திராவிட அரசியலை எதிர்க்கும் அனைவரும் கூறும் பொதுப்படையான விமர்சனம் “50 ஆண்டு காலத் திராவிட அரசியல், தமிழகத்தை சீரழித்து விட்டது” என்பது தான்.
காமராஜர் ஆட்சி
திராவிட அரசியல் பற்றிப் பேசினால் காமராஜர் அவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இன்றுவரை மக்கள் சிறப்பான ஆட்சியாகக் கூறுவது “காமராஜர்” ஆட்சி தான்.
காமராஜர் காலத்தில் நீர் நிலைகளுக்கு, கல்விக்கு மற்றும் ஆடம்பரமற்ற நேர்மையான அரசியலுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காலாகாலத்துக்கும் அவரின் புகழை கூறிக்கொண்டு இருக்கிறது.
அரசியல் என்றாலே சொத்துச் சேர்ப்பது என்று நினைக்கும் இக்காலத்தில், அன்று தனக்காக எந்தச் சுயநலத்திலும் ஈடுபாடாமல் மக்கள் பணியில் ஈடுபட்டவர் என்பது அனைவரும் அறிந்தது.
இப்படிப்பட்டவர் அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை காரணமாக 1967 பொதுத் தேர்தலில் விருதுநகரில் தோல்வியுற்று, திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது.
இதோடு காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.
திராவிடக் கழக ஆட்சிகள்
திராவிடக் கட்சிகள் 1967 முதல் இன்றுவரை மாற்றி மாற்றித் தமிழகத்தை ஆண்டு வருகின்றன. இந்த 50 வருடங்களைத் தான் அனைவரும் விமர்சித்து வருகிறார்கள்.
50 வருடங்களில் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லையா?
பொத்தாம் பொதுவாகத் திராவிடக் கழகக் கொள்கைகள் மீதுள்ள வெறுப்பில் இது போன்ற குற்றச்சாட்டு வைப்பது நியாயமில்லாதது.
இதை எளிமையாகப் புரிந்து கொள்ள,
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகம் அடைந்த வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் திராவிடக் கட்சிகள் ஆளாத வட இந்திய மாநிலங்கள் பெறவில்லை.
இன்னும் அடிமைத்தனம் பிற்போக்குத்தனங்களைக் கொண்ட மாநிலங்களாகத்தான் வட மாநிலங்கள் உள்ளது.
இடஒதுக்கீடு
தற்போது சர்ச்சையாகப் பேசப்படும் இடஒதுக்கீடு தான் தமிழகம் இந்த அளவுக்குச் சமமாக முன்னேற மிக முக்கியக் காரணங்களில் ஒன்று.
அடித்தட்டு மக்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்து அவர்களும் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகை இதன் மூலம் செய்யப்பட்டது.
மேல்தட்டு மக்கள் மட்டுமே தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்று முன்னேறிக்கொண்டு இருந்த காலத்தில் இட ஒதுக்கீடு அனைத்து மக்களுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது.
இதன் மூலம் தற்போது வட மாநிலங்களில் கிடைக்காத பொருளாதார வளர்ச்சி, கல்வியறிவு, வாய்ப்புகள் தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்து இருக்கிறது.
தற்போது “பொருளாதார இட ஒதுக்கீடாக” மாற்றம் பெற வேற வேண்டும் என்று விமர்சிக்கப்படுகிறது.
சாதி அடிப்படையில் இல்லாமல் பொருளாதார நிலையில் யாரெல்லாம் பின்னடைந்து இருக்கிறார்களோ அவர்களுக்கான இட ஒதுக்கீடு.
இன்னும் பலர் இட ஒதுக்கீடே கூடாது என்று வாதிட்டு வருகிறார்கள். இது குறித்துப் பிறிதொரு கட்டுரையில் விவாதிப்போம். மிகப்பெரிய விவாதங்களைக் கொண்டது.
சமமான பொருளாதார வளர்ச்சி
திராவிட ஆட்சி அல்லாத வட மாநிலங்களில் ஒரு மாநிலத்துக்கு ஒரு நகரம் அதிகபட்சம் இரு நகரங்கள் வளர்ச்சி பெற்றதாக உள்ளது.
தென் மாநிலங்களிலேயே எடுத்துக்கொண்டால் ஒரு மாநிலத்துக்கு இரண்டு நகரங்களை அதிகப் பட்சம் மூன்று நகரங்களை உதாரணமாகக் கூறலாம்.
ஆனால், இங்கே தான் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.
சென்னை, கோயமுத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், நெல்லை என்று பல நகரங்களின் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
சென்னையில் இல்லை என்றால், மற்ற நகரங்கள் வாழ்க்கையைத் தொடர வாய்ப்பளித்துள்ளன, தொடர்ச்சியாக முன்னேற்றமும் அடைந்து வருகின்றன.
அனைத்து மக்களும் வாய்ப்பு பெறவில்லை என்றால், சட்டம் இருந்தும் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்றால், தமிழகமும் மற்ற மாநிலங்களைப் போல ஒரு பக்கம் மட்டுமே வீக்கத்துடன் இருந்து இருக்கும். இது சீரான வளர்ச்சி அல்ல.
படிப்பறிவு
கேரளாக்கு அடுத்ததாகப் படிப்பறிவில் முன்னணியில் இருக்கிறது. இதுவே மக்களைப் பொருளாதார நிலையில் தமிழகத்தை உயர்த்தி இருப்பதற்குக் காரணம்.
படிப்புக்காக மதிய உணவு முதற்கொண்டு (காமராஜர் கொண்டு வந்ததன் தொடர்ச்சி) பல்வேறு திட்டங்கள், வாய்ப்புகளே கல்வியறிவு பெறுவதில் அதிக வாய்ப்பை மக்களுக்குக் கொடுத்தது.
கேரளா படிப்பறிவு பெற்றாலும் கம்யூனிச கொள்கைகளால் அவர்கள் மாநிலம் தொழில்துறையில் முன்னேற்றம் அடையவில்லை.
தொடர்ச்சியான போராட்டங்கள், எதிர்ப்புகள் என்று தொழில்துறை தமிழ்நாடை ஒப்பிடும் போது வளர்ச்சி பெறவில்லை.
எனவே, அங்குள்ள மக்கள் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் தான் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.
மொழி அடையாளம்
மற்ற மாநிலங்கள் இந்தி திணிப்பை அனுமதித்துத் தங்கள் மொழி அடையாளங்களை இழந்து வருகின்றன.
ஆனால், இந்தி திணிப்பை அனுமதித்தால் நம் அடையாளத்தை இழந்து விடுவோம் என்று அப்போதே இதை எதிர்த்தவர்கள் திராவிடக் கட்சிகள்.
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது, “இந்தியை யாரும் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்“.
இது குறித்த கேள்விகள், சந்தேகங்களுக்கு ஏற்கனவே பின்வரும் கட்டுரையில் விரிவாகப் பதில் அளித்து விட்டேன்.
Read : இந்தித் திணிப்பு அழிக்கும் தமிழ் அடையாளம்! [FAQ]
பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மொழி அழிக்கப்படுவதை உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாம் இவற்றுக்கு முன்னோடியாக இருந்து இருக்கிறோம்.
தமிழகம் அனைத்து விஷயங்களிலும் முன்னோடியாகவே இருந்து இருக்கிறது. துவக்கத்தில் விமர்சித்தவர்கள் கூடப் பின்னர் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள்.
தனி நபர் வருமானம்
ஒரு நாடு பொருளாதார ரீதியாக எப்போது முன்னேறும் என்றால், தனிநபர் வருமானம் உயரும் போது தான். இது மாநிலத்துக்கும் பொருந்தும்.
தனி நபர் வருமானம், பொருளாதார ரீதியாகத் திராவிடக் கட்சிகள் ஆளாத வட மாநிலங்களில் அதலபாதாளத்தில் உள்ளது.
இன்னும் அவர்கள் மிக மிகப் பின்தங்கிய ஏழ்மை நிலையிலேயே இருக்கிறார்கள்.
இதை உணர்ந்து கொள்ள நீங்கள் பொருளாதாரத்தைக் கரைத்து குடித்து இருக்க வேண்டிய தேவையில்லை.
அங்கு வாய்ப்பு இல்லாமல் தமிழகத்துக்குப் படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்களைப் பார்த்தாலே போதும்.
அங்கே வாய்ப்பு இல்லாமல் தங்களை உயர்த்திக்கொள்ள, பொருளாதார ரீதியாக வளம் பெற தமிழகம் வருகிறார்கள்.
இங்கே தமிழகத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஊழியத்தை விடவும் குறைவாகவும், அதிக உழைப்பையும் கொடுத்து வருகிறார்கள் இருப்பினும் இதுவே அவர்களுக்குப் பெரிய வசதியாகவும் இலாபமாகவும் இருக்கிறது.
அப்படியென்றால் அவர்கள் மாநிலத்தின் நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
GDP
தமிழகம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [Gross domestic product (GDP)] இரண்டாம் இடத்தில் கடந்த ஆண்டு வரை இருந்தது, தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மூன்றாம் இடத்துக்கு வந்து விட்டது. முதலிடத்தில் மஹாராஷ்ட்ரா.
இவ்வளவு ஊழல்கள் நடைபெற்றும் நாம் மற்ற மாநிலங்களை விட உற்பத்தியில் முன்னணியில் தான் இருக்கிறோம். இதற்கு முந்தைய அரசுகளின் பங்கும் உள்ளது.
பிரச்சனை எங்கே தோன்றியது?
1991 வரை ஊழல்கள் அப்படி இப்படி இருந்தாலும், ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு படு மோசமாக ஊழல் தொடங்கியது.
ஜெ க்கு அனுபவம் இல்லையாததாலும் ராஜிவ் காந்தி இறப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதும் அவருக்குக் கட்டுப்பாடற்ற மனநிலையைக் கொடுத்தது.
ஊழல் செய்வதில் வரைமுறையற்று மிக அநியாயமாக நடந்து கொண்டதால், அதிமுக க்கு படுதோல்வியைத் தமிழக மக்கள் பரிசாகக் கொடுத்தார்கள்.
ஜெ தைரியமாகச் செய்தாலும் மாட்டிக்கொள்ளும்படி செய்த ஊழலை உணர்ந்த திமுக, அதே ஊழலை மாட்டிக்கொள்ளாத மாதிரி எப்படிச் செய்வது என்று திறமையாகச் செய்தார்கள்.
அடுத்து வரும் காலங்களில் வந்த ஜெ, முன்பு போல மோசமான ஆட்சியாக இல்லாமல், ஓரளவு மக்கள் வரவேற்பு ஆட்சியை நடத்தினார்.
மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.
ஜெ திரும்ப ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தலில் திமுக “இலவச வண்ண தொலைக்காட்சி” அறிவிப்பை வெளியிட்டது.
மக்களை இலவசத்துக்குக் கெடுத்ததில் இந்த அறிவிப்பு முக்கியப் பங்கு வகித்தது.
இதில் திமுக ஆட்சியைப் பெற்றாலும் அறுதிப் பெரும்பான்மை பெற முடியவில்லை, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை நடத்தியது.
ஜெ “மைனாரிட்டி திமுக அரசு” என்று விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு வந்த தேர்தல்கள் இலவசத்தை மோசமான எல்லைக்குத் தமிழகத்தைக் கொண்டு சேர்த்தன. இதற்கு மக்களும் மிக முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர்.
1991 க்கு பிறகு தமிழகத்தில் ஊழல் மட்டுமேவா?
அப்படிக் கூற முடியாது. உதாரணத்துக்கு முன்பு ஊழல் குறைவு வளர்ச்சி அதிகம் என்று இருந்தது தற்போது வளர்ச்சி குறைவு, ஊழல் அதிகம் என்ற நிலையாகி விட்டது.
இருப்பினும் இந்த வளர்ச்சி கூட மற்ற வட மாநிலங்களை விட அதிகமாகவும் மற்ற தென் மாநிலங்களை விடக் குறைவாகவும் சென்று கொண்டு இருக்கிறது.
குறிப்பாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்கள் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன. தமிழகத் தொழில் முதலீடுகளை அவை பெற்று வருகின்றன.
திறமையை வீணடிக்கும் அரசியல்வாதிகள்
தமிழக மக்களின் திறமைக்கும், அன்புக்கும், அவர்களின் போராட்ட குணத்துக்கும், அனைவரையும் நேசிக்கும் குணத்துக்கும், தங்கள் மொழி மீது அவர்கள் கொண்ட பற்றுதலுக்கும் சரியான தலைமை அமைந்தால் தமிழகம் இருக்கும் நிலையே வேறு.
மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் வளர்ச்சியைக் கனவிலும் நினைக்க முடியாது.
இங்குள்ள மக்களின் திறமை, வளம் வீணடிக்கப்படுகிறதே என்ற ஆதங்கம் அனைவரைப் போல எனக்கும் இருக்கிறது.
விமர்சனங்கள்
திராவிட கட்சிகள் என்றில்லை, மற்ற கட்சிகள் மீதும் எனக்கு விமர்சனங்கள் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
திராவிட அரசியல் கட்சிகள் தற்போது தங்கள் கொள்கைகளில் இருந்து விலகி, தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்ற நிலையில் இருப்பதாலும், ஊழல்களாலும், கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
ஆனால், நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி மறுக்க முடியாத உண்மைகள் என்று உள்ளது, அதுவே நான் மேற்கூறியது.
திராவிடக் கட்சிகளின் செயல்களை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல.
காலமாற்றம்
அரசியல் என்றாலே கொள்ளை திருட்டு என்ற நிலையைச் சமூகம் மாற்றி விட்டது, இதற்குப் பொதுமக்களும் ஒரு வகையில் காரணம்.
அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறிக்கொண்டு, இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.
கடந்த வருடங்களில் தமிழகத்தில் நடந்த மோசமான ஊழல்கள், இலவசத்தின் மூலமாக மக்களை ஏமாற்றியதை எப்படி மறுக்க முடியாதோ அதே போலத் தமிழகத்தின் வளர்ச்சியில் திராவிட அரசியலின் பங்கையும் மறுக்க முடியாது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
மருத்துவ துறையில் தமிழகம் தான் இந்தியாவுக்கே முன்னோடி. வெளிநாட்டவர்களும் தமிழ்நாட்டில் தான் சிகிச்சை பெற விரும்புகிறார்கள் என்று மத்திய அமைச்சரே பட்டியம் கூறுகிறார். உயர்கல்வியிலும் தமிழகம் நாட்டின் முதன்மை மாநிலகமாக திகழ்கிறது
சரியான பதிவு. அனைத்தும் மறுக்க முடியாத உண்மை
கிரி, நேரில் உட்கார்ந்து பேசினால் தொடர்ச்சியாக 5 / 10 நேரம் பேசினால் கூட ஒரு இறுதி முடிவுக்கு வர முடியாது!!!! நிறைய சந்தர்ப்பங்களில் நண்பர்களுடன் விவாதித்ததுண்டு… ஆனால் விடை தான் கிடைக்கவில்லை… ஒருவர் மற்றொருவரை குறை சொல்வது மட்டுமே இங்கு உண்டு.. ஆனால் மக்கள் தான் பாவம். ஓவ்வொரு தேர்தலிலும் யாராவது நன்மை செய்வார்கள் என்று நம்பி ஏமார்ந்து தான் மிச்சம்..
திறமையான, நேர்மையான ஆட்சியாளர்கள் நம்மை ஆளவில்லை என்பது தான் நிஜம்.. திராவிடத்தையோ, மற்றவற்றையோ குறை கூறி ஒன்றும் ஆகப்போவதில்லை.. என்னுடைய ஒரே கேள்வி???? சுதந்திரமடைந்த பின் எத்தனை அரசியல்வாதிகள் தங்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றனர்???? இல்லை இங்கு குற்றமே நடக்கவில்லையா??? … நிறையபேசலாம்.. மனது வலிக்கிறது கிரி.. நல்லது நடக்கும் என நம்புவோம்..
@உடன்பிறப்பு வாங்க உடன்பிறப்பு எப்படி இருக்கீங்க? ரொம்ப வருசத்துக்கு அப்புறமா எட்டி பார்த்து இருக்கீங்க 🙂
@ராமகிருஷ்ணன் நன்றி
@யாசின் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் 🙂