தினமலர் நாளிதழ் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் மற்றவர்களைப் போலவே எனக்கும் உண்டு. ஆனாலும் பல காலமாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
தினமலர் நாளிதழ்
இவர்கள் மீது என்ன விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் இவர்களின் தண்ணீர் பற்றிய அக்கறையின் மீது எவரும் குறை காண முடியாது.
தண்ணீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் தரும் செய்திகள் பாராட்டத்தக்கவை.
தினமலரை படித்து வருபவர் என்றால், நிச்சயம் இவர்களின் தண்ணீர் மீதான அக்கறையை உணர்ந்து இருப்பீர்கள். தற்போது பிரச்சனைகள் அதிகரித்து இருப்பதால், அடிக்கடி நீங்கள் இது தொடர்பான செய்திகளைக் கண்டு இருக்கலாம்.
தற்போது மட்டுமே வந்த மாற்றமல்ல, பல வருட வாசகன் என்ற முறையில் இவர்கள் துவக்கத்தில் இருந்தே, நீர் நிலை ஆக்ரமிப்பு, பாதுகாப்பு, தூர்வாருதல், மரக்கன்று நடுதல் என்று தொடர்ச்சியாகக் கூறி வந்துள்ளார்கள் என்று உறுதியாகக் கூற முடியும்.
விழிப்புணர்வு
தற்போது தண்ணீருக்கான விழிப்புணர்வை, இளைஞர்கள் முயற்சியை, பொதுமக்கள் / தன்னார்வலர்கள் எடுக்கும் நடவடிக்கைளை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் இதற்காக ஒரு இயக்கம் கூட ஆரம்பித்து, வாசகர்களை, ஏரி குளங்களை மீட்க ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
ஆக்ரமிப்புச் செய்பவர்களைப் படத்துடன் செய்தி வெளியிட்டு அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தார்கள்.
காஞ்சிபுர மாவட்டத்துக்கு உட்பட்ட ஏரியில் மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்தும் அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரி அனுமதி கொடுக்காமல் பிரச்சனை செய்கிறார் என்று அவர் குறித்துத் தகவல்களை வெளியிட்டார்கள்.
தனித்தன்மை
நீர் நிலைகள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டால் அதைப் படத்துடன் செய்தி வெளியிடுகிறார்கள்.
இது போல நீர் தொடர்பான செய்திகளைத் தினமலர் நாளிதழ் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகிறது.
பல நாளிதழ்களைக் கவனித்து வருபவன் என்ற முறையில் இந்த விஷயத்தில் தினமலர் கிட்ட கூட எவரும் நெருங்க முடியாது என்பதே உண்மை.
அந்த அளவுக்கு இவர்கள் தரும் தண்ணீர் தொடர்பான செய்திகள் உள்ளன.
போராட்டங்கள்
தண்ணீர் தொடர்பாக அரசியல் கட்சிகள் செய்யும் போராட்டங்கள் குறித்த செய்திகளுக்கு மற்ற நாளிதழ்கள் முக்கியத்துவம் கொடுத்து வரும் வேளையில், தினமலர் ஆக்கப்பூர்வமாக நேர்மறையாகச் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எந்த ஏரி மக்களால் புணரமைக்கப்பட்டாலும் அதை ஊக்கப்படுத்த இது பற்றிச் செய்தி வெளியிட்டு அவர்களை உற்சாகப்படுத்துகிறது.
இது பொய்யல்ல, பல வருடங்களாகக் கவனித்து வந்தவன் என்ற முறையில் உறுதியாகக் கூற முடியும்.
தண்ணீர் என்றல்ல இயற்கை தொடர்பான எந்த நிகழ்வாக இருந்தாலும், ஆதரவை கொடுக்கிறார்கள். சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தைப் பசுமையாக்கும், “வனத்துக்குள் திருப்பூர்” அமைப்பினருக்குக் கொடுத்த ஆதரவைக் கூறலாம்.
பொறுப்பில் உள்ளவர்கள்
பொறுப்பில் உள்ள யாரோ / பலரோ இயற்கை ரசிகனாக நிச்சயம் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இவர்/கள் மூலமாகவே இவ்வளவு செய்திகள் வருகிறது, இல்லையென்றால், தொடர்ச்சியாக வர வாய்ப்பே இல்லை.
இயற்கையை நேசிப்பவர்களாலே அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக எழுத முடியும்.
தினமலரில் வரும் நீர் நிலைகள் தொடர்பான செய்திகளைச் சரி செய்ய மட்டுமே தனி அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தினால், தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல.
இயற்கையின் அதி தீவிர ரசிகனான நான், தினமலரின் இச்சேவையை மனதாரப் பாராட்டுகிறேன்.
மேலும் இது போலச் செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும், மக்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நான் தினசரி செய்தித்தாள்களை வாசிக்க ஆரம்பித்தது தினமணியில் தான்!!! எங்கள் ஊரில் ஒரே ஒரு வீட்டிற்கு (வசதியான வீடு)மட்டும் தினமணி வரும்.. என்னுடைய ஆரம்ப வாசிப்பிப்பிற்கான அச்சாணி இங்கு தான் ஆரம்பித்தது.. தினமலரின் மீது அதிக ஆர்வமில்லை.. ஆனாலும் ஏனோ தினத்தந்தியின் மீது இன்றும் ஆர்வம் இருக்கிறது.. நல்ல செய்திகளை யார் பகிர்ந்தாலும் மகிழ்ச்சியே!!! தினமலருக்கு வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
தினத்தந்தி தினமலர் இரண்டும் விரும்பி படிப்பேன். சில நேரங்களில் கடுப்படிக்கும் செய்திகளும் வரும்.