அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்?

2
அதிமுக எதிர்காலம்

2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அதிமுக எதிர்காலம் எப்படியுள்ளது? என்ன சிக்கல்கள் உள்ளன என்பதே இக்கட்டுரை. Image Credit

அதிமுக எதிர்காலம்

ஜெ‘ க்குப் பிறகு அதிமுக அவ்வளவு தான் என்று எதிர்பார்த்தவர்களுக்கு தொடரும் போட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியளித்தார்.

அதிமுக ஆட்சி கலைந்து விடும் என்று கணித்தவர்களுக்கு, நான்கு வருடங்களையும் வெற்றிகரமாகக் கடந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் 33% வாக்குகளையும் பெற்றது.

திமுக பெற்றதை விட 3% மட்டுமே குறைவு.

ஆனால், தோல்விக்குப் பிறகு பல்வேறு சர்ச்சைகளை, விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதுவே அதிமுக எதிர்காலத்தைச் சந்தேகமாக்கியுள்ளது.

அவை என்னவென்று பார்ப்போம்.

சசிகலா

2021 சட்டமன்றத்தேர்தலுக்கு முன் சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாகத் திடீரென்று அறிவித்தார். இது யாருமே எதிர்பார்க்காத முடிவு.

தேர்தல் முடிவுக்குப் பிறகு என்ன நினைத்தாரோ, அதிமுக தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட ஆரம்பித்தார்.

இதைத் திமுக ஊடகங்கள் பெரிதுபடுத்தித் தினச் செய்திகளாக வெளியிட ஆரம்பித்தன. இதனால் சசிகலாவும் இதைத் தொடர்கதையாக வைத்துக்கொண்டார்.

இப்பிரச்சனையைச் சரியாகக் கையாளாத அதிமுக தலைமையும், தலைவர்களும் அதற்குப் பதில் அளிப்பதும், பேசிய தொண்டர்களை நீக்குவதும் எனத் தொடர்ந்தது.

தொண்டர்கள் நீக்கப்படுவது தெரிந்தும் சில தொண்டர்கள் சசிகலாவுடன் தொடர்ச்சியாகப் பேசியது அரசியல் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

தற்போது அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு சசிகலா காரில் சுற்றுவதும், அதை ஊடகங்கள் வழக்கம் போல ஏற்றி விடுவதும் நடந்து கொண்டுள்ளது.

இவை முற்றுப்புள்ளி இல்லாமல், தொடர்வது அதிமுக தலைமைக்கு நல்லதல்ல.

இரட்டை தலைமை

EPS OPS இருவரில் சந்தேகத்திற்கிடம் இல்லாமல் EPS தலைமை பண்புக்கு, வழிநடத்தலுக்குச் சரியானவர் என்று அனைவருக்கும் தெரிந்தாலும், OPS இடமும் தொடர்ந்து கொண்டுள்ளது.

OPS யைத் தலைமை பதவியிலிருந்து விலக்கினால் சர்ச்சையாகும், பிரச்சனையாகும் என்று தான் EPS எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக உள்ளார்.

இரட்டை தலைமை இருக்கும் வரை கட்சிக்கான மதிப்புக் குறைவானதாக இருக்கும். ஒற்றைத் தலைமை மாறாதவரை கட்சிக்கான மதிப்பு உயராது.

கட்சிக்குள் பேசித் தற்போதைக்கு EPS மட்டுமே அதிமுக ஒற்றைத் தலைமையாகச் செயல்படுவது நல்லது. காரணம், அதிமுக தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கியமான காலகட்டம் இது.

அடுத்தச் சட்ட மன்ற தேர்தலுக்குப் பிறகு வேறு ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தீர்மானிக்கலாம்.

கட்சியினர் வயது

அதிமுக க்கு தற்போதைய மிகப்பெரிய சிக்கலாகக் கருதுவது, கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் வயது, அனைவருமே வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் அதிமுகவில் அதிகம் இணையவில்லை, இது மிகப்பெரிய இழப்பு.

கட்சி வளர வேண்டும் என்றால், இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியம். புது ரத்தம் பாய்ச்ச, துடிப்புடன் செயல்பட இளைஞர்கள் தேவை,

வாரிசு அரசியல் என்று கூறப்பட்டாலும், திமுகவில் இளைஞர்கள் பங்கு அதிகம். அதோடு ஏராளமான இளைஞர்கள் கட்சியில் இணைகிறார்கள், பங்கெடுக்கிறார்கள்.

அதிமுக வில் சொல்லிக்கொள்ளும்படியான இளைஞர் என்றால், OPS மகன் ரவீந்திரநாத் மட்டுமே. இவரும் தன்னைப் பெரியளவில் முன்னிறுத்தும் பணியைச் செய்யவில்லை.

அதிமுக வில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே உள்ளனர் ஆனால், இளைஞர்கள் வரவு இல்லை. இவை புதிய வாக்காளர்களைப் பெறத் தவறும்.

புதிய வாக்காளர்களை, தொண்டர்களைப் பெற தவறினால் தேக்க நிலை உருவாகும், நாளடைவில் கட்சிக்கான ஆதரவு எண்ணிக்கை குறைந்து வரும்.

அதிமுக எதிர்காலம் என்றாலே இளைஞர்கள் என்பது தான் பொருள்.

வாய்ப்புகளைத் தவறவிட்டது

திமுக மீது மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், ஆட்சிக்கு வந்த கடந்த இரு மாதங்களில் சிறப்பான முடிவுகளை, மாற்றங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

பல அமைச்சர்கள் சிறப்பாகச் செய்தாலும், அதிமுக செய்யத் தவறிய இந்து அறநிலையத்துறை பற்றிக் கூறியாக வேண்டும்.

தற்போது சேகர்பாபு தலைமையில் இந்து அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சேகர்பாபு செய்துகொண்டு இருப்பதை ஏன் அதிமுக செய்யத் தவறியது?

சேகர்பாபு செய்வதைத் தற்போதே கூறுவது சரியான ஒப்பீடு இல்லையென்றாலும், இவர் இரு மாதங்களில் செய்ததைக் கூட அதிமுக செய்யவில்லை.

அதிமுக செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் ஏன் செய்யத் தவறினார்கள்? சொல்லப்போனால், அதிமுக தான் இதைச் செய்து இருக்க வேண்டும்.

திமுக செய்ததற்கு இந்து எதிர்ப்பு விமர்சனத்தைச் சரி செய்யக் காரணமாகக் கூறினாலும், செயலில் யார் காட்டியது என்பதே முக்கியம்.

தீர்வு தான் முக்கியமே தவிர, காரணங்கள் தேவையில்லை.

இதுபோலத் திமுக அமைச்சர்கள் பலரும் தங்கள் பொறுப்பைத் தாமாகவோ அல்லது முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலிலோ சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

EPS செய்த பல செயல்கள் பலரால் பாராட்டப்பட்டாலும், அதிமுக ஆட்சியில் C விஜயபாஸ்கர் போன்ற வெகு சிலரே தங்கள் செயல்களால் கவனம் பெற்றனர்.

அதிமுக பல திட்டங்களை, தொழில் முதலீடுகளைச் செய்த செய்தியை மக்களிடையே கொண்டு செல்ல / பதிய வைக்கத் தவறி விட்டது.

தற்போது அதிமுக காலத்தில் பெறப்பட்ட முதலீடுகளும் திமுக பெற்றதாகச் செய்திகள் வந்து கொண்டுள்ளன.

ஓலா தவிர்த்து வேறு எதற்கும் அதிமுக எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.

எதிர்ப்புகள் இல்லை

திமுக கடந்த இரு மாதங்களில் பல சிறப்பான செயல்களைச் செய்து இருந்தாலும், நீட் தேர்வு, எரிபொருள் விலை குறைப்பு, இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை உட்படப் பல தேர்தல் வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை.

இதற்கு அதிமுக எதிர்ப்புப் பலமானதாக இல்லை. இதே நிலையில் திமுக இருந்து இருந்தால், இந்நேரம் மிகப்பெரிய சர்ச்சையாக்கி இருப்பார்கள்.

ஒரே ஒரு கூடுதல் பலம் திமுக க்கு என்னவென்றால், 90% தமிழக ஊடகங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது.

இதையும் தாண்டிப் பாஜக கொடுத்த எதிர்ப்பைக் கூட அதிமுக செய்யாமல் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்து வருகிறார்கள்.

இணையத்தில் அதிமுக IT Wing ஒன்றுமே இல்லை.

எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையே உள்ளது. ட்ரெண்டிங் செய்வதெல்லாம் பாஜக வினர் தான்.

பாஜக வளர்ச்சி

இளைய வயது அண்ணாமலையைத் தலைவராக நியமித்து இருப்பது, பாஜக வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

இளமையான தலைமையோடு அனுபவமுள்ள பலரும் இணையும் போது வளர்ச்சி அதிகளவில் இருக்கும், புதிய இளைஞர்களைக் கட்சிக்குள் கொண்டு வர முடியும்.

அண்ணாமலைக்கு உள்ள மிகப்பெரிய தகுதியாகக் கருதுவது, திமுக ஆதரவு ஊடகங்களுக்குக் கொடுக்கும் பதிலடி.

எப்படிப் பந்து போட்டாலும் பதட்டமாகாமல் அடிக்கிறார்.

கட்சியை வளர்ப்பதற்குண்டான முயற்சிகளைத் தீவிரமாக எடுத்து வருகிறார் என்பது அவருடைய முயற்சிகளிலேயே தெரிகிறது.

தேசிய கட்சி, வடமாநில கட்சி என்ற பார்வையை மாற்றத் தீவிரமாக முயல்கிறார். L முருகன் அமைத்துக்கொடுத்த வழியை அண்ணாமலை மேம்படுத்திச் செல்கிறார்.

அண்ணாமலையின் சமீப முன்னெடுப்புகள் பாஜக வளர்ந்து வருவதற்கான சிறந்த வாய்ப்புகளாகக் கருதப்படுகிறது.

அதிமுக இழந்த இளைஞர்களைப் பாஜக பெற்று வருகிறது. இதன் தாக்கம் ஓரிரு வருடங்களில் வெளிப்படையாகத் தெரியும்.

அதிமுக திமுக பாஜக

தற்போது வரை (2021*) திமுக அதிமுக என்ற இரு திராவிடக் கட்சிகளே தமிழகத்தில் உச்சத்தில் உள்ளன.

'ஜெ' இழப்பு, உட்கட்சிப் பூசல்கள், பொறுப்பில் இளைஞர்கள் இல்லாதது ஆகியவை அதிமுக வளர்ச்சியை, இருப்பைப் பாதித்து வருகிறது.

திமுக வினராக இருந்தாலும், அதிமுக வினராக இருந்தாலும் இந்த இரு கட்சிகளே போட்டியில் இருப்பதை விரும்புவார்கள்.

கட்சியினரை கேட்டாலும், இதையே தான் கூறுவார்கள். புதிதாக ஒருவர் போட்டியில் நுழைவதை விரும்பமாட்டார்கள்.

ஆனால், திமுக தற்போது செய்து கொண்டு இருப்பது, அதிமுக க்கு இழப்பையும், பாஜக க்கு வளர்ச்சியையும் கொடுக்கிறது.

அதிமுக மீதான எதிர்ப்பை விடப் பாஜக மீதான திமுக எதிர்ப்பு அதிகம்.

இச்சூழ்நிலையை அதிமுக கண்டுகொள்வதில்லை ஆனால், பாஜக சரியாகக் கையாள்கிறது, குறிப்பாக அண்ணாமலை வந்தபிறகு.

சுருக்கமாக, அதிமுக வை திமுக இறக்கினால், பாஜக வளர்ச்சி பெறும். திமுகவை எதிர்ப்பவர்களுக்குத் எதிர்காலத்தில் குறிப்பிடத் தக்க வாய்ப்பு பாஜக மட்டுமே.

எனவே, பாஜக வளர்ச்சிக்குத் திமுக மறைமுகமாகத் தவிர்க்க முடியாமல் உதவி வருகிறது.

அதிமுக என்ன ஆகும்?

மேற்கூறிய காரணங்கள் உண்மையென்றாலும், பலருக்கு இன்னும் அதிமுக மீதான பற்று குறையவில்லை குறிப்பாக முந்தைய தலைமுறையினர்.

வாய்ப்பிருந்தும் சிறப்பாகச் செய்யவில்லையே என்ற ஆதங்கமே தவிர வெறுப்பு இல்லை, இதுவே அதிமுக பலம்.

எனவே, வரும் தேர்தல்களிலும் திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக பெறும் என்பதில் சந்தேகமில்லை ஆனால், எவ்வளவு காலம் என்பது நிச்சயமற்றதாக உள்ளது.

எதிர்காலம் திமுக Vs பாஜக என்று தான் இருக்கும் ஆனால், எப்போது நடக்கும் என்பது மட்டுமே கேள்வி, நடக்குமா நடக்காதா என்பது கேள்வியல்ல.

தொடர்புடைய கட்டுரை

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. ஒரு உறையில் ஒரு வாள் மட்டும் சாத்தியம்.. அது போல் ஒரு தலைமையின் கீழ், ஒரே குடையின் கீழ் இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.. தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கும்.. முடிவுகளை எளிதாக எடுக்க உதவும்.. என் பார்வையில் கடந்த காலங்களை நோக்கும் போது திரு. பழனிச்சாமி தலைமைக்கு சரியான நபராக இருப்பார் என நம்புகிறேன்.. அவரின் திறனுக்கு ஒரே சான்று, அம்மாவின் மறைவுக்கு பின், பல குழப்பங்களுக்கு மத்தியில் ஆட்சியை முழுமையாக நடத்தியதே மிக பெரிய சாதனை.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. உண்மை தான் யாசின். ஆறு மாதம் தாண்ட மாட்டார்கள் என்று நினைத்தேன் ஆனால், கணிப்பை பொய்யாக்கி நான்கு வருடங்கள் ஆட்சி செய்து விட்டார்.

    அதுவும் பெரிய அதிருப்தி இல்லாமல், பெரிய விஷயம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here