சசிகலா கும்பல் சாதித்தவை!

3
சசிகலா

சிகலா சிறை சென்று விட்டார் என்றாலும் அவர் சிலவற்றைச் சாதித்து இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. Image Credit

என்னளவில் தோன்றியவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

சசிகலா 

சசி கும்பல் செய்ததிலேயே மிகப்பெரிய நடவடிக்கை என்னவென்றால் பிரச்சனையானவுடன் MLA க்கள் அனைவரையும் அப்போதே பேருந்தில் அழைத்துக்கொண்டு கூவத்தூர் “கோல்டன் பே ரிசார்ட்” சென்றது.

இது மிகச்சிறந்த முடிவாக என்னளவில் தோன்றுகிறது.

கோல்டன் பே ரிசார்ட்

“கோல்டன் பே ரிசார்ட்” மூன்று பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டு ஒரு பக்கம் மட்டுமே போக்குவரத்து நடைபெற்ற இடம்.

எனவே, வேறு எந்த வகையிலும் அங்கே உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாது, ஊடகங்கள் உள்ளே வர முடியாது.

இந்த யோசனையை யார் கூறி இருந்தாலும், பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

அங்கே இருந்தவர்களை வெளியே விட்டால், நிச்சயம் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்து விடுவார்கள் என்று, உடை முதற்கொண்டு அனைவருக்கும் புதியதாகத் தருவித்து அங்கேயே வைத்துக் கொண்டனர்.

பணம் அவர்களுக்குக் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது குறித்துப் பெரும்பாலான ஊடகங்கள் எழுதி விட்டன, பொதுமக்களும் இதை அறியாதவர்கள் அல்ல.

பதவியை அடைய இவர்கள் செய்த முதலீடு வீணாகி விடும் என்று கூறப்பட்டு இனி வரும் காலம் சம்பாதிக்கும் வழிகளைக் கூறி சமாதானப்படுத்தப்பட்டு இருப்பார்கள்.

சிலர் மிரட்டப்பட்டும் இருக்கலாம் ஆனாலும், 10 நாட்கள் இங்கேயே வைத்து இருந்தது பெரும் சாதனையே!

ஊடகங்கள் கேட்கும் போது “விருப்பப்பட்டு இருக்கிறோம்” என்று கிளிப் பிள்ளை சொல்வது போல திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டு இருந்தார்கள்.

இதே MLA க்கள் கூவத்தூரில் இல்லாமல் அவரது இல்லங்களில் இருந்து இருந்தால், நிச்சயம் வீட்டினர், உள்ளூர் மக்கள் நெருக்கடி மற்றும் பெரும்பான்மை பொதுமக்கள் ஆதரவு காரணமாகப் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பார்கள்.

இதைச் சசி கும்பல் உணர்ந்து தான் இவர்களை வெளியே விடவில்லை.

சட்டசபை

இதோடு இவர்கள் திட்டம் முடிந்து விடவில்லை. சட்டசபையில் பிரச்சனை நிச்சயம் நடக்கும் எனவே, அதிமுகத் தரப்பில் ஒருவர் கூடப் பிரச்சனை செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருத்தர் கூட இவர்கள் எழுந்து பிரச்சனை செய்யாமல் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதில் சரியாக இருந்துள்ளார்கள். சாதித்தும் இருக்கிறார்கள்.

அதிமுக வினர் பிரச்சனை செய்து இருந்தால், சூழ்நிலை மாறி இருந்து இருக்க வாய்ப்புண்டு.

பன்னீர் செல்வம் மீண்டும் முதல்வர் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றியும் இருக்கிறார்கள்.

தற்போது சசிகலா நினைத்தபடி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகி விட்டார்.

இதன் பிறகு என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது இப்படியே மீதி உள்ள வருடங்கள் தொடரலாம் ஆனால், அவர்கள் திட்டமிட்டதைச் சாதித்து விட்டார்கள் என்பது உண்மை.

இத்தனை கோடி மக்கள் அவர்களுக்கு எதிராக இருந்தாலும், 125 பேரை கைக்குள் வைத்துக்கொண்டு அவர்கள் நினைத்ததைச் சாதித்து விட்டார்கள். மக்கள் முட்டாள்கள் ஆனார்கள்.

சசிகலா கும்பல் முட்டாள் கொள்ளைக்காரர்கள் அல்ல, புத்திசாலி மற்றும் முரட்டு கொள்ளைக்காரர்கள்.

இவர்களிடம் மீதியுள்ள 4+ வருடங்கள் தமிழகம் இருந்தால்….. ஒன்றும் சொல்வதற்கு இல்லை 🙁 .

கொசுறு 1

MLA க்களைப் பணம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக இருந்து விட்டார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தேர்தல் சமயத்தில் யார் பணம் வாங்காமல் ஓட்டுப்போட்டார்களோ அவர்களுக்கு மட்டுமே இவர்களைக் கேள்வி கேட்க அருகதை உள்ளது.

கடந்த இடைத்தேர்தலில் Demonetization காரணமாகப் பழைய நோட்டை வாக்காளர்களுக்குக் கொடுத்து, தேர்தல் முடிந்த அடுத்த நாள் அதை மாற்ற வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.

இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?!

இவர்களுக்கும் இந்தக் கேடு கெட்ட MLA க்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்!! பணம் வாங்கி வாக்களித்தவர்களுக்கு எதுக்குக் கோபம், ரோசம் எல்லாம்!

எண்ணம் போல வாழ்க்கை.

கொசுறு 2

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இனி வரும் காலம் பல்வேறு பிரச்சனைகளைத் தமிழகம் எதிர்கொள்ளும் காலம்.

மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை தமிழகம் எதிர்கொள்ளப்போகிறது.

இதோட மற்ற மாநிலங்கள் கட்டும் அணைகள், தடுப்பணைகள் பிரச்சனை, மீத்தேனுக்கு தம்பியாக இன்னொரு பிரச்சனை என்று வரிசை கட்டி துவைக்கப்போகிறது.

எனவே, தற்போது யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் அடிக்கப்போகும் கொள்ளையையும் தாண்டி விழி பிதுங்கி விடுவது உறுதி.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, சிறுவயது முதல் பல நேரங்களில் யோசித்தத்துண்டு, எப்படி வெறும் 20000 ஆங்கிலபடைவீரர்களை மட்டுமே கொண்டு இந்திய முழுவதும் வெள்ளைக்கார்கள் ஆட்சி செய்தர்கள் என்று… தற்போது நடைபெறும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது எல்லாம் தெளிவாக புரிகிறது.

    ஒவ்வொரு மாநிலமும் விரைவாக முன்னேறி கொண்டு இருக்கும் வேளையில் நமது நிலை எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைத்ததிலிருந்து ஏதும் திட்டங்கள் நடைபெற்றதா என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. “எப்படி வெறும் 20000 ஆங்கிலபடைவீரர்களை மட்டுமே கொண்டு இந்திய முழுவதும் வெள்ளைக்கார்கள் ஆட்சி செய்தர்கள் என்று… தற்போது நடைபெறும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது எல்லாம் தெளிவாக புரிகிறது.”

    செம்ம ஒப்பீடு யாசின் 🙂

  3. ஜெயலலிதா இறந்த பின்பு, அதிமுக அமைச்சர்கள், செய்தி தொடர்பாளர்கள் சுதந்திரமாக பேசத்தொடங்கியுள்ளார்கள். இதையும் சசிகலாவின் சாதனையாகத்தான் பார்க்க வேண்டும். 🙂

    ஜெயலலிதா இல்லாத சூழலில், பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த போதும் சரி [புயல் சீரமைப்பு] எடப்பாடி முதல்வராக பதவி ஏற்றவுடன் வறட்சி நிவாரணம் வழங்கிய வேகம் ஆகட்டும்; ஒருவித பயத்தில் சில திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்றே நினைக்கிறேன் [ பிஜேபியின் இடையூறு இல்லாத பட்சத்தில்].

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!