போராளிகள் என்பவர்கள் யார்?

2
போராளிகள்

போராளிகள் என்ற பதம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. உலகம் முழுக்க அநீதிகளை எதிர்த்து அமைப்புகள் தலைமையில் போராட்டம் நடத்துவார்கள். Image Credit

போராளிகள்

பெரும்பாலும் மக்களுக்கு எதிராக அல்லது மக்களுக்கு விருப்பமில்லா நிகழ்வை, சம்பவத்தை, செயலை, முடிவை எடுக்கும் போது அரசை எதிர்த்துப் போராடுபவர்களைப் போராளிகள் என்பர்.

இவ்வாறு போராடும் மக்கள் ஒரு கட்டத்தில் சலிப்படைந்தாலும், தொடர்ந்து களத்தில் இருப்பவர்களே போராளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

மக்கள் அவர்கள் பகுதி பிரச்சனைகளுக்கு மட்டும் போராடுவார்கள். இவர்கள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பார்கள்.

உலகம் முழுக்கப் போராளிகள் என்பவர்களுக்கு இது தான் அர்த்தம்.

தற்போது இந்த அர்த்தம் பொதுவான பிரச்சனை என்பதைத்தாண்டி உள்நோக்கத்துடன் செய்யப்படும் போராட்டங்களாக ஒரு சார்பாக மாறி விட்டது.

இந்த மாற்றம் உலகம் முழுக்கச் சீராக நடக்கிறது, அளவில் மட்டுமே வேறுபாடு. சில இடங்களில் முழுக்க ஒரு சார்பாகவும், சில இடங்களில் கலந்தும் நடக்கிறது.

தமிழ்நாடு

உலகம் முழுக்க நடப்பதை அப்புறம் பார்ப்போம். தற்போது நம்ம தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? எப்படி மாறியுள்ளது? என்பதைப் பார்ப்போம்.

அன்று நடந்தது ஏன் இன்று நடக்கவில்லை என்பது மட்டுமே இக்கட்டுரையில் கேள்விகளாக உள்ளது.

பிரச்சனை சரியா தவறா என்பது குறித்த கேள்விகளுக்குள் செல்லவில்லை.

அன்று பொங்கிய போராளிகளும், ஊடகங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இன்று ஏன் பொங்கவில்லை என்பதே கேள்வி.

எட்டு வழிச்சாலை

அதிமுக அரசு எட்டு வழிச்சாலையை அமைக்க முயன்ற போது பல்வேறு சுற்றுசூழல் ஆர்வலர்களும், போராளிகளும், தமிழ் இயக்குநர்களும், நடிகர்களும் எதிர்த்தனர்.

ஆனால், இன்று கோவை அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க 3500 ஏக்கர் விவசாய நிலத்தைத் தரிசு நிலங்கள் என்று கூறி அரசு எடுக்கும் போது ஏன் அப்பகுதி மக்களைத் தவிர மற்ற போராளிகள் குரல் கொடுக்கவில்லை?

அத்திக்கடவு திட்டம் கால் நூற்றாண்டைக் கடந்து விவசாயிகள் நிலத்துக்குப் பாசன வசதி பெறும் வேளையில் ஏன் இது போலத் திட்டம்?

எட்டு வழிச்சாலைக்குப் போராடி போராளிகள் இன்று எங்கே போனார்கள்?

சாத்தான் குளம் லாக்கப் மரணம்

சாத்தான் குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் இருவர் இறந்தனர்.

அப்போது குரல் கொடுத்த போராளிகள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் யாருமே சமீபத்தில் லாக்கப்பில் இறந்த மணிகண்டனுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஆக்கிரமிப்பு

கடந்த அதிமுக ஆட்சியில் நீர்வழி ஆக்கிரமிப்புகள் என்று கூறி ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் இடிக்கப்பட்டபோது தமிழ் இயக்குநர்கள், போராளிகள், ஊடகங்கள் சென்னை பூர்வீக மக்களைத் துரத்துகிறார்கள் என்று பொங்கினர்.

ஆனால், தற்போது குளத்தூரில் பாலம் கட்ட வேண்டும் என்று அனுமதிக்கப்பட்ட கெடு முடியும் முன்பே வீடுகளை இடித்தனர்.

இவர்கள் பூர்வீக குடியினர் இல்லையா?!

அங்குள்ள மக்கள் கதறியதை, மக்கள் போராட்டம் “வெடித்தது” என்று கூறாமல் “பரிதவிப்பு” என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்துவதேன்.

மற்ற போராளிகள் எங்கே உள்ளனர் என்றே தெரியவில்லை.

கோவில் சிலை உடைப்பு

சமீபமாகக் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன ஆனால், அரசு தரப்பில் கடுமையான எந்த நடவடிக்கையும் இல்லை.

இதே போல அவமதிப்பு மற்ற மதங்களில் நடந்து இருந்தால், போராளிகள் அமைதியாக இருப்பார்களா? ஏன் யாருமே குரல் கொடுக்கவில்லை?

இந்நிகழ்வு எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் இதே நிலை தான். எந்தப் பிரச்சனைக்குக் கேட்கணும் எதற்குக் கேட்கக் கூடாது என்பதில் போராளிகள் தெளிவு.

மழை வெள்ளம்

2015 ம் ஆண்டில் ஏற்பட்ட பெரு மழை காரணமாகச் சென்னையில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

அப்போது அனைத்து ஊடகங்களிலும் கிழித்துத் தொங்க விட்டனர்.

ஆனால், 2021 மழை வெள்ளத்தில் ஏற்பட்ட கடும் சிரமத்துக்கு ஊடகங்கள் உட்படப் பலர் அமைதி.

மக்கள் தண்ணீரில் குளித்துக் கொண்டாட்டம்! மகிழ்ச்சி!!‘ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர்.

மழை நின்று 10 நாட்களைக் கடந்தும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து இருந்த போது எவரும் கேட்கவில்லையே.

போராளிகள் புயலுக்குப் பின் அமைதி போல இருந்தனர்.

RSS / பாஜகவினர் கொலை

கேரளாவில் மாதம் ஒரு RSS / பாஜகவினர் வெட்டிக்கொலை செய்யப்படுகின்றனர் ஆனால், யாருமே இதற்காகக் குரல் கொடுக்கவில்லை.

இதே போலச் சம்பவங்கள் சிறுபான்மையினருக்கு நடந்து இருந்தால் போராளிகள், ஊடகங்கள், இடது சாரிகள் அமைதியாக இருப்பார்களா?!

குண்டர் சட்டம்

சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக வலது சாரி நபர்கள் மீது குண்டர் சட்டம் போட்டுச் சிறையில் அடைத்துள்ளார்கள்.

கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று கடந்த ஆட்சியில் பொங்கிய ஒருவர் கூடத் தற்போது விமர்சிக்காமல் வாய் மூடி இருக்கின்றனரே!

ஜார்ஜ் பொன்னையா என்பவர் இந்தியாவையும், பாரத மாதாவையும் மிக இழிவாகப் பொது மேடையில் பேசினார் ஆனால், அவரெல்லாம் வெளியே உள்ளார்.

காயத்ரி ரகுராமை காணொளியில் ஆபாசமாகச் சித்தரித்துச் சமூகத்தளத்தில் வெளியிட்டவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழக அரசுக்கு நிதி கொடுத்த இரு YouTuber கள் மீது அண்ணாத்த படத்தை மிக வக்கிரமாகப் பேசியதற்காகப் புகார் கொடுக்கப்பட்டது.

இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இதில் சம்பந்தப்பட்டது பெண்கள் ஆனால், பெண் போராளிகள் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. இச்செயலை கண்டிக்கவில்லை.

இது போல பல சம்பவங்கள் உள்ளன ஆனால், யாருமே கைது செய்யப்படவில்லை.

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை

தற்போது கிட்டத்தட்ட வாரத்துக்கு ஒரு பாலியல் புகார் வருகிறது, சில மாணவிகள் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.

தொடர்கதையாக உள்ளது ஆனால், எந்தக் கடுமையான நடவடிக்கையும் இல்லை.

இந்நிலை தொடர்ந்தால் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்குப் பயம் இருக்காதா?

இதே சம்பவங்கள் போன ஆட்சியில் நடந்து இருந்தால், ஊடகங்கள் எத்தனை விவாதங்களை நடத்தி இருப்பார்கள்!

தற்போது ஒரு விவாதம் கூட நடத்தப்படவில்லையே ஏன்?

PSBB பள்ளி பாலியல் புகாரில் அனைவரும் கொந்தளித்தனர் ஆனால், தற்போது அடிக்கடி நடந்தும் எதுவுமே நடக்காதது போல உள்ளனரே ஏன்?

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

கடந்த ஆட்சி காலத்தில் போராளிகளும், ஊடகங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தனர்.

அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆனால், தற்போது சல்லடை போட்டுத் தேடினாலும் அவர்களைக் காண முடியவில்லை. அனைவரும் எங்கே சென்றார்கள்? தற்போது என்ன செய்து கொண்டுள்ளார்கள்?

மேற்கூறிய சம்பவங்கள் சரியா தவறா என்பது கேள்வியல்ல. அன்று போராட்டம் நடத்தினார்கள், இன்றும் அதே சம்பவம் ஆனால், ஏன் அமைதி?! என்பதே கேள்வி.

போராளிகள் என்றால் உள்நோக்கம் கொண்டவர்கள் என்பதே அர்த்தமாகிறது. இவர்களுக்கு முக்கியம் பிரச்சனையல்ல, யார் செய்கிறார்கள் என்பதே.

போராளிகள் என்ற மதிப்பு மிக்க வார்த்தை தற்போது கேலிக்குரியதாகி மதிப்பிழந்ததற்குக் காரணம் போலி போராளிகளே.

தொடர்புடைய கட்டுரை

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, தமிழ்நாட்டில் போராளிகள் என்று பொது ஊடங்களில் அறியப்படுகிற 70 சதவீத பேர்கள் , போலிகள் தான். போராளிகள் என்ற போர்வையில் தனது சித்தாந்த, சாதி, மத காழ்ப்புகளை பொது வெளியில் கக்குபவர்களே. இவர்கள் ஒரு வகையான மன பிறழ்வானவர்கள். காலை எழுந்தவுடன் நான்கு பேரையாவது குற்றம் சொல்வது, சாபம் விடுவது, தன் சொந்த வாழ்க்கைக்கு கூட பொறுப்பேற்காமல் அனைத்தையும் அரசாங்கத்தை அல்லது தனி மனிதன் மேல் குறை சொல்வது. இது ஒரு மன நோய்.

    நடுநிலை என்று சொல்லி கொண்டு ஒரு பக்கம் அணிசேர்ந்து பணம் வாங்கி கொண்டு வேலை செய்பவர்கள். மெரினா புரட்சியின் போது சில போராளிகளை பின் தொடர்ந்தேன் ஆனால் அவர்கள் தான் யாரென்று சில மாதங்களிலே வெளிப்படுத்திக்கொண்டார்கள். சலிப்பு தான் மிஞ்சியது. போராளிகள் தன்னலத்தை பார்த்து தான் போராட்டங்களை கையில் எடுக்கிறார்கள், சம்பந்த பட்ட நபர்களிடம் பேரமும் பேசுகிறார்கள்.

    எளிய மக்களுக்காக கம்யூனிஸ்ட் தோழர்கள் ஓரளவுக்கு போராட்டங்களை நடத்தி வெற்றியையும் வாங்கி தந்தார்கள். திமுக வுடன் கூட்டணி சேர்ந்தவுடன் எந்த ஒரு எதிர்ப்பும் போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை.

    தமிழக ஊடங்களுக்கு தான் மோதி மற்றும் யோகி ஆதித்யாநாத் இருக்கிறார்களே. அவர்களின் வைத்து சில வருடங்களை கடத்துவார்கள். இந்த ஆட்சியில் நடுநிலை வாதிகள் அடைய போகிற ஆதாயங்களை நாம் பார்க்கத் தான் போகிறோம். அடுத்தவர்களின் மேல் முத்திரை குத்தி தன்னை நடுநிலை என்று சொன்னவர்கள் மேல் அதே முத்திரை விழ தான் போகிறது. காலம் ஒன்றும் அவ்வளவு கருணை கொண்டது அல்ல.

  2. @மணிகண்டன்

    “போராளிகள் என்ற போர்வையில் தனது சித்தாந்த, சாதி, மத காழ்ப்புகளை பொது வெளியில் கக்குபவர்களே. இவர்கள் ஒரு வகையான மன பிறழ்வானவர்கள்.”

    மிகச்சரியாகக் கூறினீர்கள்.

    “காலை எழுந்தவுடன் நான்கு பேரையாவது குற்றம் சொல்வது, சாபம் விடுவது, தன் சொந்த வாழ்க்கைக்கு கூட பொறுப்பேற்காமல் அனைத்தையும் அரசாங்கத்தை அல்லது தனி மனிதன் மேல் குறை சொல்வது. இது ஒரு மன நோய்.”

    மாற்றுக்கருத்தே இல்லை. எதிர்மறை எண்ணங்களைக் கொண்டவர்கள். எதையாவது குறை கூறிக்கொண்டே இருப்பதே இவர்கள் பணி.

    “நடுநிலை என்று சொல்லி கொண்டு ஒரு பக்கம் அணிசேர்ந்து பணம் வாங்கி கொண்டு வேலை செய்பவர்கள்.”

    இது தான் ஆபத்தாக உள்ளது. மக்களும் இது தெரியாமல் ஏமாந்து விடுகிறார்கள்.

    “மெரினா புரட்சியின் போது சில போராளிகளை பின் தொடர்ந்தேன் ஆனால் அவர்கள் தான் யாரென்று சில மாதங்களிலே வெளிப்படுத்திக்கொண்டார்கள். சலிப்பு தான் மிஞ்சியது.”

    எனக்கும் இந்த அனுபவமுண்டு.

    “போராளிகள் தன்னலத்தை பார்த்து தான் போராட்டங்களை கையில் எடுக்கிறார்கள், சம்பந்த பட்ட நபர்களிடம் பேரமும் பேசுகிறார்கள்.”

    இங்கே நடைபெறும் போராட்டங்களில் பெரும்பாலானவை இப்படி தான். இது புரியாத மக்கள் ஏமாந்து நம்பி விடுகிறார்கள்.

    பின்னர் தெரிய வரும் போது காலம் கடந்து விடுகிறது.

    “திமுக வுடன் கூட்டணி சேர்ந்தவுடன் எந்த ஒரு எதிர்ப்பும் போராட்டத்தையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை.”

    கடந்த ஆட்சியில் போராடியவர்கள் பலரை தற்போது காணவில்லை.

    “தமிழக ஊடங்களுக்கு தான் மோதி மற்றும் யோகி ஆதித்யாநாத் இருக்கிறார்களே.”

    திருமா ஒரு மேடையில் பேசும் போது மோடி எதிர்ப்பை நாங்கள் இங்கே கட்டமைத்தோம் என்று கூறுகிறார். அதை ஊடகங்கள் வளர்த்து எடுத்தன.

    அண்ணாமலை வந்த பிறகு பரவாயில்லை.

    “அடுத்தவர்களின் மேல் முத்திரை குத்தி தன்னை நடுநிலை என்று சொன்னவர்கள் மேல் அதே முத்திரை விழ தான் போகிறது.”

    இதை தொடர்ந்து காணும் போது மன உளைச்சல் ஆகிறது. கடந்து சென்று விடுகிறேன் என்றாலும், அவ்வப்போது பார்க்கும் போது எரிச்சல் மேலிடுகிறது.

    நடுநிலை என்ற பெயரில் ஒரு சார்பாக தொலைக்காட்சியில் பேசுபவர்கள் காண்கையில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!