சமூகநீதி என்ற தமிழக வடை!

3
சமூகநீதி

மிழகத்தில் சமூகநீதி என்ற ஸ்பெஷல் வடை புழக்கத்தில் உள்ளது. அந்த வடையைப் பற்றிப் பார்ப்போம். Image Credit

சமூகநீதி

Social Justice என்பதையே தமிழில் சமூக நீதி என்று அழைக்கிறார்கள்.

அடக்குமுறையை எதிர்ப்பது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி & அனைவருக்கும் சமமான உரிமை கிடைக்கச் செய்வது என்பதே சமூகநீதி.

தமிழகத்தில் சமூகநீதி எப்படியுள்ளது?

மற்ற அனைத்து மாநிலங்களையும் குறிப்பாக வட மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் சமூகநீதி சிறப்பாக உள்ளதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இன்னமும் வட மாநிலங்களில், ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை உள்ளது.

தமிழகத்திலும் நிச்சயம் அடக்குமுறை உள்ளது ஆனால், ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இதற்குத் திராவிடக் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது.

தமிழகத்தில் ஏதாவது அடக்குமுறை நடந்தால், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான பிரச்சனை என்றால், கவனம் பெறுகிறது, அதற்குத் தீர்வும் கிடைக்கிறது.

ஆனால், வட மாநிலங்களில் என்ன நடந்தாலும் கேட்க நாதியில்லை. தற்போது தான் மாற்றம் வர ஆரம்பித்துள்ளது.

தமிழகம் அவர்களுக்கு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை.

திமுக

கடந்த நான்கு வருடங்களாகக் குறிப்பாக ஜெ காலமான பிறகு, பாஜக தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வர ஆரம்பித்த காலத்திலிருந்து சமூகநீதி வார்த்தை அதிகம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளால் பயன்படுத்தப்படுகிறது.

சமூகநீதி என்ற வார்த்தைக்கே திமுக தான் உரிமையாளர் என்பது போல இதையே கூறிக்கொண்டுள்ளது ஆனால், அவர்கள் சரியாக நடந்து கொள்கிறார்களா என்பதே கேள்வி.

சமூகநீதி என்பது மற்றவர்களுக்குத் தான் தனக்கு இல்லையென்பதே திமுக நடவடிக்கையாக உள்ளது.

திமுகவை எடுத்துக்கொண்டால் அவர்கள் குடும்ப உறுப்பினர் மட்டுமே தொடர்ந்து தலைமை பொறுப்பில் உள்ளார்கள்.

ஸ்டாலினாவது பல காலம் கட்சிப்பணியிலிருந்து தன்னை நிரூபித்துத் தலைவரானார். உதயநிதிக்கு ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர வேறு என்ன தகுதி உள்ளது?

தொடர்ந்து பதவியில் உள்ளவர்களின் குடும்பத்தினரே திரும்பத்திரும்ப வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். கட்சிக்காகப் பல தலைமுறையாக உழைத்த தொண்டனின் சமூக நீதி என்ன ஆனது?

நாடு முழுவதும் சீர்த்திருத்த திருமணங்கள் பரவ வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்துகிறார் ஆனால், திமுக அரசு அமைச்சர் சேகர் பாபு பெண்ணே வேறு மாநிலத்தில் அடைக்கலம் கேட்கிறார்.

தொடர்ந்து பிராமணர்களை மட்டுமே குறி வைத்துத் தாக்கி வருவதன் பெயர் சமூகநீதியா? அனைவருக்கும் சமமான உரிமை, மரியாதை என்பது தானே சமூகநீதி!

சமூகநீதி என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமேயானது அல்ல, அனைவருக்குமானது.

செஸ் விளையாட்டில் உலகளவில் முதல் இடம் பெற்ற பிரக்ஞானந்தா திருநீர் வைத்து இருந்தான் என்ற ஒரே காரணத்துக்காக அவனைக் கண்டு கொள்ளவில்லை குறிப்பாக மற்றவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இவனுக்கேன் கொடுக்கப்படவில்லை?

இது மறுக்கப்பட்ட சமூகநீதியாகாதா?

திருமாவளவன்

சமூகநீதி என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தத் தகுதியானவர் திருமாவளவன் ஆனால், அவர் அவருக்குப் பிடிக்காத கட்சியை விமர்சிக்க மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

அதிமுக, பாஜக ஆட்சியில் என்ன நடந்தாலும் ஒரு வாரம் கொந்தளிக்கும் திருமாவளவன் திமுக ஆட்சியில் அமைதி காக்கிறார்.

தோழமை சுட்டுதல் கூட இல்லை.

அடுத்தவரை விடுங்கள், இவருக்கு அவமானம் நடந்தாலே அமைதியாக இருக்கிறார் என்பது ஆகப்பெரிய கொடுமை.

அவரைப் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்துப் பேசியதை கடந்து போகக் கூறுகிறார், தனது கட்சிக்காரர்களை நிற்க வைத்துத் திமுகவினர் பேசியதை கேள்வி கேட்கவில்லை.

தேர்தலில் இடம் கிடைக்கவில்லையென்றால், அவமானப்படுத்தப்பட்டால் அதை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று தொண்டர்களுக்குக் கூறுகிறார்.

அமைச்சர் கண்ணப்பன் அரசு ஊழியரைச் சாதி பெயரைக் கூறி திட்டியதற்குக் கண்டனம் இல்லை.

தாழ்த்தப்பட்ட பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட போது அதுகுறித்துக் கண்டனம் இல்லை. உத்தரபிரதேசத்தில் நடந்து இருந்தால், ஒரு வாரத்துக்குப் பேசிக்கொண்டு இருப்பார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை, சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் தருகின்றன ஆனால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே பலர் உள்ளனர்.

அவர்களுக்கு வாய்ப்புகளைத் தெரியப்படுத்தி, அவர்கள் முன்னேற வழிகளை ஏற்படுத்தித்தராமல் இன்னும் கட்சி, அரசியல் என்று அவர்களைத் தன் அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

இதெல்லாம் மறுக்கப்பட்ட சமூக நீதியாகாதா?

தாழ்த்தப்பட்டவர்கள் பாஜக க்கு மாறுவதைத் திருமாவளவன் விமரிசித்து இருந்தார். இது போல அவர் சுயமரியாதை இழந்து, மக்களையும் இழக்க வைத்துக்கொண்டு இருந்தால், தாழ்த்தப்பட்ட மக்கள் மாறுவது தவிர்க்க முடியாதது.

மாற்றம் உடனே நடக்கும் செயலல்ல ஆனால், கால மாற்றத்தில் நிச்சயம் நடக்கும். எங்கே மரியாதை கிடைக்கிறதோ அங்கே மக்கள் செல்வது இயல்பு தானே!

தமிழக வடை

தமிழக சமூக நீதி வடை ஊடகங்களால் மட்டுமே ஊசிப்போகாமல் பேணிகாக்கப்படுகிறது. ஒருநாள் இது எப்படிப்பட்டது என்று மக்கள் உணரும் போது மரண அடியாக இருக்கும்.

தங்களுக்குத் தேவையான இடங்களில் மட்டுமே சமூகநீதி பேசுவது தான் தமிழக சமூகநீதி வடை. இதைத் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சிறப்பாகச் செய்து வருகின்றன.

எத்தனை நாட்கள் ஊடகங்களை வைத்து ஓட்ட முடியும்! எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது.

பாகுபாடு இல்லாமல், அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவருக்கு மட்டுமே சமூகநீதியைப் பற்றிப்பேச தகுதியுள்ளது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. தற்போது சவுக்கு ஷங்கர் அவர்களின் சில நேர்காணல்களை Youtube இல் பார்த்து வருகிறேன்.. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது வலைதளத்தில் சில பதிவுகளை படித்து இருக்கிறேன்.. மற்றபடி இவரை பற்றி அதிகம் தெரியாது.. ஆனால் இந்த காணொளிகளை பார்க்கும் போது அவரின் கூர்மையான அறிவை புரிந்து கொள்ள முடிகிறது..

    சில காணொளிகளில் திமுகவின் அபிமானியாக தெரிந்தாலும், பல நேரங்களில் திமுகவையும் விமர்சனம் செய்கிறார்.. சமீபத்தில் நான் கண்ட நேர்காணல்களில் இவரது நேர்மை பிடித்து இருக்கிறது.. ஒரு செய்தியை பொத்தாம் பொதுவாக சொல்லாமல் அதற்க்கான ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்..

    உங்களுக்கு இவரை பற்றி அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு.

  2. சமுக நீதி – நல்லா மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னிங்க கிரி…
    பித்தலாட்ட பயலுக….

    “சமூகநீதி என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமேயானது அல்ல, அனைவருக்குமானது” – முழுமையா ஒத்துப்போகிறேன்.

  3. @யாசின்

    இவர் கூறுவதில் சில உண்மைகள் இருக்கலாம் ஆனால், என்னைப்பொறுத்தவரை இவர் ஒரு கேவலமான மனிதர். எவருக்கும் மரியாதை கொடுக்காமல், வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருப்பார்.

    இவர் கருத்துகளிலிருந்து விலகி இருப்பது உங்களுக்கு நல்லது.

    @பயபுள்ள 🙂 நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here