தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் எதிர்காலத்தலைமுறையே சீரழிந்து வருகிறது ஆனால், வருமானத்துக்காக அரசு டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கும் மோசமான போக்குத் தொடர்கிறது. Image Credit
குடிப்பழக்கம்
அதிமுக திமுக இரு அரசுகளும் வருமானத்துக்கு வேறு வழிகளைக் கண்டறியாமல் டாஸ்மாக் வருமானத்தை நம்பி அதன் மூலம் தமிழக மக்களின் எதிர்காலத்தையே அழித்து வருகின்றன.
குடிப்பழக்கத்தால் தமிழ்நாட்டு ஆண்களின் வேலை திறனே மிகவும் குறைந்து வருகிறது. இந்நிலை தினக்கூலி ஊழியர்களை மிகக்கடுமையாகப் பாதித்துள்ளது.
விலையில்லா உணவுப்பொருட்களை அரசு கொடுப்பதால், பலர் வேலைக்குச் செல்வதே குடிக்கப் பணம் வேண்டும் என்பதற்காகத்தான் என்று கிராமங்களில், சிறு நகர்ப்புறங்களில் குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர்.
திருப்பூரில் சென்று எந்த நிறுவனத்தின் அதிகாரியையும், முதலாளியையும் கேளுங்கள், புலம்பித்தள்ளி விடுவார்கள்.
எடுத்துக்காட்டுக்கு திருப்பூரை கூறி இருந்தாலும், இது தான் தமிழகம் முழுக்க உள்ள நிலை. சதவீத அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம், அவ்வளவே!
சம்பளம் வாங்கியதும் நேரா டாஸ்மாக் தான் செல்கிறார்கள். பணம் தீர்ந்த பிறகு தான் வேலைக்குச் செல்கிறார்கள்.
இது போன்ற நிச்சயமற்ற பணி வருகை காரணமாகத்தான் அனைத்து நிறுவனங்களும் வடமாநில ஊழியர்களை நியமிக்கின்றனர்.
இவர்கள் வேலை நேரத்தில் கடுமையாகப் பணி புரிகின்றனர். சொன்ன நேரத்துக்கு முன்பாகவே தங்கள் வேலையை முடித்து விடுவதாகக் கூறுகிறார்கள்.
எனக்குத் தெரிந்த ஒருவரும், ஒப்பந்த முறையில் பணி புரிபவரும், நிர்வகிப்பவர்களும் இதே காரணங்களைக் கூறுகிறார்கள்.
நம்மவர்கள் மூன்று நாட்கள் செய்யும் வேலையை வடமாநிலத்தவர் ஒரே நாளில் திறம்பட முடிக்கிறார்கள் என்கிறார்.
நம்ம பசங்க ஒரு காலத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருந்தார்கள், தற்போது அந்நிலையே முற்றிலும் மாறி விட்டது என்று விரக்தியாகக் கூறினார்.
இளைய தலைமுறையினர்
என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாததாக மாணவர்கள் நடவடிக்கைகள் உள்ளது.
ஒரு த்ரில்லுக்காகக் குடிப்பது, எப்படியுள்ளது என்று பார்ப்பதற்காகக் குடிப்பது என்பது இக்காலத்தில் வந்ததல்ல காலம் காலமாக இருப்பது தான்.
ஆனால், மாணவர்கள் சீருடையுடன் சென்று டாஸ்மாக்கில் வாங்கி வருவதும், மாணவிகளே பொதுப்பேருந்தில் குடிப்பதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இன்னும் மோசமாக அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் குடித்துவிட்டே வகுப்பறைக்கு வந்தது, ஆசிரியரையே அடிக்கச் சென்றது, குடிப்பதற்காகத் திருடியது செய்திகளில் வந்து பலரை கிறுகிறுக்க வைத்தது.
இவையெல்லாவற்றையும் விட அதிர்ச்சிகரமான செய்தியாகத் தமிழகத்தில் அதிகரித்து வரும் கருத்தரிப்பு மையங்கள்.
குடி மட்டுமே இதற்குக் காரணமல்ல என்றாலும் இதை முக்கியக்காரணமாக அனைவரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
குடி என்பது மிகச்சாதாரணமாகி எதற்கும் குடி என்றாகி விட்டது. எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சனையில்லை ஆனால், இதே பிழைப்பாக அனைவரும் மாறி வருவது கவலையளிக்கிறது.
குடியால் தமிழகம் சீரழிந்து வருவதை என்ன சமாதானம் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழக அரசு
‘தேர்தல் அறிக்கையில் நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்துவதாகக் கூறவில்லை‘ என்று செந்தில்பாலாஜி கூறுகிறார்
இதைவிடக் கொடுமையாக ‘மது குடிக்க வேண்டாமென 4 கோடி செலவில் தமிழக அரசு விழிப்புணர்வு‘ செய்யப்போவதாகக் கூறுகிறார்.
இதெல்லாம் கேட்டால் ஆத்திரமாக இருக்காதா?! இவர்களே குடிக்க வழி ஏற்படுத்திக்கொடுப்பார்களாம் இவர்களே குடிக்க வேண்டாம் என்று 4 கோடி செலவில் விழிப்புணர்வும் செய்வார்களாம்!
இவர்களே பாம் வைப்பாங்களாம். இவர்களே எடுப்பாங்களாம். எல்லோரையும் கிறுக்கன் என்று முடிவே செய்து விட்டார்கள் போல.. ஆனால், ஓரளவு உண்மையும் உள்ளது.
தேர்தலுக்கு முன்பு ஸ்டாலினும், கனிமொழியும் 'ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்று வாக்குறுதி கொடுத்து விட்டுத் தற்போது அதற்கு எதிராக நடந்து வருகிறார்கள்.
வருமானத்துக்கு மாற்று வழிகளைக் கண்டறியாமல் டாஸ்மாக் விற்பனையை உயர்த்தித் தமிழகத்தைச் சீரழிக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய போராளிகள் ஒருத்தனாவது வாயைத் திறக்கிறானா பாருங்க! எல்லோரும் எங்கே போனானுங்கன்னே தெரியல.
எதிர்மறையாகக் கூறுவதில்லை என்பதை வழக்கமாகப் பின்பற்றி வருகிறேன் ஆனால், நான் நேசிக்கும் தமிழகம் கண் முன்னே இப்படி நாசமாவதைக் கண்டு வயித்தெரிச்சலில் கூறுகிறேன்.
குடியை ஊக்குவிக்கும், பொறுப்பில் இருந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அனைவரும் நல்லாவே இருக்க மாட்டீங்க! நாசமாத்தான் போவீங்க.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ஒரு காலத்தில் குடிப்பது மிகவும் கேவலமாக எண்ண பட்ட ஒன்று, தற்போது நாகரீக உலகில் மிகவும் கவ்ரவமாக எண்ணுகின்றனர்.. அதிலும் கடையை அரசே நடத்துவது சிறப்பு.. அரசின் வருவாயில் பெருன்பான்மை தொகை டாஸ்மார்க் மூலம் வருவது இன்னும் இன்னும் சிறப்பு!!!
அதிகம் குடிக்கும் / வாங்கும் குடிமகனுக்கு சிறந்த விருதுகள் வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..எதிர்காலத்தில் விருதுக்காகவே பெரிய போட்டி நடக்கும்… அரசுக்கு வருமானமும் உயரும்.. தன் மக்கள் குடித்து தான் வருமானம் வர வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஆட்சி அமைப்பை என்ன சொல்வது!!!
பல ஆண்டுகாலமாக இரண்டு ஆட்சியிலும் மது விற்பனை ஜோராக நடக்கிறது.. மிக பெரிய தொகை ஆட்சியளர்களுக்கு செல்வதால் மது விலக்கை பற்றி யோசிக்க கூட இவர்களுக்கு நேரம் இருக்காது.. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது.. பூரண மதுவிலக்கு என்று பேப்பரில் எழுதி வேண்டுமானால் படித்து கொள்ளலாம்… மது எல்லா இடங்களிலும் விஷம் போல் பரவி கிடக்கிறது..
10/15 ஆண்டுகளுக்கு முன் படிக்கும் போது மாணவர்களுக்கு இருந்த பயம் இன்று இல்லை.. திரைப்படம் மதுவை வளர்த்ததில் நல்ல பங்கு இருக்கிறது..குறிப்பாக வெறி படித்த ரசிகர்களால்… சந்தோசத்துக்கும் குடி, சாவுக்கும் குடி, சோகத்துக்கும் குடி, மகிழ்ச்சிக்கும் குடி.. காதல்ல ஜெயிச்ச குடி, தோத்தாலும் குடி.. எக்ஸாம் ல பாஸ்சனாலும் குடி, fail நாலும் குடி… வேலை கிடைச்சாலும் குடி, வெட்டியா இருந்தாலும் குடி.. என்ன logic என்றே தெரியில்லை கிரி.. ஒட்டு மொத்தமா குடிக்க எதாவது ஒரு காரணம் மட்டும் வேண்டும்…
நூறு குழந்தைகளின் தாலாட்டுகளை கொன்று விட்டு ஒரு தூளியை ஜெயிப்பது தான் யுத்தம், சுத்த முட்டாள்த்தனம்… என எங்கோ படித்த நியாபகம்.. அது போல இளைய சமுதாயத்தின் கனவுகளை, லட்சியங்களை, அவனது எண்ணங்களை கொன்று விட்டு நல்லாட்சி புரிந்து விட்டோம் என்று மார்தட்டுவதில் என்ன பயன்???
கிரி, அரசியலை தவிர்த்து குடிப்பழக்கம் எப்படி மக்களிடையே உருவாகியது, கால மாற்றதினால் எப்படி உருமாறியது என்று சற்று யோசித்தால் அதற்கான தீர்வை நோக்கி செல்லலாம் என்று நினைக்கிறேன்.
குடிப்பழக்கம் தனி மனித ஒழுக்கம் சார்ந்தது என்றே நினைக்கிறேன். தனிமனிதன் உணர்ந்து அதை விட்டால் ஒழிய அரசாங்கத்தால் அதை தடுக்க முடியாது, சில கடுமையான சட்டங்களினால் , குடிகாரர்கள் மூலம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் வரும் தீங்குகளை மட்டுப்படுத்த முடியும். பூரண மது விலக்கை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது. அதற்கு காரணங்கள் பல. குடிகாரர்கள் எந்த எல்லைவரையுலும் செல்வார்கள். இதனால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தான் தொந்தரவு.
குடிப்பழக்கம் இளைநர்களிடம் பெருக சினிமா பிரதான காரணமாக உள்ளது என்று ஏற்றுக்கொள்கிறேன். குடியை விட கூல் நிப், ஹான்ஸ் மற்றும் போதை மாத்திரைகள் மாணவர்களிடம் புழக்கத்தில் அதிகம் உள்ளது. மலிவு விலை காரணமாக இருக்கலாம். நல்ல நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமையாவிட்டால், மாணவர்கள் திசைமாறுவதை தடுக்க முடியாது.
4 கோடி என்பது மிக சொற்ப பணம். மது ஒழிப்பு/விழிப்புணர்வு விளம்பரங்களை தொலைக்காட்சியிலோ பத்திரிக்கையிலோ நான் கண்டதேயில்லை. இவர்கள் ரஜினி, கமல் போன்ற நடிகர்களை அணுகி இருந்தாலே அவர்கள் இலவசமாக நடித்து இருப்பார்கள்.
நம் சமூகம் அதீத நுகர்வைநோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த சமூக மாற்றத்தை நாம் கடந்து தான்
செல்ல வேண்டும்.
@யாசின்
“மிக பெரிய தொகை ஆட்சியளர்களுக்கு செல்வதால் மது விலக்கை பற்றி யோசிக்க கூட இவர்களுக்கு நேரம் இருக்காது.”
மதுபான ஆலையை நடத்துவதே இவர்கள் தான்.
“திரைப்படம் மதுவை வளர்த்ததில் நல்ல பங்கு இருக்கிறது..”
மறுக்கமுடியாத உண்மை.
“ஒட்டு மொத்தமா குடிக்க எதாவது ஒரு காரணம் மட்டும் வேண்டும்…”
சரியாகக் கூறினீர்கள்
@மணிகண்டன்
“அரசியலை தவிர்த்து குடிப்பழக்கம் எப்படி மக்களிடையே உருவாகியது, கால மாற்றதினால் எப்படி உருமாறியது என்று சற்று யோசித்தால் அதற்கான தீர்வை நோக்கி செல்லலாம் என்று நினைக்கிறேன்.”
எளிதாக எதுவுமே கிடைக்கும் போது இவை நடப்பது இயல்பு தானே. கஞ்சா போன்ற போதை மருந்துகள் எளிதாக கிடைத்தால் அதைப் பயன்படுத்துபவர்களும் அதிகரிப்பார்கள்.
“குடிப்பழக்கம் தனி மனித ஒழுக்கம் சார்ந்தது என்றே நினைக்கிறேன். தனிமனிதன் உணர்ந்து அதை விட்டால் ஒழிய அரசாங்கத்தால் அதை தடுக்க முடியாது”
உண்மை தான். அரசு கட்டுப்படுத்தாமல் தனிமனிதன் திருந்த மாட்டான்.
“பூரண மது விலக்கை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாது. அதற்கு காரணங்கள் பல. குடிகாரர்கள் எந்த எல்லைவரையுலும் செல்வார்கள். இதனால் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தான் தொந்தரவு.”
உண்மை தான். ஏற்றுக்கொள்கிறேன்.
அதுவும் தற்போது குடி பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இவர்களை எப்படி மாற்றுவது?
நிறுத்தினால் சிலர் கள்ளச்சாராயம் குடித்து இறப்பார்கள்.
என்னைப்பொறுத்தவை கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்காக வருந்தி கட்டுப்பாடு இல்லாமல் அனுமதித்தால், பல தலைமுறையே அழிப்பதற்கு துணை போவதற்கு சமம்.
“குடியை விட கூல் நிப், ஹான்ஸ் மற்றும் போதை மாத்திரைகள் மாணவர்களிடம் புழக்கத்தில் அதிகம் உள்ளது. மலிவு விலை காரணமாக இருக்கலாம்.”
அரசு நினைத்தால் இவற்றை எளிதாக தடை செய்யலாம் ஆனால், இவர்களும் கூட்டு என்பதாலே எந்த ஆட்சி மாறியும் தொடர்கிறது.
“இவர்கள் ரஜினி, கமல் போன்ற நடிகர்களை அணுகி இருந்தாலே அவர்கள் இலவசமாக நடித்து இருப்பார்கள்.”
ரஜினி வர மாட்டார். ஏன் என்றால் அவரே குடித்து பாதிக்கப்பட்டு நிறுத்தியுள்ளார். எனவே, அறிவுரை கூற தனக்கு தகுதி இருப்பதாகக் கருத மாட்டார்.