இந்து சமய அறநிலையத்துறை தேவையா?

4
இந்து சமய அறநிலையத்துறை

ந்துக் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல காலமாக உள்ளது. Image Credit

இந்து சமய அறநிலையத்துறை

கோவில் பராமரிப்புக்காகக் கொடுக்கப்பட்ட நிலங்கள், சொத்துகள் பெரும்பாலானவை கோவிலுக்காகப் பயன்படுத்தப்படாமல் முறைகேடு நடக்கின்றன.

ஒவ்வொரு கோவிலுக்கும் பண்டைய காலத்தில், அதன் பிறகும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பராமரிப்புக்காக எழுதி வைக்கப்பட்டன.

அதாவது, தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் குத்தகை பணத்தை வைத்து, கோவிலைப் பராமரிக்க, புதுப்பிக்க, கும்பாபிஷேகம் நடத்த முடியும்.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்த பிறகு கோவிலின் வருமானம் கோவிலுக்குக் கொஞ்சமாகக் கொடுக்கப்பட்டு மீதி நிதி முழுவதும் அரசு எடுத்துக்கொள்கிறது.

ஆகப்பெரிய அரசாங்க சுரண்டல்

கோவில்களின் அருகே உள்ள இடங்களின் வாடகை மிகக்குறைந்த கட்டணத்தில் தெரிந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுச் சுரண்டப்படுகிறது.

குறைந்த கட்டணம் என்றால், ₹20,000 மதிப்புள்ள இடத்துக்கு ₹1,500, ₹2,000 தான் வாடகையாக இருக்கும்.

இப்படிக் குறைவான வாடகைக்குக் கொடுக்கப்பட்டும், அந்தப்பணத்திலும் தமிழகம் முழுக்கப் பல கோடிகள் இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ளது.

மிகப்பிரபலமான சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரவேண்டிய பணமே கோடிக்கணக்கில் பாக்கியுள்ளது.

நிலங்கள் மிகக் குறைந்த விலைக்குக் குத்தகைக்கு விடப்படும், மேலே வாடகைக்கு விட்டதைப் போலக் குறைந்த பணத்துக்கு.

பல காலமாகத் தலைமுறையாகப் பலர் அனுபவித்து வருகிறார்கள்.

பல நூறு ஏக்கர் கோவில் இடங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன, அதாவது வேறு நபர்களின் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டது.

குறைந்த பட்ச ஆண்டுக் குத்தகை பணமாக ₹10,000 பல ஆயிரம் ஏக்கர்களுக்கு வந்தால், ஆண்டுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்!

இவையல்லாது கோவில் வாடகை வருமானம் தனி.

இவ்வளவு வருமானமும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது சுரண்டப்படுகிறது.

இன்னும் ஆழமாகச் சென்று விவரங்களைச் சேகரித்தால், இப்படியும் கூடக் கொடுமை நடக்குமா? என்று எண்ணும் அளவுக்குச் சுரண்டல் நடைபெற்றுள்ளதை அறியலாம்.

ஊதியம்

கோவில் பூசாரிகளுக்கு நியாயமான ஊதியம் கொடுக்கப்படுவது கிடையாது. இன்னமும் (*2021) மாதத்துக்கு ₹200, ₹300 பெறும் நபர்கள் உள்ளனர்.

கூட்டம் வரும் கோவில்களில் சம்பளம் குறைவாக இருந்தாலும் காணிக்கையில் இவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.

ஆனால், கூட்டம் இல்லாத கோவில்களில் பணிபுரிபவர்கள் நிலை மிகப் பரிதாபம். இவர்களின் எண்ணிக்கையே தமிழகத்தில் அதிகம்.

இத்துறைக்கு என்றுள்ள ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம், நியாயமாகக் கோவில் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது சோகம்.

யாருக்கு நியாயமாகச் செல்ல வேண்டுமோ, அவர்களை நான் பராமரிக்கிறேன் என்று அரசு வெட்டியாகச் செலவு செய்துகொண்டுள்ளது ஆகப்பெரிய முட்டாள்தனம்.

அதை விடக்கொடுமை, கோவில் ஊழியர்களை விட, இத்துறையை பராமரிப்பவர்களுக்கு பல மடங்கு ஊதியம், ஏராளமான சலுகைகள்!

இது நியாயமா?

அறநிலையத்துறை என்ன செய்துள்ளது?

கோவில் நிலங்கள், இடங்கள் வருமானம் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தில் புதிதாக ஏதாவது ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளதா?

இந்துக்கள் அனைவரும் பெருமைப்படும் படி மிகப்பெரிய கோவிலைக் கட்டியுள்ளதா? அல்லது ஏற்கனவே உள்ள கோவிலை மேம்படுத்தியுள்ளதா?

பழனி கோவிலின் பெரிய வருமானத்தில் அக்கோவிலையும், அப்பகுதியையும் எவ்வளவோ மாற்றி இருக்கலாம், மேம்படுத்தி இருக்கலாம் ஆனால், நடப்பது என்ன?

திருப்பதி எப்படியுள்ளது? பழனி எப்படியுள்ளது?

திருப்பதி வருமானத்தை ஒப்பிட முடியாது இருப்பினும் கிடைக்கும் வருவாயில் நிச்சயம் சிறப்பான மாற்றத்தைப் பழனியில் கொண்டு வந்து இருக்கலாம்.

ஆனால், இதுவே பரவாயில்லை என்று நினைக்கும் அளவில் தான் தற்போதைய நிலைமை உள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புதமான கோவில்கள் சிதைந்து வருகிறது. இதைப் பற்றி எந்த அக்கறையும் இந்த அமைப்புக்கு இல்லை.

இப்படியே தொடர்ந்தால், எதிர்காலத்தில் இந்து மதத்தின் பெருமை, வரலாறுகள் முற்றிலும் அழிக்கப்படும்.

ஜக்கி வாசுதேவ்

தற்போது கோவிலை மக்களிடமே கொடுக்க வேண்டும் என்ற குரலுடன் ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்து வருவதற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது.

ஜக்கி வாசுதேவுக்கு நேரடியான ஆதரவு தராதவர்கள் பலரும் அவருடைய “கோயில் அடிமை நிறுத்து” கருத்தை ஏற்றுக்கொள்வார்கள்.

ஜக்கி வாசுதேவ் பல மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறார் என்றாலும், இதை வைத்துத் தன்னை இந்து மக்களிடையே முக்கிய நபராக முன்னிறுத்த நினைத்தால் ஏமாற்றமே கிடைக்கும்.

இந்துக்கள் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உள்நோக்கத்தில் இதையெல்லாம் செய்து இருக்க மாட்டார் என்று கருதுகிறேன்.

ஒருவேளை இவரது முன்னெடுப்புத் தற்போது புறக்கணிக்கப்படலாம் ஆனால், எதிர்காலத்தில் இதற்குத் தீர்வு கிடைத்தால், ஒரு பெரிய முயற்சியைத் துவங்கி வைத்த பெருமையைப் பெறுவார்.

வருமானம்

தமிழக அரசு வருமானம் வரும் வழிகளை உருவாக்காமல் எப்படி டாஸ்மாக் வருமானத்தை நம்பி உள்ளதோ அது போலக் கோவில் வருமானத்தையும் குறிப்பிடத் தக்க வருமானமாகக் கருதுகிறது.

டாஸ்மாக் அளவுக்கு வருமானம் இல்லையென்றாலும், கோவில்களில் வருகிறது.

TNPSC தேர்வு எழுதி இந்து சமய அறநிலையத்துறை பணியில் இணையும் அளவுக்குக் கோவில்களில் வருமானம் உள்ளது என்றால், புரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு தனது வருமானத்துக்கு வேறு வழிகளைத் தேட வேண்டுமே தவிரக் கோவில் வருமானத்தைப் பயன்படுத்தக் கூடாது.

கோவில்கள் புறக்கணிக்கப்படுகின்றன

கோவிலில் உண்டியல் இருந்தால், இந்து சமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும். இதற்காகவே சில கோவில்களில் உண்டியல் இருக்காது.

எங்கள் கோபி பகுதியில் பிரபலமான பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்ற பிறகு வளர்ச்சியே பெறவில்லை.

அதற்கு முன்பு திருவிழா காலங்களில் மிகப்பெரிய கொண்டாட்டங்கள் இருந்தன. கோவிலுக்காகச் செலவைச் செய்ய அரசாங்கம் முன் வருவதில்லை.

கோவிலுக்கென்று ஏராளமான நிலங்கள், அதன் மூலம் வருமானம் உள்ளது ஆனால், அவை கோவிலுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்து சமய அறநிலையத்துறை இந்து கோவில்களின் வளர்ச்சிக்கு, பராமரிப்புக்கு ஏதாவது இதுவரை ஆக்கப்பூர்வமாகச் செய்துள்ளதா என்றால் இல்லை.

அறநிலையத்துறை செய்த / செய்யும் ஒரே நல்ல செயல், கோவில் யானைகளுக்கு ஆண்டுத் தோறும் நடத்தும் புத்துணர்வு முகாம் மட்டுமே!

அதுவும் ‘ஜெ‘ அறிவிப்பால் நடந்தது.

கோவில்களை மக்களுக்கே கொடுப்பது சாத்தியமா?

அவ்வளவு எளிதான செயல் அல்ல.

காரணம், இத்துறையில் பணி புரிபவர்கள் ஏராளம் உள்ளனர். எந்த ஒரு துறைக்கும் குறைந்தது இல்லாமல், பல உள் அமைப்புகள் உள்ளன.

இத்துறையைக் கலைத்தால், இத்துறையில் பணி புரிபவர்களுக்கு மாற்று பணி ஒதுக்க வேண்டும்.

ஏற்கனவே நிதி இல்லாமல் தள்ளாடி கொண்டு பல ஆயிரம் கோடி கடனில் இருக்கும் தமிழக அரசு இதைச் செய்யுமா என்பது கேள்விக்குறி?

இவற்றையெல்லாம் காரணம் கூறி தவிர்ப்பதும் நியாயமான செயல் அல்ல.

சரியான திட்டமிடுதலுடன் முன்னெடுத்தால், சாத்தியமே. இதைச் செய்யவில்லையென்றால், கோவில்கள் அழிவது உறுதி.

அறநிலையத்துறை இல்லையென்றால் நல்லதா?

இதில் வேறு பிரச்சனைகள் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லையென்றால், உள்ளூர் பெரிய மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அரசாங்கம் கொள்ளையடித்ததை இவர்களும் செய்வார்கள், செய்தார்கள்.

அதாவது இவர்களுக்குத் தேவையான நபர்களுக்குக் குத்தகைக்குக் கொடுப்பது, கோவில் கணக்கைக் காட்டாமல் இருப்பது என்பன நடக்கும், நடந்தது, நடக்கிறது.

தற்போது இது பற்றிய விழிப்புணர்வு, கேள்வி கேட்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்து இருப்பதால், இவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதாவது முன்பு போல ஊழல் செய்ய முடியாது ஆனால், நடக்கும்.

தணிக்கை

சுருக்கமாக, அரசாங்கம் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட மக்கள் பராமரிப்பின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் அதிகமாகவே இருக்கும்.

எனவே, மக்களுக்கே கோவில்கள் திரும்பக் கொடுக்கப்பட்டாலும், தணிக்கை செய்வதை முறைப்படுத்தலாம்.

இல்லையென்றால், கொள்ளைக்காரன் கைகளில் இருந்து திருடன் கைகளுக்குப் போனது போல ஆகி விடும்.

மசூதிகள், தேவாலயங்கள் இப்பட்டியலில் வராத போது கோவிலை மட்டும் கொண்டு வருவது நியாயமில்லை.

அவரவர் வழிபாட்டு இடங்களை அவரவர் பராமரிக்க உரிமையுண்டு.

கோவில் மூலமாகக் கிடைக்கும் வருமானத்தை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்த அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது, நியாயமும் இல்லை.

செலவுகளை முறைப்படுத்த (தணிக்கை) அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். எதற்குச் செலவு செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க முடியாது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, மிகவும் அலசி விரிவாக எழுதி உள்ளீர்கள்.. நன்றி.

  2. Arumaya padivu, as some one who has been benefited from Isha yoga, I’m sure Sadhguru is spearheading this jus for the cause not to boast his prominence. As you rightly pointed out though it’s tough to achieve we have to do this to preserve our culture

  3. The control of the temples should be given to the a committee of the village or town and the income should be spent on the progress and development of facilities to the temple. Auditing should be scrupulous and the problem should be sorted out by retired judges. Hindu Endowment may be abolished which eats most of the income of the temples.🙏

  4. The control of the temples should be given to the a committee of the village or town and the income should be spent on the progress and development of facilities to the temple. Auditing should be scrupulous and the problem should be sorted out by retired judges. Hindu Endowment may be abolished which eats most of the income of the temples.🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here