தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள், கடுமையான பரப்புரைகளுக்கு இடையே நடந்து முடிந்து தேர்தல் முடிவு நாளான மே 2 யை எதிர்நோக்கி அனைவரும் காத்துள்ளார்கள். Image Credit
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021
மிகப்பெரிய ஆளுமைகளான கலைஞர் மற்றும் ‘ஜெ‘ இல்லாமல் நடந்துள்ள தேர்தல். அதிமுக திமுக இரு கட்சிகளுமே தீவிர பரப்புரையில் ஈடுபட்டன.
அதிமுக
யாருமே எடப்பாடி பழனிச்சாமி இதுபோல விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைத்ததில்லை. 4 – 6 மாதங்கள் மட்டுமே ஆட்சி தாங்கும் என்று அனைவரும் நினைத்த நிலையில், தேர்தலில் திமுக க்கு கடும் போட்டியை அளித்து விட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ‘ஜெ’ ஆட்சியை விடப் பலருக்குச் சுதந்திரமாக இருந்தது. எனவே, பலரும் தங்கள் தனித்துவத்தைக் காட்டினார்கள்.
குறிப்பாக விஜய பாஸ்கர் கொரோனா சமயத்தில் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பு.
பழனிச்சாமி பெரிய சர்ச்சைகள் இல்லாமல் தன்னை ஒரு தலைவராக நிலை நிறுத்திக் கொண்டார்.
அவசியமற்று அனைத்துக்கும் கருத்துக் கூறிக்கொண்டிராமல், தேவையான நேரத்தில் மட்டும் பேசியது, ஒரு முதலமைச்சருக்குண்டான மதிப்பைத் தக்க வைத்தது.
OPS யை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்று பலரும் நினைத்த வேளையில் சுமூகமாகக் கடந்து சென்று விட்டார்.
சசிகலா பிரச்சனைகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டார். இது போலக் கூற ஏராளமான சம்பவங்கள் உள்ளன.
தனது 4 1/2 வருட ஆட்சியில் மக்களின் மனதில் பெரியளவு வெறுப்புணர்வு இல்லாத அளவுக்கு நுழைந்து விட்டார்.
மக்களும் கடந்த ஒட்டுமொத்த 10 வருடங்களைக் கணக்கில் கொள்ளாமல் இவரின் ஆட்சி காலத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.
கொரோனா உட்படப் பல்வேறு நடவடிக்கைகள் பலரின் பாராட்டைப் பெற்றன.
பரப்புரையிலும் எச்சரிக்கையாகவே நடந்து கொண்டார். திமுக கூறிய தேர்தல் வாக்குறுதிகளைத் தானும் கூறியது மட்டுமே சலசலப்பை ஏற்படுத்தின.
பாஜக கூட்டணி இருந்தாலும், அப்படியே இறுதிவரை கொண்டு வந்து விட்டார்.
திமுக
தமிழகத்துக்குப் பழக்கமில்லாத பிரசாந்த் கிஷோர் வழிகாட்டுதலை பின்பற்றினாலும் ஸ்டாலின் உழைப்பு அபரிமிதமானது.
வாழ்வா சாவா தேர்தல் என்பதால், துவக்கம் முதல் இறுதி வரை ஸ்டாலினின் ஓய்வில்லா பரப்புரை சிறப்பு.
துவக்கத்தில் எப்படி உற்சாகமாகப் பரப்புரை செய்தாரோ அதே அளவு உற்சாகத்துடன் இறுதிவரை பரப்புரை செய்தது பாராட்டத்தக்கது.
வழக்கமாக ஆளும் கட்சிக்கு இருக்கும் எதிர்ப்பு ஸ்டாலினுக்குச் சாதகமாக இருந்தது.
எனவே, துவக்கத்தில் இருந்தே திமுகப் பெரியளவில் வெற்றி பெறும் என்று அனைவராலும் கூறப்பட்டது.
கலைஞர் இல்லாததைக் காரணம் காட்டி ஸ்டாலின் விமர்சிக்கப்பட்டாலும், பெரிய சர்ச்சைகள் இல்லாமல் கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி வந்து விட்டார்.
அனைவரையும் வியக்க வைத்த சம்பவம் எதுவென்றால், கூட்டணி கட்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவர்களுக்குக் குறைவான இடங்களைக் கொடுத்தும் தன்னுடனே தக்க வைத்துக்கொண்டது.
கலைஞர் கூட இவ்வளவு குறைவான இடங்களைக் கொடுத்ததாக நினைவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கும் வேறு போக்கிடம் இல்லையென்பதால், ஸ்டாலின் நெருக்கடிக்குப் பணிந்து விட்டார்கள்.
துவக்கத்தில் இருந்து இறுதி வரை பாஜக மீதான விமர்சனங்களையே அதிகம் திமுக வைத்தது, இதன் பிறகே அதிமுக விமர்சிக்கப்பட்டது.
காங்கிரஸ்
ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி எப்படியாகி விட்டது என்ற நிலை தான் காங்கிரசுக்கு. தனித்து நின்றால் படு கேவலமாகத் தோற்பார்கள் என்பது தான் கள நிலவரம் ஆனால், பாஜக வைக் கிண்டலடித்து வருவது முரண்.
குறைவான இடங்கள் காரணமாக மாநிலத்தலைவர் அழகிரி கண்ணீர் விட்டதெல்லாம், தேசிய கட்சிக்கு அழகல்ல.
திமுக வை விட்டால் வேறு வழியில்லை என்பதால், குறைவான இடங்களைப் பெற்றுச் சமாதானம் ஆகி கொண்டார்கள்.
காங்கிரசுக்கு ஸ்டாலின் கொடுத்த 25 இடங்கள் அதிகம் என்றே கருதுகிறேன்.
15 – 20 இடங்கள் போதுமானது ஆனால், அழகிரி விட்ட கண்ணீருக்காகப் பாவம் பார்த்து ஸ்டாலின் கொடுத்து விட்டார் போல.
பாஜக
எல் முருகன் மாநிலத்தலைவரான பிறகு பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பாதையில் உள்ளது. பலரால் கிண்டலடிக்கப்பட்டாலும் தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.
தமிழகப் பாஜக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், H ராஜா, ராதாரவி போன்றவர்களைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் அல்லது ஒதுக்க வேண்டும்.
H ராஜா சர்ச்சையாக எதையாவது கூறுவது பாஜக க்கு தான் சேதத்தை ஏற்படுத்துகிறது. ராதாரவி வாயைத்திறந்தாலே கூவம் போல பேச்சுகள் வருகிறது.
வாஜ்பாய் காலத்தில் H ராஜா வெற்றி பெற்றார் என்பதற்காக அவருக்கு இன்னும் வாய்ப்பு தருவது சரியான ஒன்றாக இல்லை.
அப்போது இருந்த சூழல் வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு.
அதிமுகவை பாஜக கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று கூறப்பட்டாலும், இறுதிவரை இரு கட்சிகளுமே இணக்கமாகப் பரப்புரையை முடித்து விட்டன.
இதில் ஒரு சுவாரசியமான செய்தியுள்ளது.
அதிமுக வெற்றி பெற்றால், பாஜக வளர்ச்சி மெதுவாக இருக்கும் ஆனால், திமுக வெற்றி பெற்றால் பாஜக வளர்ச்சி பெரியளவில் இருக்கும்.
யார் வெற்றி பெற்றாலும் பாஜக வே பலனடையும்.
மோடி அமித் ஷா இருவரும் தமிழ்நாட்டை இன்னும் குறி வைக்கவில்லை. அவர்கள் கவனம் முழுவதும் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களின் வெற்றியில் உள்ளது.
அதை முடித்த பிறகு தமிழகத்தின் மீதே அவர்கள் அனைவரும் கவனமும் இருக்கும்.
அமித் ஷா தன் புத்திசாலித்தனத்தால், திறமையால், பேச்சால் கவனம் பெற்று வருகிறார். தமிழ் பேசத் தெரியாதது மட்டுமே இவரின் பலவீனம்.
பாஜக வை குறைத்து மதிப்பிட்டவர்கள், கிண்டலடித்தவர்கள் அனைவரும் வரும் ஐந்து ஆண்டுகளில் அதன் வளர்ச்சியைக் காணப்போகிறார்கள்.
பாஜக வில் இளைஞர்கள் பலர் பொறுப்பில் இருப்பது, கட்சியில் முக்கியத்துவம் பெற்று இருப்பது கட்சிக்கு மிகப்பெரிய பலம்.
அதிமுக திமுக சாதகப் பாதகங்கள்
துவக்கத்தில் திமுக உறுதியாக வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது ஆனால், பின்னர் வந்த தேர்தல் வாக்குறுதிகள், சர்ச்சைகள், பரப்புரைகள் காரணமாக அனைவரையும் எந்த உறுதியான முடிவையும் கூற முடியாத படி மாற்றி விட்டது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளையே கொஞ்சம் கூடுதலாக அதிமுக கொடுத்ததால், திமுக தேர்தல் வாக்குறுதிகள் பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தவில்லை.
திமுக வின் கலப்பு திருமண உதவித்தொகை வாக்குறுதி நகரமல்லாத பகுதிகளில் எதிர் விளைவை ஏற்படுத்தியுள்ளது.
ராசா, லியோனி, தயாநிதி மாறன், உதயநிதி போன்றோரின் அநாகரீக பேச்சுகள் அதிமுக க்குச் சாதகமாக இருந்தன, அதாவது அனுதாபத்தைப் பெற்று தந்தன.
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தாயார் குறித்து ராசா கூறிய கருத்துகள் பெரும் சேதத்தை இறுதியில் ஏற்படுத்தின.
திமுக வின் இந்து மத எதிர்ப்புச் சர்ச்சைகள் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்த போது நடந்த கல்லெறி சம்பவங்கள் அதிமுக பாஜக க்கு கெட்ட பெயரைக் கொடுத்தன.
கேஸ், சுங்கச்சாவடி, பெட்ரோல் கட்டண உயர்வு அதிமுக கூட்டணிக்குச் சேதத்தை ஏற்படுத்தின. மக்களின் அடிப்படை செலவில் கை வைக்கும் செயல் என்பதால், தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும்.
போதாததுக்குச் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைத்து மத்திய அரசு செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டது.
எதிர்ப்பு எழுந்ததால், அடுத்த நாளே அதே வட்டி விகிதம் தொடரும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தேர்தல் நேரத்தில் எப்படி இது போலக் கிறுக்குத்தனமான முடிவுகளைப் பாஜக அரசு எடுக்கிறது என்பது புரியாத புதிர்.
இது போலச் செயல்கள் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்று தெரியாதா?
எந்தத் தைரியத்தில் இது போல நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்?
தேர்தலுக்காக இல்லையென்றாலும், பொதுவாகவே மக்களின் அடிப்படை செலவின் மீதான கட்டண உயர்வு சரியான ஒன்றல்ல.
எனவே, மேற்கூறிய காரணங்களால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. திமுக க்கு கூடுதல் சதவீதம் வாய்ப்புள்ளது.
மற்ற கட்சிகள்
இட ஒதுக்கீடு கொடுத்ததை வைத்துப் பாமக பரப்புரை மேற்கொண்டது. இது இக்கட்சிக்கு சாதகமானது.
மக்கள் நீதி மய்யம் சென்னை, கோவை நகரத்து வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக இளைஞர்களிடையே.
திருமாவளவன் அவருடைய ஒட்டுமொத்த பரப்புரையில் பாஜக வை விமர்சிப்பதையே முழு நேரப்பணியாக வைத்து இருந்தார்.
அவர் கட்சி செய்யப்போவதை கூறியதை விடப் பாஜக வை விமர்சித்ததே அதிகம்.
அமமுக தேமுதிக இரு கட்சிகளும் கொங்கு அல்லாத மாவட்டங்களில் அதிமுக க்குச் சேதத்தை ஏற்படுத்தும்.
கடந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி திமுக க்கு ஏற்படுத்திய சேதத்தை விடக் குறைவாக ஏற்படுத்தும்.
சுருக்கமாக, இவர்களால் அதிமுக தொகுதிகளை இழக்கலாம்.
ஒருவேளை தாக்கத்தை ஏற்படுத்தவில்லையென்றால், தேமுதிக எதிர்காலம் பரிதாபம். அமமுக க்கு இழக்க ஒன்றுமில்லை.
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு இளைஞர்களிடையே வரவேற்பு உள்ளது.
அவர் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், கட்சி வளர்ந்து வருவதில் மாற்றுக்கருத்தில்லை.
வெற்றி பெற விரும்பும் வேட்பாளர்கள்
அண்ணாமலை, சைதை துரைசாமி, எல் முருகன், வானதி ஸ்ரீனிவாசன், C விஜயபாஸ்கர், குஷ்பூ, வினோஜ் P செல்வம்.
முன்பு இருந்தே வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து இருந்த நேரத்தில் கமலும் அங்கே வந்தது எதிர்பாராதது.
துவக்கத்தில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருந்தது.
யோகி வந்து சென்ற போது ஏற்பட்ட சர்ச்சைகள், வானதி ஸ்ரீனிவாசன் தகுதிக்குப் பொருத்தமில்லாத கருத்தான, லிப் சர்வீஸ் செய்பவர் என்று கமலை கூறியது அவருக்குப் பின்னடைவு.
தற்போதைய கள நிலவரத்தில் கமலுக்கே வாய்ப்பு.
இப்பட்டியலில் நண்பர் புதுகை அப்துல்லா (திமுக) வந்து இருக்க வேண்டியது, அவருக்கு வேட்பாளர் வாய்ப்புக்கிடைக்கவில்லை.
வெற்றி பெற விரும்பாத வேட்பாளர்கள்
வளர்மதி, H ராஜா, வேல்முருகன் மற்றும் இந்து மதத்தை இழிவாகப் பேசியவர்கள் அனைவரும்.
கோபி சட்டமன்றத்தொகுதி
எங்கள் கோபி சட்டமன்றத்தொகுதியில் செங்கோட்டையன் இந்த முறை தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை.
தற்போதைய அதிமுக அரசில் மிகப்பெரிய சக்திகளில் ஒருவராக இருந்தும் கோபி மற்றும் சுற்றுப்பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை.
கோபி சாலையை அகலப்படுத்துவதை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து கடைசிவரை செய்யவே இல்லை. தற்போது பாலம் கட்டுவதாகக் கூறிக்கொண்டுள்ளார்.
சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் எதைக் கூறி வாக்கு கேட்பதென்றே அவருக்குத் தெரியவில்லை.
இதற்கு முந்தைய காலங்களில் எல்லாம் கோபிக்கு அவ்வளவு செய்தவர் கடந்த வருடங்களில் வாய்ப்புகள் இருந்தும் ஒன்றுமே செய்யாதது எரிச்சல்.
இத்தேர்தலில் வெற்றிபெற்றால் பணமே முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கும். அதோடு அவருக்கு வழக்கமாக இருக்கும் மரியாதையும், சாதி வாக்குகளும்.
ஊடகங்கள்
எதிர்பார்த்தது போல 90% ஊடகங்கள் திமுக க்கு ஆதரவாகவே செய்திகளை வெளியிட்டன, கருத்துத் திணிப்பை செய்ததில் பெரும் பங்கு வகித்தன.
சன், கலைஞர் செய்திகளுக்கு க்கு பிறகு திமுக ஆதரவு ஊடகமாகச் செயல்பட்டதில் புதிய தலைமுறைக்கு முதலிடம்.
ஒரு ஊடகம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.
சில நேரங்களில் சன் கலைஞர் செய்திகளுக்குக் கடும் சவாலைக் கொடுத்தது. இதன் பிறகு நியூஸ் 18, நியூஸ் 7 போன்றவை வருகிறது.
தந்தி டிவி ரொம்ப மோசமில்லை. கருத்துக்கணிப்பு என்று திணிப்பை செய்தாலும், இவர்களை ஒப்பிடும் போது பரவாயில்லை ரகமே.
கமல் கூட்டணிக்குப் புதிய தலைமுறை பச்சமுத்து சென்றதால், ஓரளவு நடுநிலையான செய்திகளை எதிர்பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால், முன்பை விட மோசமாகி விட்டது.
இவர்களுக்குள் என்ன ஒப்பந்தமோ!
விகடன் தன் மதிப்பை இழந்து முரசொலியாகவே மாறிப்போனது. எப்படிப்பட்ட பாரம்பரியமான ஊடகம் படுகேவலமாக மாறிப்போனதில் கடும் ஏமாற்றம்.
இதையெல்லாம் காண பாலசுப்ரமணியம் அவர்கள் இல்லாதது அவர் செய்த புண்ணியம்.
இறுதியாக…
ஒட்டுமொத்தமாக எவராலும் அறுதியிட்டு முடிவைக் கூற முடியாத தேர்தலாக தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 உள்ளது.
திமுக க்கு கூடுதல் வாய்ப்பு என்பதை மட்டுமே கூற முடிகிறது.
சிலர் திமுக 180 – 200 பெறும் என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் அதிமுக கடும் சவாலைக் கொடுக்கும் என்கிறார்கள்.
பாஜக ஒரு இடம் கூடப் பெறாது என்று கூறுகிறார்கள். பாஜக 2 இடமாவது பெறும் என்று நம்புகிறேன். மநீம வில் கமல் மற்றும் மகேந்திரன் வெற்றி பெற வாய்ப்புகள்.
உங்கள் அனைவரைப்போல நானும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறேன் 🙂 .
இதே போல பகிர்வுகளைத் தேர்தல் முடிவு வந்த பிறகு எழுதுகிறேன்.
பிற்சேர்க்கை
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 | முடிவுக்குப் பின்
கொசுறு
தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளைக் காண ஆவல்.
காரணம், தமிழகத்தில் திமுக க்கு இருப்பது போல மம்தாக்கு பிரச்சார உத்திகளை வகுக்கும் பிரசாந்த் கிஷோர், பாஜக இரு இலக்க வெற்றிகளைத் தாண்டாது என்று கூறியுள்ளார்.
அதாவது மொத்த தொகுதிகள் 294 ல் அதிகபட்சம் 99 தொகுதிகளைப் பாஜக தாண்டாது என்று என்று கூறியுள்ளார். அப்படித் தாண்டினால் ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன் என்று சவால் விட்டு உள்ளார்.
தமிழ்நாடு நிலவரமே உறுதியாகத் தெரியவில்லை, இதில் மேற்கு வங்கத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?
இருப்பினும் 100 இடம் கூடப் பெற முடியாது என்பதை நம்ப முடியவில்லை. போதாததுக்கு மம்தா தினமும் சர்ச்சையைக் கூட்டிக்கொண்டுள்ளார்.
எனவே, இவர் சவால் முடிவைக் காண ஆவல்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
சிறு வயதிலிருந்து தினசரி எல்லா செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவன் நான்.. என் விருப்ப செய்தித்தாள் தினமணி.. கல்லூரி முடிக்கும் வரை இந்த பழக்கம் தொடர்ந்தது.. பின் வெளி ஊரில் வேலை, இங்கு வந்தது என வாசிப்பு பழக்கம் குறைந்து போனது. முன்பு தேர்தல் நேரத்தில் என் கணிப்பு சரியாக இருக்கும்.. தற்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. ஊரில் நண்பர்களுடனும் தொடர்பு அதிகம் இல்லாததால் இது குறித்து யாரிடமும் பேசவில்லை.. யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..
Seeman virupam illaya
@யாசின் இப்பெல்லாம் தேர்தல் கணிப்பு இல்லை.. திணிப்பு ஆகி விட்டது.
@கோபி விருப்பம் இல்லை கோபி. அவருடைய கொள்கைகள், எண்ணங்கள், பேச்சுகள் எனக்கு ஏற்புடையதல்ல.