சென்னை, மைலாப்பூர் அதிமுக MLA நடராஜ் அவர்கள் தன் தொகுதியில் ஆற்றி வரும் பணிகள் மைலாப்பூர் தொகுதி வாசிகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
MLA நடராஜ்
சிங்கம் படத்தில் விஜயகுமார், சூர்யாவை பார்த்து “இத்தனை நாளா எங்கயா இருந்தே!” என்று கேட்பாரே.. அந்த நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம் 🙂 .
வந்த நாளில் இருந்தே சமூகத்தளமான ஃபேஸ்புக்கில் தான் செய்து வரும் பணிகளை வெளிப்படையாக விவரித்து வந்தார்.
தான் செய்யும் பணிகளை நிழற்படத்துடன் பகிர்ந்து வருகிறார்.
ஆலோசனைக் கூட்டம்
நடராஜ் அவர்கள் செய்த செயல்களிலேயே ரொம்பப் பிடித்த விசயம் அவர் செய்யும் ஆலோசனைக் கூட்டம் தான்.
ஒரு செயல் நடைபெற வேண்டும் என்றால் சரியான திட்டமிடல் வேண்டும், அனைவரின் புரிந்துணர்வு, ஒத்துழைப்பு வேண்டும். இது சரியாக இருந்தாலே ஒரு காரியம் சிறப்பாக நடைபெறும்.
தான் வந்த உடனே அனைத்து அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பின் பிரச்சனைகளைத் தெரிந்து கொண்டு அவர்களை வேலைக்காரர்கள் போல நடத்தாமல் ஒரு Team போல நடத்துகிறார்.
தகவல் தெரிவிப்பு
பொதுமக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் தன்னைத் தொடர்பு கொள்ளும்படி மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்ணைக் கொடுத்து இருக்கிறார்.
நடக்கிறதோ இல்லையோ முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.
எங்கள் தெரு தொடர்பாக ஒரு பிரச்சனை இருந்தது. அதுகுறித்து மின்னஞ்சல் அனுப்பினேன், அதற்குப் பதில் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இன்னும் முழுவதும் முடியவில்லை என்றாலும் ஓரளவு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உணர்கிறேன்.
“கலங்கரை விளக்கம்” பேருந்து நிறுத்தத்தில் மழை பெய்தால் தண்ணீர் நிற்பது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். அதற்கும் பதில் அனுப்பி இருந்தார் ஆனால், அது சரி செய்யப்படவில்லை.
ஆனால், மற்ற இடங்களில் பல நடவடிக்கை எடுத்து வருகிறார். என் பகுதி பிரச்சனை அவ்வளவு முக்கியம் இல்லையென்பதால், மீண்டும் தொல்லை செய்யவில்லை.
விரைவில் என் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
பிற்சேர்க்கை
பிரச்சனை சரிசெய்யப்பட்டது. விவரங்கள் இங்கே
ஆக்கிரமிப்பு அகற்றம்
தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய பிரச்சனையே ஆக்கிரமிப்புகள் தான். பின்னர் அதுவே அவர்களுக்கு நிரந்தரமாக்கப்படும், அரசியலால்.
மைலாப்பூரில் நிறைய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றி வருகிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புகார் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம்.
சாய்பாபா கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி இருந்தார் ஆனால், இன்னும் பார்க்கவில்லை.
சுத்தம் சுகாதாரம்
மைலாப்பூரை சுத்தமான இடமாக மாற்ற நடராஜ் அவர்கள் உறுதிகொண்டு இருக்கிறார்.
எனவே, சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மிகவும் பாராட்டத் தக்க செயல்.
தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று துப்புரவு பணியாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார்.
அநேகமாகப் பலருக்கு பல வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அதிக வேலைப்பளுவாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🙂 .
மக்கள் நடைபாதையை (Platform) கிரானைட் கற்கள் அமைத்துச் சீர் படுத்தி இருக்கிறார்கள். பார்க்கவே அழகாக இருக்கிறது.
மரக்கன்று நடும் பணியைத் தொகுதி மக்களுடன் இணைந்து செய்கிறார்.
இரு கோரிக்கைகள்
எனக்குத் தற்போது இரு கோரிக்கைகள் உள்ளது (முன்னர் கூறியது இல்லாமல்)
ஒன்று ராயப்பேட்டை சாலையை இரு வழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.
நெரிசல் என்பதால் தான் ஒரு வழிப் பாதை ஆக்கினார்கள் ஆனால், அவ்வாறு செய்ததன் அர்த்தமே முடங்கிப் போய் இருக்கிறது.
காரணம், திரும்ப ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு வாகனங்களைச் சாலையில் நிறுத்திப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளார்கள்.
ஒரு வழிப்பாதை ஆக்கிய நோக்கமே பயனற்று இருக்கிறது.
ஒரு வழிப்பாதையால் தினமும் வாகன ஓட்டிகள் படும் சிரமம் சொல்லி மாளாது. முருகன் மாதிரி உலகையே சுற்றி வர வேண்டியதாக இருக்கிறது. ஒரு இடத்துக்குச் செல்வதற்கான நேரம் கடுமையாகக் கூடி இருக்கிறது.
இப்பிரச்சனை குறித்து நடராஜ் அவர்கள் காவல்துறையிடம் பேசி இருக்கிறார். இது மட்டுமல்ல பல்வேறு பிரச்சனைகள் (அனாதையாக நிற்கும் வாகனங்கள் உட்பட) குறித்துப் பேசி இருக்கிறார்.
இவர் முன்னர் காவல் துறை அதிகாரியாக இருந்தது ஒரு கூடுதல் பலம்.
ராயப்பேட்டை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை அடைத்து நிற்கும் வாகனங்களுக்குத் தடை விதித்தால் இரு வழிப்பாதை சாத்தியமே!
இதற்கு முன் வாகனங்கள் இரு வழிப்பாதையாகத் தான் சென்று கொண்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வழிப்பாதையால் நேரம் விரயமாகிறது, அதோடு பேருந்துகள் ஆழ்வார்பேட்டை பகுதியில் இருந்து வரும் போது “லஸ்” பகுதி வராமலே செல்வது பெரிய தொல்லையாக உள்ளது.
அதோடு “வள்ளுவர் சிலை” பேருந்து நிறுத்தம் போன்றவைகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, ராயப்பேட்டை சாலையை இரு வழிப்பாதையாக மாற்றம் செய்ய வேண்டுகிறேன்.
பிற்சேர்க்கை – கட்டுப்பாடுகளுடன் இரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.
இன்னொரு கோரிக்கை
சிவசாமி சாலையில் மாநகராட்சி பணி நடைபெறுகிறது.
இதனால் 12, 12B, 12G, 21G, 45B பேருந்துகள் அனாவசியமாக எங்கெங்கோ சுற்றி வருகிறது. ராயப்பேட்டை சாலையைச் சரி செய்யக் காலத் தாமதமானால், குறைந்த பட்சம் சிவசாமி சாலையையாவது சரி செய்து கொடுக்கலாம்.
இது நீண்ட காலமாகக் கிடப்பில் உள்ளது.
இவை இரண்டே என்னுடைய மற்றும் பலருடைய கோரிக்கையாக இருக்கும். இதைச் சரி செய்ய நடராஜ் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
பிற்சேர்க்கை
தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு பேருந்துகள் சிவசாமி சாலை வழியாகச் செல்கின்றன.
மக்கள் வேண்டுவது என்ன?
மக்கள் அரசாங்கத்திடம் அதைக் கொடு இதைக் கொடு என்றா கேட்கிறார்கள்! அடிப்படை பிரச்சனையைச் சரி செய்து தந்தாலே போதும்.
இலவசங்களைக் கொடுக்காமல், தினப்படி ஏற்படும் அடிப்படை பிரச்சனைகளைச் சரி செய்தாலே போதும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
தமிழக மக்கள் அதிகம் ஆசைப்பட மாட்டார்கள், கிடைத்த வரை மகிழ்ச்சி என்று வாழ்பவர்கள்.
அரசாங்க இயந்திரம் சரிவரச் செயல்பட்டாலே போதும் வேறு எதுவுமே தேவையில்லை.
நடராஜ் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக மக்கள் பணி செய்ய வேண்டும். மக்கள் குறைகளைப் புறக்கணிக்காமல், அனைவரும் பாராட்டும்படி இதே போல் தொடர்ச்சியாகப் பணிகள் ஆற்ற வேண்டும்.
துவக்கத்தில் ஆர்வக்கோளாறில் சில நாட்கள் சுறுசுறுப்பாக இருந்து விட்டுப் பின்னர் கண்டுகொள்ளாமல் இருந்து மக்களை ஆசை காட்டி மோசம் செய்து விடக் கூடாது.
மக்களின் எதிர்பார்ப்பு பிரச்சனைகளுக்கான தீர்வு தானே தவிர, கட்சி சார்ந்து இல்லை. தொகுதிக்கு நல்லது செய்தால் எவராக இருந்தாலும் பாராட்டவே செய்வார்கள்.
நடராஜ் அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற தொகுதி MLA MP க்களும் இதே போல மக்கள் பணி ஆற்ற வேண்டும்.
அதாவது, மக்கள் பணி செய்ய வேண்டும் என்று மிக மிக ஆர்வமாக இருப்பவருக்கு அவர் விரும்பிய பணியே கிடைத்தால், என்ன நடக்குமோ அது தான் தற்போது இவர் மூலம் நடந்து கொண்டு இருக்கிறது.
நடராஜ் அவர்கள் மேலும் சிறப்பாக மக்கள் பணி புரிய வாழ்த்துகள். நடராஜ் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த முதல்வர் “ஜெ” க்கு நன்றி.
பிற்சேர்க்கை
ஆர்வமாக வருபவர்கள், அங்குள்ள சூழ்நிலையுடன் போராட முடியாமல், பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால், சராசரி நபராக மாறி விடுகிறார்கள்.
நடராஜ் அவர்களும் அதே நிலையை அடைந்து விட்டார். தற்போது மைலாப்பூர் வழக்கமான நிலைக்கே திரும்பி விட்டது 🙁 .
மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது கூடுதலாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது மட்டுமே சிறு ஆறுதல்.
தொடர்பு கொள்ள
Mail ID – mylaimlanataraj@gmail.com
Facebook ID – https://www.facebook.com/NatarajIpsR (இவருடைய FB கணக்கில் சென்று பாருங்கள்.. என்னென்ன செய்து இருக்கிறார் என்று புரியும்.
தொலைபேசி எண் தெரியாது.
பின் குறிப்பு
மற்ற தொகுதி மக்கள் எங்க தொகுதி மீது கண் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 🙂 🙂 .
அம்மாவின் ஆட்சி என்றால் சும்மாவா? நெருப்புடா, அம்மாடா.
படிக்கும் போது மன நிறைவாக இருக்கிறது. இவரின் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று… இந்த பாடல் வரிகள் தான் உடன் நினைவுக்கு வருகிறது. பகிர்வுக்கு நன்றி கிரி..
கிரி,
இந்த பதிவை facebook ‘ல நட்ராஜ் IPS பேஜ் ல பகிர்ந்துருக்காங்க 🙂
ஆனந்த்.
@மாதவன் இது போல நடப்பது தற்போதைக்கு மைலாப்பூரில் மட்டுமே! தமிழ்நாடு முழுக்க அல்ல.
@யாசின் 🙂
@ஆனந்த் நன்றி 🙂
234il ஒருவர்.மேலும் சிறக்கட்டும் இவர் பணி..
ஆளும்கட்சியில் இல்லாததனாலோ என்னவோ எண்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் பார்த்ததே இல்லை.