. எனக்கு விருப்பமான பலகாரம் என்றால் பொருளுங்கவுண்டை (எங்கள் பகுதில் அழைப்பது) மற்றும் சிம்பிளியுண்டை..

    அதிரசமும் ரொம்ப பிடிக்கும்.. எதிர்வீட்டில் கொடுக்கும் கொழுக்கட்டை அருமையாக இருக்கும்.. இதெல்லாம் சாப்பிட்டு பல வருடம் ஆகிவிட்டது.. இந்த பேர் எல்லாம் என் மனைவிக்கு என்னவேன்றே தெரியாது.. எங்க பாட்டி தான் பக்குவமாக செய்வார்கள்.. அதெல்லாம் ஒரு காலம்.. மீண்டும் திரும்பாது..

    (இலந்தை பழ வாசனையே கிறுகிறுக்க வைத்து விடும். புதியவர்கள் பலருக்கு பிடிக்காதது எனக்கு வசதி, யாரும் பங்குக்கு வர மாட்டார்கள்..) செம்மை டெக்னிக்.. அதுவும் குறிப்பாக மாநகரத்து மக்களுக்கு.. பொருளுங்கவுண்டையிலும் இந்த சிறப்பு இருக்கிறது.. பல்லு சரியில்லனா ஒரு பய இதை கடிக்க முடியாது..

    நமக்கு அந்த பிரச்சனை இது வரை இல்லை.. (நம்மெல்லாம் சின்ன வயசுல ஊருல இருக்குற எல்லா பம்பரத்துக்கும் பல்லாலே ஆணி புடுங்கி கொடுத்தவங்க!!!)

  2. @யாசின்

    “எனக்கு அப்படி தோன்றவில்லை கிரி.. காரணம் நீங்கள் பயணம் குறித்த கட்டுரையை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தான் எழுதுறீங்க..”

    எனக்கென்னவோ ஒரே மாதிரி வருவது போல இருப்பதால் எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றுவதில்லை.

    எனக்கு திருப்தி அளித்தால் மட்டுமே எழுதுவேன்.

    “நீங்கள் சிறு வயதிலிருந்து ரசித்து இருப்பதால் இந்த ஆர்வம் உங்களுக்கு வந்து இருக்கும்.. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எப்போதும் இல்லை.”

    க்ளப் என்றால், சரக்கு, சீட்டு என்று எண்ணத்தில் அல்ல.

    இங்கே உடற்பயிற்சி, நடைப்பயணம் செய்ய இடமுள்ளது. விளையாட்டுகள், செய்தித்தாள்கள் உள்ளது. ஓய்வெடுக்க இடமுள்ளது.

    நான் இங்கே சென்று 30 வருடங்களுக்கு மேல் இருக்கும். தற்போது எப்படியுள்ளது என்று தெரியவில்லை.

    “தற்போதை தலைமுறையினர்க்கு ஒரு சிக்கலான பிரச்சனை.. இவர்களை விட கூடுதல் சுமை பெற்றோர்க்கு இருப்பதாக நினைக்கிறேன்..”

    குறிப்பாக பசங்க உள்ள வீட்டினருக்கு பெரிய பிரச்சனை.

    “தற்போதை தலைமுறையினர்க்கு ஒரு சிக்கலான பிரச்சனை.. இவர்களை விட கூடுதல் சுமை பெற்றோர்க்கு இருப்பதாக நினைக்கிறேன்..”

    🙂 கண்டிப்பா வரும். சந்தேகமே இல்லை.

    “நம்மெல்லாம் சின்ன வயசுல ஊருல இருக்குற எல்லா பம்பரத்துக்கும் பல்லாலே ஆணி புடுங்கி கொடுத்தவங்க!”

    😀

    • க்ளப் என்றால், சரக்கு, சீட்டு என்று எண்ணத்தில் அல்ல. புரிந்து கொள்ள முடிகிறது கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!